என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
மதுரை
- சில உயர் அதிகாரிகள் அங்கிட் திவாரி லஞ்சம் வாங்குவதற்கு உடந்தையாக இருந்துள்ளனர்.
- அங்கிட் திவாரியை 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க லஞ்ச ஒழிப்பு போலீசார் முடிவு செய்து உள்ளனர்.
மதுரை:
மத்திய பிரதேச மாநிலம் போபாலை சேர்ந்தவர் அங்கிட் திவாரி (வயது 32). இவர், கடந்த 2018-ம் ஆண்டு உதவி அமலாக்கத்துறை அதிகாரியாக பணியில் சேர்ந்தார். பின்னர் பதவி உயர்வு பெற்று கடந்த ஏப்ரல் மாதம் முதல் மதுரை தபால் தந்தி நகரில் உள்ள அமலாக்கத்துறை துணை இயக்குனர் அலுவலகத்தில் பணியாற்றி வந்தார். அதாவது, விசாரணை அதிகாரி அந்தஸ்தில் இவர் இருந்துள்ளார்.
காலங்கரை பகுதியில் எம்.என்.நகரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்தார்.
இந்த நிலையில் அங்கிட் திவாரி, திண்டுக்கல்லைச் சேர்ந்த அரசு மருத்துவ கல்லூரி டாக்டர் சுரேஷ்பாபுவிடம் சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்பாக மேல்விசாரணை நடத்தாமல் இருப்பதற்காக முதல் தவணையாக கடந்த நவம்பர் 1-ந் தேதி ரூ.20 லட்சம் லஞ்சம் பெற்றார். 2-வது தவணையாக ரூ.20 லட்சம் பெறும்போது கையும், களவுமாக அவரை கைது செய்தனர். பின்னர் அங்கிட் திவாரி, நீதிமன்ற காவலில் 15 நாள் திண்டுக்கல் சிறையில் அடைக்கப்பட்டார்.
உடனடியாக அங்கிட் திவாரி பணிபுரியும் மதுரை அமலாக்கத்துறை துணை இயக்குனர் அலுவலகத்திலும், மதுரையில் உள்ள அவரது வீட்டிலும் அதிரடியாக சோதனை செய்ய லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு உத்தரவு வந்தது.
அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு தொடங்கிய சோதனை தொடர்ச்சியாக நடந்து கொண்டு இருந்தது. பெண் ஊழியர்கள் வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டனர்.
நேற்று காலை 7 மணி வரை என விடிய விடிய கிட்டத்தட்ட 13 மணி நேரம் தொடர்ச்சியாக சோதனை நடந்தது. பின்னர் அமலாக்கத்துறை அலுவலகம் மூடப்பட்டது.
சோதனை குறித்து போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறியது வருமாறு:-
ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கி தப்பியபோது, போலீசாரிடம் சிக்கிய அங்கிட் திவாரியிடம் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி தகவல்கள் சேகரிக்கப்பட்டன.
சில உயர் அதிகாரிகள் அவர் லஞ்சம் வாங்குவதற்கு உடந்தையாக இருந்துள்ளனர். பெரும் தொகையை குறி வைத்து லஞ்ச பேரம் பேசுவது இந்த அதிகாரிகளுக்கு வாடிக்கையாக இருந்துள்ளது.
தாங்கள் லட்சக்கணக்கில் லஞ்சமாக வாங்கும் பணத்தை 7 அதிகாரிகள் பங்கு போட்டுக்கொண்டு உள்ளனர். எனவே அவர்கள் பற்றிய விவரங்களை சேகரிக்கவும் இந்த சோதனை உதவி இருக்கிறது.
விரைவில் அந்த அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்த நாங்கள் முடிவு செய்துள்ளோம். முழுமையான விசாரணைக்குபின்னரே, இதுகுறித்து மற்ற தகவல்களை தெரிவிக்க முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே அங்கிட் திவாரியை 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க லஞ்ச ஒழிப்பு போலீசார் முடிவு செய்து உள்ளனர். இதற்காக நாளை (திங்கட்கிழமை) திண்டுக்கல் தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் மனு தாக்கல் செய்ய உள்ளனர்.
- எனது விண்ணப்பத்தை வேண்டுமென்றே நிராகரித்து வேறு புதிய நிறுவனத்திற்கு டெண்டரை வழங்கி உள்ளனர்.
