search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    கண்டம் கடந்தும் பயணிக்கும் பாசம்!
    X

    கண்டம் கடந்தும் பயணிக்கும் பாசம்!

    • வெளிநாட்டிற்கு கொண்டு செல்லும் ஏர் கார்கோ பில் தொகை மட்டும் ₹32,000 வந்தது.
    • காசு பணம் கொடுத்து வாங்குறதுல ஒருக்காலும் அம்மாவோட பாசமும், அம்மாவோட கைப்பக்குவமும், அம்மா சமையல் ருசியும் இருக்காதும்மோன்னு என்னோட மவ அடிக்கடி சொல்லுவா..

    மகன்களுக்காக சிவகாசி நண்பனிடம் ஆன்லைனில் ஆர்டர் செய்த பட்டாசை வாங்க நெல்லை ஜங்ஷனுக்கு சென்றிருந்தேன்.

    பட்டாசு டெலிவரி எடுக்கும் லாரி புக்கிங் ஆபீஸ் அருகில் உள்ள தனியார் கொரியர் ஆபீசில் திரண்டிருந்த வழக்கத்திற்கு மாறான மக்கள் கூட்டம் லேசான வியப்பை தந்தது.

    கூட்டத்தில் பெரும்பாலானோர் அறுபதை நெருங்கி கொண்டிருந்த தலைமுறையினராக இருந்தனர்.

    கொரியர் ஆபீஸ் அருகில் உள்ள ஜெராக்ஸ் கடையில் விற்பனையாகும் முதியோர் உதவித்தொகை விண்ணப்பத்தை வாங்க வந்தவர்களாக இருப்பார்களோ என நினைத்த என் நினைப்பை சட்டென்று மாற்றிக் கொள்ள வைத்தது அவர்களின் தோரணையும், அங்கு நடந்து கொண்டிருந்த செயல்களும்.

    கூட்டத்தில் இருந்த அத்தனை பேரும் எனது ஊரின் சுற்று வட்டாரப் பகுதியைச் சேர்ந்த மத்திய, உயர்தர நடுத்தர குடும்பத்தைச் சார்ந்தவர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் ஆவார்கள்.

    கூட்டத்தில் பெரும்பாலானோர் அனைவரும் தாங்கள் கொண்டு வந்த அட்டைப் பெட்டி பார்சலோடு வரிசையில் காத்துக் கொண்டிருந்தனர்.

    சிலர் கொரியர் ஆபீசில் வாங்கிய அட்டைப்பெட்டியில் தாங்கள் கொண்டு வந்த அட்டைப் பெட்டியில் பொருட்களை அடுக்கி வைத்துக்கொண்டு பாதுகாப்பிற்காக மெலிதான பிளாஸ்டிக் பேப்பரால் அட்டைப்பெட்டியை பொதிந்து கொண்டிருந்தனர்.

    "அண்ணாச்சியோட பலசரக்கு கடையில மளிகை சாமான் வாங்கிட்டு வரும்போது காலி அட்டைப்பெட்டிய வாங்கிட்டு வாங்கன்னு சொன்னேன்..

    வீட்டில வைச்சு பார்சல் பண்ணிட்டு வந்திருந்தா பார்சலோட எடைய போட்டதும் அட்ரஸ எழுதி பணத்த கட்டிட்டு போயிருக்கலாம்.

    நான் சொல்லுறத என்னைக்கு தான் நீங்க கேட்டிருக்கிய. இங்க வந்து அறக்க பறக்க வாங்கிட்டு வந்த பொருட்கள ஏனோ தானோன்னு வைச்சு அடுக்க வேண்டியதா இருக்கு.." என ஒரு நடுத்தர வயது பெண்மணி தனது கணவரோடு பேசிக் கொண்டிருந்தார்.

    அப்போது வயது அறுபதை கடந்த பெரியவர் சற்று சங்கோஜத்தோடு என்னிடம் நெருங்கி வந்து தம்பி! என அழைத்தார்.

    இந்த அட்டைப் பெட்டியில் இந்த பொருட்களை எல்லாம் கொஞ்சம் அடுக்கி வைச்சு பார்சல் பண்ணி தந்துடுவீங்களா.! என கேட்டார்.

