search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    மீனா மலரும் நினைவுகள்.... ரகசிய படுக்கை
    X

    மீனா மலரும் நினைவுகள்.... ரகசிய படுக்கை

    • படத்தின் டைரக்டர் ராஜேந்திரபாபு.
    • ஒரு நாள் என்னை தேடிய சுதீப் ஒரு வழியாக கண்டுபிடித்து விட்டார்.

    இப்பல்லாம் வெளிப்புற படப்பிடிப்புகள் நடக்கும் போது கொஞ்ச நேரம் ஓய்வு கிடைத்தாலும் உடனே கேரவேனுக்குள் சென்று குளு குளு ஏசியில் ஓய்வு எடுத்து கொள்ள முடியும்.

    ஆனால் அந்த காலத்தில் இந்த வசதி எதுவும் கிடையாது. ஒரு ஷாட் முடிந்து இன்னொரு ஷாட்டுக்கு எவ்வளவு நேரம் ஆனாலும் அதுவரை அங்கேயே ஏதாவது மரத்தடிகளில் இருப்போம். அனல் காற்று வீசும். வியர்வையில் மேக்கப் கூட கலைந்து போகும். ஆனால் வேறு வழி கிடையாது.

    வெட்கத்தைவிட்டு சொல்வதென்றால் பாத்ரூம் செல்ல கூட வசதி இருக்காது. மரங்களின் மறைவில் ஒதுங்கி இருக்கிறோம்.

    இந்த மாதிரி சிரமங்களை அனுபவித்த காலத்தில் ஒரு முறை வெளிநாட்டுக்கு சென்றிருந்த போது நாற்காலி ஒன்று என் கண்ணில் பட்டது.

    அந்த நாற்காலியை அமர நாற்காலியாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம். பின் பக்கம் சாந்ததால் சாய்வு நாற்காலியாகவும் பயன்படுத்தலாம். அதையே முன்பக்கம் சற்று இழுத்து போட்டால் ஒரு சிறிய கட்டில் போல் பயன்படுத்தவும் முடியும். பார்க்க நன்றாக இருந்தது. எனக்கு படப்பிடிப்பு நடக்கும் இடங்களில் ரொம்ப உதவியாக இருக்கும் என்று நினைத்து உடனே அதை வாங்கி விட்டேன். அதன் பிறகு எங்கு படப்பிடிப்புக்கு சென்றாலும் அந்த நாற்காலியையும் உடன் எடுத்து சென்று விடுவேன். எல்லோருக்கும் சாய்வு நாற்காலியில் நான் அமர்ந்து இருப்பது மட்டுமே தெரியும்.

    தமிழில் கமல்-ராதிகா ஜோடி நடித்த சிப்பிக்குள் முத்து படம் கன்னடத்தில் 'சுவாதி முத்து' என்ற பெயரில் தயாரானது. அந்த படத்தில் நானும் சுதீப்பும் ஜோடி. படத்தின் தயாரிப்பாளரும் அவர்தான்.

    அப்போது எனக்கு கன்னடம் சரளமாக பேச வராது. அதனால் டயலாக்குகளை முன்கூட்டியே வாங்கி படித்து பார்த்து புரிந்து கொள்வேன். படத்தின் டைரக்டர் ராஜேந்திரபாபு. அவர் பழைய நடிகை சுமித்ரா அவர்களின் கணவர். அவர் தமிழ் நன்றாகவே பேசுவார். அது எனக்கு கொஞ்சம் சவுகரியமாக இருந்தது. அவ்வப்போது அவரும் வசனங்களை சொல்லித் தருவார்.

    கமல்-ராதிகா நடித்த படத்தின் வாய்ப்பு கிடைத்ததே மகிழ்ச்சியாக இருந்தது. அதே நேரம் ராதிகா அவர்கள் ஏற்று நடித்த கதாபாத்திரம். அதில் எந்த குறையும் இல்லாமல் நடிக்க வேண்டும் என்ற பயமும் இருந்தது. இதனால் கூடுதல் கவனமாக இருந்தேன். ஷூட்டிங்குக்காக மைசூரு ஸ்ரீரங்க பட்டணத்தில் தங்கி இருந்தோம் அந்த படத்தின் டைரக்டர் ராஜேந்திர பாபு தான்.


    படப்பிடிப்பு காலை 7 மணிக்கு தான் தொடங்கும். ஆனால் அதிகாலை 4 மணிக்கே புரோடெக்சன் யூனிட்டை சேர்ந்தவர்கள் எங்களை எழுப்பி விடுவார்கள்.

    ஏன் சார்... 5 மணிக்கு எழுந்தால் போதுமே. ரெடியாகி 7 மணிக்கு வந்துவிடுவேன். இப்படி 4 மணிக்கே தூக்கத்தை கெடுக்கிறீங்களே என்பேன். ஆனாலும் அவர் விடவில்லை.

    முன்கூட்டியே எழுந்து செல்வதால் படப்பிடிப்பு தளத்தில் சும்மா இருக்கும் போது தூக்கம் வரும். நான் ஓய்வு கிடைக்கும் போது எனது நாற்காலியை எடுத்து சென்று மரங்களின் நிழலில் போட்டு கட்டில் போல் விரித்து போட்டு படுத்து விடுவேன்.

