search icon
என் மலர்tooltip icon

    சென்னை

    • பெரும்பாலான நகைகடைகளில் தங்க நாணயம் விற்பனைக்கென தனி வரிசை ஏற்படுத்தப்பட்டது.
    • கடந்த ஆண்டு அட்சய திருதியை நாளில், ரூ.11 ஆயிரம் கோடி வரையில் தங்க நகைகள் விற்பனை இருந்தது.

    சென்னை:

    சித்திரை மாதத்தில் அமாவாசைக்கு பிறகு வரும் வளர்பிறை திருதியையே, 'அட்சய' திருதியை என்று அழைக்கப்படுகிறது. அட்சயம் என்றால் தேயாது, குறையாது, வளர்தல் என்று பொருள். அனைத்து நலன்களையும் குறைவில்லாமல் அள்ளிக்கொடுக்கும் இந்த திருதியை நாளன்று, வாங்கும் பொருள் இல்லங்களில் அளவில்லாமல் சேரும் என்பது முன்னோர்களின் நம்பிக்கை.

    அந்த வகையில், அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கினால், செல்வம் பெருகும் என்று பொதுமக்கள் நம்புகிறார்கள். அதன்படி, ஒவ்வொரு ஆண்டும் அட்சய திருதியை நாளில் மக்கள் தங்க நகைகளை வாங்கி மகிழ்கின்றனர். இந்த ஆண்டு, அட்சய திருதியை நேற்று அதிகாலை 4.56 மணிக்கு தொடங்கி, இன்று (சனிக்கிழமை) மதியம் 2.50 மணியுடன் முடிவடைகிறது.

    அட்சய திருதியை முன்னிட்டு, நகைகடைகள் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பல்வேறு சலுகைகளும் அறிவித்தன. பவுனுக்கு ஆயிரம் ரூபாய் தள்ளுபடி, பழைய நகைகளுக்கு கூடுதல் விலை, செய்கூலி, சேதாரம் தள்ளுபடி என சலுகைகள் அறிவிக்கப்பட்டன.

    கூட்டம் அதிகம் குவியும் என்பதால் தமிழகம் முழுவதும் பெரும்பாலான நகைகடைகள் நேற்று அதிகாலை 6 மணிக்கே திறக்கப்பட்டன. நேற்று காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரையிலும், 4.30 மணி முதல் 5.30 மணி வரையிலும் நல்ல நேரம் என்பதால் அந்த நேரத்தில், நகைகடைகளில் கூட்டம் அதிகம் காணப்பட்டது.

    அதேபோல், ஜி.ஆர்.டி. ஜூவல்லரி, ஜோயாலுக்காஸ், மலபார் கோல்ட் அண்ட் டைமண்ட்ஸ், பீமா கோல்ட் ஜூவல்லரி, பிரின்ஸ் ஜூவல்லரி, கல்யாண் ஜூவல்லர்ஸ், போத்தீஸ் ஸ்வர்ண மஹால் ஆகிய கடைகளில் அட்சய திருதியை முன்னிட்டு நேற்று காலை முதல் இரவு வரை கூட்டம் அலைமோதியது.


    நகைகடைகளில் குறிப்பிட்ட நேரத்தில், நகைகளை வாங்குவதற்கு, ஒரு வாரத்துக்கு முன்பே, 75 சதவீத தொகை செலுத்தி பலர் முன்பதிவு செய்து, நகைகளை நல்ல நேரத்தில் வாங்கினர். விதவிதமான டிசைன்களில் நகைகள் அட்சய திருதியை விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தன. பெண்கள் அட்சய திருதியை நாளில் தங்களுக்கு பிடித்த தங்கம் மற்றும் வைரம், வெள்ளி நகைகளை ஆர்வத்துடன் தேர்வு செய்து மகிழ்ச்சியுடன் அணிந்துக்கொண்டனர்.

