search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    • தமிழக வெற்றிக் கழக மாநாடு 27-ந்தேதி நடைபெறுகிறது.
    • பந்தல் அமைக்கும் பணி இன்று முதல் நடைபெற இருக்கிறது.

    நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை அடுத்த வி.சாலையில் இம்மாதம் 27-ந்தேதி நடைபெறுகிறது.

    மாநாட்டுக்கான வேலைகளை கட்சி நிர்வாகிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். மாநாட்டுக்காக பிரமாண்ட பந்தல் போடப்பட இருக்கிறது. இதற்கான பந்தல் கால் நடும் விழா இன்று காலை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

    அதன்படி இன்று அதிகாலை 4.30 மணி முதல் 6 மணிக்குள் மாநில செயலாளர் புஸ்சி ஆனந்த் தலைமையில் கட்சியினர் மாநாட்டு திடலில் பூமி பூஜையை செய்தனர். பின்னர் மாநாட்டுக்கான பந்தக்கால் நடப்பட்டது.

    பந்தக்கால் நடப்பட்ட போது தளபதி, தளபதி என கட்சி நிர்வாகிகள் முழக்கமிட்டனர். பந்தக்கால் நடப்பட்ட விழாவில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.

    • பொருளாதார மையமாக சென்னை உள்ளதால் ஒரு விரிவான திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
    • சென்னை மெட்ரோ 2-ம் கட்ட திட்டத்திற்கு நிதி ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்.

    மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய ரயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், "சென்னை மெட்ரோ இரண்டாம் கட்ட திட்டத்திற்கு ரூ. 63 ஆயிரத்து 246 கோடி ஒதுக்கீடு நிதியை ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது," என்று தெரிவித்தார்.

    "வேகமாக வளர்ந்து வரும் நகரமான சென்னை மிக முக்கிய பொருளாதார மையம் ஆகும். நகருக்கு தேவையான உள்கட்டமைப்பை உருவாக்குவது மிகவும் முக்கியம். பொருளாதார மையமாக சென்னை உள்ளதால் ஒரு விரிவான திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது."

    "118 கிலோ மீட்டர் நீளத்திற்கு 128 மெட்ரோ நிலையங்கள் அமையும் வகையில் மெட்ரோ இரண்டாம் கட்டம் செயல்படுத்தப்பட உள்ளது" என்று அவர் மேலும் தெரிவித்தார். அண்மையில் டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்த முதல் அமைச்சர் முக ஸ்டாலின் மெட்ரோ திட்டத்திற்கு நிதி கோரியிருந்த நிலையில், தற்போது நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.



    மெட்ரோ ரெயில் இரண்டாம் கட்டப் பணிகளுக்கு நிதி ஒதுக்கிய மத்திய அரசுக்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பான எக்ஸ் தள பதிவில், "மாண்புமிகு பிரதமர்

    நரேந்திர மோடி, உங்களுடனான எனது கடைசி சந்திப்பைத் தொடர்ந்து எங்களின் கோரிக்கையை ஏற்று சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கு ஒப்புதல் அளித்ததற்கு நன்றி. தமிழக மக்களின் நீண்ட நாள் கோரிக்கைக்கு தீர்வு காணப்பட்டுள்ளதால், இத்திட்டத்தை விரைவில் நிறைவேற்றுவோம் என்ற நம்பிக்கை உள்ளது," என குறிப்பிட்டுள்ளார்.

    • மீனவர் ஒருவர் மீன்பிடிக்க வலை வீசிய நிலையில், வலையில் சிறுவர்கள் சடலமாக சிக்கினர்.
    • சிறுவர்களின் உடலை மீட்டு அரகண்டநல்லூர் போலீசார் விசாரணை.

    விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்ல்லூர் பகுதியில் உள்ள கோட்டமருதூர் ஏரியில் குளிக்கச் சென்ற மூன்று சிறுவர்கள் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

    சிறுவர்கள் ஹரிஹரன் (11), ஜீவிதன் (10) மற்றும் தர்ஷன் (8) ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

    மீனவர் ஒருவர் மீன்பிடிக்க வலை வீசிய நிலையில், வலையில் சிறுவர்கள் சடலமாக சிக்கினர்.

