search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    டி20 கிரிக்கெட்டில் 344 ரன்கள்.. இமாலய சாதனை படைத்த ஜிம்பாப்வே
    X

    டி20 கிரிக்கெட்டில் 344 ரன்கள்.. இமாலய சாதனை படைத்த ஜிம்பாப்வே

    • அடுத்த டி20 உலகக் கோப்பை தொடர் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ளது.
    • ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

    ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடர் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. சமீபத்தில் நடந்த டி20 உலகக் கோப்பையை இந்திய அணி வென்று சாதனை படைத்தது. இதனை தொடர்ந்து அடுத்த டி20 உலகக் கோப்பை தொடர் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ளது.

    இந்த தொடரில் கலந்து கொள்வதற்காக பல அணிகள் குவாலிபையர் சுற்றில் விளையாடி வருகின்றன. அந்த வகையில் ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த அணிகள் தற்போது விளையாடி வருகின்றன. அதில் ஜிம்பாப்வே, கென்யா, ருவாண்டா, காம்பியா, மொசாம்பிக், சீஷெல்ஸ் ஆகிய அணிகள் தங்களுக்குள் மோதுகின்றன.

    இதில் இன்று நடந்த போட்டியில் ஜிம்பாப்வே மற்றும் காம்பியா அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி துவக்க வீரர்களாக களமிறங்கிய ப்ரியன் பென்னெட் மற்றும் மருமனி முறையே 50 மற்றும் 62 ரன்களை விளாசினர். இதைத் தொடர்ந்து களமிறங்கிய மேயர்ஸ் 12 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    அடுத்து வந்த கேப்டன் ராசா அதிரடியாக ஆடி 43 பந்துகளில் 133 ரன்களை விளாசினார். இதில் 15 சிக்சர்கள், 7 பவுண்டரிகள் அடங்கும். இவரைத் தொடர்ந்து வந்த ரியான் பர்ல் 25 ரன்களும், மடான்டே 53 ரன்களையும் விளாசினர். இதன் மூலம் ஜிம்பாப்வே அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 344 ரன்களை விளாசியது. இது டி20 கிரிக்கெட்டில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோராக மாறியது.

    இமாலய இலக்கை துரத்திய காம்பியா அணி 54 ரன்களுக்குள் சுருண்டது. இதனால் ஜிம்பாப்வே அணி 290 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஜிம்பாப்வே தரப்பில் கரவா மற்றும் மவுட்டா தலா மூன்று விக்கெட்டுகளையும், மத்வீர் இரண்டு விக்கெட்டுகளையும் பர்ல் 1 விக்கெட் வீழ்த்தினர்.

    Next Story
    ×