search icon
என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • தமிழகம், கர்நாடகம், ஆந்திரா 3 மாநிலங்களை இணைக்கும் பகுதியாக வேப்பனபள்ளி உள்ளது.
    • உரிய ஆவணங்களின்றி, 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் கொண்டு சென்றாலோ, பரிசு பொருட்கள் கொண்டு சென்றாலோ பறிமுதல் செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    கிருஷ்ணகிரி:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி மூன்று மாநில எல்லைப்பகுதியான வேப்பனபள்ளியில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தமிழகத்தில் கடந்த 19-ந்தேதி, பாராளுமன்ற தேர்தல் முடிந்தது. கர்நாடகத்தில் நாளை மறுநாள், மே 7 என 2 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. அதேபோல ஆந்திராவில் சட்டசபை, பாராளுமன்ற தேர்தல் மே 13-ல், நடக்கிறது. தமிழகம், கர்நாடகம், ஆந்திரா 3 மாநிலங்களை இணைக்கும் பகுதியாக வேப்பனபள்ளி உள்ளது.

    எனவே வேப்பனபள்ளி அருகில், கர்நாடக மாநில எல்லையில் உள்ள நேரலகிரி சோதனைசாவடி, அத்திகுண்டா சோதனை சாவடி, வேப்பனபள்ளிஅடுத்த ஆந்திர மாநில எல்லையிலுள்ள ஒ.என்.கொத்தூர் சோதனைசாவடி உள்ளிட்டவற்றில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி உரிய ஆவணங்களின்றி, 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் கொண்டு சென்றாலோ, பரிசு பொருட்கள் கொண்டு சென்றாலோ பறிமுதல் செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மூன்று மாநில எல்லைப் பகுதிகளிலும் தீவிரமாக தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் மற்றும் போலீசார் வாகனங்களை நிறுத்தி சோதனையிடுவதால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் எத்தனை முறை சோதனையிடுவீர்கள் என சலித்து கொண்டவாறு செல்கின்றனர்.

    • கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    மத்தூர்:

    காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பகுதியைச் சேர்ந்த பாலச்சந்தர் (வயது 31).

    இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி காலனி தயாரிக்கும் தொழிற்சாலையில் மேலாளராக வேலை செய்து வருகிறார்.

    இவரது மனைவி பிரியதர்ஷினி மற்றும் ஒரு வயது குழந்தை உடன் மத்தூர் அருகே தருமபுரி-திருப்பத்தூர் சாலையில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கி வந்தார்.

    இந்த நிலையில் பாலச்சந்தர், தனது மனைவி, குழந்தையுடன் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலுக்கு வாக்களிப்பதற்காக சொந்த ஊரான உத்திரமேரூருக்கு சென்றுள்ளார். மேலும் சொந்த ஊரிலிருந்து நேற்று மத்தூருக்கு பாலச்சந்தர் மட்டும் வந்துள்ளார்.

    அப்போது வந்து பார்த்தபோது வீட்டின் இரும்பு கேட்டின் பூட்டுகள் உடைக்கப்பட்டு இருந்தது.

    இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டும், உள்ளே பீரோவில் இருந்து 8 பட்டு புடவைகள், ரூ.30ஆயிரம் மதிப்புள்ள டி.வி., 2ஜோடி வைர தோடுகள், 1½ கிலோ வெள்ளி பொருட்கள் உள்ளிட்ட பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

    இதுகுறித்து பாலச்சந்தர் மத்தூர் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகார் பேரில் மத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    அப்போது போலீசார் நடத்திய விசாரணையில், பாலச்சந்தர் வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்றதை மர்ம நபர்கள் நோட்டமிட்டு பூட்டை உடைத்து வெள்ளி பொருட்கள், வைர தோடு, புடவை, டி.வி. உள்ளிட்ட பொருட்களை திருடி சென்றுள்ளனர் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