    இதைதொடர்ந்து, சிறுவர்களின் உடலை மீட்டு அரகண்டநல்லூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி முதல்வராக லியூ டேவிட் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
    • செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி முதல்வராக சிவசங்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.

    தமிழ்நாட்டில் 14 மருத்துவ கல்லூரிகளுக்கு முதல்வர்களை நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

    அதன்படி, செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி முதல்வராக சிவசங்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.

    கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லூரி முதல்வராக பவானி, ஈரோடு மருத்துவக் கல்லூரி முதல்வராக ரவிக்குமார், குமரி மருத்துவக்கல்லூரி டீனாக ராம லட்சுமி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    திருச்சி மருத்துவக் கல்லூரி முதல்வராக குமரவேல், மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வராக அருள் சுந்தரேஷ் குமார், ராமநாதபுரம் மருத்துவக்கல்லூரி டீனாக அமுதா ராணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    சேலம் மருத்துவக் கல்லூரி முதல்வராக தேவி மீனாள், சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி முதல்வராக லியூ டேவிட் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி முதல்வராக கலைவாணி, தேனி மருத்துவக் கல்லூரி முதல்வராக சித்ரா, கரூர் மருத்துவக் கல்லூரி முதல்வராக லோகநாயகி, விருதுநகர் மருத்துவக்கல்லூரி முதல்வராக ஜெயசிங் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    வேலூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வராக ரோகிணி தேவியை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    • மத்திய உணவுப் பாதுகாப்பு துறை எந்த சட்டத்தின் அடிப்படையில் நோட்டீஸ் கொடுத்துள்ளது என்று கேள்வி.
    • ஏ.ஆர்.டெய்ரி நிறுவனத்திற்கு புதிய நோட்டீஸ் அனுப்பி, உரிய கால அவகாசம் வழங்க உத்தரவு.

    திருப்பதி திருமனை தேவஸ்தானத்திற்கு திண்டுக்கல் ஏ.ஆர்.நிறுவனம் நெய் வழங்கிய விவகாரம் தொடர்பான வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அமர்வில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

    அப்போது, திருப்பதி லட்டு விவகாரத்தில் சம்பந்தப்பட்ட ஏ.ஆர்.நிறுவனம் செய்த விதிமீறல் என்ன என்று மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு கேள்வி எழுப்பியுள்ளது.

    கொடுக்கப்பட்ட நோட்டீஸ்களில் எந்த விதமான தகவல்களும், விவரங்களும் இல்லை என்றும் ஒரு நிறுவனத்திற்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டால் அவர்கள் உரிய பதிலளிக்க கால அவகாசம் வழங்க வேண்டாமா ? என்றும் நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

    மேலம், மத்திய உணவுப் பாதுகாப்பு துறை எந்த சட்டத்தின் அடிப்படையில் நோட்டீஸ் கொடுத்துள்ளது என்றும் கேள்வி எழுப்பப்பட்டது.

    சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் முடிவுகள் எங்கே ? ஏ.ஆர்.டெய்ரி நிறுவனத்திற்கு புதிய நோட்டீஸ் அனுப்பி, உரிய கால அவகாசம் வழங்க உத்தரவிட்டு, வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது.

    • 21 தொகுதிகளில் தான் தி.மு.க. நேரடியாக இருந்தது.
    • இனிவரும் காலம் மக்கள் கையில் உள்ளது.