    அதுவும் யாருக்கும் தெரியாத படி ஏதாவது வேன்களுக்கு பின்னால் தான் மறைந்து படுத்து இருப்பேன். அந்த நேரத்தில் ஒரு குட்டித் தூக்கம் போட்டு விடுவேன்.

    இந்த ரகசியம் யாருக்கும் தெரியாது. ஒரு நாள் என்னை தேடிய சுதீப் ஒரு வழியாக கண்டுபிடித்து விட்டார். 'ஆஹா... இப்படியெல்லாம் நடக்குதா? என்று ஆச்சரியப்பட்டவர் அதன் பிறகு அவருக்கு ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் மீனா' உங்கள் நாற்காலிகம் மெத்தையை கொஞ்சம் கொடுங்களேன் என்பார்.

    அப்புறம் இது டைரக்டருக்கும் தெரிந்து விட்டது. அவரும் என்னம்மா மீனா எனக்கும் அந்த நாற்காலியை கொஞ்சம் தாயேன் என்று அவ்வப்போது கேட்டு வாங்கி கொள்வார். மொத்தத்தில் படப்பிடிப்பு ரொம்ப ஜாலியாகவே நடந்து முடிந்தது. ஸ்ரீரங்க பட்டணத்தில் இருந்து நானும் சென்னை பட்டணத்துக்கு திரும்பினேன்.

    படத்தின் வேலைகள் அனைத்தும் முடிந்து படம் வெளியானது. மிகப்பெரிய வெற்றிப் படமாகவும் அமைந்தது. கன்னடத்தில் சிறந்த படத்துக்கான பிலிம்பேர் விருதும் கிடைத்தது மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது.

    இன்னொரு சுவாரஸ்யத்துடன் அடுத்த வாரம் சந்திக்கிறேன்! பை... பை...

    (தொடரும்)


    'சிவப்புகண்' மீனா

    பேய்... இருக்கா...? இல்லையா...?

    நம்பவும் முடியவில்லை. நம்பாமலும் இருக்க முடியவில்லை. இன்று வரை இந்த குழப்பம் என்னிடம் இருகிறது.

    கேரள மாநிலத்தில் சோட்டானிக்கரையில் புகழ் பெறற தேவி கோவில் உள்ளது. அங்கு நான் பலமுறை போய் இருக்கிறேன். அங்கு தன்னிலை மறந்து ஆகரோஷமாக பேய் பிடித்ததாக ஆடும் பலரை பார்த்து இருக்கிறேன்.

    இப்போது திடீர் என்று நான் இந்த 'பேய்' பற்றி பேச காரணம் என்றார் 'ஷாக்' என்ற தமிழ் படத்தில் நானும் பிரசாந்தும் ஜோடியாக நடித்தோம். அந்த படத்தை தயாரித்ததும் பிரசாந்தின் தந்தை தியாகராஜன் சார். என்னை குழந்தை பருவத்திலேயே பார்த்தவர் அவர்.

    சிவாஜி சாரின் நெஞ்சங்கள் படத்தில் நான் குழந்தை நட்சத்திரமாக நடித்த போது தியாகராஜன் சார்தான் வில்லன். அவர்தான் என்னை கடத்தி தூக்கி செல்வார். என்னிடம் ரொம்பவே பாசமாக இருப்பார்.

    ஷாக் படத்தில் நான் பேய் பிடித்து கண்ணை உருட்டி, மிரட்டலாக நடிக்கணும். ரொம்ப வித்தியாசமான பாத்திரம்.

    கண் சிவந்து இருக்க வேண்டும். அதற்காக கண்ணில் கிளிசரின் அடிக்கடி நிறைய போட்டார்கள். கண் சிவந்தது. ஆனால் பெருகி வரும் கண்ணீரை எப்படி தவிர்ப்பது? பொதுவாக அழுது நடிக்கும் காட்சிகளில் கண்ணீரை வரவளைப்பதறகாக கிளிசரின் போட்டுக் கொள்வது உண்டு.

    ஆனால் இந்த படத்தில் கண் கடுஞ்சிவப்பாக எப்போதும் இருக்க வேண்டும் என்பதற்காக கிளிசரினை அதிகமாக கண்ணில் போட்டதால் கண்ணீரும் அதிகமாக பெருகியது. அவ்வப் போது கேமராவில் இருந்து லேசாக திரும்பி கண்ணீரை துடைத்து விட்டு நடிப்பேன்.

    உண்மையில் சில நேரங்களில் அழுகை காட்சிக்கு எனக்கு கிளிசரினே தேவைப்பட்டதில்லை. காட்சிகளை உள்வாங்கி அதே உணர்வுடன் நடித்தால் தானாகவே அழுகை வந்து விடும். ஆனால் எனக்கு தான் பலர் மத்தியில் கண்ணீர் விட்டு அழுவதற்கு ஒரு மாதிரியாக இருக்கும.

    இந்த ஷாக் படத்தில் என் கண்களை பார்த்து சிவப்பு கண் மீனா என்றே அப்போது கூப்பிடுவார்கள்.

    Next Story
    ×