    பெரும்பாலான நகைகடைகளில் தங்க நாணயம் விற்பனைக்கென தனி வரிசை ஏற்படுத்தப்பட்டது. கடந்த ஆண்டு அட்சய திருதியை நாளில், ரூ.11 ஆயிரம் கோடி வரையில் தங்க நகைகள் விற்பனை இருந்தது. நடப்பாண்டு, விற்பனை அதிகரித்துள்ளதாக தங்க நகை விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    அட்சய திருதியை விற்பனை தொடர்பாக தங்கம் மற்றும் வைர நகைகள் விற்பனையாளர்கள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி கூறியதாவது:-

    சென்னையில் உள்ள 5 ஆயிரம் நகைக்கடைகள் உள்பட தமிழகம் முழுவதும் உள்ள 45 ஆயிரத்துக்கும் அதிகமான சிறிய மற்றும் பெரிய நகைக்கடைகளில் நேற்று கூட்டம் அதிகம் காணப்பட்டது.

    தேர்தல் நடைமுறை அமலில் இருந்தபோது, பொதுமக்களால் ரூ.50 ஆயிரத்துக்கும் அதிகமாக வெளியே கொண்டு செல்ல முடியவில்லை. தற்போது, அந்த நடைமுறை விலக்கி கொள்ளப்பட்டுள்ளதால், அட்சய திருதி நாளில் மக்கள் அதிகளவு நகைகளை வாங்க குவிந்தனர். கடந்த ஆண்டு அட்சய திருதியை நாளில் ரூ.11 ஆயிரம் கோடி வரையில் தங்கம் உள்பட நகைகள் விற்பனை இருந்தது. ஆனால், கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு அட்சய திருதியை நாளில், 25 முதல் 30 சதவீதம் விற்பனை அதிகரித்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதன்மூலம், நேற்று ஒரே நாளில் ரூ.14 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக தங்கம் உள்பட பல்வேறு நகைகள் விற்பனை நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

    • சவுக்கு சங்கர் வீட்டில் 10 மணி நேரமாக நடைபெற்ற சோதனை நிறைவு.
    • ரூ.2 லட்சம் பணம், கஞ்சா சிகரெட்டுகள் உள்ளிட்டவைகளை போலீசார் பறிமுதல்.

    யூ டியூபர் சவுக்கு சங்கர் மீது 7வது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    கஞ்சா வழக்கு, பெண் காவலர்களை அவதூறாக பேசியது உள்பட 6 வழக்குகள் பதிந்த நிலையில், சென்னை சைபர் கிரைம் போலீசார் மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    மேலும், சென்னை மதுரவாயலில் உள்ள சவுக்கு சங்கர் வீடு மற்றும் தி.நகரில் உள்ள அவரது அலுவலகத்தையும் பூட்டி போலீசார் சீல் வைத்துள்ளனர்.

    சென்னை மதுரவாயலில் உள்ள சவுக்கு சங்கர் வீட்டில் 10 மணி நேரமாக நடைபெற்ற சோதனை நிறைவு பெற்றுள்ளது.

    இந்த சோதனையில் ரூ.2 லட்சம் பணம், கஞ்சா சிகரெட்டுகள், லேப்டாப் ஹார்ட் டிஸ்க் உள்ளிட்டவைகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

    • சென்னை உள்பட உலகின் பல்வேறு பகுதிகளிலில் இருந்தும் விண்வெளி மையத்தை பார்க்கலாம்.
    • சென்னையில் இருந்தே இந்த நிகழ்வு தெரியும் என்பதால் மக்கள் காண ஆர்வம்.

    சர்வதேச விண்வெளி மையம் குறிப்பிட்ட பகுதியில் விண்ணில் தெரியும் நேரம் பற்றிய தகவல்களை நாசா வெளியிட்டு வருகிறது.

    பொதுவாக அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் வான்வெளி தெளிவாக இருக்கும்போது மட்டும் சிறய ஒளி புள்ளியாக விண்வெளி ஆய்வு மையத்தை காண முடியும்.

    அந்த வகையில், சென்னை உள்பட உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை இன்று இரவு வெறும் கண்களால் பார்க்கலாம் என நாசா அறிவித்தது.

    அதன்படி, சென்னையில் இன்றிரவு, 7.09 மணியில் இருந்து 7 நிமிடங்கள் சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் தென்படும் என நாசா அறிவித்தது.

