search icon
என் மலர்tooltip icon

    தேனி

    • பிறந்த குழந்தை எங்கே என்று கேட்டபோது, தங்களால் குழந்தையை பராமரிக்க இயலாது என்பதால் மதுரையில் உள்ள தனது அண்ணன் வீட்டில் கொடுத்து வளர்க்க வைத்துள்ளதாக சங்கர் கூறினார்.
    • 4 பேரையும் பிடித்து பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் வீரபாண்டி அருகே உள்ள உப்புக்கோட்டை முத்தாலம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சங்கர் (வயது 35). இவருக்கு திருமணமாகி குழந்தை இல்லாததால் முதல் மனைவி பிரிந்து சென்று விட்டார். இதனையடுத்து மனைவியின் தங்கை பாண்டீஸ்வரியை 2-வது திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு கடந்த 1 மாதத்துக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தையை மதுரையைச் சேர்ந்த சிவக்குமார்-உமா மகேஸ்வரி தம்பதிக்கு விற்று விட்டதாக தகவல் பரவியது. மேலும் கடந்த 2 நாட்களாக குழந்தையை விற்ற பணத்தில் சங்கர் அளவுக்கு அதிகமாக மது குடித்து வீட்டிலேயே அலப்பறை செய்து வந்துள்ளார்.

    இது குறித்து சிறார் நலக்குழு மற்றும் வீரபாண்டி போலீசாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து போலீசார் மற்றும் சிறார் நலக்குழு களப்பணியாளர் வனராஜ் ஆகியோர் சங்கர் மற்றும் அவரது மனைவியிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணான தகவல் தெரிவித்தனர். பிறந்த குழந்தை எங்கே என்று கேட்டபோது, தங்களால் குழந்தையை பராமரிக்க இயலாது என்பதால் மதுரையில் உள்ள தனது அண்ணன் வீட்டில் கொடுத்து வளர்க்க வைத்துள்ளதாக சங்கர் கூறினார்.

    இருந்தபோதும் அவர்களது பேச்சில் நம்பிக்கை இல்லாமல் சங்கர் கூறிய விலாசத்தில் மதுரைக்கு விரைந்து சென்றனர். மதுரை அம்புஜம் நகரில் வசிக்கும் சிவக்குமார் (45) மற்றும் அவரது மனைவி உமா மகேஸ்வரி (35) ஆகியோரை போலீசார் வரவழைத்து விசாரித்தனர். அவர்களும் முறையான பதில் அளிக்காததால் சந்தேகம் வலுத்தது. இதனைத் தொடர்ந்து 4 பேரையும் பிடித்து பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர்.

    குழந்தை கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும், போலீசார் கைப்பற்றி கொண்டு வந்தனர். தொடர்ந்து நடத்திய விசாரணையில் குழந்தை ரூ.1.50 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டது தெரிய வந்தது.

    இதனைத் தொடர்ந்து போலீசார் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிவக்குமார்- உமாமகேஸ்வரி தம்பதி வேறு யாரிடமாவது இது போல வறுமையில் உள்ள தம்பதியிடம் குழந்தையை வாங்கி விற்பனை செய்தார்களா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 131.65 அடியாக உள்ளது. அணைக்கு 807 கன அடி நீர் வருகிறது.
    • மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடியாக உள்ளது. வரத்தும் திறப்பும் இல்லை.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை மூலம் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றது. 71 அடி உயரம் கொண்ட அணையில் தொடர் மழை காரணமாக அணையின் நீர்மட்டம் உயர்ந்தது. மேலும் பாசனத்திற்கான தண்ணீர் நிறுத்தப்பட்டதால் முழு கொள்ளளவை எட்டும் என விவசாயிகள் எதிர்பார்த்திருந்தனர்.

    இந்த நிலையில் மதுரை மாவட்ட பாசனத்திற்காக அணையில் இருந்து 900 கன அடிநீர் திறக்கப்பட்டு வருகிறது. மேலும் மழை ஓய்ந்ததால் அணைக்கு நீர்வரத்தும் 306 கன அடியாக குறைந்துள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் 64 அடியில் இருந்து வேகமாக சரிந்து இன்று காலை 62.89 அடியாக குறைந்தது.

