search icon
என் மலர்tooltip icon

    திருப்பூர்

    • தனியார் பஸ் டிரைவர் நடுரோட்டில் நிறுத்தி ஆட்களை ஏற்றினார்.
    • போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்களை எச்சரித்து பஸ்சை எடுத்து செல்லும்படி கூறினர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மத்திய பஸ் நிலையத்தில் இருந்து திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. அதேப்போல் ஈரோடு, கோபி, சத்தியமங்கலம், மேட்டுப்பாளையம், கோவை போன்ற ஊர்களுக்கும் பஸ்கள் சென்று வருகின்றன. இதனால் மத்திய பஸ் நிலையத்தில் எப்போதும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும்.

    இந்தநிலையில் இன்று காலை திருப்பூரில் இருந்து சத்தியமங்கலம் வழியாக பண்ணாரிக்கு செல்லும் தனியார் பஸ் குறிப்பிட்ட நேரத்தில் செல்லாமல் பஸ் நிலையத்தில் நின்று பயணிகளை ஏற்றி வந்தனர்.

    இதனை பார்த்த அடுத்து செல்ல வேண்டிய அரசு பஸ் டிரைவர்- கண்டக்டர் பஸ்சை எடுக்கும்படி கூறினர். ஆனால் தனியார் பஸ் டிரைவர் நடுரோட்டில் நிறுத்தி ஆட்களை ஏற்றினார். இதனால் அரசு மற்றும் தனியார் பஸ் டிரைவர்- கண்டக்டர்கள் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.

    சுமார் அரை மணி நேரத்துக்கு மேலாக நடுரோட்டில் பஸ்சை நிறுத்தி மோதலில் ஈடுபட்டதால் மற்ற பஸ்கள் பஸ் நிலையத்திற்குள் வர முடியாமல் நீண்ட வரிசையில் நின்றது. இதனால் பயணிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளானார்கள்.

    தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்களை எச்சரித்து பஸ்சை எடுத்து செல்லும்படி கூறினர். இதனையடுத்து வாக்குவாதத்தை கைவிட்டு பஸ்சை எடுத்துச்சென்றனர். இதனால் மத்திய பஸ் நிலையத்தில் இன்று காலை பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

    • கிராம நிர்வாக அதிகாரி தற்கொலை செய்த சம்பவம் உடுமலை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை கணக்கம்பாளையம் கிராம நிர்வாக அலுவலராக கருப்புச்சாமி என்பவர் பணியாற்றி வந்தார். இவரது சொந்த ஊர் கோமங்கலம் அடுத்துள்ள கூலநாய்க்கன்பட்டி.

    இந்தநிலையில் இன்று காலை கருப்புச்சாமி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த தகவல் அறிந்ததும் உடுமலை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

    மன உளைச்சல் காரணமாக கருப்புச்சாமி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கிராம நிர்வாக அதிகாரி தற்கொலை செய்த சம்பவம் உடுமலை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • நேற்று முன்தினம் பெரிய தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது.
    • இன்று காலை அம்மன் தேட்ரோட்டம் நடைபெற்றது.

    அவினாசி:

    திருப்பூர் மாவட்டம் அவினாசியில் புகழ்பெற்ற கருணாம்பிகை உடனமர் அவினாசிலிங்கேசுவரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் தேர்த்திருவிழா நடைபெறும். அதேபோல் இந்த ஆண்டும் கடந்த 14-ந்தேதி கொடியேற்றத்துடன் தேர்த்திருவிழா தொடங்கியது.

    நேற்று முன்தினம் பெரிய தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. பின்னர் அந்த தேர் வடக்கு ரத வீதி சந்திப்பில் நிறுத்தப்பட்டது.

    இதையடுத்து நேற்று 2-வது நாள் தேரோட்டம் நடந்தது. காலை 10 மணி அளவில் மீண்டும் திருத்தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டு வடக்கு ரத வீதி, கிழக்குரத வீதி, கடைவீதி வழியாக மதியம் 2 மணி அளவில் நிலைக்கு வந்து சேர்ந்தது. அப்போது பக்தர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். இதையடுத்து பக்தர்கள் ரதத்தின் மீது ஏறி சென்று சாமி தரிசனம் செய்தனர்.