    இந்நிலையில், சென்னையில் இருந்து விண்ணில் சர்வதேச விண்வெளி மையம் வெறும் கண்ணில் தென்பட்டது.

    நாசா அறிவித்தது போல், சென்னையில் சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் தென்பட்டது.

    சென்னையில் இருந்தே இந்த நிகழ்வு தெரிந்ததால், மக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.

    • அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்கியுள்ளது.
    • அரவிந்த் கெஜ்ரிவாலின் விடுதலை நீதியை அடையாளப்படுத்துவது மட்டுமின்றி நமது இந்திய கூட்டணியை பலப்படுத்துகிறது.

    டெல்லி மாநில மதுபானக் கொள்கை தொடர்பான பண மோசடி வழக்கில் டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன்றம் இன்று இடைக்கால ஜாமின் வழங்கியது.

    உச்சநீதிமன்ற தீர்ப்பை இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் வரவேற்றுள்ளனர்.

    இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்கிய உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கிறேன். அநீதிக்கு எதிரான இந்த வெற்றி நமது ஜனநாயகத்தை வலுப்படுத்துகிறது.

    அரவிந்த் கெஜ்ரிவாலின் விடுதலை நீதியை அடையாளப்படுத்துவது மட்டுமின்றி நமது இந்திய கூட்டணியை பலப்படுத்துகிறது. இது தேர்தல்களில் வெற்றி பெறுவதற்கான நமது வேகத்தை வலுப்படுத்துகிறது.

    இவ்வாறு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

    • வழக்குகள் ஜூன் 24ம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் தள்ளிவைத்தது.
    • ஆக்கிரமிப்புகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி.

    வடலூர் வள்ளலார் சர்வதேச மையம் அனைத்து அனுமதிகளையும் பெற்ற பிறகே கட்டப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில், தமிழக அரசு உறுதி அளித்துள்ளது.

    அரசின் திட்டம் வள்ளலாரின் தத்துவங்களுக்கு விரோதமானவை என நிரூபித்தால் மட்டுமே அரசின் முடிவில் நீதிமன்றம் தலையிட முடியும் என நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு அமர்வு தெரிவித்துள்ளது.

    வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தும், ஆதரவு தெரிவித்தும் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் ஜூன் 24ம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் தள்ளிவைத்தது.

    சத்தியஞான சபைக்கு சொந்தமான 106 ஏக்கர் நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி மீட்கவும், அறங்காவலர்கள் நியமிக்கவும் நடவடிக்கை எடுக்க அரசுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

    ஆக்கிரமிப்புகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறை உறுதி அளித்துள்ளது.

    • இந்த ஆண்டு விடைத்தாளை மறுமதிப்பீடு செய்வதற்கும் மாணவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
    • பத்தாம் வகுப்பில் தோல்வியடைந்தவர்கள் நாளை முதல் விண்ணப்பிக்கலாம்.

    10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு இதுவரையில் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு கொடுக்கப்பட்டது. மதிப்பெண் குறைவாக பெற்றதாக கருதினால் அவர்கள் தாங்கள் எழுதிய விடைத்தாள் நகலை பெற்று அதற்கான மதிப்பெண் சரிவர கணக்கிடப்பட்டு உள்ளதா என்பதை பார்த்து அறிந்து கொள்ளலாம்.

    மறுகூட்டலின்போது தவறுகள் இருந்தால் அதனை திருத்தம் செய்து மீண்டும் மாறுபட்ட மதிப்பெண்ணை சேர்த்து சான்றிதழ் வழங்கப்படும். ஆனால் இந்த ஆண்டு விடைத்தாளை மறுமதிப்பீடு செய்வதற்கும் மாணவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

    பிளஸ்-2 தேர்வுக்கு மறுமதிப்பீடு முறை இருந்து வருகிறது. தற்போது முதன் முதலாக 10-ம் வகுப்பு மாணவர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    தாங்கள் உறுதியாக எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்காத பட்சத்தில் மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்கலாம்.