    குடிநீருக்கான 69 கன அடி நீர் சேர்த்து 969 கன அடி நீர் திறக்கப்படுகிறது. அணையில் 4180 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது.

    முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 131.65 அடியாக உள்ளது. அணைக்கு 807 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து தமிழக பகுதிக்கு 800 கன அடி நீர் திறக்கப்படுகிறது. 5083 கன அடி நீர் இருப்பு உள்ளது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடியாக உள்ளது. வரத்தும் திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 124.15 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    • தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற சம்பவங்கள் அதிக அளவில் நடக்கிறது.
    • போதை பொருட்கள் பள்ளி, கல்லூரி மாணவர்களின் கைகளில் தாராளமாக கிடைக்கிறது.

    போடி:

    தேனி மாவட்டம் போடியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்த்து வருவதற்காக அமெரிக்கா சென்றுள்ளார். எந்த அளவிற்கு அவர் நிதியை கொண்டு வந்து சேர்க்கிறார், எந்த அளவிற்கு அது மக்களுக்கு பயன் அளிக்கும் என்பது உண்மையிலேயே அந்த தொழில்கள் தொடங்கி வேலைவாய்ப்பு கிடைத்தால் தான் தெரியவரும். எனவே முதலீடுகளை தமிழகத்திற்காக ஈர்த்து வந்தால் மகிழ்ச்சிதான்.

    தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற சம்பவங்கள் அதிக அளவில் நடக்கிறது. இவைதான் தி.மு.க. ஆட்சியின் சாதனையாக உள்ளது. பாலியல் குற்றங்களை தடுக்க மத்திய அரசு கடுமையான சட்டங்களை இயற்ற வேண்டும். மத்திய அரசு தமிழகத்திற்கு போதிய நிதியை வழங்குவதில்லை என தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தொடர்ந்து குறைகூறி வருகின்றனர். ஆனால் மத்திய அரசு தமிழகத்திற்கு தேவையான திட்டங்களுக்கு போதிய நிதியை ஒதுக்கீடு செய்து வருகிறது.

    ஆனால் தி.மு.க. ஆட்சியில் தாங்கள் தேர்தல் சமயத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. மின்கட்ட உயர்வு பல மடங்கு உயர்ந்துவிட்டது. போதை பொருட்கள் பள்ளி, கல்லூரி மாணவர்களின் கைகளில் தாராளமாக கிடைக்கிறது. இதனால் மாணவர் சமுதாயம் அழிவைநோக்கி செல்லும் அபாயம் உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பத்திரிகையாளருக்கும், ஜீவாவுக்கும் இடையே வாக்குவாதம்.
    • சம்மந்தமில்லாமல் கேள்வி கேட்கிறீர்கள் என கோபமாக கத்தினார்.

    தேனி:

    தேனி-மதுரை சாலையில் உள்ள ஜவுளிக்கடை திறப்பு விழாவிற்காக நடிகர் ஜீவா வந்தார். அப்போது அவரிடம் நிருபர்கள் பேட்டி கேட்க முயன்றனர்.

    ஆனால் அவர் செய்தியாளர்கள் கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் அங்கிருந்து செல்ல முயன்றார். அப்போது அவரை சூழ்ந்த நிருபர்கள் மலையாள சினிமா குறித்து ஹேமா கமிட்டி அளித்த அறிக்கை தொடர்பாக கேள்விகளை எழுப்பினர்.

    ஆனால் அவர் அந்த சம்பவம் குறித்து தனக்கு எதுவும் தெரியாது எனக்கூறினார். இருந்த போதும் தொடர்ந்து கேள்வி கேட்டதால் கோபத்தின் உச்சிக்கே சென்ற நடிகர் ஜீவா உங்களுக்கு அறிவு இருக்கிறதா, நான் எந்த நிகழ்ச்சிக்காக வந்துள்ளேன். சம்மந்தமில்லாமல் கேள்வி கேட்கிறீர்கள் என கோபமாக கத்தினார்.

    இதற்கு பத்திரிகையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அவர்களுக்கும், நடிகர் ஜீவாவுக்கும் இடையே சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் அவரை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். 

