search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கனமழை: நீலகிரியில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன
    X

    கனமழை: நீலகிரியில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன

    • மரம் மின்கம்பம் மீது விழுந்ததால் மின் வினியோகமும் பாதிக்கப்பட்டது.
    • ஊட்டியில் பல்வேறு குடியிருப்புகளுக்கு அருகே தடுப்புச்சுவர்கள் இடிந்து விழுந்தன.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த 4 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து காற்றுடன் பலத்த மழை பெய்து வருகிறது.

    நேற்றும் கூடலூர், பந்தலூர், ஊட்டி சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

    மாவட்டம் முழுவதும் பரவலாகவே அவ்வப்போது விட்டு, விட்டு மழை பெய்து கொண்டே இருந்தது. தொடர் மழையால் நீலகிரி மாவட்டத்தில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

    கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழை காரணமாக நீலகிரியில் பல இடங்களிலும் மரங்கள் முறிந்து விழுந்து வந்தன.

    நேற்று பெய்த மழைக்கும் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன.

    ஊட்டியில் இருந்து முத்தோரை பாலடா செல்லும் சாலையில் முள்ளிக்கொரை பகுதியில் அடுத்தடுத்து 5 மரங்கள் சாய்ந்து நடுரோட்டில் விழுந்தன.

    அந்த சமயம் அந்த வழியாக வந்த கார் ஒன்று மரங்களுக்கு இடையே சிக்கி கொண்டது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. தகவல் அறிந்த தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து மரங்களை வெட்டி அகற்றினர். அதனை தொடர்ந்து கார் அங்கிருந்து சென்றது. மேலும் அந்த வழியாக வந்த மற்றொரு வாகனத்தின் மீதும் மரம் விழுந்தது.


    ஊட்டியில் இருந்து பிங்கர் போஸ்ட், கால்ப் லிங்ஸ் செல்லும் சாலையில் மரம் விழுந்தது. மரம் மின்கம்பம் மீது விழுந்ததால் மின் வினியோகமும் பாதிக்கப்பட்டது.

    ஊட்டி, குந்தா உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் உள்ள சாலையோரங்களில் நின்றிருந்த சிறு, சிறு மரங்கள் பலத்த காற்றுடன் பெய்த மழைக்கு முறிந்து ரோட்டில் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    நெடுஞ்சாலைத் துறையினர் அந்த மரங்களை உடனுக்குடன் வெட்டி அகற்றி அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.

    ஊட்டி தாசபிரகாஷ் சாலையிலும் ராட்சத மரம் முறிந்து நடுரோட்டில் விழுந்தது. அத்துடன் அந்த வழியாக சென்ற மின் கம்பிகள் மீது விழுந்ததில் அவை அறுந்தன.

    உடனடியாக அங்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டு, ஊழியர்கள் விரைந்து வந்து அதனை செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

    கூடலூரில் இருந்து மைசூரு மற்றும் கேரளா செல்லும் சாலைகளில் பல்வேறு இடங்களில் அதிகளவில் மரங்கள் முறிந்து விழுந்து போக்குவரத்து அடிக்கடி பாதிக்கப்பட்டது.

    ஓவேலி, தேவர்சோலை சுற்றுவட்டாரத்தில் மரக்கிளைகள் முறிந்து விழுந்ததால் 100க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மின் வினியோகம் துண்டிக்கப்பட்டு, அந்த பகுதிகள் இருளில் மூழ்கின.

    கூடலூர்-மைசூர் சாலையில் மாக்கமூலா பகுதியில் பலத்த காற்றுக்கு சாலையின் குறுக்கே மூங்கில் புதர் விழுந்தது.

    நாடுகாணி வனச்சரக எல்லைக்குட்பட்ட புளியம்பாறை கோழிக்கொல்லியில் சாலையோரம் இருந்த மரங்கள் கனமழையால் முறிந்து சாலையில் விழுந்தது.

    பிதர்காடு வனச்சரகத்திற்குட்பட்ட பாட்டவயல் சாலையில் அய்யங்கொல்லி பகுதியில் மரம் விழுந்தது. இந்த பகுதிகளில் தீயணைப்பு துறையினர் விரைந்து மரங்களை வெட்டி அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர்.

    பந்தலூர் அத்திகுன்னாவில் இருந்து அத்திமாநகர் செல்லும் சாலையில் மண்சரிவு ஏற்பட்டதால் மரமும் முறிந்து விழுந்தது. அப்பகுதி மக்கள் ஒன்று சேர்ந்து மரத்தை வெட்டி அகற்றினர்.

    ஊட்டியில் பல்வேறு குடியிருப்புகளுக்கு அருகே தடுப்புச்சுவர்கள் இடிந்து விழுந்தன. ஒரு சில பகுதிகளில் வீடுகளின் சுவரும் இடிந்தது.

    உப்பட்டி, சேலக்குன்னாவில் வசித்து வரும் கூலித்தொழிலாளி சுசீலா என்பவரின் வீட்டின் பக்கவாட்டு சுவர், குந்தலாடி பூதானகுன்னுவில் உள்ள உதயகுமாரின் வீடு, பந்தலூர் பகுதியில் ஒரு வீடும் மழைக்கு சேதம் அடைந்தது.

    மழையுடன், கடும் குளிரும் நிலவி வருவதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×