search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அம்மா உணவகங்கள் மீது மு.க.ஸ்டாலின் அக்கறை காட்டுவது ஏன்?-ஆர்.பி.உதயகுமார்
    X

    அம்மா உணவகங்கள் மீது மு.க.ஸ்டாலின் அக்கறை காட்டுவது ஏன்?-ஆர்.பி.உதயகுமார்

    • தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் அம்மா உணவகத்தை அடித்து உடைத்தனர்.
    • ஒரே சாதனை கடன் சுமையை தமிழக மக்கள் தலையில் சுமத்தியது.

    மதுரை:

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவருமான ஆர்.பி. உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    3 வேளையும், குறைந்த விலையில் ஏழை, எளியவர்கள், உழைக்கும் தொழிலாளர்கள் உள்ளிட்ட மக்கள் அனைவரும் வயி ராற சாப்பிட வேண்டும் என்ற உன்னத நோக்கத்தில், அம்மா 2013-ம் ஆண்டு அம்மா உணவங்களை தொடங்கி மலிவு விலையில் தரமான உணவு வழங்கினார்கள்.

    ஏழை, எளிய, நடுத்தர மக்கள், தொழிலாளர்கள் உள்ளிட்டோர் ஏகோபித்த ஆதரவு காரணமாக தமிழகம் முழுவதும் அம்மா உணவுகள் தொடங்கப்பட்டன.

    ஜெயலலிதாவை தொடர்ந்து எடப்பாடியார் ஆட்சியிலும், அம்மா உணவங்கள் தரமான, சுவையான உணவு மக்களுக்கு அளித்து வரப்பட்டன. குறிப்பாக கொரோனா பெரும் தொற்று காலகட்டத்தில் அனைத்து தொழில்களும் முடங்கிய போது, தமிழக முழுவதும் அம்மா உணவுகளுக்கு வருகை தரும் அனைவருக்கும் விலையில்லாமல் 3 வேளையும் உணவுகள் வழங்கப்பட்டது. இதை மக்கள் இன்னும் மறக்க வில்லை.

    அம்மா என்ற சொல்லை கேட்டாலே காதில் ஈயம் காய்ச்சி ஊற்றுவது போல் பதறும் இந்த விடியா தி.மு.க. அரசின் ஆட்சியாளர்கள், அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக ஆட்சிக்கு வந்த முதல் நாளில் இருந்தே தமிழக முழுவதும் அம்மா உணவகங்களை அடித்து நெருக்கியும், பணிபுரியும் பெண்கள் எண்ணிக்கையை 3-ல் ஒரு பங்காகக் குறைத்தும் படிப்படியாக அம்மா உணவகங்களுக்கு மூடு விழா நடத்தினர்.

    அம்மா உணவகங்களுக்கு வழங்கப்படும் உணவுப் பொருட்கள் 90 சதவீதம் குறைக்கப்பட்டது, பழுதடைந்த உபகரணங்கள் சீர் செய்யப்படவில்லை, சென்னையில் சுகாதாரத் துறை மற்றும் நகராட்சிக்கு இடம் தேவை என்று பல அம்மா உணவகங்கள் மூடப்பட்டன.

    உண்மை நிலை இவ்வாறு இருக்க, எதிர்வரும் சட்டமன்ற பொது தேர்தலை கருத்திற்கொண்டு, நிர்வாகத் திறனற்ற விடியா தி.மு.க. அரசின் முதலமைச்சர் கடந்த 19-ந்தேதி அன்று தேனாம்பேட்டை பகுதியில் உள்ள அம்மா உணவகம் ஒன்றில் ஆய்வு மேற்கொண்டு, தனது எக்ஸ் வளைதளத்தில் அம்மா உணவகங்களை மூடி விடுவோம் என எதிர்க்கட்சிகள் புரளிகளைக் கிளப்பியதாக முதலை கண்ணீர் வடித்துள்ளார். அம்மா உணவகங்கள் மீது திடீரென முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அக்கறை காட்டுவது ஏன்?

    தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் அமைச்சர் சேகர்பாபு, சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் 90 சதவீதம் முடிவடைந்துவிட்டது என்று, கடந்த 3 ஆண்டுகளாக மாற்றி மாற்றி ஒரே குரலில் பேசிய பொய்யை நம்பி, பருவ மழையின் போது பெய்த சிறு மழைக்கே சென்னையில் பல இடங்களில் தேங்கிய தண்ணீராலும், ஐந்து நாட்கள் மின்சாரம் இல்லாமலும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

    பருவமழை காலங்களில் இப்படி பொய் கூறி சென்னை மக்களை சிரமத்திற்கு உள்ளாக்கியவர் தான் இந்த சேகர் பாபு.

    இந்த விடியா தி.மு.க. அரசு செய்த ஒரே சாதனை, ஆட்சிக்கு வந்த 3 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில், சுமார் 3.50 லட்சம் கோடி அளவில் கடன் சுமையை தமிழக மக்கள் தலையில் சுமத்தியது தான்.

    இந்த 3.50 லட்சம் கோடி கடனில் எவ்வளவு மூலதனச் செலவு செய்திருக்கிறார்கள் என்று நிர்வாகத் திறனற்ற முதலமைச்சரும், சேகர்பாபுவும் தமிழக மக்களிடம் விளக்கத் தயாரா? தற்போது அமைச்சர் சேகர்பாபு தவறான தகவல்களை கூறி சூழ்நிலையை மடைமாற்ற பார்க்கிறார். இது தமிழக மக்களிடம் எடுபடாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×