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 130.65 அடியாக உள்ளது.
    • மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடியாக உள்ளது. அணைக்கு வரும் 46 கன அடி நீர் அப்படியே திறக்கப்படுகிறது.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணை உள்ளது. இந்த அணை மூலம் மதுரை ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, திண்டுக்கல் ஆகிய 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றது. மேலும் தேனி, மதுரை மாவட்ட முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது. கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கன மழையால் வைகை அணைக்கு நீர் வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டமும் உயர்ந்தது.

    65 அடியை நெருங்கிய நிலையில் தண்ணீர் திறப்பும் குறைக்கப்பட்டதால் முழு கொள்ளளவை எட்டும் என விவசாயிகள் எதிர்பார்த்திருந்தனர். இந்த நிலையில் தற்போது மழைப்பொழிவு குறைந்து விட்டது. மேலும் அணையில் இருந்து பாசனத்திற்காகவும் கூடுதல் தண்ணீர் திறக்கப்படுகிறது. இதனால் நீர்மட்டம் 63.58 அடியாக குறைந்துள்ளது.

    அணைக்கு 364 கன அடி நீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்துக்காக 969 கன அடி நீர் திறக்கப்படுகிறது. அணையில் 4323 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது.

    முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 130.65 அடியாக உள்ளது. 948 கன அடி நீர் வருகிற நிலையில் 406 கன அடி நீர் திறக்கப்படுகிறது. அணையில் 4849 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடியாக உள்ளது. அணைக்கு வரும் 46 கன அடி நீர் அப்படியே திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 125.88 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது. பெரியாறு 6.6, தேக்கடி 5, கூடலூர் 1.8, சண்முகாநதி 2, உத்தமபாளையம் 1.2 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.

    • வைகை அணையின் நீர்மட்டம் 64.14 அடியாக உள்ளது.
    • சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.01 அடியாக உள்ளது.

    கூடலூர்:

    நீர்பிடிப்பு பகுதியில் மழை குறைந்த நிலையில் முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் உயர்வதில் சிக்கல் ஏற்பட்டது. மேலும் வெயிலின் தாக்கம் அதிகரித்ததால் அணையின் நீர்மட்டம் உயருமா? என சந்தேகம் விவசாயிகளிடையே ஏற்பட்டது.

    இந்த நிலையில் தற்போது மீண்டும் மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று 405 கன அடியாக இருந்த தண்ணீர் வரத்து இன்று காலை 914 கன அடியாக உயர்ந்துள்ளது. மேலும் அணையின் நீர்மட்டமும் 130.05 அடியாக உயர்ந்துள்ளது. அணையில் இருந்து தமிழக பகுதிக்கு 400 கன அடி நீர் திறக்கப்படுகிறது. 4709 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது.

    வைகை அணையின் நீர்மட்டம் 64.14 அடியாக உள்ளது. 253 கன அடி நீர் வருகிற நிலையில் மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 869 கன அடி நீர் திறக்கப்படுகிறது. அணையில் 4441 மி. கன அடி நீர் இருப்பு உள்ளது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடியாக உள்ளது. அணைக்கு வரும் 46 கன அடி நீர் அப்படியே திறக்கப்படுகிறது.

    சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.01 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    பெரியாறு 41, தேக்கடி 28.4, சண்முகாநதி அணை 2, கூடலூர் 2.6, உத்தமபாளையம் 1, போடி 2.6, சோத்துப்பாறை 3, வீரபாண்டி 6.6, அரண்மனைபுதூர் 1.4, ஆண்டிபட்டி 2 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

    • காதல் திருமணம் செய்த இவர்களை இரு வீட்டாரும் ஏற்றுக் கொள்ளவில்லை.
    • மனைவி, மகளை கொன்று கணவர் தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி அருகே உள்ள அமச்சியாபுரத்தைச் சேர்ந்தவர் சதீஸ்குமார் (வயது 35). இவர் கடந்த 6 வருடங்களுக்கு முன்பு அஜித்தா (வயது 33) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தற்போது பிரத்விகா (5) என்ற மகள் உள்ளார். இந்த குழந்தை தனியார் பள்ளியில் 1ம் வகுப்பு படித்து வந்தார்.

