search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    கடைசி டெஸ்ட்.. 174 ரன்னில் நியூசிலாந்து ஆல் அவுட்.. இந்தியாவுக்கு 147 ரன்கள் வெற்றி இலக்கு
    X

    கடைசி டெஸ்ட்.. 174 ரன்னில் நியூசிலாந்து ஆல் அவுட்.. இந்தியாவுக்கு 147 ரன்கள் வெற்றி இலக்கு

    • நியூசிலாந்து அணி 2-வது இன்னிங்சில் 174 ரன்னில் சுருண்டது.
    • இந்திய தரப்பில் ஜடேஜா 5 விக்கெட்டும் அஸ்வின் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மும்பையில் உள்ள வான்கடே ஸ்டேடியத்தில் தொடங்கியது.

    முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி, வில் யங் (71 ரன்), டேரில் மிட்செல் (82 ரன்) ஆகியோரின் அரைசதத்தின் உதவியுடன் முதல் இன்னிங்சில் 235 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது. இந்தியா தரப்பில் ரவீந்திர ஜடேஜா 5 விக்கெட்டும், வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி சுப்மன் கில், ரிஷப் பண்ட்டின் அரை சதத்தால் 263 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. நியூசிலாந்து அணி தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் அஜாஸ் பட்டேல் 5 விக்கெட்டும், மேட் ஹென்றி, கிளென் பிலிப்ஸ், இஷ் சோதி தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

    28 ரன் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்து இருந்தது. முதல் ஓவரிலேயே டாம் லாதம் (1 ரன்) ஆகாஷ் தீப் பந்து வீச்சில் போல்டு ஆனார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் டிவான் கான்வே 22 ரன்னிலும், ரச்சின் ரவீந்திரா 4 ரன்னிலும் விக்கெட்டை பறிகொடுத்தனர்.

    4-வது விக்கெட்டுக்கு டேரில் மிட்செல், வில் யங்குடன் கைகோர்த்தார். முதல் இன்னிங்சில் நிலைத்து நின்று ஆடிய டேரில் மிட்செல் (21 ரன்) தாக்குப்பிடிக்கவில்லை. அடுத்து வந்த டாம் பிளன்டெல் (4 ரன்), கிளென் பிலிப்ஸ் (26 ரன்), சோதி (8 ரன்) வந்த வேகத்திலேயே நடையை கட்டினர். தாக்குப்பிடித்து நின்று 9-வது அரைசதம் அடித்த வில் யங் 51 ரன்னில் (100 பந்து, 2 பவுண்டரி, ஒரு சிக்சர்) அஸ்வின் பந்து வீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார். மேட் ஹென்றி 10 ரன்னில் ரவீந்திர ஜடேஜா பந்து வீச்சில் போல்டு ஆனார்.

    நேற்றைய ஆட்டம் முடிவில் நியூசிலாந்து அணி 43.3 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 171 ரன்கள் எடுத்திருந்தது. அஜாஸ் பட்டேல் 7 ரன்னுடன் களத்தில் இருக்கிறார். இந்திய அணி தரப்பில் சுழற்பந்து வீச்சாளர்கள் ரவீந்திர ஜடேஜா 4 விக்கெட்டும், அஸ்வின் 3 விக்கெட்டும் சாய்த்தனர்.

    இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் அஜாஸ் படேல் 8 ரன்னில் அவுட் ஆனார். இதனால் நியூசிலாந்து அணி 2-வது இன்னிங்சில் 174 ரன்னில் சுருண்டது. இந்திய தரப்பில் ஜடேஜா 5 விக்கெட்டும் அஸ்வின் 3 விக்கெட்டும் வீழ்த்தினர். இந்திய அணி 147 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடி வருகிறது.

    Next Story
    ×