- தகுதி இல்லாத நிறுவனத்திற்கு பஸ் நிலைய கட்டுமான டெண்டர் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது இது சட்டவிரோதம்.
மதுரை:
புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
தனியார் நிறுவனம் மூலம் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு கட்டிடங்கள், சாலைகள் அமைக்கும் பணிகளை டெண்டர் எடுத்து செய்து வருகின்றோம். இந்நிலையில் புதுக்கோட்டை புதிய பஸ் நிலையம் கட்டுமான பணிகளுக்காக 19 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டிடங்கள் கட்ட கடந்த அக்டோபர் மாதம் தமிழ்நாடு அரசு (டெண்டர்) அறிவிப்பானை வெளியிட்டது.
இந்த டெண்டருக்கு ஆன்லைன் முறையில் விண்ணப்பித்திருந்த நிலையில் சில காரணங்களுக்காக டெண்டர் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 24-ந்தேதி டெண்டர் நடைபெற்றது. இதில் தொழில்நுட்ப ஏல மதிப்பீடு பட்டியல் வெளியிடப்பட்டதில் எனது விண்ணப்பத்தில் நான் கையொப்பமிடாத காரணத்தால் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.
ஆனால் நேரடி டெண்டர் ஆவணங்களின் அனைத்து பக்கங்களிலும் நான் கையொப்பமிட்டு இருந்தேன். அது கருத்தில் எடுத்து கொள்ளப்படவில்லை. எனது விண்ணப்பத்தை வேண்டுமென்றே நிராகரித்து வேறு புதிய நிறுவனத்திற்கு டெண்டரை வழங்கி உள்ளனர்.
சம்மந்தப்பட்ட நிறுவனம் இதுவரை தனியார் பணிகளையே செய்துள்ளனர். தகுதி இல்லாத இந்த நிறுவனத்திற்கு பஸ் நிலைய கட்டுமான டெண்டர் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது இது சட்டவிரோதம். எனவே டெண்டர் அறிவிப்புக்கு தடை விதித்து புதிய டெண்டர் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் தெரிவித்திருந்தார்.
இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணை முடிவில், புதுக்கோட்டை பஸ் நிலையம் கட்டுமான பணிகளுக்கு நடத்தப்பட்ட டெண்டருக்கு இடைக்கால தடைவிதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும் இந்த வழக்கில் நகராட்சித் துறை நிர்வாக இயக்குனர், புதுக்கோட்டை நகராட்சி ஆணையர் மற்றும் தனியார் ஒப்பந்த நிறுவனம் ஆகியோர் தரப்பில் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.
- விசாரணை கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் பாதிக்கப்பட்ட அருண்குமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
- வழக்கை விசாரித்த நீதிபதிகள், அரசு தரப்பு தாமதிக்காமல் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்.
மதுரை:
நெல்லை மாவட்டம் அம்பை போலீஸ் சரகத்தில் அம்பை, கல்லிடைக்குறிச்சி, வி.கே.புரம், பாப்பாக்குடி, அம்பை மகளிர் உள்ளிட்ட போலீஸ் நிலையங்கள் உள்ளன.
இந்த சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் விசாரணைக்கு அழைத்து சென்றவர்களை அப்போதைய உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர்சிங் பற்களை பிடுங்கி சித்ரவதை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் விசாரணை கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் பாதிக்கப்பட்ட அருண்குமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், அரசுத்தரப்பு தாமதிக்காமல் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். பதில் மனு தாக்கல் செய்யாவிட்டால் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் என்று கூறிய நீதிபதி, வழக்கு விசாரணையை வரும் 15ந் தேதிக்கு ஒத்திவைத்தார்.
- மதுபோதை அதிகரித்ததால் நண்பர்களுக்குள்ளான ஏற்பட்ட வாக்குவாதம் தகராறாக மாறியுள்ளது.
- வட மாநில தொழிலாளி கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருமங்கலம்:
மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த ஆஸ்டின்பட்டி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட மதுரை துணைக்கோள் நகரப்பகுதியில் கொலை சம்பவம் நடந்துள்ளதாக நேற்று இரவு போலீசாருக்கு வந்தது. அதனைத் தொடர்ந்து ஆஸ்டின்பட்டி போலீசார் துணைக்கோள் நகர பகுதி முழுவதும் சல்லடை போட்டு தேடினர்.
