search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் சாரல் மழை
    X
    நெல்லையில் பெய்த சாரல் மழையால் குடை பிடித்து சென்றவர்களை படத்தில் காணலாம்.

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் சாரல் மழை

    • நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று மழை பெய்தது. தூத்துக்குடி கடலோர பகுதியில் இன்று அதிகாலை முதலே மழை பெய்தது.
    • காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தூத்துக்குடி துறைமுகத்தில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டிருந்தது.

    நெல்லை:

    தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று அதிகாலை 3.30 மணியில் இருந்து 4.30 மணிக்குள் இலங்கையின் மட்டக்களப்பு - திரிகோணமலை இடையே கரையை கடந்ததாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    இதன் காரணமாக கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் மற்றும் தென்காசி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் எனவும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்தது.

    இந்நிலையில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று மழை பெய்தது. தூத்துக்குடி கடலோர பகுதியில் இன்று அதிகாலை முதலே மழை பெய்தது. காலை 9 மணிக்கு பின்னர் மாநகர பகுதி மற்றும் மாவட்டத்தின் பல இடங்களிலும் சாரல் மழை பெய்தது.

    நெல்லை மாநகரில் அதிகாலை முதலே வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. அதிகாலையில் சாரலாக மழை பெய்தது. காலை 10 மணிக்கு டவுன் வண்ணார்பேட்டை, பாளையங்கோட்டை உள்ளிட்ட மாநகர பகுதி முழுவதும் குளிர்ந்த காற்றுடன் சாரல் மழை பரவலாக பெய்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தூத்துக்குடி துறைமுகத்தில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டிருந்தது. மீன்வளத்துறை எச்சரிக்கை காரணமாக தூத்துக்குடியில் கடந்த 2 நாட்களாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இன்று 3-வது நாளாக 5 ஆயிரம் விசைப்படகு மீனவர்கள் இன்று மீன் பிடிக்க செல்லவில்லை. இதனால் மீன்பிடி துறைமுகத்தில் மற்றும் கடற்கரை பகுதியில் 260 விசைபடகுகள் நிறுத்தப்பட்டிருந்தது.

    நெல்லை மாவட்ட மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என ராதாபுரம் மீன்வளத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

    இதன் காரணமாக கூத்தங்குழி, உவரி, இடிந்தகரை, கூட்டப்புளி, கூடுதாழை உள்ளிட்ட 10 மீனவ கிராமங்களை சேர்ந்த 7 ஆயிரம் நாட்டுப்படகுகள் இன்று கடலுக்கு செல்லவில்லை.

    இதே போல் தென்காசி மாவட்டத்திலும் தென்காசி, ஆலங்குளம், குற்றாலம், செங்கோட்டை, பாவூர்சத்திரம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் இன்று சாரல் மழை பெய்தது.

    Next Story
    ×