search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வீட்டு மனை உட்பிரிவு செய்வதற்கு ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சர்வேயர் கைது
    X

    வீட்டு மனை உட்பிரிவு செய்வதற்கு ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சர்வேயர் கைது

    • முனியப்பன் விண்ணப்பித்து ஒரு மாதம் ஆகியும் வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து எந்த தகவலும் கிடைக்கப்பெறவில்லை.
    • லஞ்சம் கொடுக்க விரும்பாத முனியப்பன் திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.

    திருச்சி:

    திருச்சி சுப்பிரமணியபுரம் இந்திரா காந்தி தெருவை சேர்ந்த முனியப்பன் (வயது 59) இவர் சொந்தமாக மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் திருச்சி கொட்டப்பட்டு கிராமத்தில் 1200 சதுரஅடி உள்ள ஒரு மனையினை கடந்த மாதம் வாங்கியுள்ளார்.

    அந்த மனையினை உட்பிரிவு செய்து பட்டா பெயர் மாற்றம் செய்வதற்காக திருச்சி கிழக்கு வட்டாட்சியர் அலுவலகத்திற்கு கடந்த 11.7.2024 அன்று விண்ணப்பித்துள்ளார். முனியப்பன் விண்ணப்பித்து ஒரு மாதம் ஆகியும் வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து எந்த தகவலும் கிடைக்கப்பெறவில்லை.

    இதனால் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்று முனியப்பன் விசாரித்த பொழுது தனது மனையை உட்பிரிவு செய்து கொடுக்க கொட்டப்பட்டு பகுதிக்கான சர்வேயர் முருகேசன் (வயது 39) என்பவரை பார்க்க வேண்டும் என்று தெரிந்து கொண்டு முருகேசனிடம் பேசி உள்ளார்.

    இதையடுத்து மனையை உட்பிரிவு செய்து கொடுக்க சர்வேயர் முருகேசன் ரூ.15 ஆயிரம் லஞ்சமாக கேட்டுள்ளார். அதற்கு முனியப்பன் லஞ்சப் பணத்தை குறைத்து கொள்ள வேண்டுமாறு முருகேசனிடம் கெஞ்சி கேட்டதன் பேரில் முருகேசன் 5 ஆயிரம் ரூபாய் குறைத்துக் கொண்டு ரூ.10 ஆயிரம் கொடுத்தால் தான் உனக்கு உட்பிரிவு செய்து தர முடியும் என்று கட்டாயமாக கூறியுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத முனியப்பன் திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் டி.எஸ்.பி. மணிகண்டன் தலைமையில் ஆய்வாளர்கள் சக்திவேல், பிரசன்ன வெங்கடேசன், பாலமுருகன் மற்றும் குழுவினருடன் முனியப்பனிடம் இருந்து சர்வேயர் முருகேசன் பத்தாயிரம் ரூபாய் லஞ்ச பணம் கிழக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து கையும் களவுமாக மடக்கி பிடித்தனர்.

    தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். லஞ்சம் வாங்கிய சர்வேயர் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து திருச்சி கிழக்கு தாலுகா அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது.

    Next Story
    ×