    இந்த சம்பவ குறித்து அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • மாலை 6 மணிக்குள் வரிசையில் நின்ற வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டன.
    • கிருஷ்ணகிரி பாராளுமன்ற தொகுதியில் தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி பாராளுமன்ற தொகுதியில், ஊத்தங்கரை, பர்கூர், கிருஷ்ணகிரி, வேப்பனப்பள்ளி, ஓசூர், தளி உள்ளிட்ட 6 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதியில் 8 லட்சத்து 14 ஆயிரத்து 76 ஆண் வாக்காளர்களும், 8 லட்சத்து 8 ஆயிரத்து 798 பெண் வாக்காளர்களும், 305 திருநங்கைகளும் என மொத்தம் 16 லட்சத்து 23 ஆயிரத்து 179 வாக்காளர்கள் உள்ளனர். கிருஷ்ணகிரி பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடந்தது.

    இந்த தேர்தலில் காங்கிரஸ் சார்பில் கோபிநாத், அ.தி.மு.க. சார்பில் ஜெயபிரகாஷ், பா.ஜனதா சார்பில் நரசிம்மன், நாம் தமிழர் கட்சி சார்பில் வித்யாராணி, சுயேச்சைகள் உட்பட 27 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். மேலும், நேற்று காலை 7 மணியளவில் 1,888 வாக்குச்சாவடிகளில் (கருக்கனஹள்ளி தவிர்த்து) வாக்குப்பதிவு தொடங்கியது. முன்னதாக அனைத்து வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடந்தது. காலையில் மந்தமாக தொடங்கிய வாக்குப்பதிவு, காலை 9 மணிக்கு பிறகு விறுவிறுப்பாக நடந்தது.

    கிருஷ்ணகிரி பாராளுமன்ற தொகுதியில் காலை 9 மணியளவில் 8.78 சதவீத வாக்குகளும், காலை 11 மணியளவில் 23.97 சதவீத வாக்குகளும், பகல் 1 மணியளவில் 39.78 சதவீத வாக்குகளும், மாலை 3 மணியளவில் 51.60 சதவீத வாக்குகளும், மாலை 5 மணியளவில் 64.24 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. மாலை 6 மணிக்குள் வரிசையில் நின்ற வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டன.

    மேலும், மாலை 6 மணி நிலவரப்படி இறுதியாக கிருஷ்ணகிரி பாராளுமன்ற தொகுதியில் 71.31 சதவீத வாக்குகள் பதிவானது.

    இதற்கிடையே ஆந்திர மற்றும் கர்நாடக மாநில எல்லையோரம் அமைந்துள்ள தொகுதி என்பதால் எல்லையோர வாக்குச்சாவடிகள் மற்றும் வனப்பகுதியை ஒட்டிய வாக்குச்சாவடி மையங்களில் கூடுதல் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    தேர்தல் பாதுகாப்பு பணியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை மேற்பார்வையில் உள்ளூர் போலீசார், தமிழ்நாடு சிறப்பு போலீசார் ஆந்திரா, கேரளா போலீசார், முன்னாள் படைவீரர்கள், ஊர்க்காவல் படை, துணை ராணுவப்படையினர் உட்பட 3,722 பேர் ஈடுபட்டனர்.

    இதே போல் வாக்குச்சாவடி மையங்களில் 9,281 பணியாற்றினார்கள். ஒரு சில இடங்களில் வாக்குப்பதிவு எந்திரங்கள் கோளாறு, தேர்தல் புறக்கணிப்பு, கட்சியினரிடையே வாக்குவாதம் என இருந்த போதிலும், கிருஷ்ணகிரி பாராளுமன்ற தொகுதியில் தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மற்றொரு கிராமமான கருக்கனஅள்ளி கிராமத்திலும் தேர்தலை புறக்கணித்து வாக்காளர் யாரும் வாக்களிக்கவில்லை.
    • வாக்காளர்கள் யாரும் வராததால் வாக்கு சாவடி மையம் வெறிச்சோடி காணப்பட்டன.

    ராயக்கோட்டை:

    கிருஷ்ணகிரி பாராளுமன்ற தொகுதி வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மேட அக்ரஹார ஊராட்சியில் உள்ள கடவரஅள்ளி கிராமத்தில் இன்று காலை வாக்கு பதிவுக்கான பணிகள் நடைபெற்று தயார் நிலையில் இருந்தன.