    இன்று (செவ்வாய்க்கிழமை) காலை அம்மன் தேட்ரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்தனர். முன்னதாக கருணாம்பிகை அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. மேலும் சிறிய தேர் வடம் பிடித்து நான்கு ரத வீதி வழியாக வலம் வந்து நிலையை அடைகிறது. இரவு 10 மணிக்கு வண்டித்தாரை நிகழ்ச்சி நடக்கிறது.

    நாளை (புதன்கிழமை) பரிவேட்டையும், 25-ந்தேதி தெப்பத்தேர் விழாவும், 26-ந்தேதி நடராஜ பெருமாள் மகா தரிசனம் நடக்கிறது. 27-ந்தேதி மஞ்சள் நீர் விழாவுடன் தேர்த்திருவிழா நிறைவுபெறுகிறது.

    • பொதுமக்கள் பதட்டம் இல்லாமல் வாக்களிக்கும் வகையில் பல்வேறு பகுதிகளில் கொடி அணி வகுப்பு நடத்தினர்.
    • எந்த அசம்பாவிதமும் இல்லாமல் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடந்து முடிந்ததையடுத்து ராணுவ வீரர்கள் திரும்பப் பெறப்பட்டனர்.

    திருப்பூர்:

    பாராளுமன்ற தேர்தல் இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. அதில் முதல் கட்டமாக தமிழகத்தில் கடந்த 19ந் தேதி நடைபெற்றது. பாராளுமன்ற தேர்தலையொட்டி பாதுகாப்பு பணிக்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து துணை ராணுவ வீரர்கள் தமிழகம் வந்தனர்.

    திருப்பூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பாதுகாப்பு பணிக்காக திருப்பூர் மாவ ட்டத்திற்கு 5 கம்பெனியை சேர்ந்த 400க்கும் மேற்பட்ட துணை ராணுவ வீரர்கள் வந்திருந்தனர்.இவர்கள் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக திருப்பூரில் தங்கியிருந்து தேர்தல் பறக்கும் படை அதிகாரியுடன் இணைந்து பணம் பட்டுவாடாவை தடுக்கும் வகையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அதேபோல் பொதுமக்கள் பதட்டம் இல்லாமல் வாக்களிக்கும் வகையில் பல்வேறு பகுதிகளில் கொடி அணி வகுப்பு நடத்தினர். மேலும் பதட்டமான 200க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டனர்.

    திருப்பூரில் எந்த அசம்பாவிதமும் இல்லாமல் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடந்து முடிந்ததையடுத்து ராணுவ வீரர்கள் திரும்பப் பெறப்பட்டனர்.

    இதையடுத்து திருப்பூரில் பல்வேறு பகுதிகளில் தங்கி இருந்த 300க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் நேற்று இரவு முதல் ரெயில்களில் தெலுங்கானா புறப்பட்டு சென்றனர். அங்கு நடை பெறும் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மேலும் நாளை மறுநாள் நூற்றுக்கும் மேற்பட்ட துணை ராணுவ வீரர்கள் ஜார்க்கண்ட் மாநிலம் செல்கிறார்கள்.

    • காசிக்கு நிகரான சிறப்பும் பெற்றது அவினாசிலிங்கேசுவரர் கோவில்.
    • காலை 10 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது.

    அவினாசி:

    கொங்கு ஏழு சிவாலயங்களில் முதன்மை பெற்றதும், காசிக்கு நிகரான சிறப்பும் பெற்ற திருப்பூர் மாவட்டம் அவினாசி அவினாசிலிங்கேசுவரர் கோவிலில் சித்திரை தேர் திருவிழா கடந்த 14-ந்தேதி கொடியேற்ற நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

    திருவிழாவையொட்டி 18-ந்தேதி இரவு பஞ்சமூர்த்திகள் 63 நாயன்மார்களுக்கு காட்சியளித்தனர். 19-ந்தேதி இரவு கற்பக விருட்சம் திருக்கல்யாணம் நடந்தது. 20-ந்தேதி காலை 6 மணிக்கு பூரம் நட்சத்திரத்தில் பஞ்ச மூர்த்திகளும் பெருமாளும் திருத்தேருக்கு எழுந்தருளும் வைபவம் நடைபெற்றது.

