search icon
என் மலர்tooltip icon

  சிறப்புக் கட்டுரைகள்

  புதுடெல்லியில் காமராஜர் இல்லத்திற்கு வன்முறையாளர்கள் தீ வைத்தபோது பொங்கி எழுந்த தந்தை பெரியார்
  X

  புதுடெல்லியில் காமராஜர் இல்லத்திற்கு வன்முறையாளர்கள் தீ வைத்தபோது பொங்கி எழுந்த தந்தை பெரியார்

  • தந்தை பெரியாருக்கும், பெருந்தலைவர் காமராஜருக்கும் அடிப்படைக் கருத்துக்களில் ஓர் ஒற்றுமை இருந்தது.
  • சமுதாய சீர்திருத்த உலகில் நமக்கு கிடைத்திட்ட ஒளிவிளக்கு பெரியார்.

  பெருந்தலைவர் காமராஜர் பற்றி எழுதப்பட்டு வருகிற இந்த தொடரில் இதுவரை கேள்விப்படாத பல செய்திகள் இடம் பெற்று வருகின்றன. காமராஜர் வாழ்க்கையிலே இப்படி எல்லாம் நடந்ததா என்று கேள்வி மேல் கேள்வி கேட்டவர்கள் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் இருக்கும். மாலை மலர் ஏட்டிலே பிரசுரம் ஆவதால் கிராமங்கள் வரை இச்செய்திகள் போய் சேருகின்றன. ஒவ்வொரு வியாழக்கிழமையும் ஆவலோடு தேடிப்பிடித்து வாங்கி படித்து மகிழ்வதற்கு என்று ஒரு வாசகர் கூட்டம் காத்திருக்கிறது.

  மாலை மலர் டாட் காம் இணையதளத்திலும் இக்கட்டுரை வெளியிடப்படுவதால் உலக அளவில் உள்ள தமிழ் மக்களின் பார்வைக்கும் போய் சேர்ந்து பாராட்டுகளை அள்ளிக் கொண்டு வருகிறது என்பது ஒரு மகிழ்ச்சியான செய்தி ஆகும்.

  கடந்த மூன்று வாரங்களாக தந்தை பெரியாருக்கும் பெருந்தலைவர் காமராஜருக்கும் இருந்த தொடர்பு பற்றியும், நட்பு பற்றியும் எழுதி இருந்தேன். என்ன ஆச்சரியம்... திராவிடர் கழகத் தலைவர் வீரமணி அய்யா அவர்கள் என்னை அலைபேசியிலே அழைத்தார்கள். உங்கள் கட்டுரை ஒவ்வொன்றையும் வாரந்தோறும் வரி விடாமல் படித்து வருகிறேன். புள்ளி விவரங்களோடு மிகத் துல்லியமாக எழுதி வருவதற்கு எனது பாராட்டுகளை உங்களுக்கு தெரிவிக்கவே அழைத்தேன் என்று சொன்னபோது திக்கு முக்காடிப் போனேன்.

  இன்று இருக்கிற அரசியல்வாதிகளிலே முதல் வரிசையில் இருக்கிற மூத்த அரசியல்வாதி அய்யா வீரமணி என்றால் அது மிகை ஆகாது. தந்தை பெரியார் இருந்தவரை அவர் நிழலாக இருந்து உழைத்த பெருமைக்குரியவர். பெரியார் மறைந்ததற்குப் பிறகு அவரது அடியொற்றி அணுவளவும் பிசகாமல் பெரியாரின் கொள்கை தீப்பந்தத்தை ஒளி குன்றாமல், சூடு தணியாமல் ஏந்தியபடி உலா வருபவர். இன்று அனைத்துக் கட்சித் தலைவர்களாலும் மதிக்கப்பட்டு போற்றப்படுபவர். 90 அகவையிலும் சளைக்காமல், தளராமல் அரசியலில் தொடர்ந்து பயணிப்பவர்.