    பெரியகுளம்:

    தேனி மாவட்ட தே.மு.தி.க. சார்பில் பெரியகுளத்தில் விஜயகாந்த் பிறந்தநாள் விழா, தே.மு.தி.க. கட்சியின் 20ஆம் ஆண்டு தொடக்க விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது. இதில் விஜயபிரபாகரன் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசியதாவது:-

    எடப்பாடி பழனிசாமி அண்ணன் ஓ.கே. சொன்னால் நான் தமிழ்நாடு முழுவதும் சென்று வேலை பார்க்க தயாராக உள்ளேன். எனது தந்தை கேப்டன் விஜயகாந்த் கூட்டணி தர்மம் குறித்து எனக்கு கூறியுள்ளார். எனவே கூட்டணி தர்மம் கருதி அ.தி.மு.க. கூறினால் தமிழகம் முழுவதும் வேலை பார்க்க நான் தயாராக உள்ளேன்.

    கருப்பு எம்.ஜி.ஆர். விஜயகாந்த் ஆரம்பித்த தே.மு.தி.க., எம்.ஜி.ஆர். ஆரம்பித்த அ.தி.மு.க. ஆகியவை தான் மக்கள் கட்சி. அவை தான் மீண்டும் வெற்றி பெறும். தமிழகத்தில் தி.மு.க. 40க்கு 40 வெற்றி பெற்றுள்ளதாக கூறி வருகின்றனர். ஆனால் அவர்கள் 40க்கு 40 வெற்றி பெறவில்லை. 21 தொகுதிகளில் தான் தி.மு.க. நேரடியாக இருந்தது. மற்ற 19 தொகுதிகளும் அவர்கள் கூட்டணி கட்சிகளின் பலம் உள்ள தொகுதிகளை அவர்களுக்கு வழங்கி அதிலிருந்து வெற்றி பெற்றுள்ளனர்.

    விஜயகாந்த் இருந்தபோது அவரை மீடியாக்கள் கிண்டலும், கேலியும் செய்து ஒதுக்கி வைத்திருந்தனர். தற்போது மக்கள் அவரை நல்லவர் என்று கூறுகின்றனர். நாங்கள் பணம் வாங்குகின்ற கட்சி என்றும், பேரம் பேசுகின்றோம் என்றும் எதிர்க்கட்சியினர் கூறுகின்றனர்.

    நாங்கள் எப்பொழுதும் யாரிடமும் பேரம் பேசியதும் இல்லை. பணம் வாங்கியதும் இல்லை. 2005ம் ஆண்டு எங்களது சொந்த நிலத்தை வைத்துத்தான் மாநாடு நடத்தினோம். இன்று வரை அப்படித்தான் கட்சி நடத்தி வருகின்றோம். எனவே இனிவரும் காலம் மக்கள் கையில் உள்ளது. யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று அவர்கள் தெரிந்து வாக்களித்தால் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமையும். தே.மு.தி.க. எதிர்க்கட்சியாக அமரும். எனவே மக்கள் புரிந்து செயல்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலில் படிக்கட்டில் அமர்ந்தபடி பயணம் செய்துள்ளார்.
    • நடைமேடையில் விழுந்த வேகத்தில் சுமார் 150 மீட்டர் இழுத்து செல்லப்பட்டார்.

    சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலில், படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்த இளைஞர் தவறி விழுந்து ரெயிலில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

    கடலூரைச் சேர்ந்த பாலமுருகன் (24) என்பவர், வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலில் படிக்கட்டில் அமர்ந்தபடி பயணம் செய்துள்ளார்.

    அப்போது, சைதாப்பேட்டை ரெயில் நிலையத்தில் ரெயில் வேகமாக சென்றுக்கொண்டிருந்தபோது, பாலமுருகன் தவறி விழுந்துள்ளார்.

    நடைமேடையில் விழுந்த வேகத்தில் சுமார் 150 மீட்டர் இழுத்து செல்லப்பட்ட பாலமுருகன் இறுதியில் ரெயிலுக்கு அடியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இந்த சம்பவத்தின் அதிரவைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

    • இளைஞர் சமுதாயத்தினர் வேலை வாய்ப்புகளைப் பெற்று வருகின்றனர்.
    • பல்வேறு தொழிற்சாலைகள் வந்து கொண்டிருக்கின்றன.