    ஆனால், கடவரஅள்ளி கிராமத்தில் உள்ள வாக்காளர்கள் ஒருவர் கூட காலை 10 மணி நிலவரப்படி வாக்களிக்க வரவில்லை.

    இதுகுறித்து அந்த பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் கூறியதாவது:

    கடவரஅள்ளி கிராமமானது வனபகுதியையொட்டி உள்ளது. இந்த பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.

    மேலும், இந்த பகுதியில் 450 வாக்காளர்கள் உள்ளனர். இந்த நிலையில் இந்த பகுதியில் வீட்டுமனை பட்டா கேட்டு பல ஆண்டுகளாக அதிகாரிகளிடம் மனு அளித்தும், அவர்கள் எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. இதனால் இன்று நடைபெறுகிற தேர்தலை புறக்கணிக்கும் விதமாக ஒருவர் கூட நாங்கள் வாக்களிக்கவில்லை என்றனர்.

    இதேபோல் வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மற்றொரு கிராமமான கருக்கனஅள்ளி கிராமத்திலும் தேர்தலை புறக்கணித்து வாக்காளர் யாரும் வாக்களிக்கவில்லை.

    மேலும், அந்த பகுதியில் 1050 வாக்காளர்கள் உள்ளனர். இந்த பகுதியில் 4 வழிச்சாலை பணிகள் நடைபெற்று வருவதால், பொதுமக்கள் சாலையை கடக்கும் விதமாக எந்தவித மேம்பாலமும் அமைக்கவில்லை. இதனால் பொதுமக்கள் 4 வழிச்சாலை கடக்க முடியாமல் அவதிப்பட்டு வந்தனர்.

    இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் அதிகாரிகளிடம் தெரிவித்தும், எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. இதன் காரணமாக அந்த பகுதியில் உள்ள கிராம மக்கள் இன்று தேர்தலை புறக்கணித்து ஒருவர் கூட வாக்களிக்கவில்லை.

    இதேபோன்று தேன்கனிக்கோட்டை அருகே காரண்டஅள்ளி ஊராட்சிக்குட்பட்ட கச்சுவாடி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வாக்காளர் ஒருவர் கூட காலை 7 மணி முதல் 10 மணி வரை வாக்களிக்க வரவில்லை. இதுகுறித்து அந்த பகுதி பொதுமக்கள் கூறும்போது, கச்சுவாடி பகுதியில் சாலை வசதி கோரி அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. இதன் காரணமாக நாங்கள் தேர்தலை புறக்கணிக்கின்றோம் என்றனர்.

    இந்த பகுதியில் 961 பேர் வாக்காளர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    வாக்காளர்கள் யாரும் வராததால் வாக்கு சாவடி மையம் வெறிச்சோடி காணப்பட்டன.

    • கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த பகுதியில் சாலைகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளன.
    • தி.மு.க. ஆட்சியிலும் பல முறை புகார் எழுப்பியும் யாரும் கண்டு கொள்ளவில்லை.

    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நல்லூர் சாலையில் டிரெண்ட் சிட்டி என்ற தனியார் லே அவுட்பகுதி உள்ளது. இங்கு 500-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.

    இந்த நிலையில், கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த பகுதியில் சாலைகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளன.

    கடந்த ஆட்சியிலும், தற்போதைய தி.மு.க. ஆட்சியிலும் பல முறை புகார் எழுப்பியும் யாரும் கண்டு கொள்ளவில்லை என இப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

    எனவே எங்கள் பகுதியில் சாலை வசதி செய்து தர யாரும் முன்வராததால், பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்து நோ ரோட், நோ வோட் " என்ற வாசகத்துடன் வீடுகள், கடைகள் என பகுதி முழுவதும் நோட்டீஸ் ஒட்டி எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

    • கிருஷ்ணகிரி வேட்பாளர் நரசிம்மனை ஆதரித்து ராஜ்நாத் சிங் பிரசாரம் செய்தார்.
    • நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் சென்றவர் பிரதமர் மோடி என்றார்.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி பாராளுமன்ற தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் நரசிம்மனை ஆதரித்து தேர்தல் பிரசாரத்தில் மத்திய பாதுகாப்புத்துறை ராஜ்நாத் சிங் பேசியதாவது:

    ஆலயங்களின் மாநிலமான தமிழகம் வரும்போது மனம் அமைதி கொள்கிறது.