    விண்ணப்பிக்கும் மாணவர்களின் விடைத்தாளை மீண்டும் மறு ஆய்வு செய்யப்படும். எந்த பாடத்திற்கு மறு மதிப்பீடு செய்ய விரும்புகிறாரோ? அந்த பாடத்தில் விடைத்தாள் மறுமதிப்பீடு செய்து மதிப்பெண் வழங்கப்படும்.

    இந்த திட்டம் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கும் வழங்கப்படுவதன் மூலம் மதிப்பெண் கூடவோ அல்லது குறையவோ கூடும். மறுகூட்டல் மற்றும் மறு மதிப்பீட்டிற்கு மே 15ம் தேதி முதல் 20ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று இயக்குனர் சேதுராம வர்மா தெரிவித்தார்.

    இதேபோல், 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் வரும் ஜூலை 2ம் தேதி முதல் துணைத் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, பத்தாம் வகுப்பில் தோல்வியடைந்தவர்கள் நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்றும் பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.

    • நகைக்கடைகளில் தங்க நகைகள் வாங்குவதற்காக இன்று காலையிலேயே ஏராளமான பெண்கள் குவிந்தனர்.
    • தங்களுக்கு பிடித்த நகைகளை பெண்கள் ஆர்வமுடன் வாங்கினார்கள்.

    சென்னை:

    அட்சய திரிதியை அன்று தங்க நகை வாங்கினால் வீட்டில் செல்வம் பெருகும், அடிக்கடி தொடர்ந்து தங்கம் வாங்கி குவிக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்பது ஆண்டாண்டு காலமாக மக்களிடையே உள்ள நம்பிக்கையாகும். இதனால் அள்ள அள்ளக் குறையாத செல்வ வளங்களை வாரித்தரும் அட்சய திரிதியை அன்று சிறிய நகையையாவது வாங்கிவிட வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள்.

    இதனால், அட்சய திரிதியை நாளான இன்று நகைக்கடைகள் காலை 6 மணிக்கே திறக்கப்பட்டு விற்பனை தொடங்கியது. சென்னை தி.நகர், புரசைவாக்கம், பாரிமுனை, குரோம்பேட்டை, பாடி, அண்ணாநகர், தாம்பரம் ஆகிய இடங்களில் உள்ள நகைக்கடைகளில் தங்க நகைகள் வாங்குவதற்காக இன்று காலையிலேயே ஏராளமான பெண்கள் குவிந்தனர். அவர்கள் தங்களுக்கு பிடித்த நகைகளை ஆர்வமுடன் வாங்கினார்கள்.

    முன்னதாக, அட்சய திரிதியையொட்டி தங்கம் விலை இன்று காலையிலேயே 2 முறை அதிகரித்தது. கிராமுக்கு ரூ.90-ம், சவரனுக்கு ரூ.720-ம் அதிகரித்தது.

    இந்நிலையில், இன்று 3-வது முறையாக தங்கம் விலை உயர்ந்துள்ளது. தற்போது சவரனுக்கு ரூ.520 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.54,160-க்கும் கிராமுக்கு ரூ.65 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,770-க்கும் விற்பனையாகிறது. மொத்தத்தில் இன்று மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,240 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • சவுக்கு சங்கர் மீது சென்னை, கோவை, திருச்சி, சேலம் ஆகிய இடங்களில் வழக்குகள் தொடரப்பட்டு போலீசார் கைது நடவடிக்கை எடுத்தனர்.
    • அவர் மீது தொடர்ந்து பல்வேறு புகார்களின் அடிப்படையில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது.