    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றது முதல் தொழில் வளர்ச்சிக்கு அளித்து வரும் அளப்பரிய ஊக்கம் காரணமாகப் பல்வேறு புதிய தொழிற்சாலைகள் தமிழ்நாட்டில் தொடர்ந்து திறக்கப்பட்டு வருகின்றன. அவற்றின் மூலம் இளைஞர் சமுதாயத்தினர் வேலை வாய்ப்புகளைப் பெற்று வருகின்றனர்.

    2021-ம் ஆண்டில் திராவிட மாடல் ஆட்சி தொடங்கிய பின் 2030-ம் ஆண்டிற்குள் தமிழ்நாடு ஒரு டிரில்லியன் பொருளாதார வளர்ச்சி பெற்ற மாநிலமாகும் எனும் இலக்குடன் தொழில் முதலீட்டாளர்கள் மாநாடுகள் நடத்தப்பட்டு புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்கும் பணிகள் தொடங்கப்பட்டன.

    அதன்படி திராவிட மாடல் அரசு 3 ஆண்டுகளில் மொத்தம் 31 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் அளிக்கத்தக்க வகையில் ரூ.9.74 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டு முதலில் 27 புதிய தொழிற்சாலைகளை திறந்து வைத்துள்ளது. அத்துடன் மேலும் 19 தொழிற்சாலைகள் 17,616 கோடி ரூபாய் முதலீட்டில் திறந்து வைக்கப்பட்டுள்ளன. ஆக மொத்தம் 46 புதிய தொழிற்சாலைகள் இதுவரை திறந்து வைக்கப்பட்டுள்ளன.

    மேலும், பல்வேறு தொழிற்சாலைகள் வந்து கொண்டிருக்கின்றன. இவற்றின் காரணமாக திராவிட மாடல் அரசின் தொழில் வளர்ச்சி சாதனைகள் இந்திய அளவில் சிறந்து விளங்குகின்றன இதனை ஓரிரு நாட்களுக்கு முன் மத்திய அரசின் புள்ளியியல் அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி உறுதிப்படுத்தியுள்ளது.

    மத்திய அரசின் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் 2023-2024ம் ஆண்டுக்கான கள ஆய்வையும் கணக்கெடுப்பையும் நடத்தியதில் உற்பத்தி தொழில்களில் தமிழ்நாட்டில் 7.5 சதவிகித வேலை வாய்ப்பு அதிகரித்துள்ளதாகவும், நாட்டிலேயே அதிக தொழிற்சாலைகள் மற்றும் வேலை வாய்ப்பில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதாகவும் அறிவித்துள்ளது. எனவே, தமிழ்நாடு தொடர்ந்து புரிந்துவரும் சாதனைகள் தொழில் வளர்ச்சியில் இந்தியாவின் தலைசிறந்த மாநிலம் தமிழ்நாடு என்னும் வரலாற்றைப் பறைசாற்றும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அன்புமணி ராமதாஸ் தான் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார் என்று சீமான் கூறியதால் பரபரப்பு
    • 2019ம் ஆண்டு பிரதமர் மோடி மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டினார்.

    மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அன்புமணி ராமதாஸ் தான் அடிக்கல் நாட்டினார் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய சீமான், "மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டியது யார்? திமுக - காங்கிரஸ் - பாமக கூட்டணியில் இருந்த போது சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த அன்புமணி ராமதாஸ் தான் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார். 10 ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது ஏன் எய்ம்ஸ் காட்டவில்லை. கடந்த முறை 39 எம்.பி.க்கள் இப்போது 40 எம்.பி.க்கள் பாராளுமன்றம் போனார்களே அவர்கள் பேசி எய்ம்ஸ் மருத்துவமனை கட்டவேண்டியதுதானே" என்று பேசியுள்ளார்.

