search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஏ.டி.எம்.மை உடைத்து ரூ.14.5 லட்சம் கொள்ளை: வடமாநில கொள்ளை கும்பலை பிடிக்க 10 தனிப்படைகள் அமைப்பு
    X

    ஏ.டி.எம்.மை உடைத்து ரூ.14.5 லட்சம் கொள்ளை: வடமாநில கொள்ளை கும்பலை பிடிக்க 10 தனிப்படைகள் அமைப்பு

    • கடந்த 5-ந் தேதி ஓசூர் ஆவலப்பள்ளி அட்கோவில் ஒரு ஏ.டி.எம். மையத்தில் கொள்ளையடிக்க முயற்சி நடந்தது.
    • டெல்லி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த கொள்ளையர்களாக இருக்கலாம் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பாகலூர் சாலையில் ஐ.டி.பி.ஐ. வங்கியின் ஏ.டி.எம் மையம் இயங்கி வருகிறது. நேற்று முன்தினம் அதிகாலை 3 மணி முதல் இரவு வரை அந்த ஏ.டி.எம். எந்திரத்தில் பண பரிவர்த்தணை நடைபெறாததால் சந்தேகம் அடைந்த வங்கி ஊழியர்கள் அங்கு சென்று பார்த்தனர்.

    அப்போது ஏ.டி.எம். எந்திரத்தை கியாஸ் வெல்டிங் மூலமாக உடைத்து அதில் இருந்த ரூ.14.50 லட்சத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.

    இதே போல கடந்த 5-ந் தேதி ஓசூர் ஆவலப்பள்ளி அட்கோவில் ஒரு ஏ.டி.எம். மையத்தில் கொள்ளையடிக்க முயற்சி நடந்தது. இது தொடர்பாக ஓசூர் அட்கோ போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இதற்கிடையே நேற்று முன்தினம் கர்நாடக மாநிலம் பெல்லந்தூர் மற்றும் ஹாசன் மாவட்டங்களில் 2 ஏ.டி.எம். மையங்களில் எந்திரத்தை உடைத்து ரூ.20 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, நேற்று ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் 2 ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியின் ஏ.டி.எம். எந்திரங்களை கொள்ளை கும்பல் உடைத்து ரூ.25 லட்சத்தை கொள்ளையடித்து சென்றனர்.


    இந்த கொள்ளை நடந்த ஏ.டி.எம். எந்திரங்களில் பதிவான கைரேகைகளை வைத்து 3 மாநில போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் ஒரே கும்பலை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது. வட மாநிலத்தில் அரியானா, கர்நாடகத்தில் கல்புர்க்கி, மற்றும், டெல்லி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த கொள்ளையர்களாக இருக்கலாம் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இதனிடையே ஓசூரில் ஏ.டி.எம். கொள்ளை நடந்த இடத்தினை, சேலம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. உமா நேற்று மாலை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து விசாரணை நடத்தினார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஓசூரில் நடந்த ஏ.டி.எம். கொள்ளை தொடர்பாக 40 போலீசார் கொண்ட, 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் குற்றவாளிகள் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த கொள்ளை தொடர்பான முழு தகவல்களையும் மாவட்ட , எஸ்.பி.பத்திரிகையாளர்களுக்கு, நாளை(9-ம் தேதி) தெரிவிப்பார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×