search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நீலகிரியை மிரட்டும் சூறாவளி: மின் கம்பங்கள் விழுந்ததால் மின்வினியோகம் பாதிப்பு
    X

    நீலகிரியை மிரட்டும் சூறாவளி: மின் கம்பங்கள் விழுந்ததால் மின்வினியோகம் பாதிப்பு

    • கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கனமழை பெய்து வந்தது.
    • குடியிருப்புகளின் கூரைகள் காற்றில் பறந்தது.

    அருவங்காடு:

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக சூறாவளி காற்றுடன் கூடிய கனமழை பெய்து வந்தது. கடந்த 2 நாட்களாக மழை சற்று குறைந்திருந்தது.

    அதேவேளையில் காற்றின் வேகம் அதிகரித்து சூறாவளி காற்று வீசி வருகிறது. இன்றும் பலத்த சூறாவளி காற்று வீசியது. குறிப்பாக குன்னூர், ஊட்டி சுற்றுவட்டார பகுதிகளில் வரலாறு காணாத காற்று வீசுகிறது. இதனால் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுவது, வீடுகளின் மேற்கூரைகளும் காற்றில் தூக்கி வீசப்பட்டுள்ளன.

    காற்றின் வேகத்தால் ஊட்டி அருகே உள்ள கோவில்மேடு பகுதியில் வீடுகளின் மேற்கூரை பெயர்ந்து, கூரை ஓடுகள் காற்றில் தூக்கி வீசப்பட்டு தரையில் கிடக்கின்றன. 40-க்கும் மேற்பட்ட வீடுகளின் கூரைகள் சேதம் அடைந்துள்ளன.

    குன்னூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான கொலக்கம்பை, சேலாஸ், கோடேரி, கைகாட்டி, வண்டிச்சோலை, பாரத் நகர் உள்ளிட்ட பகுதிகளிலும் பலத்த சூறாவளி காற்று வீசியது. இதன் காரணமாக குடியிருப்புகளின் கூரைகள் காற்றில் பறந்தது.

    குறிப்பாக காமராஜர் புரம் பகுதியில் ஊராட்சி சார்பில் கொடுக்கப்பட்ட தொகுப்பு வீடுகளின் மேற்கூரையும் காற்றில் பறந்தன. குன்னூர் சுற்றுவட்டாரத்தில் மட்டும் 20-க்கும் மேற்பட்ட வீடுகளின் கூரைகள் காற்றில் பறந்துள்ளன.

    உபதலை, மேல்பாரத் நகர், சப்ளை டிப்போ, பழைய அருவங்காடு உள்பட 30-க்கும் மேற்பட்ட இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன.

    மரங்கள் விழுந்த பகுதிகளில் குன்னூர் தாசில்தார் கனி சுந்தரம் மேற்பார்வையில் வருவாய்த்துறையினர், தீயணைப்பு நிலைய அலுவலர் குமார் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று மரங்களை அகற்றி அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.

    சின்ன வண்டிச்சோலை பகுதியில் 3 மின் கம்பங்கள் அடுத்தடுத்து சாய்ந்ததால் அப்பகுதியில் மின்தடை ஏற்பட்டது. மின்வாரிய ஊழியர்கள் 5 மணி நேரம் போராடி சீரமைத்தனர்.

    காத்தாடி மட்டம் அருகே சாலையில் நின்றிருந்த ராட்சத மரம் வேரோடு சாய்ந்து சாலையில் விழுந்தது. அப்போது மரத்தின் கீழே இருந்த கோவில் சேதம் அடைந்தது. குன்னூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின் கம்பிகள் மீது மரக்கிளைகள் தொடர்ந்து விழுந்து வருவதால், அவ்வப்போது மின்தடையும் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதி அடைந்துள்ளனர்.

    குன்னூர், கோத்தகிரி பகுதிகளில் வீசிய சூறவாளி காற்றுக்கு, பல ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த கொய்மலர் சாகுபடி குடில்கள் காற்றில் தூக்கி வீசப்பட்டு சேதம் அடைந்தன. பல இடங்களில் குடில்களின் பிளாஸ்டிக்குகள் கிழிந்துள்ளதால் மலர் சாகுபடி தொழிலை மேற்கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கொய்மலர் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    கோத்தகிரி சுற்றுவட்டார பகுதியில் வீசிய பலத்த காற்றுக்கு, கோத்தகிரியில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனையின் மேற்கூரை காற்றில் பறந்தது. இந்த பணிமனை தற்போது தான் புதிதாக கட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக வீசி வரும் சூறவாளி காற்றுக்கு மாவட்டம் முழுவதும் 70க்கும் மேற்பட்ட இடங்களில் சிறியது முதல் பெரிய அளவிலான மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்துள்ளன.

    இதேபோல் 50-க்கும் மேற்பட்ட வீடுகளின் மேற்கூரைகளும் காற்றில் பறந்து சேதம் அடைந்துள்ளது. ஊட்டி, குன்னூர், கோத்தகிரி பகுதிகளில் 5 இடங்களில் டிரான்ஸ்பார்மர்களும் கீழே விழுந்து சேதம் அடைந்துள்ளன. ஊட்டி, குன்னூர், மஞ்சூர், கோத்தகிரி, கூடலூர், பந்தலூர் உள்பட பல்வேறு இடங்களில் 150க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் ஆங்காங்கே விழுந்து மின் வினியோகம், குடிநீர் வினியோகமும் பாதிக்கப்பட்டுள்ளது.

    தொடர்ந்து வீசி வரும் பலத்த சூறாவளி காற்று காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. காற்று தொடர்ந்து வீசுவதால் பாதிப்புகள் மேலும் அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×