இந்தநிலையில் அப்பகுதியில் இருந்த தனியார் கல்லூரியின் பின்புறம் உள்ள துணைக்கோள் நகர கீழ் நிலை நீர்த்தேக்க தொட்டி மோட்டார் அறையின் அருகே முட்புதரில் வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். அவரது உடல் முழுவதும் காயங்கள் இருந்தன. மேலும் அந்த இடம் முழுவதும் மதுபாட்டில், பீர் பாட்டில்கள் உடைந்து கிடந்தன.
உடனே போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். இதில் பிணமாக கிடந்தவர் மதுரை தெற்கு வாசல் பகுதியைச் சேர்ந்த மீரா கனி என்பவரது மகன் இஸ்மாயில் (வயது 20) என்பது தெரிய வந்தது. அவர் கொலை செய்யப்பட்டதற்கான காரணம் குறித்து போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் பரபரப்பு தகவல்கள் கிடைத்தன. அதன் விபரம் வருமாறு:-
அதே பகுதியைச் சேர்ந்த சக்தி (25), கீரைத்துறையைச் சேர்ந்த வசந்த் (20), மாடக்குளம் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் (20), அவனியாபுரம் பகுதியைச் சேர்ந்த திருமூர்த்தி (21) ஆகியோர் இஸ்மாயில் நண்பர்கள் ஆவார்கள். அவர்கள் அனைவரும் நேற்று முன்தினம் இரவு திருமங்கலம் அருகே உள்ள உச்சப்பட்டி துணைக்கோள் நகர் பகுதிக்கு வந்து அங்கிருந்த கீழ் நிலை நீர் தேக்க தொட்டி அறையில் அமர்ந்து மது அருந்தி உள்ளனர்.
மதுபோதை அதிகரித்ததால் நண்பர்களுக்குள்ளான ஏற்பட்ட வாக்குவாதம் தகராறாக மாறியுள்ளது. சிறிது நேரத்தில் அதுவே முற்றி கைகலப்பானது.
இதில் ஆத்திரமடைந்த ஒருவர் பீர் பாட்டிலால் இஸ்மாயிலை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த இஸ்மாயில் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்துள்ளார். ஒரு சில விநாடிகளில் அவர் இறந்துள்ளார்.
இதனை உணராத நண்பர்கள் மதுபோதையில் அங்கேயே படுத்து உறங்கி உள்ளனர். நேற்று காலை எழுந்து பார்த்தபோது இஸ்மாயில் இறந்து கிடந்ததால் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து கொலையை மறைப்பதற்காக இஸ்மாயில் உடலை தூக்கி அருகில் இருந்த முட்புதருக்குள் போட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
பின்னர் இஸ்மாயில் நண்பரான சக்திவேல் நடந்த சம்பவம் குறித்து தனது வழக்கறிஞரிடம் தெரிவித்துள்ளார். வக்கீல் மூலம் ஆஸ்டின்பட்டி போலீசாருக்கு கொலை சம்பவம் தெரிய வந்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து இஸ்மாயில் உடலை கைப்பற்றிய போலீசார் அவரது பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து இஸ்மாயில் நண்பர்கள் 4 பேரையும் கைது செய்து ஆஸ்டின்பட்டி போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவ இடத்தில் தடயவியல் நிபுணர்கள் சோதனை மேற்கொண்டனர். மதுபோதையில் நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்த சம்பவமும், இதே பகுதியில் நேற்று முன்தினம் எய்ம்ஸ் மருத்துவமனை அலுவலகம் அருகே நடைபெற்ற வட மாநில தொழிலாளி கொலை சம்பவமும் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்னும் அந்த கொலையில் துப்பு துலங்காத நிலையில் அடுத்த கொலை அரங்கேறி உள்ளது.
துணைக்கோள் நகரப்பகுதி ஆள் நடமாட்டம் இல்லாத இடம் என்பதால் குற்ற சம்பவங்கள் அதிக அளவில் நடப்பதாக அப்பகுதியினர் தெரிவித்தனர். இந்தநிலையில் மதுரை புறநகர் பகுதியில் நான்கு நாட்களுக்குள் அடுத்தடுத்து 3 கொலைகள் மற்றும் பெருங்குடி பகுதியில் சிறுவன் உள்பட 5 பேர் வெட்டப்பட்ட சம்பவம் என குற்றம் சம்பவங்கள் அதிகரித்து போலீசாரை அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.