    இதைத்தொடர்ந்து நேற்று காலை 9.30 மணி அளவில் தேரில் இருந்து அருள்பாலித்த உற்சவமூர்த்திகளுக்கு சிறப்பு வழிபாடுகள் மற்றும் தீபாராதனைகள் நடந்தது. பின்னர் அதிர்வேட்டுகள் முழங்க காலை 10 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது.

    அப்போது அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் சிவ... சிவா... என்ற பக்திகோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். பின்னர் தேர் நிலையிலிருந்து சிறிது தூரம் இழுத்து வடக்கு வீதி சந்திப்பில் நிறுத்தப்பட்டது.

    மீண்டும் இன்று (திங்கட்கிழமை) காலை 2-வது நாள் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். பின்பு தேர் மாலையில் நிலை வந்து சேர உள்ளது. நாளை (செவ்வாய்க்கிழமை) சிறிய அம்மன் தேர் இழுக்கப்படுகிறது.

    • ஒற்றை யானையும் சாலையில் உலா வருகிறது.
    • யானைகள் சாலையை கடந்து செல்லும்போது வாகன ஓட்டிகள் தொந்தரவு செய்யக்கூடாது.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இருந்து கேரள மாநிலம் மூணாறு செல்லும் சாலையில் 9/6 சோதனை சாவடியில் இருந்து சின்னாறு வரை இருபுறமும் உடுமலை அமராவதி வனச்சரகங்கள் உள்ளன. இங்கு ஏராளமான யானைகள் உள்ளன.

    தற்போது கோடை காலம் என்பதால் வனத்தில் வறட்சி நிலவுகிறது. இதனால் யானைகள் தண்ணீர் தேடி மூணாறு சாலையை கடந்து அமராவதி அணைக்கு கூட்டம் கூட்டமாக செல்கின்றன. ஒற்றை யானையும் சாலையில் உலா வருகிறது. சில நேரம் சாலையிலேயே நிற்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் காத்திருந்து யானைகள் சென்ற பின் செல்கின்றனர்.

    இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், தற்போது கோடை காலம் என்பதால் தண்ணீருக்காக யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறி உடுமலை-மூணாறு சாலை பகுதிக்கு வருகின்றன. யானைகள் சாலையை கடந்து செல்லும்போது வாகன ஓட்டிகள் தொந்தரவு செய்யக்கூடாது. அமைதி காத்தால் சிறிது நேரத்தில் தானாகவே யானைகள் காட்டுக்குள் சென்று விடும். பின்னர் வாகன ஓட்டிகள் சென்றுவிடலாம். எனவே வாகன ஓட்டிகள் கவனமாக இருக்க வேண்டும் என்றனர்.

    • பஞ்ச மூர்த்திகளும் பெருமாளும் திருத்தேருக்கு எழுந்தருளும் வைபவம்.
    • ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    அவினாசி:

    கொங்கு ஏழு சிவாலயங்களில் முதன்மை பெற்றதும், காசிக்கு நிகரான சிறப்பும் பெற்ற திருப்பூர் மாவட்டம் அவினாசி அவினாசிலிங்கேசுவரர் கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை மாதம் தேர் திருவிழா நடைபெறும்.

    அதேபோல் இந்த ஆண்டும் கடந்த 14-ந்தேதி கொடியேற்ற நிகழ்ச்சியுடன் தேர் திருவிழா தொடங்கியது. திருவிழாவையொட்டி 18-ந்தேதி இரவு பஞ்சமூர்த்திகள் 63 நாயன்மார்களுக்கு காட்சியளித்தனர். இதில் விநாயகர் பெருமான் மூசிக வாகனத்திலும், சோமஸ்கந்தர் ரிஷப வாகனத்திலும், கருணாம்பிகை அம்மன் காமதேனு வாகனத்திலும், சுப்பிரமணியர் மயில்வாகனத்திலும், பூமி நீளாதேவி கரி வரதராஜ பெருமாள் கருட வாகனத்திலும் எழுந்தருளினர்.

     நேற்று முன்தினம் இரவு கற்பக விருட்சம் திருக்கல்யாணம் நடந்தது. நேற்று காலை 6 மணிக்கு பூரம் நட்சத்திரத்தில் பஞ்ச மூர்த்திகளும் பெருமாளும் திருத்தேருக்கு எழுந்தருளும் வைபவம் நடைபெற்றது. இதையடுத்து தேரில் எழுந்தருளிய சுவாமியை பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.

    இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணி அளவில் சிகர நிகழ்ச்சியான பெரிய தேரோட்டம் நடைபெற்றது.சிவாச்சார்யர்கள், ஆன்மீக பெருமக்கள், பக்தர்கள் `அவிநாசியப்பா', `அரோகரா', `நமசிவாயா', சிவ... சிவ... என பக்தி கோஷமிட, சிவனடியார்கள் கைலாய வாத்தியம் முழங்க திருத்தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. திருத்தேரில் சோமஸ்கந்தர்- உமாமகேஸ்வரி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

    திருப்பூர் மாவட்டம் மட்டுமின்றி கோவை, ஈரோடு உள்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    கோவில் முகப்பில் இருந்து புறப்பட்ட தேரானது சிறிது தொலைவு இழுத்து செல்லப்பட்டு வடக்கு ரத வீதியில் நிலை நிறுத்தப்படுகிறது. தேரின் 2 பின் சக்கரங்களிலும் ராயம்பாளையம் மற்றும் புதுப்பாளையம் சன்னை மிராசுகள் சன்னை போட்டு தேரை நகர்த்தி கொடுத்தனர்.

    நாளை 22-ந் தேதி மீண்டும் காலை 9 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்து மாலை 4 மணி அளவில் நிலை வந்து சேர உள்ளது. 23-ந் தேதி அம்மன் தேரோட்டம் நடக்கிறது. 24-ந் தேதி மாலை வண்டித்தாரை, பரிவேட்டையும் 25-ந் தேதி தெப்ப தேர் உற்சவமும் நடக்கிறது. 26-ந் தேதி மகா தரிசன விழாவும், 27-ந் தேதி மஞ்சள் நீர் விழாவும் நடக்கிறது.

    அவினாசிலிங்கேஸ்வரர் கோவில் தேரோட்டம் கோவில் முகப்பில் உள்ள தேர் நிலையில் தொடங்கி ரத வீதிகள் வழியாக மீண்டும் நிலை வந்து சேரும் வகையில் இன்று முதல் 3 நாட்கள் நடத்தப்படுகிறது. 92 அடி உயரம், 400 டன் எடை கொண்ட இந்த தேர் திருவாரூர் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் தேருக்கு அடுத்த படியாக தமிழகத்தின் 3-வது பெரிய தேர் ஆகும். எனவே தேரோட்டத்தில் கூட்ட நெரிசலை சமாளிக்க போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    முக்கிய இடங்களில் போக்கு வரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. மேலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. வெயிலின் தாக்கத்தால் ரத வீதிகளில் ஆங்காங்கே நீர்-மோர் வழங்கப்பட்டது.

    • கடந்த 2023ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஏற்றுமதி ரூ.11 ஆயிரத்து 628 கோடியாக இருந்தது.
    • திருப்பூர் ஆடை உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    திருப்பூர்:

    பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம் உலக நாடுகளை சார்ந்து உள்ளது. ரஷியா-உக்ரைன் போர் சூழல் காரணமாக ஐரோப்பிய நாடுகளுக்கான இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் குறைந்தது. பணவீக்கம் காரணமாக அமெரிக்க ஏற்றுமதியும் பின்னடைவை சந்தித்தது. புதிய வர்த்தக வாய்ப்புகளும் எதிர்பார்த்த அளவுக்கு கை கொடுக்கவில்லை.

    இந்திய தொழில் முனைவோரின் விடாமுயற்சி காரணமாக நாட்டின் ஒட்டுமொத்த ஆயத்த ஆடை ஏற்றுமதி கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் அதிகரித்துள்ளது. கடந்த 2023ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஏற்றுமதி ரூ.11 ஆயிரத்து 628 கோடியாக இருந்தது. 2024 பிப்ரவரி மாதம் ரூ.12 ஆயிரத்து 248 கோடியாக உயர்ந்துள்ளது.