  விடுதலை நாளிதழில் ஆசிரியராக இருந்து சமுதாய சீர்திருத்தக் கருத்துக்களை நாடெங்கும் பரப்பி வருகிறவர். இப்படி பல பெருமைகளுக்கு சொந்தக்காரரான வீரமணி அய்யாவின் பாராட்டினை யான்பெற்ற பெரும் பேறாகவே எண்ணி மகிழ்கின்றேன்.

  அது மட்டுமல்ல கட்டுரை வெளியாகின்ற அன்றைய தினம் வருகின்ற நூற்றுக்கணக்கான அலைபேசி அழைப்புகளில் சில முக்கிய பிரமுகர்களை மட்டும் நன்றியுடன் குறிப்பிட விரும்புகிறேன். தற்போது ஈரோடு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடுகின்ற தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், காங்கிரஸ் பேரியக்கத்தின் ஊடகப் பிரிவு தலைவர் கோபண்ணா, கட்டுமான தொழிலாளர் வாரிய தலைவர் பொன் குமார், பனைமர வாரிய தலைவர் எர்ணாவூர் நாராயணன், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர். தனபாலன், விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன், குடியரசு கட்சித் தலைவர் செ.கு.தமிழரசன், வி.ஐ.டி. வேந்தர் ஐயா கோ.விசுவநாதன், முன்னாள் அமைச்சர் டாக்டர் எச்.வி.ஹண்டே, டாக்டர் சவுந்தர்ராஜன், பேராசிரியை நாவுக்கரசி, சரஸ்வதி ராமநாதன், பெருங்கவிக்கோ வாமு.சேதுராமன், முன்னாள் அரசவை கவிஞர், திரைப்படப் பாடல் ஆசிரியர் முத்துலிங்கம், எழுத்து வேந்தர் லேனா தமிழ்வாணன், த.மா.கா. வர்த்தக அணி தலைவர் ஆர்.எஸ்.முத்து, த.மா.கா. செயற்குழு உறுப்பினர் சிவபால், பொறியியல் பேராசிரியர் ராஜராஜன், எழுத்தாளர் யூ.எஸ்.எஸ்.ஆர். நடராசன், கவிஞர் கார் முகிலன், மூத்த வழக்கறிஞர் க.சக்திவேல், முன்னாள் தலைமைச் செயலாளர் ராசேந்திரன், பிரபல ஓவியக் கலைஞர் நானா, கைவினைஞர் முன்னேற்றக் கழக தலைவர் மதுரை ஆர். எம்.சண்முகநாதன், துணைத் தலைவர் ஆர்.ஏ.பாலன், பெங்களூர் பார்த்தசாரதி... இப்படி பெயர்களை சொல்லிக் கொண்டே போகலாம். இன்னும் அன்றைய தினம் தொடர்பு கொண்டு பேசுகிற வாடிக்கையான வாசகர்களின் பட்டியல் மிக மிக நீளமானது. அவர்கள் எல்லோரின் பெயரையும் குறிப்பிட இயலாமைக்கு வருந்துகிறேன்.

  ஆரம்பத்தில் இக்கட்டுரை தொடருக்கு எப்படி வரவேற்பு இருக்கும், வாசகர்கள் மத்தியில் இது எடுபடுமா என்ற கேள்வி எழுந்தபோது மாலைமலர் நிர்வாகம் கொடுத்த உற்சாகமே என்னை எழுத தூண்டியது என்பதை நன்றியுடன் குறிப்பிட விரும்புகிறேன்.