- கடந்த 5 நாட்களுக்கு முன்பு சத்தியபிரியாவுக்கு கடுமையான காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது.
- காய்ச்சலுக்கு அடுத்தடுத்து 2 பேர் பலியானதால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
மதுரை:
தமிழகத்தில் பெய்து வரும் தொடர் மழையால் கொசு உற்பத்தி பன்மடங்கு அதிகரித்துள்ளது. மதுரை மாநகரும் அதற்கு விதிவிலக்கல்ல என்பதற்கு சான்றாக கொசுக்களால் பரவும் நோய் தொற்று, வைரஸ் காய்ச்சல் என அனைத்து அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளும் நிரம்பி வழிகின்றன.
இதற்கிடையே மதுரை மாவட்டத்தில் டெங்கு மற்றும் மர்ம காய்ச்சலுக்கு 2 பேர் பலியாகி உள்ளனர். அதுபற்றிய விபரம் வருமாறு:-
மதுரை கோச்சடை வைகை விலாஸ் பகுதியைச் சேர்ந்தவர் மகேந்திரகுமார். இவர் வெளிநாட்டில் கப்பலில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சத்தியபிரியா (வயது 41). இந்த தம்பதிக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 5 நாட்களுக்கு முன்பு சத்தியபிரியாவுக்கு கடுமையான காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது.
இதையடுத்து உறவினர்கள் அவரை மதுரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் காய்ச்சல் குறையவில்லை. தொடர்ந்து மேற்கொண்ட பரிசோதனைகளின் அடிப்படையில் சத்தியபிரியாவுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதியானது.
தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த சத்தியபிரியா நேற்று இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். உயிர்போகும் நிலைக்கு தள்ளப்படும் அளவிற்கு அவர் வசித்த பகுதியில் சுகாதார பணிகள் எதுவும் முறையாக மேற்கொள்ளப்படவில்லை என்ற புகாரும் எழுந்துள்ளது.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள ஜெ.ஆலங்குளம் பகுதியை சேர்ந்தவர் கண்ணன் (38), டிரைவர். இவருக்கு அனன்யா என்ற 7 மாத பெண் குழந்தை இருந்தது. கடந்த சில தினங்களாக குழந்தைக்கு காய்ச்சல் இருந்துள்ளது. அருகில் இருந்த ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று மருந்துகள் வாங்கி கொடுத்துள்ளார்.
இந்தநிலையில் திடீரென குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனடியாக திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு குழந்தையை கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக இறந்தது. காய்ச்சலுக்கு அடுத்தடுத்து 2 பேர் பலியானதால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
- சுதாரித்துக் கொண்ட அந்த ஆசாமிகள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
- ஐந்து பேரை இரண்டு மர்ம நபர்கள் வெட்டியது இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை:
மதுரை அவனியாபுரத்தை அடுத்த பெருங்குடியில் நேற்று இரவு அதே பகுதியை சேர்ந்த கணபதி (வயது 28), விஜய் குட்டி (25), அஜித் (24) உட்பட இன்னும் சிலர் ஊருக்குள் உள்ள நாடகமேடை அருகே அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இருவர் அஜித் என்பவரிடம் கண்ணா எங்கிருக்கிறார் என்று கேட்டுள்ளனர்.
அதற்கு அவர்கள் தங்களுக்கு தெரியாது என்று கூறியதையடுத்து வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது திடீரென்று அவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அங்கிருந்தவர்களை சரமாரியாக வெட்டியுள்ளனர். இதனால் பதட்டமடைந்த ஒரு சிலர் தப்பியோடினர். இதில் அஜித், விஜய் குட்டி, கணபதி ஆகியோர் அரிவாள் வெட்டில் படுகாயம் அடைந்தனர்.
இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த பெரியசாமி (48) என்னும் கூலித் தொழிலாளி உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட தனது பேரன் சார்வின் (6) என்பவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்வதற்காக அந்த வழியாக வந்து கொண்டிருந்தார்.