    2019ம் ஆண்டு ஜனவரி மாதம் 27ம் தேதி பிரதமர் மோடி மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டினார். உண்மை இப்படியிருக்க மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மன்மோகன் சிங் பிரதமராக இருந்த காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் அடிக்கல் நாட்டப்பட்டது என்று உண்மைக்கு புறம்பான செய்திகளை சீமான் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    • தமிழ்நாட்டில் இப்போது 4 ஆயிரத்து 829 மதுக்கடைகள் உள்ளன.
    • தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

    சென்னை:

    தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் வருகிற 8-ந்தேதி நடைபெற உள்ளது.

    துணை முதலமைச்சர் நியமனம் மற்றும் அமைச்சரவை மாற்றத்திற்கு பிறகு நடைபெறும் இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

    தமிழகத்தில் மதுக்கடை மற்றும் போதைப் பொருட்களை ஒழிக்க பல்வேறு அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில் டாஸ்மாக் மதுக்கடைகளின் எண்ணிக்கையை மேலும் குறைக்க அரசு முடிவெடுக்கும் என தெரிகிறது.

    இது சம்பந்தமாக அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது.

    தமிழ்நாட்டில் இப்போது 4 ஆயிரத்து 829 மதுக்கடைகள் உள்ளன. எப்.எல்.2, எப்.எல்.3 மதுக்கடைகள் 1,685 உள்ளது. மேலும் 400 மதுக்கடைகளுக்கு அனுமதி கேட்டு வந்த விண்ணப்பங்கள் அரசிடம் நிலுவையில் உள்ளது.

    இந்த நிலையில் 500 மதுக்கடைகளை மூடுவதற்கு அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உளுந்தூர்பேட்டையில் நடத்திய மதுஒழிப்பு மகளிர் மாநாட்டிலும் மதுக்கடைகளை மூடுமாறு கோரிக்கை வைத்துள்ளார். பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மதுவை ஒழிக்க வேண்டும் என்று கட்சி தொடங்கிய காலத்தில் இருந்தே வலியுறுத்தி வருகிறார்.

    தமிழக அரசும் போதைப்பொருளுக்கு எதிராக ஒவ்வொரு மாவட்டத்திலும் விழிப்புணர்வு பேரணியை நடத்தி வருகிறது. இந்த நிலையில் மதுக்கடைகளுக்கு எதிராக பலரும் குரல் கொடுத்து வருவதால் முதற்கட்டமாக 500 மதுக்கடைகளை மூடுவதற்கு அரசு முடிவெடுக்கும் என தெரிகிறது.

    இது தவிர, அமைச்சரவைக் கூட்டத்தில் தமிழக அரசு செயல்படுத்தி வரும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம், புதுமைப் பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டங்கள் தொடர்பாகவும் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

    மேலும் புதிய தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி அளிப்பது தொடர்பாக அமைச்சரவைக் கூட்டத்தில் கொள்கை ரீதியான முடிவுகள் எடுக்கப்படும் என தெரிகிறது.

    • கட்சியில் இருந்து விலகியவர்கள் சீமான் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர்.
    • திருப்தி இருக்குற இடத்துல போய் சேர்ந்துக்கற வேண்டியதுதான்.

    நாம் தமிழர் கட்சியில் இருந்து சில பொறுப்பாளர்கள் விலகி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன் கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பாளர் பிரபாகரன் தலைமையில் நிர்வாகிகள் விலகிய நிலையில் தற்போது விழுப்புரம் வடக்கு மாவட்ட பொறுப்பில் இருந்து சுகுமார் விலகியுள்ளார். கட்சியில் இருந்து விலகியவர்கள் சீமான் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர்.

