search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    நியூசிலாந்து அணிக்கு இந்தியா பதிலடி கொடுக்குமா? 2-வது டெஸ்ட் நாளை தொடக்கம்
    X

    நியூசிலாந்து அணிக்கு இந்தியா பதிலடி கொடுக்குமா? 2-வது டெஸ்ட் நாளை தொடக்கம்

    • இரு அணிகளும் நாளை மோதுவது 64-வது டெஸ்டாகும்.
    • இதுவரை நடந்த 63 போட்டியில் இந்தியா 22-ல் நியூசிலாந்து 14-ல் வெற்றி பெற்றுள்ளன.

    புனே:

    டாம் லாதம் தலைமையிலான நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

    இரு அணிகள் இடையேயான 3 டெஸ்ட் தொடரில் பெங்களுரூவில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் அதிர்ச்சிகரமாக தோற்றது. இந்த தோல்வியால் 0-1 என்ற கணக்கில் பின்தங்கியுள்ளது.

    இந்தியா-நியூசிலாந்து மோதும் 2-வது டெஸ்ட் போட்டி புனேயில் நாளை (24-ந் தேதி) தொடங்குகிறது.

    பெங்களுரூ டெஸ்டில் இந்திய அணி 46 ரன்னில் சுருண்டது மிகவும் மோசமான நிலையாகும். முதல் டெஸ்டில் ஏற்பட்ட தோல்விக்கு பதிலடி கொடுத்து டெஸ்ட் தொடரை சமன் செய்யுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    நாளைய இந்திய அணியில் மாற்றம் இருக்கும். சுப்மன்கில் உடல் தகுதி பெற்றதால் இடம் பெறுகிறார். இதனால் கே.எல். ராகுல் அல்லது சர்பராஸ் கான் நீக்கப்படலாம். முதல் டெஸ்டில் கே.எல். ராகுல் பேட்டிங் சிறப்பாக இல்லை. அதே நேரத்தில் சர்பராஸ் கான் சதம் (150 ரன்) அடித்து முத்திரை பதித்தார்.

    முதல் டெஸ்டில் ரிஷப் பண்ட்டுக்கு காலில் காயம் ஏற்பட்டது. இதனால் அவர் கீப்பிங் செய்யவில்லை. அதே நேரத்தில் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டார். அவர் முழு உடல் தகுதியுடன் இருந்தால் மட்டுமே விளையாடுவார். ரிஷப்பண்ட் ஆட முடியாமல் போனால் துருவ் ஜூரலுக்கு வாய்ப்பு கிடைக்கும். முகமது சிராஜ் பந்து வீச்சு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. இதனால் அவர் இடத்தில் ஆகாஷ் தீப் இடம் பெறுவாரா? என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.

    உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் இறுதிப்போட்டிக்கு நுழைய இந்த டெஸ்டில் இந்திய அணி வெல்ல வேண்டும். இதனால் வீரர்கள் அனைவரும் முழு திறமையை வெளிப்படுத்துவது அவசியமாகும்.

    நியூசிலாந்து அணி இந்த டெஸ்டிலும் இந்திய அணியை வீழ்த்தி தொடரை வெல்லும் ஆர்வத்துடன் இருக்கிறது. அந்த அணி இந்திய மண்ணில் 36 ஆண்டுகளுக்கு பிறகு டெஸ்டில் வெற்றியை பெற்று சாதித்தது. முன்னாள் கேப்டன் வில்லியம்சன் காயத்தில் இருந்து குணமடையாததால் 2-வது டெஸ்டிலும் ஆடவில்லை.

    பெங்களூரு டெஸ்டில் நியூசிலாந்து அணியின் பேட்டிங்கில் ரச்சின் ரவீந்தரா, கான்வே, வில்யங் ஆகியோரும் பந்து வீச்சில் வில்லியம் ஓ ரூர்க், சவுத்தி, ஹென்றி, அஜாஸ் படேல் ஆகியோரும் சிறப்பாக செயல்பட்டனர்.

    இரு அணிகளும் நாளை மோதுவது 64-வது டெஸ்டாகும். இதுவரை நடந்த 63 போட்டியில் இந்தியா 22-ல் நியூசிலாந்து 14-ல் வெற்றி பெற்றுள்ளன. 27 டெஸ்ட் டிரா ஆனது.

    நாளைய டெஸ்ட் காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. ஸ்போர்ட்ஸ் 18 சேனலில் இந்தப் போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

    Next Story
    ×