  ஒரு வீட்டிற்கு முக்கியமான தேவையாக கருதப்படுவது ஆழமான, அதேசமயம் உறுதியான அஸ்திவாரம் தான். இன்று எழிலோடு விளங்குகிற தமிழகம் என்ற வீட்டிற்கு அன்றைய தினம் காமராஜர் போட்ட அஸ்திவாரமே பலமாகவும் முதன்மையாகவும் விளங்குவதற்கு அடிப்படை காரணமாகும். காமராஜருக்கு பிறகு வந்த முதலமைச்சர்களின் ஒவ்வொரு வரும் ஒவ்வொரு வகையில் அவரவர் பாணியில் சிறப்பு சேர்த்திருக்கிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

  அப்படி வந்த முதல்வர்களில் இன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் புதிய திட்டங்களை அறிமுகப்படுத்துவதிலும் நிர்வாகத்தை கட்டுக் கோப்பாக கொண்டு செல்வதிலும் எளிமையான அணுகுமுறையிலும் காமராஜரை போலவே செயல்பட்டு பெரும் புகழும் பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

  கட்டுரையின் மையப்பகுதிக்கு வருவோம். தந்தை பெரியாருக்கும் பெருந்தலைவர் காமராஜருக்கும் மிகப்பெரிய நெருக்கம் இருந்தது என்றும் அவர்கள் இருவரும் அடிக்கடி ரகசியமாக சந்தித்துக் கொள்கிறார்கள் என்ற பேச்சும் பரவலாக இருந்தது என்னவோ உண்மைதான். ஆனால் வரலாற்றை புரட்டிப் பார்க்கும் பொழுது அவர்கள் இருவரின் சந்திப்பும் அபூர்வமாகத்தான் நிகழ்ந்திருக்கிறது. இந்த கருத்தினை கி.வீரமணி அய்யாவும் உறுதிப்படுத்தி என்னிடம் பேசினார்.

  இந்த இரண்டு தலைவர்களுமே அடிப்படையில் மிக மிக எளிமையானவர்கள். அடித்தட்டு மக்களை மேலே கொண்டு வர பாடுபட்டார்கள். அழுத்தப்பட்டு கிடக்கின்ற தமிழ் சமுதாயத்தை உயர்த்திப் பிடிப்பதற்காக உழைத்தவர்கள். மூடநம்பிக்கைகளிலும் சம்பிரதாயச் சடங்குகளிலும் நூற்றுக்கு நூறு விழுக்காடு நம்பிக்கை இல்லாதவர் பெரியார். ஆனால் பெருந்தலைவர் காமராஜர் இவைகளுக்கு அதிகமான முக்கியம் கொடுக்காமல் கடமை செய்வது ஒன்றிலேயே தனது கவனத்தை செலுத்தியவர். பெரியார் முழுக்க முழுக்க நாத்திகவாதி. பெருந்தலைவரோ ஆத்திகவாதியும் அல்ல. நாத்திகவாதியும் அல்ல. இருவருக்கும் இடையே இருந்தது இந்த சின்ன வேறுபாடு தான்.

  உதாரணத்திற்கு ராயக்கோட்டை என்ற ஊரிலே 26.4.1966 அன்று காமராஜர் பேசிய பேச்சினை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

  எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என்று சில பேர்கள் இப்போது பேச ஆரம்பித்திருக்கிறார்கள். இதனை கூர்ந்து கவனிக்க வேண்டும். வேடிக்கை என்னவென்றால் கடவுள் பெயரை சொல்லிக்கொண்டு ஏழை மக்களை மேலும் ஏழையாக்க நினைப்பவர்கள் தான் இப்படி கூறுகிறார்கள். நீ ஏழையாக இருப்பது... எப்போதும் ஏழையாக இருக்க வேண்டும் என்பது உன் தலையெழுத்து. இது கடவுள் இட்ட கட்டளை என்று கூறி ஏமாற்றி வருகிறார்கள். ஆனால் அவர்கள் மட்டும் உயரத்திலே இருக்க வேண்டுமாம்.

