search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    செங்கிப்பட்டி காசநோய் மருத்துவமனை அகற்றப்படும் என கூறுவது முற்றிலும் பொய்: அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா
    X

    செங்கிப்பட்டி காசநோய் மருத்துவமனை அகற்றப்படும் என கூறுவது முற்றிலும் பொய்: அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா

    • தஞ்சாவூரில் அமைந்துள்ள ஐ.டி. பார்க்கின் கட்டுமான பணிகள் முழுமையாக முடிவடைந்துள்ளது.
    • ஐ.டி. பார்க்கால் டெல்டா பகுதியை சேர்ந்த படித்த ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

    தஞ்சாவூா்:

    தஞ்சாவூர் புதிய பஸ் நிலையம் அருகே மேலவஸ்தாசாவடியில் 55000 சதுர அடியில் ரூ.30.50 கோடி மதிப்பில் டைடல் நியோ ஐ.டி. பார்க் கட்டப்பட்டு வருகிறது. இதற்காக கடந்த ஆண்டு கட்டுமான பணிக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து பணிகள் விறுவிறுப்பாக நடந்து வந்து முடிவடைந்துள்ளது.

    இன்று ஐ.டி. பார்க்கில் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அவர்களுக்கு பணிகள் முடிவடைந்த விவரம் உள்ளிட்டவை குறித்து கலெக்டர் தீபக்ஜேக்கப் எடுத்துக் கூறினார்.

    இதையடுத்து அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான சிறப்பான ஆட்சியில் இளைஞர்களுக்கு அதிகளவில் வேலைவாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கும் வகையில் பல்வேறு தொழில் நிறுவனங்கள் தொடங்கப்பட்டு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டு வருகிறது. புதிய புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுகின்றன. தஞ்சாவூரில் அமைந்துள்ள ஐ.டி. பார்க்கின் கட்டுமான பணிகள் முழுமையாக முடிவடைந்துள்ளது. இன்னும் சில வாரங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். இந்த ஐ.டி. பார்க்கால் டெல்டா பகுதியை சேர்ந்த படித்த ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

    இந்த ஐ.டி. பார்க்கில் ஏற்கனவே 2 நிறுவனங்கள் முன்பதிவு செய்துவிட்டன. இன்னும் 7 நிறுவனங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

    மேலும் தஞ்சை பகுதியில் புதிதாக சிப்காட் வரவுள்ளது. அதன் மூலமும் ஏராளமானோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். செங்கிப்பட்டி பகுதியில் உள்ள காசநோய் மருத்துவமனை அகற்றப்படும் எனக் கூறுவது முற்றிலும் உண்மைக்கு புறமான தகவல். இந்த பொய் தகவல்களை பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

    மலைவாழ் மக்களுக்காக ஊட்டி பகுதியில் ஐ.டி. சர்வீஸில் உள்ளவர்களுக்காக ஒரு புதிய தொழில் சார்ந்த நிறுவனம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும். இது இந்தியாவிலேயே வேறு எங்கும் இல்லை.

    பல லட்சம் கோடி அளவுக்கு தமிழ்நாட்டில் முதலீட்டை கொண்டு வந்துள்ளோம். இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் தொழில் தொடங்க அதிக அளவில் நிறுவனங்கள் முன் வருகின்றன. அதற்கு முதலமைச்சரின் மகத்தான ஆட்சியே காரணமாகும். தொழில் தொடங்க முன்வருபவர்கள் முதலில் கதவை தட்டுவது முதலமைச்சரின் வீட்டு கதவை தான்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×