search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இருளப்பபுரம் மீன் சந்தை தற்காலிகமாக செயல்பட அனுமதி
    X

    இருளப்பபுரம் மீன் சந்தை தற்காலிகமாக செயல்பட அனுமதி

    • இருளப்பபுரம் சந்தை தற்காலிகமாக செயல்பட அனுமதி வழங்கப்பட்டதாக தெரிகிறது.
    • சில வியாபாரிகள் சந்தைக்கு வந்து கடை அமைத்தனர்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் இருளப்பபுரம் பகுதியில் மீன் சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு காய்கறி வியாபாரமும் நடைபெற்று வருவதால் காலை முதல் மதியம் 1 மணி வரை இந்த மார்க்கெட் பகுதியில் கூட்டம் அதிகமாக இருக்கும். இதனால் நெருக்கடியாக உள்ளது போன்ற காரணங்களை கூறி மீன் மார்க்கெட்டை மாற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தபோது, வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை.

    இந்த நிலையில் கோர்ட்டு உத்தரவின் பேரில், மாநகராட்சி அதிகாரிகள் நேற்று மீன் மார்க்கெட்டை மாற்றுவதற்காக சென்றனர். அந்த இடம் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடம் என்றும், போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதால் மார்க்கெட்டை மாற்ற வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டுள்ளதாகவும் அவர்கள் கூறினர். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் அதிகாரிகள், ஜே.சி.பி. எந்திரம் மூலமாக வியாபாரிகள் கடை வைக்க முடியாத அளவிற்கு மணல்களை கிளறி விடும் நடவடிக்கையை எடுத்தனர். அவர்களுடன் வாக்குவாதம் செய்த வியாபாரிகள், தோண்டப்பட்ட குழிகளில் இறங்கி நின்று கோஷம் எழுப்பினர். தொடர்ந்து நடைபெற்ற பேச்சு வார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.

    இதனை தொடர்ந்து அங்கிருந்து புறப்பட்ட வியாபாரிகள், மாவட்ட கலெக்டர், மாநகராட்சி ஆணையாளர் மற்றும் துறை அதிகாரிகளை சந்திக்கப் போவதாக கூறினர். அதன்படி அவர்கள் அதிகாரிகளை சந்தித்து பேசினர். இதில் இருளப்பபுரம் சந்தை தற்காலிகமாக செயல்பட அனுமதி வழங்கப்பட்டதாக தெரிகிறது. அதன்பேரில் இன்று சில வியாபாரிகள் சந்தைக்கு வந்து கடை அமைத்தனர். இருப்பினும் கூட்டம் குறைவாகவே இருந்தது.

    கடை அமைத்துள்ள வியாபாரிகள் கூறுகையில், 60 ஆண்டுகளுக்கும் மேலாக சந்தை செயல்பட்டு வருகிறது. தற்காலிக அனுமதியை நிரந்தரமாக பெற முயன்று வருகிறோம். அரசு எங்கள் விசயத்தில் நல்ல முடிவை எடுக்கும் என்று நம்புகிறோம் என்றார்.

    Next Story
    ×