  உழைத்து வாழ்பவர்கள் ஏழையாய் இருப்பதே தலைஎழுத்து என்றால் அதை மாற்றி எழுத வேண்டியது நமது கட்டாய கடமை என்பதைத்தான் நான் சொல்லுகிறேன். எனவே கடவுள் பெயரைச் சொல்லி உங்களை ஏமாற்றுகிறவர்கள் தான் என்னை கடவுள் நம்பிக்கை இல்லாதவன் என்று சொல்கிறார்கள். அதனை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

  ரஷ்யாவும், அமெரிக்காவும் செல்வம் கொழிக்கும் நாடாக இருக்கிறது. அங்கே இவற்றுக்கெல்லாம் முக்கியத்துவம் இல்லை. அந்த நாடுகளைப் போல நாமும் முன்னேற வேண்டும் என்றால் கடவுள் நம்பிக்கை இருந்தால் மட்டும் போதாது. அதற்காக கடுமையாக உழைத்தாக வேண்டும். சோம்பேறியாக இருந்து கடவுளை எண்ணி கைகட்டிக் கொண்டிருந்தால் எப்படி சாப்பிடுவது? என்று பேசினார் பெருந்தலைவர் காமராஜர். விடுதலை நாளேட்டில் அடுத்த நாளே 27-4-1966 அன்று வெளியானது இந்த பேச்சு.

  "நாட்டிலே யாரும் தாழ்ந்தவர்கள் இல்லை. எல்லோரும் சமமே. நாம் குறிப்பிட்ட ஒரு சமூகத்தை தாழ்த்தி வைத்திருந்தோம். நாமே நம்மில் சிலரைத் தாழ்த்தி வைத்துக் கொண்டிருந்தால் நாடு எப்படி முன்னேறும்? நமக்குள் உயர்வு தாழ்வு இருப்பது மிகவும் ஆபத்து. நமக்குள் ஒற்றுமை இல்லையெனில் பாடுபட்டு வாங்கிய சுதந்திரம் பறிபோய் விடும்" என்று பல இடங்களில் தனது கருத்தினைப் பேசி பதிவு செய்தார் காமராஜர்.

  இப்படி தந்தை பெரியாருக்கும், பெருந்தலைவர் காமராஜருக்கும் அடிப்படைக் கருத்துக்களில் ஓர் ஒற்றுமை இருந்தது. அந்தக் கருத்துக்களைத் தெரிவித்த பாணியில் வேண்டுமானால் சிறு சிறு வித்தியாசங்கள் இருந்திருக்கலாம். உதாரணத்திற்குச் சொல்ல வேண்டுமென்றால் பெரியார் ஆணி அடித்தது போல் சொல்கின்ற சில கருத்துக்களை, காமராஜர் தலையிலே குட்டுவது போல பேசியிருப்பார். இவையெல்லாம் திட்டமிட்டு பேசிய பேச்சுக்கள் அல்ல. இருவரின் இயல்புக்கேற்றபடி, இதயத்தில் இருந்து வெளிப்பட்டவையே.

  1967-ல் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தி.மு.க. கோட்டையில் அமர்ந்த பிறகும், காமராஜரின் பெருமைகளைச் சொல்லிக் கொண்டே இருந்தார் பெரியார். இப்படிக் கண்ணை மூடிக் கொண்டு காமராஜரை நான் ஆதரித்ததற்கு காரணம் அவரது ஆட்சிக் காலத்தில் தமிழர்களுக்கு கிடைத்த அபாரமான நன்மைகள்தான் என்று பேசிய பெரியார்... இதற்காகக் காங்கிரசுக்காரர்களிடம் இருந்து எவ்விதப் பாராட்டுகளையும் நான் அடைந்ததில்லை. மாறாக பல அலட்சியக் குறிப்புகளையும், வெறுப்புகளையும் நிறையவே பெற்றிருக்கிறேன் என்பதையும் குறிப்பிடுகிறார்.

  காங்கிரசிலே இருக்கிற பெரிய மந்திரிகளையோ அல்லது பாராளுமன்ற உறுப்பினரையோ அல்லது சட்டமன்ற உறுப்பினரையோ நான் சந்தித்ததுமில்லை. மனம் விட்டுப் பேசியதுமில்லை. எந்த நட்பையும் நான் கொண்டதுமில்லை. என்னைப் பொறுத்தவரையில் காமராஜர் என்ற ஒரு மாபெரும் மனிதரின் முயற்சியால் தமிழகம் அடைந்திருக்கும் நன்மைதான் என் கண்களுக்கு தெரிகிறது. அதனால்தான் 14 ஆண்டு காலம் தொடர்ந்து காங்கிரஸ் இயக்கத்துக்கு ஆதரவு காட்டி வருகிறேன் என்பதையும் பேசி பதிவு செய்துள்ளார் பெரியார்.