    இந்த நிலையில் சீமானிடம் நிர்வாகிகள் கூறிய குற்றச்சாட்டுகள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கூறியதாவது:-

    இருக்குற வரைக்கும் இருப்பாங்க. திடீர்னு அதிருப்தி வரும்... திருப்தி இருக்குற இடத்துல போய் சேர்ந்துக்கற வேண்டியதுதான். அது ஒரு பெரிய சிக்கல் இல்லை. இது நாட்டுக்கும், மக்களுக்கும் பிரச்சனை ஒன்னும் இல்லை. பொது வெளியில் பேசினால் பேசட்டும். தாலியை வச்சி கட்சி நடத்துனேன்னு சொல்லுறவங்க, யாராவது ஒருத்தர எங்கிட்ட கூட்டிட்டு வாங்க.. குற்றச்சாட்ட சொன்னவரு யாரு? கட்சி பேரை சொல்லி 5 கோடி வசூல் பண்ணியிருக்காரு. என் முகத்துக்காக எல்லாரும் வழக்கு கொடுக்காம இருக்காங்க. அதை பற்றி பேசினால் எனக்கு தகுதியா இருக்குமா? தரமா இருக்குமா? வளர்ந்து வரும் கட்சியில சில குறைகள் இருக்கத்தான் செய்யும். அதை ஒரு பெரிய பிரச்சனையா பேசிக்கிட்டு இருக்காதீங்க என்றார்.

    • தி.மு.க, அ.தி.மு.க. ஆகிய கட்சிகள் மாவட்டங்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளன.
    • மேலிடம் ஒப்புதல் அளித்தால் புதிய மாவட்டங்கள், புதிய மாவட்ட தலைவர்கள், புதிய நிர்வாகிகள் பதவிக்கு பலர் வருவார்கள்.

    சென்னை:

    தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை அமைப்பு ரீதியாக பலப்படுத்த திட்டமிட்டுள்ளார்கள். தற்போது 77 மாவட்ட தலைவர்கள் இருக்கிறார்கள்.

    இதை சராசரியாக 2 சட்டமன்றங்களுக்கு ஒரு மாவட்டம் என்ற அடிப்படையில் குறைந்தபட்சம் 115 மாவட்டங்களாக பிரிக்க முடிவு செய்துள்ளார்கள். இதற்கான திட்டங்களை தயார் செய்து டெல்லி தலைமையின் ஒப்புதலுக்காக அனுப்பி இருக்கிறார்கள். இதுபற்றி டெல்லி மேலிடம் பரிசீலித்து வருகிறது.

    தி.மு.க, அ.தி.மு.க. ஆகிய கட்சிகள் மாவட்டங்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளன. அந்த கட்சிகளை பொறுத்தவரை அமைப்பு ரீதியாக வலிமையான கட்சிகள். முன்னாள் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஏராளமானோர் இருக்கிறார்கள். எனவே மாவட்டங்களை அதிக அளவில் பிரித்தாலும் வலிமையான நிர்வாகிகளும் இருப்பதால் நிர்வாகமும் சிறப்பாக இருக்கும் என்று கருதப்படுகிறது. ஆனால் காங்கிரசுக்கு அந்த மாதிரியான நிலை இல்லை. மாவட்டங்களை அதிக அளவில் பிரித்தாலும் திராவிட கட்சிகளுக்கு இணையாக எல்லா மாவட்டங்களிலும் நிர்வாகிகள் இருப்பார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

    அதே நேரம் ஏற்கனவே திண்டுக்கல், கன்னியாகுமரி, திருவள்ளூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் 2 தொகுதிகளை கொண்ட மாவட்டங்களும் செயல்பாட்டில் உள்ளன. எனவே பிரிப்பது தவறில்லை என்ற கருத்தும் உள்ளது. தேவையில்லை என்ற கருத்தும் உள்ளது.

    எனவே இந்த பிரச்சனை மேலிடத்துக்கு சென்றுள்ளது. மேலிடம் பரிசீலித்து வருகிறது. மேலிடம் ஒப்புதல் அளித்தால் புதிய மாவட்டங்கள், புதிய மாவட்ட தலைவர்கள், புதிய நிர்வாகிகள் பதவிக்கு பலர் வருவார்கள்.

    மேலிடத்தின் அனுமதிக்காக காத்திருக்கிறார்கள். அனுமதி கிடைத்ததும் புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படும் என்று காங்கிரஸ் வட்டாரத்தில் கூறப்பட்டது.

    ×