    சென்னை:

    யூடியூப்களில் பிரபலமானவர் சென்னையை சேர்ந்த சவுக்கு சங்கர். இவர் தனியார் யூடியூப் சேனல் ஒன்றில் பேசியபோது, பெண் போலீசார் மற்றும் போலீஸ் அதிகாரிகள் குறித்து அவதூறு கருத்துக்களை தெரிவித்து உள்ளார். இதுதொடர்பாக கோவை சைபர் கிரைம் போலீசார் சவுக்கு சங்கரை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

    சவுக்கு சங்கர் மீது சென்னை, கோவை, திருச்சி, சேலம் ஆகிய இடங்களில் வழக்குகள் தொடரப்பட்டு போலீசார் கைது நடவடிக்கை எடுத்தனர். அவர் மீது தொடர்ந்து பல்வேறு புகார்களின் அடிப்படையில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் சவுக்கு சங்கர் மீது மேலும் ஒரு புதிய வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் குறித்து சி.எம்.டி.ஏ.வின் ஆவணங்களை போலியாக தயாரித்து அவதூறு பரப்பியதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

    மோசடி, போலி ஆவணங்கள் மூலம் மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துதல் உள்ளிட்ட 6 பிரிவுகளில் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனால் ஏற்கனவே 5 வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள சவுக்கு சங்கர் 6-வது வழக்கிலும் கைதாகியுள்ளார்.

    • தங்களுக்கு விருப்பமான கல்லூரிப் படிப்பை சாத்தியப்படுத்தும் பாடப்பிரிவைத் தேர்ந்தெடுத்து நன்கு படிக்கவும்.
    • நன்கு படித்து 12ஆம் வகுப்பிலும் தேர்ச்சி பெற்று சிறக்க எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

    பள்ளிக்கல்வியின் முக்கிய கட்டத்தை எட்டியுள்ள நீங்கள், தங்களுக்கு விருப்பமான கல்லூரிப் படிப்பை சாத்தியப்படுத்தும் பாடப்பிரிவைத் தேர்ந்தெடுத்து, நன்கு படித்து 12ஆம் வகுப்பிலும் தேர்ச்சி பெற்று சிறக்க எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் என கூறியுள்ளார்.

    • வனப்பகுதிகளில் காலம் காலமாக வாழும் மலைவாழ் மக்களின் வாழ்விடமும், வாழ்வாதாரமும் பெரிதும் பாதிக்கப்படக்கூடிய நிலைமை ஏற்படும்.
    • முறையான யானை வழித்தடத் திட்டத்தினை செயல்படுத்த வேண்டும்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர், எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறிருப்பதாவது:-

    தி.மு.க. அரசின் வனத்துறை 29.4.2024 அன்று யானை வழித்தடம் குறித்த ஒரு வரைவு அறிக்கையினை வெளியிட்டுள்ளது. இந்த வரைவு அறிக்கை செயல்படுத்தப்பட்டால் தமிழகத்தில் வனப்பகுதிகளில் காலம் காலமாக வாழும் மலைவாழ் மக்களின் வாழ் விடமும், வாழ்வாதாரமும் பெரிதும் பாதிக்கப்படக்கூடிய நிலைமை ஏற்படும். குறிப்பாக, நீலகிரி மாவட்டம், கூடலூரில் வாழும் பல்லாயிரக்கணக்கான மலைவாழ் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.

    இந்த வரைவு அறிக்கை 161 பக்கங்களைக் கொண்டு ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மலைவாழ் மக்கள், சாமான்ய மக்கள் இந்த அரசு வெளியிட்டுள்ள ஆங்கில வரைவு அறிக்கையைப் படித்து, அதன்மீது தங்களுடைய கருத்துகளை பதிவு செய்வதற்கான சாத்தியக் கூறு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதோடு, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள இந்தச் சூழ்நிலையில் வரைவு அறிக்கைக்கு எதிராக ஜனநாயக ரீதியில் போராடுவதற்கான வாய்ப்புகளும் முடக்கப்பட்டுள்ளன.

    இந்த வரைவு அறிக்கையினால் தமிழகத்தின் பல்வேறு வனப்பகுதிகளில் வாழும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பெரும் அச்சத்திற்கும், பதட்டத்திற்கும் உள்ளாகி உள்ளனர்.