    பார்லிமென்டில் செங்கோல் வைத்ததன் மூலம் தமிழ் கலாசாரம் பெருமைப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகம் என்று பேசப்படும் போது நம் நினைவுக்கு வருவது செங்கோல் தான்.

    இன்டர்நெட்டில் ஏற்பட்ட புரட்சியால் யுபிஐ சேவை தற்போது அதிகரித்துள்ளது.

    2014-ம் ஆண்டுக்கு பிறகு மருத்துவ வசதிகளை மேம்படுத்த மத்திய அரசு முக்கியத்துவம் அளிக்கிறது. நாடுமுழுவதும் புதிதாக 22 எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைக்கப்படுகின்றன.

    பாதுகாப்பு தளவாடங்களை ஏற்றுமதி செய்யும் முதல் 25 நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது.

    ஐக்கிய நாடுகள் அவையில் யாதும் ஊரே யாவரும் கேளிர் எனக்கூறி தமிழின் பெருமையை மோடி உயர்த்தியுள்ளார்.

    நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் சென்றவர் பிரதமர் மோடி.

    நாடு முழுவதும் தமிழ் மொழியைக் கொண்டு செல்ல பிரதமர் மோடி பாடுபடுகிறார் என தெரிவித்தார்.

    • சதீஷ்குமாரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
    • 3 பேரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தாலுகா ஒன்னப்பள்ளியை சேர்ந்தவர் முனிராஜ். இவரது மகன் சதீஷ்குமார் (வயது 23). இவர் பூனப்பள்ளி பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருடன் மதுரை மாவட்டம் சாலைபுதூர் பகுதியை சேர்ந்த அஜித்குமார் (27) என்பவரும் அந்த நிறுவனத்தில் பேக்கேஜ் பிரிவில் வேலை செய்து வந்தனர்.

    அஜித்குமாரும் அவரது நண்பர்களும் பேளகொண்டப்பள்ளி பகுதியில் தங்கி இருந்தனர். இந்த நிலையில் கடந்த 12-ந் தேதி சதீசிற்கும், அஜித்குமாருக்கு நிறுவன வளாகத்தில் தகராறு ஏற்பட்டது.

    இதனால் அஜித்குமார் வெளியே இருந்த தனது நண்பர்களுக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தார். இதையடுத்து அஜித்குமாரின் நண்பர்கள் சிலர் பயங்கர ஆயுதங்களுடன் அந்த நிறுவன வளாகத்திற்கு வந்தனர்.

    அங்கு அவர்கள் சதீஷ் குமாரை சரமாரியாக தாக்கி கத்தியால் சரமாரியாக குத்தினார்கள். இதில் பலத்த காயமடைந்த சதீஷ்குமாரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

    இது குறித்து சதீஷ்குமாரின் தந்தை முனிராஜ் மத்திகிரி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரகாஷ் விசாரணை நடத்தி, சதீஷ்குமாரை குத்தியதாக மதுரை சாலைபுதூர் அஜித்குமார் (27) பெத்தனபுரம் சச்சின் (19), மத்திகிரி பேளகொண்டப்பள்ளி சுனில்குமார் (26), திருப்பத்தூர் மாவட்டம் நாட்ராம்பள்ளி அஜித்குமார் (24), மதுரை விலவன்குடி அஜய் (22), பொம்மண்டப்பள்ளி வினய் (24), மதுரை முத்துராமலிக தேவர் தெரு அருண்பாண்டி (32), மதுரை விளங்காமுடி வீரபாண்டிகுமார் (20), கடலூர் மாவட்டம் விருதாசலம் பிரகாஷ்ராஜ் (24) ஆகிய 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

    அவர்கள் மீது சட்ட விரோதமாக கூடுதல், கலகம் விளைவித்தல், ஆபாசமாக பேசுதல், தாக்குதல், கொலை முயற்சி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளனது. இவர்களில் அருண்பாண்டி, வீரபாண்டி குமார், பிரகாஷ் ஆகிய 3 பேரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மற்ற 6 பேரையும் தேடி வருகிறார்கள்.

