search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தொடர் கனமழை: நீலகிரியில் 15 இடங்களில் மண்சரிவு, போக்குவரத்து துண்டிப்பு
    X

    தொடர் கனமழை: நீலகிரியில் 15 இடங்களில் மண்சரிவு, போக்குவரத்து துண்டிப்பு

    • பல இடங்களில் மண்சரிவு மற்றும் மரங்களும் முறிந்து விழுந்து வருகின்றன.
    • விவசாய நிலங்களையும் தண்ணீர் சூழ்ந்து பயிர்கள் சேதம்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கடந்த சில தினங்களாக மாவட்டம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது.

    மாவட்டத்தில் பெய்யும் கனமழையால் பல இடங்களில் மண்சரிவு மற்றும் மரங்களும் முறிந்து விழுந்து வருகின்றன.

    கூடலூர் பகுதியில் பெய்து வரும் மழையால் தொரப்பள்ளி, இருவயல், பாடந்தொரை, குற்றிமுற்றி உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஊருக்குள் தண்ணீர் புகுந்தது. அங்குள்ள விவசாய நிலங்களையும் தண்ணீர் சூழ்ந்து பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன.

    கூடலூர்-மசினகுடி செல்லும் சாலையில் மாயாற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் தெப்பக்காடு தரைப்பாலம் நீரில் மூழ்கியது. இதனால் அந்த வழியாக போக்குவரத்து தடை பட்டது.

    தரைப்பாலம் மூழ்கியதால் மசினகுடி ஊராட்சியில் உள்ள 10-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

    கூடலூர் கோக்கால் பகுதியில் சாலைகள் மற்றும் தெருக்களில் விரிசல்கள் அதிகரித்துள்ளதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். அங்குள்ள முதியோர் காப்பகம் மற்றும் வீடுகளில் சுவர்களில் விரிசல்கள் ஏற்பட்டது.

    இருவயல் கிராமத்தை தொடர்ந்து வெள்ளம் சூழ்ந்துள்ளது. அங்குள்ள 13 குடும்பத்தை சேர்ந்த 48 பேர் மீட்கப்பட்டு தொரப்பள்ளி அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப்பள்ளியில் உள்ள முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    பந்தலூர், சேரம்பாடி திருவள்ளுவர் நகர் பகுதியில் மழை காரணமாக மண்சரிவு ஏற்பட்டுள்ளதுடன், குடியிருப்புகள் முன்பு விரிசலும் ஏற்பட்டுள்ளது. அப்பகுதி மக்கள் முகாமில் தங்க வைக்கப்பட்டனர்.

    கனமழையால் ராஜகோபாலபுரம் புதுக்காலனியில் மண்சரிவு ஏற்பட்டது. நெலாக்கோட்டை அடுத்த விலாங்கூர் கிராமத்தில் மழைக்கு மதரசா கட்டிடம் விழுந்து சேதமானது.

    எருமாடு அருகே சிறைச்சாலை பகுதியில் இருந்து வெள்ள கட்டு என்ற இடத்திற்கு செல்லும் சாலையில் மண்சரிவு ஏற்பட்டு சாலை முழுவதுமாக மூடியது. இதனால் அங்குள்ள மக்கள் வெளியிடங்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மழை காரணமாக பல இடங்களில் மண்சரிவுகளும் ஏற்பட்டது.

    ஊட்டி அருகே உள்ள இத்தலார் கிராமத்தில் குடியிருப்புகளுக்கு நடுவே பெரிய அளவிலான மண்சரிவு ஏற்பட்டது. ஊட்டியில் இருந்து எமரால்டு செல்லும் சாலை, முத்தோரை பாலடாவில் இருந்து லவ்டேல் செல்லும் சாலையிலும் பெரிய அளவில் மண்சரிவு ஏற்பட்டது.

    அப்பர் பவானியில் விடிய, விடிய பெய்த மழைக்கு அங்குள்ள மின்வாரிய ஓய்வு விடுதிக்கு செல்லும் சாலையில் மண்சரிவு ஏற்பட்டது. சாலையின் ஒரு பகுதியில் பிளவு ஏற்பட்டு மண் திட்டு சரிந்து விழுந்தது.

    பாலடா அருகே பைகமந்து ஒசட்டி பகுதியில் சாலையோர மண்திட்டு சரிந்து நடுரோட்டில் விழுந்தது. சாலையோரம் இருந்த மின் கம்பமும் சாய்ந்ததால் உடனடியாக மின்சாரம் நிறுத்தப்பட்டு, சீரமைப்பு பணிகள் நடந்தது.

    இத்தலார், அவலாஞ்சி சுற்றுப்புற பகுதிகளில் 15-க்கும் மேற்பட்ட இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

    மஞ்சூர் கிண்ணக்கொரை சாலையில் 3 இடங்கள், பிக்கட்டி, மணியட்டி, அட்டுபாயில் ஆகிய பகுதிகளில் 3 என மொத்தம் 6-க்கும் மேற்பட்ட மரங்கள் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி, குந்தா, கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு உத்தரவிட்டுள்ளார்.

    மாவட்டத்தில் பெய்த மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:-

    அவலாஞ்சி-204, எமரால்டு-123, அப்பர் பவானி-106, கூடலூர்-72, அப்பர் கூடலூர்-71, தேவாலா-68, நடுவட்டம்-63, செருமுள்ளி-56, பாடந்தொரை-52.

    Next Story
    ×