search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கொலை- 150 பேரிடம் தீவிர விசாரணை
    X

    ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கொலை- 150 பேரிடம் தீவிர விசாரணை

    • 6 தனிப்படையினர் நெல்லிக்குப்பம் பகுதியில் தனி தனியாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    • கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் நெல்லிக்குப்பத்தில் முகாமிட்டு தீவிர விசாரணை முடுக்கியுள்ளார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பம் அருகே உள்ள காரமணிக்குப்பம் ராஜாராம் நகரை சேர்ந்தவர் கமலேஷ்வரி (வயது60). இவர் தனது மகன் சுகுந்தகுமார்,பேரன் நிஷாந்துடன் வசித்து வந்தார்.

    நேற்று முன்தினம் மர்மநபர்கள் இவர்கள் 3 பேரையும் கொடூரமாக கொலை செய்து உடல்களை தீ வைத்து எரித்தனர். கொலையாளிகளை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உத்தரவின் பேரில் 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. சுகுந்தகுமார் ஐதாராபாத்தில் உள்ள ஐ.டி கம்பெனியில் வேலை செய்து வந்தார். 15 நாட்களுக்கு ஒரு முறை ஊருக்கு வந்து செல்வார். இதற்கிடையே அவர் மர்ம கும்பலால் கொலை செய்யப்பட்டதால் அவர் வேலை பார்த்த ஐதாராபாத்துக்கு சென்று ஒரு தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மற்ற 6 தனிப்படையினர் நெல்லிக்குப்பம் பகுதியில் தனி தனியாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    3 பேர் கொலை தொடர்பாக கமலேஷ்வரியின் வீடு உள்ள பகுதியில் அக்கம்பக்கத்தினர், உறவினர்கள், சுகுந்தகுமாரின் நண்பர்கள், அப்பகுதி வட்டாரத்தில் வசிப்பவர்கள் உள்ளிட்டோரிடம் தனிப்படையினர் விசாரணை நடத்தினர். இதுவரை 150 பேரிடம் விசாரணை நடத்தி உள்ளனர். ஆனால் யாரும் சரியான தகவல் கொடுக்கவில்லை. இதனால் போலீசார் துப்பு கிடைக்காமல் திணறி வருகின்றனர்.

    சுகுந்தகுமார் குடும்பத்தினர் 4 செல்போன்களை பயன்படுத்தி வந்துள்ளனர். அதில் ஒரு செல்போன் உபயோகத்தில் இல்லாமல் உள்ளது. மற்ற 3 செல்போன்களை போலீசார் கைப்பற்றி அதில் பதிவான எண்களை வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக சைபர் கிரைம் போலீஸ் சூப்பிரண்டு பிரபாகரன் தலைமையில் 3 தனிப்படையினர் அமைக்கப்பட்டுள்ளனர்.

    விசாரணையில் சுகுந்தகுமார் பயன்படுத்திய ஒரு செல்போனில் இருந்த சில தகவல்கள் அழிக்கப்பட்டுள்ளது என்பது தெரியவருகிறது. அந்த செல்போனை சென்னைக்கு கொண்டு சென்று அதிநவீன தொழில்நுட்பத்தின் மூலம் அந்த எண்ணுக்கு யார் யார் தொடர்பு கொண்டனர் என்பது தொடர்பாக ஆய்வு நடத்தி வருகிறார்கள்.

    கொலை செய்யப்பட்ட சுகுந்தகுமாருக்கு பெங்களுரை சேர்ந்த அஞ்சு சுல்தானா(38) என்பவருடன் தொடர்பு இருந்துள்ளது. இவர்கள் இருவரும் முறைப்படி திருமணம் ஆகாமல் பழகி குழந்தை பெற்றது தெரியவந்தது. இவர்களது குழந்தை தான் கொலை செய்யப்பட்ட நிஷாந்த். எனவே, அஞ்சு சுல்தானை நெல்லிக்குப்பம் போலீசார் விசாரணைக்கு அழைத்தனர். நேற்று இரவு 10 மணிவரை இந்த விசாரணை நடந்தது. பின்னர் அஞ்சு சுல்தானை போலீசார் அனுப்பி வைத்தனர்.

    கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் நெல்லிக்குப்பத்தில் முகாமிட்டு தீவிர விசாரணை முடுக்கியுள்ளார். எனவே,கொலையாளிகள் விரைவில் பிடிப்படுவார்கள் என தெரிகிறது.

    Next Story
    ×