    • தகவல் அறிந்து தேன்கனிக்கோட்டை டி.எஸ்.பி சாந்தி, இன்ஸ்பெக்டர் தவமணி, தளி செயலாளர் திவாகர் ஆகியோர் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
    • நாராணயப்பாவின் உடலை தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    தேன்கனிக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகா தளி அருகே கடந்த சில தினங்களாக கரடிகல், சூளகுண்டா பகுதியில், ஒற்றை யானை ஒன்று உணவு தண்ணீர் தேடி கிராம பகுதியில் சுற்றி வந்துள்ளது.

    இதை கண்ட விவசாயிகள் யானையை விரட்ட வனத்துறையினரிடம் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை, சூளகுண்டா கிராமத்தைச் சேர்ந்த விவசாயி நாராயணப்பா (71), அருகில் உள்ள தனது நிலத்திற்கு சென்றுள்ளார். ஆனால், இரவு வீடு திரும்பவில்லை. இதனால், குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. நேற்று காலை, அருகில் உள்ள விவசாய நிலத்தில் நாராயணப்பா யானை மிதித்து இறந்து கிடந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த ஜவளகிரி வனச்சரக அலுவலர் அறிவழகன் தலைமையில் வனத்துறையினர், தளி எஸ்.ஐ சந்துரு மற்றும் போலீசார் உடலை மீட்க சென்றனர்.

    அப்போது கிராம மக்கள், அவரது உடலை எடுக்க விடாமல் தடுத்தனர். தகவல் அறிந்து தேன்கனிக்கோட்டை டி.எஸ்.பி சாந்தி, இன்ஸ்பெக்டர் தவமணி, தளி செயலாளர் திவாகர் ஆகியோர் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    கிராம பகுதியில் யானைகள் புகாதவாறு ரோப்வயர் பென்ஸ் அமைக்க வேண்டும், இறந்தவர் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும், வனப்பகுதியை ஒட்டியுள்ள புதர்களை அகற்றி சாலை பணிகள் மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அதிகாரிகள் சமரசத்தை ஏற்று, அனைவரும் கலைந்து சென்றனர்.

    பின்னர், நாராணயப்பாவின் உடலை தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இந்நிலையில், நாராயணப்பா குடும்பத்தினரை மருத்துவமனையில் சந்தித்து, வனத்துறை சார்பில், நாராயணப்பா குடும்பத்திற்கு நிவாரண நிதியாக ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்டது.

    • பெண்ணின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்தனர்.
    • பாம்புடன் சித்ராவை மீட்டு போச்சம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்து சேர்த்தனர்.

    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள பனங்காட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி சித்ரா (வயது 35). இவர் சம்பவத்தன்று வீட்டின் முன்பு உறவினரிடம் செல்போனில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது சித்ராவை பாம்பு ஒன்று கடித்து விட்டு சென்றது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வலியால் அலறி துடித்தார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்தனர். அப்போது பாம்பு கடித்ததாக அவர் கூறினார்.

    இதையடுத்து அவர்கள் பாம்பை தேடியபோது புதரில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. அந்த பாம்பை அவர்கள் பிடித்து ஒரு பிளாஸ்டிக் கவரில் போட்டனர். பின்னர் அவர்கள் பாம்புடன் சித்ராவை மீட்டு போச்சம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்து சேர்த்தனர். இதையடுத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    கடித்த பாம்புடன் பெண் ஆஸ்பத்திரிக்கு வந்ததால் அங்கிருந்த நோயாளிகள், மருத்துவமனை ஊழியர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதனால் ஆஸ்பத்திரியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • நாடு முழுவதும், 27 லட்சம் கோடி ரூபாய், 44 கோடி மக்களுக்கு சென்றடைந்தது.
    • நிறைய எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் கூட நிறைய மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தி இருக்கிறது.