  சந்தர்ப்பதிற்கேற்றவாறு பேசுகிற சராசரி அரசியல்வாதிகளின் மத்தியில், எவ்விதப் பிரதிபலனும் பாராமல் தமிழர் நலன் ஒன்றையே குறிக்கோளாய்க் கொண்டு, தனித்துவம் நிறைந்த தலைவராக அவர் செயலாற்றி வந்ததால்தான் "தந்தை பெரியார்" என்று தமிழகம் அவரைக் கொண்டாடியது.

  காமராஜர் அகில இந்திய அரசியலுக்கு சென்றதில் தந்தை பெரியாருக்கு வருத்தம் இருந்தாலும், வட இந்தியத் தலைவர்கள் "வணக்கம்" சொல்லுகிற அரியாசனத்தில் அல்லவா அமர்ந்திருக்கிறார். இது எந்தத் தமிழனுக்கும் கிடைக்காத பெருமைதானே என்பதிலே உள்ளூர பெரியாருக்கு மகிழ்ச்சி இருந்தது.

  பண்டித ஜவகர்லால் நேரு மறைந்த போது அவரது மறைவிற்குப் பின்னாலே இந்தியா என்னாகுமோ? என்று உலகமே கவலைப்பட்டுக் கொண்டிருந்த நேரத்தில் ஆபத்பாந்தனாக வந்து தனது சாதுரியமான அணுகுமுறையால் லால்பகதூர் சாஸ்திரியை பிரதமராக தேர்ந்தெடுத்து இந்தியாவின் ஒருமைப்பாட்டையும் காங்கிரஸ் கட்சியின் ஒற்றுமையையும் கட்டிக்காத்தவரல்லவா காமராஜர்.

  அது மட்டுமா... லால்பகதூர் சாஸ்திரியும் அகால மரணமடைந்து இந்தியாவுக்கு மிகப்பெரிய சோதனை ஏற்பட்ட நேரத்தில் முரண்டு பிடித்த மூத்த தலைவர் மொரார்ஜி தேசாயை சமாதானப்படுத்தி, இந்திராவைப் பாரதப் பிரதமராகத் தேர்ந்தெடுத்து உலகையே வியக்க வைத்த "கிங் மேக்கர்" அல்லவா காமராஜர்.

  காமராஜரின் இவ்விரண்டு சாதனைகள் குறித்து உலகளவில் பாராட்டாத ஏடுகள் இல்லை. பாராட்டாத தலைவர்கள் இல்லை. "தமிழன் என்றோர் இனமுண்டு, தனியே அவருக்கொரு குணமுண்டு" என்ற நாமக்கல் கவிஞரின் வைர வரிகளுக்கு உதாரண புருஷராக விளங்கிய வரல்லவா காமராஜர்.

  ஆனால் எதிர்க்கட்சிக்காரர்களுக்கு இவற்றிலே கொஞ்சமும் மகிழ்ச்சியில்லை. நேரு மறைவின் போதும், சாஸ்திரி மறைவின் போதும் குழப்பம் ஏற்படும். அதிலே குளிர்காயலாம் என்று நினைத்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. காமராஜர் மீது அவர்களுக்கு தனியாக கோபம் இருந்தது. சரிந்து போக இருந்த காங்கிரசை தூக்கி நிறுத்தி விட்டாரே என்ற கோபம்தான் அது. அது மனதுக்குள்ளே தணலாக கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது என்பது மறக்க முடியாத உண்மையாகும்.

  அதனுடைய வெளிப்பாடுதான் "பசுவதைத் தடை சட்டம்" கொண்டு வரச் சொல்லி, மிகப்பெரிய வன்முறைக் கும்பல் ஒன்று புதுடெல்லியில் 1966-ம் ஆண்டு நவம்பர் 7-ம் நாள் மிகப்பெரிய ஊர்வலத்தை நடத்தினார்கள்.