    காதல் திருமணம் செய்த இவர்களை இரு வீட்டாரும் ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் அரண்மனைப்புதூர் அருகே உள்ள முல்லை நகரில் வாடகை வீட்டில் சதீஸ்குமார் தனது மனைவி மற்றும் மகளுடன் வசித்து வந்தனர். சதீஸ்குமார் தேனியில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

    மேலும் சிலருக்கு வட்டிக்கு பணம் கொடுத்தும் பைனான்ஸ் தொழில் செய்தும் வந்துள்ளார். தற்போது இவரது மனைவி அஜித்தா 5 மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக அவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பேசாமல் இருந்து வந்துள்ளனர்.

    அஜித்தா தனது தேவைகளை ஒரு பேப்பரில் எழுதி தனது மகளிடம் கொடுத்து விடுவார். அதனை பார்த்து சதீஸ்குமார் என்ன வேண்டுமோ அதனை வாங்கி கொடுத்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு முதல் அவரது செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. நேற்று காலை முதல் இரவு வரை பைனான்ஸ் கம்பெனியில் இருந்து பல முறை தொடர்பு கொண்டும் இணைப்பு கிடைக்காததால் சந்தேகமடைந்தனர்.

    இதனையடுத்து அஜித்தாவின் தந்தை மற்றும் சகோதரனுக்கு தகவல் தெரிவித்து வீட்டில் என்ன பிரச்சனை என்று விசாரிக்குமாறு பைனான்ஸ் கம்பெனியில் இருந்து தெரிவித்தனர்.

    அஜித்தாவின் தந்தை மற்றும் அவரது தம்பி வீட்டுக்கு வந்த போது உட்புறமாக கதவு பூட்டப்பட்டு இருந்தது. கதவை உடைத்து உள்ளே சென்ற போது, அஜித்தா மற்றும் அவரது மகள் கத்திக் குத்து காயங்களுடன் கொடூரமாக இறந்து கிடந்தனர். கணவர் சதீஸ்குமார் தூக்கு மாட்டிய நிலையில் இறந்து கிடந்தார்.

    இது குறித்து பழனிசெட்டிபட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து 3 பேரின் உடல்களையும் மீட்டு தேனி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    போலீசார் வீட்டில் சோதனை செய்த போது சதீஸ்குமார் கைப்பட எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியது. அதில், தனது பெற்றோர்கள் மற்றும் நண்பர்களுக்கு அவர் எழுதியிருந்தார். காதல் திருமணம் செய்து சந்தோசமாக வாழலாம் என நினைத்தோம். ஆனால் எங்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டபோது, அதனை தீர்த்து வைக்க யாரும் வரவில்லை. இதனால் என் மனைவி மற்றும் குழந்தைகளை கொலை செய்ய முடிவு செய்தேன். இந்த உலகத்தில் வாழ பிடிக்கவில்லை. நான் இல்லாத உலகத்தில் அவர்கள் இருக்க கூடாது என்பதாலும் அவர்கள் இல்லாத உலகத்தில் நான் வாழ விரும்பாத காரணத்தாலும் தற்கொலை செய்யும் முடிவை எடுத்துள்ளேன். என்னை அனைவரும் மன்னித்து கொள்ளுங்கள். இவ்வாறு சதீஸ்குமார் அந்த கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார்.

    காதல் திருமணம் செய்த மனைவி, மகளை கொன்று கணவர் தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • குரங்கணி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
    • தடுப்புகளை தாண்டி காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடி அருகே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியான குரங்கணி டாப் ஸ்டேஷன், முதுவாக்குடி, கொழுக்குமலை, முட்டம், சென்ட்ரல் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

    இதனால் போடியின் முக்கிய நீர் ஆதாரமான குரங்கணி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    நீரோடையில் கட்டப்பட்டுள்ள சுமார் 7 அடி ஆழமுள்ள நீர் தேக்க தொட்டி மற்றும் தடுப்புகளை தாண்டி காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

    இதனால் குரங்கணி அருவி, நீரோடைக்கு செல்வதற்கு பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் மற்றும் குடிநீர் வடிகால் வாரிய நிர்வாகத்தினர் தடை விதித்துள்ளனர். மேலும் அப்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த 10 நாட்களாக மஞ்சளாறு அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள பெருமாள்மலை, சாமக்காடு, பாலமலை உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கன மழையின் காரணமாக நீர் வரத்து அதிகரித்து எலிவால் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகின்றது.

