search icon
என் மலர்tooltip icon

  தமிழ்நாடு

  அடுத்தடுத்த படுகொலைகள் - கேள்விக்குள்ளாகும் சட்டம் ஒழுங்கு! - அதிரடி காட்டுவாரா அருண்?
  X

  அடுத்தடுத்த படுகொலைகள் - கேள்விக்குள்ளாகும் சட்டம் ஒழுங்கு! - அதிரடி காட்டுவாரா அருண்?

  • ஆளும் கட்சியினர் பதில் அளிப்பது தொடர்கதை தான்.
  • செவி கொடுக்கப்படாத பிரச்சினைகள் பூதாகாரமாக வெடிக்கும்.

  தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று எதிர்க்கட்சி தலைவர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர். ஆளும் கட்சிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஏராளமான குற்றச்சாட்டுகளை சுமத்துவதும், அதற்கு ஆளும் கட்சியினர் பதில் அளிப்பதும் தொடர்கதை தான்.

  தீர்க்கப்படாமல் இருக்கும் மக்கள் பிரச்சினை, ஆர்ப்பாட்டம் முதலானவை அரசு இயந்திரத்தில் சகஜமான ஒன்றுதான். இதற்கான அளவீட்டில் மாறுபாடு ஏற்பட்டாலோ, பிரச்சினை அல்லது போராட்டத்தின் வீரியம் அதிகரித்தாலோ சட்டம் ஒழுங்கு பிரச்சினையாக அது உருவெடுக்கும். சமயங்களில் செவி கொடுக்கப்படாத பிரச்சினைகள் பூதாகரமாக வெடிக்கும்.

  அந்த வகையில், உளவுத்துறை, காவல் துறை, சட்டம் ஒழுங்கு என அரசு இயந்திரத்தில் ஏதோ ஒன்றின் தோல்வியால் கடந்த வாரம் தேசிய கட்சி ஒன்றின் மாநிலத் தலைவர் அவரது வீட்டு வாசலிலேயே படுகொலை செய்யப்பட்ட கோர சம்பவம் அரங்கேறியது.

  ஸ்விக்கி, சொமாட்டோ ஊழியர்களை போன்ற உடை அணிந்து, இருசக்கர வாகனங்களில் வந்த 6பேர் நின்று கொண்டிருந்த பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங்-ஐ சரமாரியாக வெட்டினர். அக்கம் பக்கத்தினர் அங்கு வருவதற்குள் அந்த கும்பல் வந்த வேகத்தில் அங்கிருந்து தப்பிச் சென்றது. கடுமையான தாக்குதலுக்கு ஆளான ஆம்ஸ்ட்ராங் உடனே உயிரிழந்தார்.


  ஆள் நடமாட்டம் அதிகம் உள்ள சென்னையின் மத்திய பகுதியில், அதுவும் பொது வெளியில் வைத்து ஒரு கட்சியின் மாநில தலைவர் கொல்லப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. நிலைமை கைமீறி செல்லும் தருவாயில், காவல் துறையினர் இந்த சம்பவத்தில் அதிரடி நடவடிக்கையை துவங்கிவிட்டதாக தெரிவித்தனர்.

  மேலும், ஒரே இரவில் இந்த விவகாரத்தில் தொடர்புடைய கைது நடவடிக்கைகளும் அரங்கேறின. இதனிடையே ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு இரங்கல் தெரிவித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழகத்தில் கடந்த 31 நாட்களில் மட்டும் 131 படுகொலைகள் நடந்திருப்பதாக குற்றம்சாட்டியுள்ளார். மேலும், தமிழ்நாட்டில் அரசியல் கட்சியின் மாநில தலைவருக்கே பாதுகாப்பு இல்லையெனில், சாதாரண மக்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது என்றும் கேள்வியெழுப்பினார்.

  முன்னதாக கடந்த மே மாதத்தில் நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் அவரது வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தில் சடலமாக மீட்கப்பட்டார். இது தமிழகம் முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கு குறித்த விசாரணையில் இதுவரை எவ்வித தகவலும் கிடைக்காமல் போலீசார் திணறி வருகின்றனர்.

  இதுதவிர நெல்லையில், பிரபல ரவுடி தீபக் ராஜா அவரது காதலி கண் முன் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக சேலம் மாவட்டத்தில் அதிமுக பிரமுகர் சண்முகம் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தீவிர ஆதரவாளராக கருதப்பட்டவர் சண்முகம் என்பது குறிப்பிடத்தக்கது.

  கடந்த மூன்று மாதங்கள் வரை பின்னோக்கி செல்லும்போது இதே போன்று மேலும் சில படுகொலை சம்பவங்கள் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளன. படுகொலை தவிர கள்ளச்சாராய விவகாரம் மாநிலத்தில் உயிரிழப்பு எண்ணிக்கையை கூட்டுவதில் பங்கு வகித்தது. அரசியல் படுகொலைகள், கள்ளச்சாராயம் என அடுத்தடுத்த குற்ற சம்பவங்களே தமிழகத்தின் சட்டம் ஒழுங்கை கேள்விக்குறியாக்கி உள்ளன.
  புதுப்புது பிரச்சினைகள் எழும்போதெல்லாம் மாநிலம் முழுக்க அரசு நிர்வாக அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகள் தொடர்ச்சியாக மாற்றப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், தமிழகத்தை உலுக்கிய ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்தை தொடர்ந்து சென்னை மாநகர காவல் ஆணையர் மாற்றப்பட்டுள்ளார். மேலும், தமிழக சட்டம் ஒழுங்கு பிரச்சினை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

  அதிகாரிகள் மாற்றம், அவசர ஆலோசனை மற்றும் புது உத்தரவுகளால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை சீர்செய்யப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நம்புகிறார். பொது மக்களும் இதே நம்பிக்கை கொண்டுள்ள நிலையில், இந்த பிரச்சினைக்கு தீர்வு எட்டப்படுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

  Next Story
  ×