அந்த சமயம் அங்கு கூச்சல் சத்தம் கேட்டதால் நாடகமேடை அருகே சென்றார். அப்போது அந்த 2 பேரும் பெரியசாமி மற்றும் அவரது பேரனையும் அரிவாளால் வெட்டியுள்ளனர். சத்தம் கேட்டு அக்கம்பக் கத்தினர் திரண்டு ஓடி வந்தனர். இதனால் சுதாரித்துக் கொண்ட அந்த ஆசாமிகள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
இந்த சம்பவம் குறித்து பெருங்குடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் திருமங்கலம் துணை போலீஸ் சூப்பிரண்டு வசந்தகுமார் மற்றும் இன்ஸ்பெக்டர் லதா உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற் கொண்டனர்.
அரிவாளால் வெட்டிய இருவரும் யார், அவர்கள் விசாரித்த கண்ணன் என்பவர் யார், ஜாதி பிரச்சினை காரணமா, அவர்களுக்குள் எதாவது முன்பகை உள்ளதா, இல்லை வந்தவர்கள் எதுவும் போதையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்டார் ளா? என போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரையில் ஊருக்குள் புகுந்து முன்பின் தெரியாத ஐந்து பேரை இரண்டு மர்ம நபர்கள் வெட்டியது இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- கடையில் இருந்த ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் அவசரம் அவசரமாக வெளியேறினர்.
- தகவல் அறிந்து போக்குவரத்து போலீசாரும் அங்கு விரைந்து வந்து மாற்றுப்பாதையில் போக்குவரத்தை திருப்பிவிட்டனர்.
மதுரை:
மதுரை ஆண்டாள்புரம் பகுதியைச் சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி (வயது 78). இவர், தெற்குமாசி வீதியில் டி.எம். கோர்ட் அருகே நகைக்கடை நடத்தி வருகிறார். கடையில் கீழ்தளத்தில் விற்பனை பிரிவும், முதல் தளத்தில் நகைகளை பாதுகாக்கும் லாக்கர் அறையும், 2-ம் தளத்தில் குடோனும் உள்ளன.
நேற்று இரவு கடை உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் நகைகள் விற்பனையில் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு 20-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் இருந்தனர். இந்நிலையில் திடீரென்று 7.30 மணி அளவில் கடையின் முதல் தளத்தில் இருந்து கரும்புகை வெளிவந்தது.
இதைப்பார்த்த கடையில் இருந்த ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் அவசரம் அவசரமாக வெளியேறினர். இதற்கிடையே உரிமையாளரின் மருமகன் மோதிலால் (45) முதல் தளத்தில் இருந்தவர்களை எச்சரிக்கை செய்யவும், அவர்களை வெளியேற்றவும் விரைந்து சென்றார். அப் போது அங்கு மின்சார வயர்கள் தீப்பிடித்து எரிவதாக கூச்சல் போட்டார்.
ஆனால் அதற்குள் முதல் தளத்தில் புகை மூட்டம் அதிகமானது. எதிரே நிற்பவர் கூட தெரியாத அளவுக்கு புகை அடைத்துக் கொண்டதால் அவரால் கீழே வர முடியவில்லை. முன்னதாக அந்த தளத்தில் இருந்தவர்கள் உடனடியாக வெளியேறினர். கீழ் தளத்தில் இருந்தவர்கள் மோதிலாலின் செல்போனை தொடர்பு கொண்டபோது, அதனை எடுக்கும் நிலையில் மோதிலால் இல்லை. இதனால் அங்கு பதற்றம் அதிகமானது.
இதுபற்றிய தகவலின் பேரில் மதுரை திடீர் நகர், மீனாட்சி அம்மன் கோவில் பகுதியில் இருந்து 4 தீயணைப்பு வாகனங்களில் வீரர்கள் விரைந்து வந்தனர். அவர்கள் பாதுகாப்பு உபகரணங்களுடன் விபத்தில் மோதிலால் சிக்கிக்கொண்ட முதல் தளத்திற்கு சென்றனர். மேலும் தகவல் அறிந்து போக்குவரத்து போலீசாரும் அங்கு விரைந்து வந்து மாற்றுப்பாதையில் போக்குவரத்தை திருப்பிவிட்டனர்.
இதற்கிடையே தீயணைப்பு வீரர்கள் கடையின் முதல் தளத்தில் இருந்த கண்ணாடி கதவுகளை உடைத்து உள்ளே சென்றனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேல் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அப்போது மோதிலால் ஒரு அறையில் சிக்கி இருப்பது தெரியவந்தது.