    ஓசூர்:

    கிருஷ்ணகிரி பாராளுமன்ற தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பா.ஜ.க. வேட்பாளர் நரசிம்மன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து பொதுக் கூட்டத்தில் பேசுவதற்காக இன்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூருக்கு வருகை தந்தார்.

    அப்போது அவர் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசியதாவது:

    கிருஷ்ணகிரி மாவட்ட மக்கள் கொளுத்தும் வெயில் என்று பாராமலும், வேலை நாட்களிலும் இந்த பிரசார கூட்டத்திற்கு மக்கள் திரண்டுள்ளனர். இதனை கண்டு பெரும் மகிழ்ச்சியடைகிறேன். இன்றைக்கு இரண்டு, மூன்று கருத்துக்களை தெரிவிக்க விரும்புகிறனே். மீண்டும் மோடி வேண்டும் மோடி என்ற கோஷம் ஒலித்து வருகின்றன.

    எதிர்கட்சியாக காங்கிரஸ் கட்சியினர், தி.மு.க.வினர் பாராளுமன்றத்தில் கிருஷ்ணகிரியை பற்றியோ, ஓசூரை பற்றியோ என்ன கேள்விகளை எழுப்பினர்கள் என்று பெரிய கேள்விகுறியாக உள்ளது.

    நிறைய எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் கூட நிறைய மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தி இருக்கிறது. இதில் பி.எம். முத்ரா யோஜன திட்டத்தின் மூலம் ஏழை எளியோருக்கு சிறு,குறு தொழில்கள் தொடங்க வங்கி மூலம், எந்த ஒரு ஆவணமின்றி குறைந்த வட்டியில் கடன் வழங்கப்பட்டுள்ளது.


    நாடு முழுவதும், 27 லட்சம் கோடி ரூபாய், 44 கோடி மக்களுக்கு சென்றடைந்தது. கிருஷ்ணகிரி மாவட்டம் 5 ஆயிரம் 427 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. 6.34 லட்சம் பேருக்கு கடன் கிடைத்துள்ளது. அதேபோன்று ஸ்டார் அப்திட்டம் மூலம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 465 பேருக்கு ரூ.60 கோடி கிடைத்துள்ளது. இதில் குறிப்பாக பெண்கள், எஸ்.சி., மற்றும் எஸ்.டி. பிரிவினரும் பயன் அடைந்துள்ளனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர் 2.75 லட்சம் பேரின் வீட்டிற்கு குழாய் மூலம் நேரடியாக குடிநீர் மூலம் விநியோக செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 11 கோடி வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் நேரிடையாக வழங்கப்பட்டுள்ளது. ஏழைகளுக்கு வீடு கட்டி கொடுக்கும் திட்டம் மூலம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கிராமப்புறத்தில் 18,600 பேருக்கு பிரதமர் மோடி வீடு கட்டி கொடுத்துள்ளார். அதேபோல் மாவட்டத்தில் நகர்ப்புறத்தில் 7460 பேருக்கு பிரதமர் மோடியின் பெயரில் வீடு கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு வருடத்திற்கு ரூ.5 லட்சம் வரை காப்பீடு மூலம் ஒரு ரூபாய் செலவில்லாமல், எந்தவொரு ஆவணம் காட்டாமல் கேஷ் லெஸ் என்ற முறையில் இலவச சிகிச்சை அளிக்கும் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் 64 ஆயிரம் கார்டு கொடுக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் 2.35 லட்சம் குடும்பங்கள் பயன்பெற்றுள்ளனர்.

    கடந்த 10 ஆண்டுகளில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மத்திய அரசு சார்பில் தொழில் வளர்ச்சி அடைந்து உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொழில் துறையில் தி.மு.க.வினர் வசூலில் ஈடுபட்டு வருகின்றனர். போதை பொருள் வழக்கில் கைதான ஜாபர் சாதிக் முதலமைச்சர் குடும்பத்துடன் தொடர்பில் இருந்துள்ளார்.