    இதுபோல் கடந்த 2023ம் ஆண்டு மார்ச் மாதம் ரூ.11 ஆயிரத்து 917 கோடிக்கு பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம் நடந்துள்ளது. 2024 மார்ச் மாதம் ரூ.12 ஆயிரத்து 224 கோடியாக வர்த்தகம் உயர்ந்துள்ளது. இதனால் திருப்பூர் ஆடை உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இனிவரும் நாட்களில் ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் வளர்ச்சிப்பாதைக்கு திரும்பும் என்றும் திருப்பூர் ஆடை உற்பத்தியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இந்திய பின்னலாடை ஏற்றுமதியில் திருப்பூரின் பங்களிப்பு முக்கியமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • பொதுமக்கள் காலை முதலே ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்குப்பதிவு செய்து வருகின்றனர்.
    • திடீரென வாக்குப்பதிவு எந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதன் காரணமாக வாக்குப்பதிவு செய்வதில் தாமதம் ஏற்பட்டது.

    திருப்பூர்:

    பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று தமிழகம் முழுவதும் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருப்பூர் பாராளுமன்றத் தொகுதியில் 1745 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் காலை முதலே ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்குப்பதிவு செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் திருப்பூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட தெற்கு சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட கே.என்.பி., காலனி பகுதியில் வாக்குச்சாவடி 222ல் வாக்களிக்க மாநகராட்சி மேயரும் திருப்பூர் வடக்கு மாநகர தி.மு.க. செயலாளருமான தினேஷ் குமார் காலை 6:50 மணிக்கு வந்தார்.

    இந்தநிலையில் 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியதும் முறையான ஆவணங்களை காண்பித்து கையில் மை வைத்து வாக்குப்பதிவு செலுத்த சென்றார். திடீரென வாக்குப்பதிவு எந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதன் காரணமாக வாக்குப்பதிவு செய்வதில் தாமதம் ஏற்பட்டது. சுமார் 30 நிமிடங்கள் வரை காத்திருந்த மேயர் தினேஷ்குமார் வாக்குப்பதிவு எந்திரம் சரிபார்க்கப்பட்டு சோதனை செய்த பிறகு மீண்டும் தனது வாக்கினை பதிவு செய்தார்.

    • அண்ணாமலை தனது சொந்த ஊரில் வாக்கு செலுத்தி விட்டு கோவை நோக்கி சென்றார்.
    • வாக்களிப்பதற்காக நின்று கொண்டிருந்த முதல் தலைமுறை வாக்காளர்களுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.

    பல்லடம்:

    கோவை பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்லடம் சட்டமன்ற தொகுதியில் இன்று 417 வாக்குச்சாவடி மையங்களில் காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் கோவை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தனது சொந்த ஊரில் வாக்கு செலுத்தி விட்டு கோவை நோக்கி சென்றார்.

    அப்போது கோவை தொகுதிக்கு உட்பட்ட பல்லடம் பகுதியில் உள்ள அவினாசிபாளையம், மாதப்பூர், பனப்பாளையம், கொசவம்பாளையம், காரணம்பேட்டை ஆகிய பகுதிகளில் உள்ள பூத்களில் ஆய்வு மேற்கொண்டார்.

    மேலும் வாக்களிப்பதற்காக நின்று கொண்டிருந்த முதல் தலைமுறை வாக்காளர்களுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்தார். வாக்குச்சாவடிகளில் எத்தனை வாக்காளர்கள் உள்ளார்கள்? வாக்குப்பதிவு மையங்கள் முறையாக இயங்குகிறதா என வாக்குச்சாவடி முகவர்களிடம் கேட்டறிந்தார்.

    • கோடை வெயில் காரணமாக பெரும்பாலான வாக்காளர்கள் காலையிலேயே வாக்குச்சாவடிகளில் குவிந்தனர்.
    • வாக்குச்சாவடியின் அனைத்து நிகழ்வுகளும் பதிவு செய்து சேமித்து வைக்கப்பட்டன.

    திருப்பூர்:

    திருப்பூர் பாராளுமன்ற தொகுதியில் திருப்பூர் வடக்கு, தெற்கு சட்டமன்ற தொகுதி மற்றும் ஈரோடு மாவட்டம் அந்தியூர், பவானி, பெருந்துறை, கோபிசெட்டிபாளையம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.