அந்த கதவையும் உடைத்தபோது அவர் மயங்கிய நிலையில் கிடந்தார். அளவுக்கு அதிகமான புகையை சுவாசித்ததால் அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள் ளது. பின்னர் அவரை மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து தெற்குவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. தீ விபத்தில் மூச்சுத்திணறி பலியான மோதிலாலுக்கு திருமணமாகி மனைவி மற்றும் பிள்ளைகள் உள்ளனர்.
- கள்ளந்திரி, மேலூர், திருமங்கலம் ஆகிய 3 பகுதிகளுக்கும் சேர்த்தே பாசனத்திற்கு தண்ணீர்திறக்கப்படுவது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது.
- 58 கிராம பாசன கால்வாய்களில் தண்ணீர் திறந்துவிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மதுரை:
மதுரை கலெக்டர் அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் அ.தி.மு.க.வினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். திருமங்கலம் பிரதான கால்வாய், மேலூர், 58 கிராம பாசன கால்வாயில் தண்ணீர் திறக்கக்கோரி அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.
இதுகுறித்து ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது:-
திருமங்கலம் தாலுகாவில் பெரியாறு-வைகை பாசன திட்டத்தின் கீழ் திருமங்கலம் பிரதான கால்வாய் மூலம் விவசாய பணிகள் நடைபெற்று வருகின்றன. வைகை அணையில் 6 ஆயிரம் மில்லியன் கனஅடி தண்ணீர் இருக்கும்போது திருமங்கலம் பகுதிகளுக்கு செப்டம்பர் 15-ந்தேதி முதல் தண்ணீர் திறப்பது வழக்கமான ஒன்று. மதுரை மாவட்டத்தில் பேரணை முதல் கள்ளந்திரி வரையான இருபோக பாசனத்திற்கான 45 ஆயிரம் ஏக்கர், மேலூர் ஒருபோக பாசனத்திற்கான 85 ஆயிரம் ஏக்கர், திருமங்கலம் ஒருபோக பாசனத்திற்கான 19 ஆயிரத்து 500 ஏக்கர் பரப்பிற்கு தண்ணீர் திறக்க விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.
ஆனால் தற்போது கள்ளந்திரி பகுதியில் மட்டும் தண்ணீர்திறக்கப்பட்டு விவசாய பணிகள் நடைபெற்று வருகிறது. வைகை, முல்லை பெரியாறு அணைகளின் மொத்த நீர் இருப்பு 6 ஆயிரம் மில்லியன் கன அடியை தாண்டினாலே கள்ளந்திரி, மேலூர், திருமங்கலம் ஆகிய ௩ பகுதிகளுக்கும் சேர்த்தே பாசனத்திற்கு தண்ணீர்திறக்கப்படுவது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது.
முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆட்சிகாலத்தில் 58 கிராம பாசன கால்வாய் திட்டத்திற்கு தேவையான நிதி முழுமையாக ஒதுக்கீடு செய்யப்பட்டு 2018-ம் ஆண்டு முதல் முறையாக தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இந்திட்டம் உசிலம்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 36 கண்மாய்கள், 110 கிராமங்கள் மற்றும் 5 ஏக்கர் விளைநிலங்கள் பயன்பெறும் வகையில் மிகப்பெரிய நிலத்தடி நீர் ஆதாரமாகவும் விளங்குகிறது. விவசாயம், குடிநீர், கால்நடை தேவைக்கும் நீர் ஆதாரமாக இருந்து வருகிறது.
தற்போது போராட்டம் நடத்தி வருகிற பாசன விவசாயிகளின் தொடர் போராட்டத்திற்கு தீர்வு காணும் வகையிலும், பாசனத்திற்கு தண்ணீர் கிடைக்கவும் மதுரை மாவட்ட கலெக்டர் திருமங்கலம் பிரதான கால்வாய், மேலூர், 58 கிராம பாசன கால்வாய்களில் தண்ணீர் திறந்துவிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- விவசாயத்திற்கு வைகை ஆற்றிலும், பெரியாறு கால்வாயிலும் தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
- அ.தி.மு.க., கம்யூனிஸ்டு உள்ளிட்ட கட்சியினரும், பல்வேறு தரப்பினர் ஆதரவும் தெரிவித்திருந்தனர்.