    முன்னதாக அவர் டெல்லியில் இருந்து பெங்களூரு விமான நிலையத்தில் ஹெலிகாப்டர் மூலம் வந்தார். அங்கிருந்து கார் மூலம் ஓசூரில் உள்ள பிரசார பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்திற்கு வந்தார். அங்கு அவருக்கு பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். கூட்டத்தில் பா.ஜ.க., பா.ம.க., மற்றும் கூட்டணி நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தை முடித்துவிட்டு அவர் காரில் அங்கிருந்து புறப்பட்டு பெங்களூருவுக்கு சென்றார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் தஞ்சாவூருக்கு புறப்பட்டார்.

    • அரிய வகை மரங்கள் மற்றும் செடி கொடிகள் தீயில் கருகி சேதமானது.
    • வனப்பகுதிகளில் தீவிர ரோந்து பணிகளில் ஈடுபட்டு காட்டுத் தீ ஏற்படுவதை கண்காணித்து வருகின்றனர்.

    தேன்கனிக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வனச்சரகத்திற்குட்பட்ட அய்யூர் உள்ளிட்ட வனப்பகுதிகளில் கடும் வெப்பத்தால் தொடர்ந்து தீ விபத்து ஏற்பட்டது.

    இதனால், அரிய வகை மரங்கள் மற்றும் செடி கொடிகள் தீயில் கருகி சேதமானது. காட்டு தீயால் வனப்பகுதியில் வாழ்ந்து வரும் பறவைகள், உள்ளிட்ட வனவிலங்குகள் பாதிக்கப்பட்டது.

    இதனையடுத்து, ஓசூர் வன கோட்ட உயிரின காப்பாளர் கார்த்திகேயனி உத்தரவின் பேரில், தேன் கனிக்கோட்டை வனச்சரக அலுவலர் விஜயன், தலைமையில் வனத்துறை மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு வனப்பகுதிகளில் தீவிர ரோந்து பணிகளில் ஈடுபட்டு காட்டுத் தீ ஏற்படுவதை கண்காணித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் தொழுவபெட்டா வனப்பகுதியில் ரோந்து சென்றபோது அங்கு கன்னிகாபுரம் கிராமத்தைச் சேர்ந்த மல்லேசப்பா (வயது29) என்பவர் வனப்பகுதிக்கு தீ வைத்தது தெரிய வந்தது.

    இதனையடுத்து வனப்பகுதியில் தீ வைத்த குற்றத்திற்காக அவரை வனத்துறையினர் கைது செய்தனர்.

    வனத்துறையினர் மல்லே சப்பாவை தேன்கனிக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி தருமபுரி சிறையிலடைத்தனர்.

    வனப்பகுதிகளில் அத்துமீறி நுழைந்து தீ விபத்து ஏற்பட காரணமாக இருப்பவர்கள் மீது வனச்சட்டங்களின் படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஓசூர் வனக்கோட்ட வன உயிரின காப்பாளர் கார்த்திகேயனி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    • கிருஷ்ணகிரியில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் வேட்பாளர் வித்யாராணியை ஆதரித்து சீமான் பேசினார்.
    • சம்பவத்தால் பிரசார கூட்டத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வித்யாராணி வீரப்பனை ஆதரித்து, அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று மாலை மத்தூர், பர்கூரில் பிரசாரம் மேற்கொண்டார்.

    இதைத்தொடர்ந்து இரவு கிருஷ்ணகிரியில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் வேட்பாளர் வித்யாராணியை ஆதரித்து சீமான் பேசினார்.

    அப்போது சீமான் மேடையில் பேசிக் கொண்டிருக்கும்போது கூட்டத்தில் இருந்து ஒரு வாலிபர் திடீரென்று ஓடிவந்து அவரை கட்டி பிடித்து செல்பி எடுக்க வேண்டும் என்று கூறினார்.

    உடனே ஆதரவாளர்கள் ஓடிவந்து அந்த வாலிபரை அங்கிருந்து அப்புறப்படுத்தி மேடையில் இருந்து கீழே இறங்கிவிட்டனர்.

    இதனால் சீமான் அந்த வாலிபரை முறைத்தபடி திட்டினார். இதனைத்தொடர்ந்து அவர் தனது பேச்சை தொடர்ந்தார். இந்த சம்பவத்தால் பிரசார கூட்டத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

    ×