    அந்த பெரியவர் கொண்டு வந்த அட்டைப்பெட்டியில் ஒவ்வொரு பொருட்களாக அடுக்கத் துவங்கினேன்.

    ஜவுளிக்கடை கட்டைப் பையில் அடுக்கி வைத்திருந்த பட்டுச்சேலையையும், மெல்லிய ரோஸ் மற்றும் கிரே வண்ணத்தில் இருந்த பட்டு வேட்டிச் சட்டையை முதலில் வைத்து மீதமுள்ள பொருட்களை ஒவ்வொன்றாக அட்டைப் பெட்டியில் அடுக்கி வைக்கத் துவங்கினேன்.

    நடுத்தர அளவிலான காற்று புகாத பிளாஸ்டிக் கண்டெய்னர்களில் அதிரசம், அச்சு முறுக்கு, கைச்சுற்று முறுக்கு, முந்திரிக்கொத்து, பலகாரம், இட்லிப் பொடி, பருப்புப் பொடி, நார்த்தங்காய் ஊறுகாய், மோர் வத்தல் என நிறைய தின்பண்டங்களும், வறுத்து அரைத்த சாம்பார் பொடி, வத்தல் பொடி, மீன் குழம்பு பொடி வகையறாக்கள் போன்றவை இருந்தன.

    அதனுடன் சுடிதார், டி சர்ட் என வீட்டில் உடுத்தும் கேசுவல் டைப் உடைகளும் இருந்தன.

    தின்பண்டங்கள், துணி என கொண்டு வந்த அத்தனை பொருட்களையும் அடுக்கி வைத்து அட்டைப் பெட்டியை சுற்றி டேப் ஒட்டி பிளாஸ்டிக் பேப்பரால் பொதிந்து அதன் மீதும் டேப் ஒட்டி முடித்தேன்.

    அமெரிக்க தேச கலிபோர்னியா மாகாணத்திற்கு செல்லும் விலாசம் அது. யாருக்கு அனுப்புறீங்க இந்த பார்சலை என தெரிந்து கொள்ளலாமா? என அந்த பெண்மணியிடம் கேட்டேன்.

    என்னோட மகளுக்கு தான் அனுப்புறோம் தம்பி இந்த பார்சலை. மக, மருமொவன் ரெண்டு பேரும் அமெரிக்காவில் இருக்குதாவ! அவங்களுக்கு தான் அனுப்புறோம் தம்பி! என்ற தகவலை அந்த பெண்மணி சொன்னார்.

    அட்டைப் பெட்டியின் எடை கிட்டத்தட்ட 15 கிலோ அளவு இருக்கும்.

    வெளிநாட்டிற்கு கொண்டு செல்லும் ஏர் கார்கோ பில் தொகை மட்டும் ₹32,000 வந்தது.

    அட்டைப் பெட்டியில் இருக்கும் பட்டுப்புடவை மற்றும் அதிரச பண்ட வகையறாக்களின் மதிப்பு கிட்டத்தட்ட 25,000 ரூபாய்க்கு மேல் வரவே வராது.

    "சுண்டக்கா கால் பணம் சுமைக்கூலி முக்கால் பணம்" என்பதைப் போல 25,000 ரூபாய் பொருட்களை 32,000 ரூபாய் கொடுத்து வெளிநாட்டுக்கு அனுப்புகிறார்களே...

    ரொம்பச் சிக்கனமாக பார்த்து பார்த்துச் செலவு பண்ணும் முந்தைய தலைமுறையினரான அவர்களைப் பார்த்து மனதில் எழுந்த சந்தேகத்தை மெதுவாகக் கேட்டேன்.

    அம்மா!!! நம்ம நாட்டுக்காரங்க நிறைய பேர் இப்போ வெளிநாடுகளில் வேலை செய்வதால் வெளிநாட்டில் உள்ள ஷாப்பிங் மால்களில் எல்லாம் நம்மூரு ஊறுகாயில் இருந்து பொன்னி அரிசி, காய்கறி, சக்தி மசாலா பொடி, தின்பண்டங்கள் வகை என எல்லா பொருட்களுமே கிடைக்குது.

    பார்சலில் இருக்கும் பொருட்களின் விலையை விட அனுப்புற செலவு அதிகமாக இருக்குதே..

