search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தி.மு.க., காங்கிரஸ் கூட்டணியில் எந்த விதமான பிரச்சினையும் இல்லை-கார்த்திசிதம்பரம் எம்.பி
    X

    தி.மு.க., காங்கிரஸ் கூட்டணியில் எந்த விதமான பிரச்சினையும் இல்லை-கார்த்திசிதம்பரம் எம்.பி

    • இடைத்தேர்தலை அ.தி.மு.க. புறக்கணித்துள்ளது பெரும் வியப்பை அளிக்கிறது.
    • மாநில உரிமைகளை பறிக்கும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்.

    புதுக்கோட்டை:

    சிவகங்கை எம்.பி. கார்த்திசிதம்பரம் புதுக்கோட்டையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அ.தி.மு.க. புறக்கணித்துள்ளது பெரும் வியப்பை அளிக்கிறது. பா.ஜ.க. கூட்டணிக்கு மறைமுகமாக அ.தி.மு.க. ஆதரவு அளிக்கிறதோ என்று சந்தேகம் உள்ளது. நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் கூட அ.தி.மு.க. கூட்டணி கணிசமான வாக்குகளை அந்த தொகுதியில் பெற்றுள்ளது.

    ஒரு பெரிய அரசியல் கட்சி தேர்தல் நடத்தையில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று கூறுவது வேடிக்கையாக உள்ளது. தேர்தலை நடத்துவது இந்திய தேர்தல் ஆணையம். டெல்லியில் இருந்து அழுத்தம் அளித்து பா.ஜ.க.விற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று கூறியதால் தேர்தலை புறக்கணித்து உள்ளனரா என்ற சந்தேகம் உள்ளது.

    தமிழகத்தில் ஒத்தை சீட்டு கூட வாங்கலையா என்று கையை உயர்த்தி உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழிசை சவுந்தரராஜனிடம் கேள்வி கேட்டதாக நான் கருதுகிறேன். இந்தியா கூட்டணி கணிசமான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. நாடாளுமன்றத்தில் கண்டிப்பாக மசோதாக்கள் மீதான விவாதங்களில் பங்கு பெற்று வாதாடுவோம்.

    ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் இந்து கோவில்களை அறநிலையத்துறையில் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். புதிதாக பதவி ஏற்று உள்ளவர்கள் அறியாமையில் இது போன்ற கருத்துக்களை தெரிவிக்கின்றனர்.

    இந்து கோவில்கள், அறநிலையத்துறை அரசாங்கத்திடம் தான் இருக்க வேண்டும் . நீட் தேர்வில் வெளிப்படை தன்மை என்பது கிடையாது. தேர்வு நடந்த முறையில் வைத்து நான் சொல்கிறேன். எதன் அடிப்படையில் கருணை மதிப்பெண்கள் கொடுத்துள்ளனர்

    மாநில உரிமைகளை பறிக்கும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். இது தேவையில்லை. தி.மு.க., காங்கிரஸ் கூட்டணியில் எந்த விதமான பிரச்சினையும் இல்லை. சுமூகமாகத்தான் உள்ளது. கோயம்புத்தூரில் கூட நடைபெற்ற முப்பெரும் விழாவில் அனைத்து கட்சிகளும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளும் தலைவர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

    நாங்கள் இருவரும் பரஸ்பரமாக தான் உள்ளோம். எந்தவிதமான பனிப் போரும் கிடையாது. வரும் காலங்களிலும் இந்த கூட்டணி தொடரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×