    இத்தொகுதியில் தி.மு.க. கூட்டணி சார்பில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த சுப்பராயன், அ.தி.மு.க. சார்பில் அருணாசலம், பா.ஜ.க.சார்பில் ஏ.பி.முருகானந்தம், நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமி உள்பட 13 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

    இந்தநிலையில் பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. முதலில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் வாக்குச்சாவடி முகவர்கள் முன்னிலையில் காலை 6 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. 50 மாதிரி வாக்குகள் செலுத்தப்பட்டு சரிபார்க்கப்பட்டது. அதன்பிறகு காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

    இதில் வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர். கோடை வெயில் காரணமாக பெரும்பாலான வாக்காளர்கள் காலையிலேயே வாக்குச்சாவடிகளில் குவிந்தனர். பின்னர் அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது வாக்கினை செலுத்தினர்.

    வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு வசதியாக திருப்பூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் மொத்தம் 1745 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தது. அதன்படி பெருந்துறையில் 264, பவானியில் 289, அந்தியூரில் 262 கோபிசெட்டிபாளையத்தில் 296, திருப்பூர் வடக்கு 385, தெற்கு 248 என மொத்தம் 1745 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தது. மொத்தம் 16 லட்சத்து 8ஆயிரத்து 521 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள 13 வகையான அடையாள ஆவணங்களை காண்பித்து வாக்காளர்கள் வாக்களித்தனர்.

    வாக்குப்பதிவுக்காக 2081 கட்டுப்பாட்டு எந்திரங்கள், 2081 வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் 30 சதவீதம் கூடுதலாக 2555 விவி.பேட் எந்திரங்கள் திருப்பூர் பாராளுமன்ற தொகுதி தேர்தலுக்கு பயன்படுத்தப்பட்டன. வாக்காளர்களின் வசதிக்காக வாக்குச்சாவடி மையங்களில் குடிநீர் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு இருந்தது. மேலும் போலீசார், துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதனால் வாக்காளர்கள் எவ்வித அச்சமின்றி தங்களது வாக்கினை பதிவு செய்து சென்றனர். அரசியல் கட்சியினர் வாக்குச்சாவடி அருகே செல்லாமல் இருக்க 100 மீட்டர் தொலைவில் கோடு வரையப்பட்டு இருந்தது. அதனை தாண்டி அவர்கள் வருவதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

    பெருந்துறை தொகுதியில் 10 வாக்குச்சாவடிகள், பவானி தொகுதியில் 23, அந்தியூர் தொகுதியில் 38, கோபிச்செட்டிப்பாளையம் தொகுதியில் 45, திருப்பூர் வடக்கு தொகுதியில் 98, திருப்பூர் தெற்கு தொகுதியில் 79 என திருப்பூர் பாராளுமன்ற தொகுதியில் மொத்தம் 293 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டு இருந்தது. அந்த வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டன.

    வாக்குச்சாவடியின் அனைத்து நிகழ்வுகளும் பதிவு செய்து சேமித்து வைக்கப்பட்டன. மேலும் பதற்றமான வாக்குச்சாவடிகளின் நிகழ்வுகளை திருப்பூர் மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர், கலெக்டர் அலுவலகத்தில் இருந்தும், சென்னையில் மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில் இருந்தும் கண்காணிக்க வசதி செய்யப்பட்டு இருந்தது. மேலும் பதற்றமான வாக்குச்சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் மற்றும் துணை ராணுவப்படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். வாக்குச்சாவடிகளில் நடக்கும் நிகழ்வுகளை தேர்தல் பார்வையாளர்களுக்கு உடனுக்குடன் தகவல் கொடுக்கும் வகையில் நுண் பார்வையாளர்கள் பணியமர்த்தப்பட்டு இருந்தனர்.

    திருப்பூர் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரியாக கலெக்டர் கிறிஸ்துராஜ் செயல்பட்டார்.

    ஒரு சட்டசபைக்கு ஒருவர் வீதம் 6 உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகளும், 6 கூடுதல் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகளும் நியமிக்கப்பட்டு பணியாற்றினர்.