    இந்த பொருட்களை அங்கேயே வாங்கிக்க சொல்ல வேண்டியது தானே. ரெட்டை செலவு பண்ணி இங்கேயிருந்து அனுப்பணுமா? என அந்த தம்பதியரை பார்த்துக் கேட்டேன்.

    சற்று நேரம் அந்த பார்சலை உற்றுப் பார்த்து கொண்டிருந்த அந்த பெண்மணி மெதுவாக என்னைப் பார்த்து பேசத் துவங்கினார்கள்.

    மூணு அக்கா, நாலு அண்ணன்களோடு பெரிய குடும்பத்தில் பிறந்து வளர்ந்த எனக்கு ஒரு மகனும் ஒரு மகளும் தான் பிள்ளைங்க தம்பி.

    பள்ளிப் படிப்பை முடிச்சிட்டு பிள்ளைங்க ரெண்டு பேரும் கோயம்புத்தூர் என்ஜினியரிங் கல்லூரியில் தான் படிச்சாங்க.

    சனி, ஞாயிறு விடுமுறைன்னா மத்த புள்ளைங்க மாதிரி ஹாஸ்டலில் தங்காம என்னோட மக வெள்ளிக்கிழமை சாயங்காலம் பஸ்ஸ புடிச்சு இங்கே வந்துடுவா.

    சனி, ஞாயிறு முழுசும் வீட்டில் இருந்து படிக்குறத படிச்சிகிட்டு எழுதறத எழுதிக்கிட்டு மறுபடியும் அறக்கப் பறக்க ஓடுவா. ஒரு தடவை பஸ் லேட்டாயிடுச்சுன்னு சனிக்கிழமை காலையில பதினோரு மணிக்கு வீட்டுக்கு வந்தா.

    பசி தாங்காம காலையில ஆறு மணிக்கு நான் சுட்டு பாத்திரத்தில் வைச்சு லேசா காஞ்சி போயிருந்த இட்லிய வேக வேகமா சாப்பிட்டா.

    நேரமாயிடுச்சுல்லா மக்கா!! வரும் வழியில ஏதாவது ஓட்டலில் சாப்பிட்டு வந்திருக்கலாம் தானேன்னு கேட்டேன்.

    யம்மோ! நான் சனி, ஞாயிறு லீவுல இங்க வரதுக்கு காரணமே உன்னோட கையால நீ சமைக்குறத சாப்பிட தான்.

    ஆயிரம் சொல்லு ஒன்னோட கைப்பக்குவமும், ஒன்னோட சமையல் ருசியும் எந்த ஓட்டல் சாப்பாட்டிலும் கிடைக்காதுன்னு சொல்லுவா எம் புள்ள!

    அவ அப்படி சொல்லுறத கேக்கும்போது ரொம்ப சந்தோசமா இருக்கும் எனக்கு. அந்த ரெண்டு நாளும் எம்புள்ளைகளுக்கு புடிச்சதை பாத்து பாத்து சமைச்சு கொடுப்பேன்.

    படிப்புக்கு தகுந்த வேலை கிடைக்கும், நல்ல சம்பளம் கிடைக்கும், சீக்கிரம் முன்னேறி டலாமுன்னு இப்போ உள்ள புள்ளைங்க கண் காணாத தேசத்தில போய் வேலை பாக்குதுங்க.

    நல்ல நாளு, பண்டிகை நடக்கும்போது புள்ளைங்களுக்கு கொடுக்காம பண்டம் பலகாரத்தை ஆக்கி பெத்தவங்க எங்களாலும் இங்கிருந்து தனியா சாப்பிட முடியல.

    ஆக்குன பலகாரத்தை பிச்சி வாயில ஒரு துண்டு வைக்கும் போதே எம்மவளுக்கு இது பிடிக்குமே! புள்ள சாப்பிட்டாளோன்னு நெனைப்பு மனசுல வரும் போதே வாய்க்குள்ள இருக்குற பலகாரம் தொண்டைக்குள்ள இறங்காது.

    காசு, பணம் இருந்தா விரும்பியத வாங்கி வாய்க்கு ருசியா சாப்பிட்டு வயித்த நிறைச்சுக்கலாமுன்னு சொல்லுறவன் முட்டாப் பயலுவம்மோ.