  இந்த வன்முறைக் கூட்டம் ஊர்வலமாக வரும் பொழுது... வரும் வழியில் ஜந்தர் மந்தர் சாலையில் இருந்த காமராஜர் தங்கியிருந்த இல்லத்திற்குள்ளே புகுந்து, மதில் சுவரையும் இடித்துக் கொண்டு உள்ளே சென்று தீ வைத்தது. நல்ல வேளையாக அப்போது காமராஜரின் உதவியாளராக இருந்த அம்பியின் உதவியால், அடுத்துள்ள ரஃபி மார்க் என்ற இடத்திற்கு பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டார் காமராஜர். ஆனால் உதவியாளர் அம்பிக்கு பெருத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கும் அளவுக்கு ஆயிற்று.

  இந்தச் சம்பவம் டெல்லியை மட்டுமல்ல. இந்தியாவையே பேரதிர்ச்சிக்குள்ளாக்கியது. அனைத்து ஏடுகளும், குறிப்பாக இந்தியன் எக்ஸ்பிரஸ், தி இந்துஸ்தான் டைம்ஸ் போன்றவை கடுமையாக கண்டித்து எழுதின.

  இச்சம்பவம் பற்றி அறிந்த தந்தை பெரியார் துடிதுடித்துப் போனார். காங்கிரஸ் தொண்டர்கள் பேரதிர்ச்சிக்குள்ளாயினர். பாராளுமன்றத்தில் அனைத்து தலைவர்களும் தங்களது கண்டனக்குரலை எழுப்பினர். அப்போது உள்துறை அமைச்சராக இருந்த நந்தா தனது பதவியையே ராஜினாமா செய்ய நேர்ந்தது.

  தந்தை பெரியார் இது சம்பந்தமான அனைத்து தகவல்களையும் ஒன்றுதிரட்டி "காமராஜர் கொலை முயற்சி சரித்திரம்" என்ற தலைப்பில் நூல் ஒன்றினை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். அந்த நூலுக்கு முன்னுரை எழுதியவர் நமது கி.வீரமணி அய்யா அவர்கள். விடுதலை ஏட்டின் ஆசிரியர் பொறுப்பிலும், திராவிடக் கழகப் பொதுச் செயலாளர் பொறுப்பிலும் இருந்து அப்போது பணியாற்றிக் கொண்டிருந்தார்.

  காமராஜர் கொலை முயற்சி என்பது மதத்தைப் பற்றி கவலை கொண்டதாக இல்லாமல் ஒரு சமுதாயத்தின் உயர்வை, வாழ்வை அடிப்படையாகக் கொண்டதாகும். தங்களின் உயர்வாழ்வுக்கு கேடு வந்துவிடுமோ என்ற சுயநலத்தின் வெளிப்பாடுத்தான் இந்த கொடிய கொலை வெறித்தாக்குதல் என்று வீரமணி தனது முன்னுரையில் குறிப்பிட்டிருந்தார். திராவிடக் கழகத்தினர் நாடெங்கும், இந்த கொலை முயற்சியைக் கண்டித்து ஊர்வலங்களையும், பொதுக் கூட்டங்களையும் நடத்திய வரலாறு, தமிழகத்தின் வரலாற்றில் மிக மிக முக்கியமான பதிவாகும்.

  தந்தை பெரியார் மறைந்தபோது காமராஜர் சொன்ன வரிகள் இப்போது நினைவுக்கு வருகிறது. "தந்தை பெரியாரின் வரலாறு என்பது தமிழகத்தின் வரலாறு" "சமுதாய சீர்திருத்த உலகில் நமக்கு கிடைத்திட்ட ஒளிவிளக்கு பெரியார்" என்பது அந்த வைர வரியாகும்.

  அடுத்த வாரம் சந்திப்போம்.

  Next Story
  ×