    வாக்குச்சாவடியில் ஒரு தலைமை வாக்குச்சாவடி அலுவலர், வாக்குச்சாவடி நிலை அலுவலர் 3 பேர் மற்றும் கூடுதல் அலுவலர்கள் இருப்பு என மொத்தம் 8 ஆயிரத்து 700 பேர், நுண்பார்வையாளர்கள், மண்டல அலுவலர்கள் உள்பட மொத்தம் 10 ஆயிரம் பேர் தேர்தல் பணியில் ஈடுபட்டனர். வாக்குப்பதிவு சதவீதம் குறித்து 2 மணி நேரத்துக்கு ஒருமுறை திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் நடத்தும் அதிகாரியின் அலுவலகத்துக்கு தெரிவிக்க வசதி செய்யப்பட்டு இருந்தது. அதன் மூலம் 2 மணி நேரத்திற்கு ஒரு முறை வாக்கு சதவீதம் தெரிவிக்கப்பட்டது. வாக்குப்பதிவு இன்று மாலை 6 மணி வரை நடக்கிறது. அதன்பிறகு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் வாக்கு எண்ணும் மையமான திருப்பூர் எல்.ஆர்.ஜி. கல்லூரிக்கு ஜி.பி.எஸ்., பொருத்தப்பட்ட வாகனத்தில் துணை ராணுவத்தினர் மற்றும் பலத்த போலீசார் பாதுகாப்புடன் எடுத்து வரப்பட உள்ளது. பின்னர் அங்குள்ள அறையில் வைத்து பூட்டி சீல் வைக்கப்பட உள்ளது.

    • திருப்பூர் பாராளுமன்ற தொகுதியில் 13 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
    • ஒரு நோட்டா உட்பட 14 சின்னங்கள் வாக்குப்பதிவு எந்திரத்தில் இருக்கும்.

    திருப்பூர்:

    திருப்பூர் பாராளுமன்ற தொகுதியில் திருப்பூர் வடக்கு, தெற்கு, ஈரோடு மாவட்டம் அந்தியூர், பவானி, பெருந்துறை, கோபிசெட்டிப்பாளையம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் பெருந்துறையில் 264 வாக்குச்சாவடிகள், பவானியில் 289, அந்தியூரில் 262, கோபிசெட்டிபாளையத்தில் 296, திருப்பூர் வடக்கு 385, தெற்கு 248 என மொத்தம் 1745 வாக்குச்சாவடிகள் உள்ளன.

    திருப்பூர் பாராளுமன்ற தொகுதியில் 7 லட்சத்து 91 ஆயிரத்து 24 ஆண் வாக்காளர்களும், 8 லட்சத்து 17 ஆயிரத்து 245 பெண் வாக்காளர்களும், 252 மூன்றாம் பாலினத்தவரும் என மொத்தம் 16 லட்சத்து 8 ஆயிரத்து 521 பேர் உள்ளனர். நாளை 19-ந்தேதி (வெள்ளிக்கிழமை) வாக்குப்பதிவு நடைபெறுவதை முன்னிட்டு வாக்குச்சாவடிகளில் பணியாற்றுகிறவர்களுக்கு பயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளது.

    வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தும் பொருட்கள் அனைத்தும் அனுப்பி வைக்கப்பட்டு, அடிப்படை வசதிகள் உள்ளிட்ட அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. திருப்பூர் பாராளுமன்ற தொகுதியில் 13 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். ஒரு நோட்டா உட்பட 14 சின்னங்கள் வாக்குப்பதிவு எந்திரத்தில் இருக்கும். இதில் வேட்பாளரை வாக்காளர்கள் தேர்வு செய்வார்கள்.

    வாக்குப்பதிவு நாளை மாலை நிறைவடைந்ததும், வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் வாக்கு எண்ணும் மையமான திருப்பூர் எல்.ஆர்.ஜி. கல்லூரிக்கு ஜிபிஎஸ்., பொருத்தப்பட்ட வாகனத்தில் துணை ராணுவத்தினர் மற்றும் பலத்த போலீசார் பாதுகாப்புடன் எடுத்து வரப்படும்.

    இந்நிலையில் திருப்பூர் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட கலெக்டருமான கிறிஸ்து ராஜ், நேற்று சின்னச்சாமி அம்மாள் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் வாக்குச்சாவடி மையத்தை ஆய்வு செய்தார். திருப்பூர் தொகுதியில் 293 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என அடையாளம் கண்டறியப்பட்டுள்ளது. அந்த வாக்குச்சாவடிகளில் துணை ராணுவத்தினர் மற்றும் போலீசார் கூடுதலாக ஈடுபடுவதுடன், அந்த மையங்கள் முழுவதும் சிசிடிவி., கேமரா மூலம் கண்காணிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

    ×