    காசு பணம் கொடுத்து வாங்குறதுல ஒருக்காலும் அம்மாவோட பாசமும், அம்மாவோட கைப்பக்குவமும், அம்மா சமையல் ருசியும் இது எல்லாத்துக்கும் மேலா எங்கம்மையோட வாசமும் ஒருக்காலும் இருக்காதும்மோன்னு என்னோட மவ அடிக்கடி சொல்லுவா..

    அதான் தீபாவளிக்கு புள்ளைங்க சாப்பிடட்டுமேன்னு பலகாரம் செய்து அனுப்பி வைக்க வந்தோம் என சொல்லி பார்சலை அனுப்பி விட்டு பில்லை போட்டோ எடுத்து வாட்ஸ் அப்பில் தனது மகளுக்கு அனுப்பினார்கள்.

    அனுப்பி விட்டு இப்போ அங்கே ராத்திரி தம்பி. புள்ள தூங்கிட்டு இருப்பா. மெசேஜை முழிச்சதும் பார்த்துட்டு போன் பண்ணுவா என சொல்லி விட்டு பேசுவதை மேலும் தொடர்ந்தார்.

    பொருட்களோட விலையை விட பார்சல் அனுப்புற விலை அதிகம் தான். ஆனா தீபாவளி பண்டிகை நாளுல எம்புள்ள எங்கையால செஞ்ச பலகாரத்தையும், நான் எடுத்து கொடுத்த துணிய உடுத்துகிட்டு சந்தோசமா தீபாவளிய பண்டிகையை கொண்டாடுவதை வீடியோ காலில் பாக்கும்போது இந்த பார்சல் அனுப்புன பணம் பெருசா தெரியாது தம்பி.

    சுரேஸ்வரன் அய்யாப்பழம், (சில்வண்டு)

    ரொம்ப நன்றி தம்பி... கடவுளா பார்த்து உன்ன அனுப்பி வச்சிருக்காரு . நீ வரலைன்னா ரொம்ப சிரமப்பட்டு இருப்போம்... போயிட்டு வாறோம்!! என என்னிடம் சொல்லி விட்டு புறப்பட்டுச் சென்றார்கள்.

    சென்னை, திருச்சி, மதுரை, கோவை, சேலம், வேலூர், நாகர்கோவில் என தமிழகம் முழுவதும் இந்த சூழல் தான். வெளிநாடுகளில் வசிக்கும் தங்கள் பிள்ளைகள், பேரன் பேத்திகளுக்கு தீபாவளி துணிமணி, பண்டம் பார்சல்களை கொரியர் சென்டர்களில் வரிசையில் காத்துக் கிடந்து அனுப்பிய வண்ணம் உள்ளனர் பெற்றோர்.

    தீபாவளி இந்தியாவுல தான் பண்டிகையா கொண்டாடுறதா நாம நினைச்சுகிட்டு இருக்கோம். தீபாவளி உலகம் முழுவதும் கொண்டாடப்படும் ஒரு யுனிவர்சல் பண்டிகை.

    நேபாளம், இலங்கை, மியான்மர், சிங்கப்பூர், மலேசியா மற்றும் பிஜி போன்ற நாடுகளிலும் தீபாவளியை பொது விடுமுறை தினமாக அறிவிச்சு தீபாவளியை உற்சாகமாக கொண்டாடுறாங்க. அதனால் அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், மலேசியா, அரேபியா, ஐரோப்பியா என தொலைதூர நாடுகளில் இருக்கும் பிள்ளைகளுக்கு இங்குள்ள பெற்றோர்கள் பாசத்துடன் அனுப்பும் இந்த புத்தாடையும் பண்டமும், அவர்களுக்கு தீபாவளியை சொந்த ஊரில் கொண்டாடுவது போன்ற சந்தோசத்தை ஏற்படுத்தும்.

    பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் தீபாவளி பண்டம் செய்து கொடுத்த மனநிறைவு உண்டாகும்.

    பெற்றோர்- பிள்ளைகள் இடையே கண்டம் கடந்தும் பயணிக்கும் இந்த பாச உணர்வு தமிழர்களின் வாழ்வியல் கலாசாரத்தை பறைசாற்றி நிற்கிறது.

    தொடர்புக்கு,

    isuresh669@gmail.com

    Next Story
    ×