மேலூர்:
மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் அதனை சுற்றி உள்ள கிராமங்கள் விவசாயத்தை பிரதானமாக கொண்டுள்ளது. பெரியாறு பாசன கால்வாயின் தண்ணீரை நம்பி இங்கு 85 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்கள் பயனடைந்து வருகின்றன. ஒருபோக பாசன பகுதியான இங்கு வருடந்தோறும் ஆகஸ்டு மாதம் 15-ந்தேதி பெரியாறு கால்வாயில் இருந்து விவசாயத்திற்கு தண்ணீர் திறக்கப்படும்.
இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பெரியாறு மற்றும் வைகை அணை நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் அணைகளில் நீர்மட்டம் உயர்ந்தது. வைகை அணை தனது முழு கொள்ளளவை எட்டியது. இதையடுத்து மதுரை உள்ளிட்ட 5 மாவட்ட விவசாயத்திற்கு வைகை ஆற்றிலும், பெரியாறு கால்வாயிலும் தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
மதுரை மாவட்டத்தில் 80 சதவீத விவசாயம் பெரியாறு பாசன கால்வாய் மூலம் நடந்து வருகிறது. தற்போது மதுரை மாவட்டம் பேரணை முதல் கள்ளந்திரி வரை உள்ள பெரியாறு கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. ஆனால் கால்வாயின் கடை மடை பகுதியான மேலூர் பகுதிக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ள நிலையில் தங்கள் பகுதிக்கு மட்டும் அதிகாரிகள் தண்ணீர் திறக்காமல் பாரபட்சம் காட்டுவதாக புகார் எழுந்தது.
மேலூர் ஒருபோக பாசன விவசாய சங்க தலைவர் முருகன் தலைமையில் விவசாயிகள் அரசு அதிகாரிகளை சந்தித்து இதுதொடர்பாக கோரிக்கை மனுக்களை அளித்தனர். மேலும் மேலூரில் உள்ள பொதுப் பணித்துறை அலுவலகம் முன்பும் முற்றுகை போராட்டம் நடத்தினர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை.
பெரியாறு கால்வாய் தண்ணீரை நம்பி பயிரிட்டு உள்ள விவசாயிகள் நஷ்டத்தை சந்திக்கும் நிலை உள்ளது. எனவே விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு ஒரு போக பாசனத்துக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என தொடர் கோரிக்கை எழுந்தது.
இது தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் தொடர் கோரிக்கையை வலியுறுத்தி மேலூரில் இன்று (27-ந்தேதி) கடையடைப்பு மற்றும் முற்றுகை போராட்டம் நடத்துவது என விவசாயிகள் முடிவு செய்தனர். இதற்குமேலூர் வர்த்தக சங்கத்தினர், வியாபாரிகள் மற்றும் அ.தி.மு.க., கம்யூனிஸ்டு உள்ளிட்ட கட்சியினரும், பல்வேறு தரப்பினர் ஆதரவும் தெரிவித்திருந்தனர்.
அதன்படி இன்று பெரியாறு கால்வாயில் தண்ணீர் திறக்கக்கோரி மேலூரில் கடையடைப்பு போராட்டம் நடந்தது. மேலூர் பஸ் நிலையம், பஜார் வீதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பல சரக்கு, நகை, ஜவுளிக் கடைகள் மூடப்பட்டிருந்தன. தினசரி மார்க்கெட்டும் இன்று செயல்படவில்லை. 90 சதவீத கடைகள் மூடப்பட்டிருந்ததால் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்க முடியாமல் தவித்தனர். கடையடைப்பு போராட்டத்தால் முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. இன்று காலை யூனியன் அலுவலகம் எதிரே உள்ள மூவேந்தர் பண்பாட்டு கழக திருமண மண்டபத்தில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் திரண்டனர்.
அவர்கள் அங்கிருந்து பேரணியாக பொதுப் பணித்துறை அலுவலகத்திற்கு சென்று முற்றுகை போராட்டம் நடத்தினர். அப்போது அரசுக்கு எதிராகவும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என கோஷமிட்டனர். விவசாயிகளின் போராட்டத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தண்ணீரை பீச்சியடிக்கும் வஜ்ரா வாகனமும் நிறுத்தப்பட்டிருந்தது.