    ஒரே வருடத்தில் யானை வழித் தடங்களின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கி, அதை செயல்படுத்த முனைப்பு காட்டும் தி.மு.க. அரசுக்கு எனது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    இந்த அரசு, யானை வழித்தடங்களை அறிவிக்கும் முன்பு, தமிழில் விரிவான வரைவு அறிக்கையினை வெளியிட்டு, மலைவாழ் மக்களுடைய கருத்துகள் மற்றும் ஆட்சேபனைகளை பதிவு செய்வதற்கு போதுமான கால அவகாசம் வழங்கி, முறையான யானை வழித்தடத் திட்டத்தினை செயல்படுத்த வேண்டும் என்று அரசை வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    • வட மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறையும், கட்டமைப்பு வசதிகள் இல்லாததும் தான் தேர்ச்சி விகிதம் குறைந்ததற்கு முதன்மைக் காரணம்.
    • சமூக நீதிப் பார்வையும், தொலைநோக்குப் பார்வையும் இல்லாத அரசு அதை செய்யவில்லை.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாடு மற்றும் புதுவையில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் 91.55 சதவீத மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதே நேரத்தில் பொதுத்தேர்வில் தோற்ற மாணவர்கள் அதை நினைத்து கவலையடையக்கூடாது. அடுத்த மாதமே துணைத்தேர்வுகள் நடத்தப்படவுள்ள நிலையில், அதில் பங்கேற்று தேர்ச்சியடைந்து மேல்நிலை வகுப்பில் சேர வாழ்த்துகிறேன்.

    தேர்ச்சி விகிதங்களைப் பொறுத்தவரை இந்த ஆண்டும் வடக்கு மாவட்டங்கள் தான் கடைசி இடங்களைப் பிடித்துள்ளன என்பது கவலையும், வருத்தமும் அளிக்கிறது.

    வட மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறையும், கட்டமைப்பு வசதிகள் இல்லாததும் தான் தேர்ச்சி விகிதம் குறைந்ததற்கு முதன்மைக் காரணம். வட மாவட்டங்களின் தேர்ச்சி விகிதம் குறைந்ததற்கு இரண்டாவது காரணம் அங்குள்ள மக்களின் சமூக, பொருளாதாரக் காரணிகள் தான். இந்த இருகாரணங்களையும் மாற்ற வேண்டும் என்று தான் பா.ம.க. பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது. ஆனால், சமூக நீதிப் பார்வையும், தொலைநோக்குப் பார்வையும் இல்லாத அரசு அதை செய்யவில்லை.

    இனியாவது வட மாவட்டங்கள் மீதான பாராமுகத்தையும், பாகுபாட்டையும் கைவிட்டு, வடமாவட்ட மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும், அப்பகுதிகளின் கல்வி வளர்ச்சிக்காகவும் சிறப்புத் திட்டங்களை தமிழக அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • கலைஞர் கருணாநிதி அறக்கட்டளைக்காக, தலைவர் கலைஞர் தனது சொந்த பொறுப்பில் அளித்த 5 கோடி ரூபாயினை வங்கியில் வைப்பு நிதியாக போடப்பட்டுள்ளது.
    • வட்டித்தொகையினைக் கொண்டு மாதந்தோறும் ஏழை-எளிய நலிந்தோருக்கு உதவித்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.

    சென்னை:

    கலைஞர் கருணாநிதி அறக்கட்டளைக்காக, தலைவர் கலைஞர் தனது சொந்த பொறுப்பில் அளித்த 5 கோடி ரூபாயினை வங்கியில் வைப்பு நிதியாக போடப்பட்டு, அதில் கிடைக்கப்பெறும் வட்டித்தொகையினைக் கொண்டு மாதந்தோறும் ஏழை-எளிய நலிந்தோருக்கு உதவித்தொகையாக 2005-ம் ஆண்டு நவம்பர் முதல் வழங்கப்பட்டு வருகிறது.

    இதில் இதுவரை வழங்கிய நிதி ரூ.5 கோடியே 99 லட்சத்து 90 ஆயிரம். இந்த மாதம் நலிந்தோர் மற்றும் மருத்துவ உதவி நிதியாக மொத்தம் 8 பேருக்கு தலா ரூபாய் 25 ஆயிரம் வீதம் மொத்தம் 2 லட்சத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

    ×