    தமிழகத்திலுள்ள அருவிகளில் மிகவும் உயரமானது எலிவால் அருவி. இந்த அருவி கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகள் அனைவரையும் முதன் முதலில் வரவேற்கும் விதமாக அமைந்துள்ளது.

    எனவே எலிவால் அருவியில் நீர் ஆர்ப்பரித்து கொட்டி வருவதை சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியுடன் கண்டு ரசித்து செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து வருகின்றனர்.

    இதேபோல் கும்பக்கரை அருவியில் கடந்த 12ம் தேதி சுற்றுலா பயணிகள் குளிக்க தடை வித்தித்தனர். தொடர் மழை காரணமாக அருவியில் வெள்ளப்பெருக்கு குறையாமல் தண்ணீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 

    • கோவிலுக்கு தேனி பிரதான சாலையில் இருந்து பாதை உள்ளது.
    • சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டது.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் கடமலைக்குண்டு கிராமத்தின் மூலவைகை ஆற்றங்கரை ஓரத்தில் பாண்டியர் காலத்தில் கட்டப்பட்ட பழமையான ஈஸ்வரன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தேனி பிரதான சாலையில் இருந்து பாதை உள்ளது. இந்த பாதையை பல நூற்றாண்டு காலமாக கோவிலுக்கு செல்லும் பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர்.

    இந்நிலையில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு கடமலைக்குண்டுவை சேர்ந்த தனிநபர் கோவிலுக்கு செல்லும் பாதையை முள்வேலி மூலம் அடைத்தார். இது தொடர்பாக கடமலைக்குண்டு கிராம கமிட்டியினர் சம்பந்தப்பட்ட தனிநபரிடம் கேட்டபோது அந்தப்பாதை தன்னுடைய பட்டா நிலத்தில் வருவதாக தெரிவித்துள்ளார்.


    மேலும் முள்வேலியை அகற்ற முடியாது என திட்டவட்டமாக மறுத்துவிட்டார். இது தொடர்பாக கிராம கமிட்டியினர் கடமலைக்குண்டு போலீஸ் நிலையத்திலும், தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலும் புகார் மனுக்கள் அளித்தனர். ஆனால் முள்வேலியை அகற்ற எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடமலைக்குண்டு போலீஸ் நிலையத்தில் ஆண்டிபட்டி தாசில்தார் தலைமையில் சம்பந்தப்பட்ட தனிநபர் மற்றும் கிராம கமிட்டியினர் இடையே பேச்சுவார்த்தை நடந்தது.

    இதில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இதையடுத்து கோவில் பாதை அடைக்கப்பட்டதை கண்டித்து கடமலைக்குண்டு கிராமத்தினர் கடையடைப்பு அறவழி பொது வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி காலை 8 மணிக்கு அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டது. இதனால் சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டது. முள்வேலியை அகற்ற நடவடிக்கை எடுக்காவிட்டால் அடுத்தடுத்து தொடர் போராட்டங்கள் நடைபெறும் என கிராம மக்கள் தெரிவித்தனர். இதனால் கடமலைக்குண்டு கிராமத்தில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

    • முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 129.50 அடியாக உள்ளது.
    • மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடியில் நீடிக்கிறது.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை மூலம் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றது. மேலும் தேனி, மதுரை மாவட்ட முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது.

    கடந்த சில நாட்களாக தேனி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. இதனால் வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. மேலும் முதல்போக சாகுபடிக்கு திறக்கப்பட்ட தண்ணீரும் நிறுத்தப்ப ட்டதால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. கடந்த 5 நாட்களில் மட்டும் 5 அடி உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 57 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை 61.58 அடியாக உள்ளது. விரைவில் 62 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அணையில் இருந்து மதுரை மாநகர குடிநீருக்காக 69 கன அடி நீர் திறக்கப்படுகிறது. அணைக்கு 2063 கன அடி நீர் வருகிறது. 3912 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது.

    முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 129.50 அடியாக உள்ளது. 1168 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து தமிழக பகுதிக்கு 1533 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. 4590 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடியில் நீடிக்கிறது. அணைக்கு வரும் 184 கன அடி நீர் முழுவதும் வெளியேற்றப்படுகிறது. சோத்துப்பாறை அணை முழு கொள்ளளவான 126.28 அடியில் உள்ளது. அணைக்கு வரும் 158 கன அடி நீர் அப்படியே திறக்கப்படுகிறது.

    பெரியாறு 2.8, தேக்கடி 5.4, கூடலூர் 1.4, சண்முகாநதி அணை 4.6, உத்தமபாளையம் 1.2, வீரபாண்டி 0.4 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

    • திராவிட மாடல் தமிழகத்தை சீரழிக்க வில்லை.
    • திருமாவளவன் பேசிய கருத்தை தவறாக சித்தரித்து செய்தி வந்துள்ளது.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் கடமலை, மயிலை ஒன்றிய அலுவலகத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் தேனி எம்.பி. தங்கதமிழ்செல்வன் கலந்து கொண்டு தேசியக்கொடி ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.

    பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:-

    திராவிட மாடல் தமிழகத்தை சீர்குலைத்ததாக கவர்னர் ரவி சென்னையில் நடந்த விழாவில் மாணவர்கள் மத்தியில் பேசியுள்ளார். திராவிட மாடல் தமிழகத்தை சீரழிக்க வில்லை. அனைத்து தரப்பு மக்களையும் சீர்தூக்கி வருகிறது.

    சமீபத்தில் நடந்த புள்ளிவிபரத்தின்படி தமிழகத்தைச் சேர்ந்த கல்லூரிகளே இந்தியாவின் தலைசிறந்த கல்லூரிகளாக உள்ளது.

    இது ஒன்றே போதுமானது. ஆனால் கவர்னர் ரவி இதைப்பற்றி தெரியாமல் பா.ஜ.க.வின் விசுவாசியாக தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். அவருக்கு பதில் அளித்து நேரத்தை வீணடிக்க வேண்டாம்.

    திருமாவளவன் பேசிய கருத்தை தவறாக சித்தரித்து செய்தி வந்துள்ளது. தலித் சமுதாய மக்களுக்கு அனைத்து உதவிகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்து வருவதாக அவர் பேசியதை வெட்டி விட்டு அவர் பேசிய ஒரு வார்த்தையை மட்டும் வெளியிட்டு வருகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பெண் காவலர்களை அவதூறாக பேசியது தொடர்பான வழக்கில் அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்திருந்தது.
    • கடந்த வாரம் சென்னை உயர்நீதிமன்றம் அவர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்திருந்தது.

    கஞ்சா வைத்திருந்தது தொடர்பான வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. தேனி பி.சி.பட்டி போலீசார மற்றும் மாவட்ட எஸ்.பி. பரிந்துரையின்படி மாவட்ட ஆட்சியர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

    சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது தொடர்பான உத்தரவு மதுரை சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளது. சவுக்கு சங்கர் நேற்று புழல் சிறையில் இருந்து மதுரை சிறைக்கு மாற்றப்பட்டிருந்தார்.

    சவுக்கு சங்கர் மீது ஏற்கனவே போடப்பட்ட குண்டர் சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்திருந்தது. இந்த நிலையில் மீண்டும் குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.

    பெண் போலீஸ்க்கு எதிராக அவதூறாக பேசியதாக சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். பின்னர் தேனி மாவட்டத்தில் தங்கியிருந்தபோது கஞ்சா வைத்திருந்ததாக கைது செய்தனர். அதன்பின் தொடர்ந்து பல வழக்குகள் அவர் மீது போடப்பட்டன.

    அனைத்து வழக்குகளையும் ஒன்றாக இணைத்து விசாரிக்கும்படி சவுக்கு சங்கர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். கார் பந்தயம் முடியும் வரை நான் ஜாமினியில் வெளியில் வரக்கூடாது என உதயநிதி ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதனால் என்மீது தினந்தோறும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு வருகிறார். எல்லா கைதுக்கும் காரணம் உதயநிதி ஸ்டாலின்தான் என சவுக்கு சங்கர் குற்றம்சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×