search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 61 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு
    X

    ஒகேனக்கல்லில் ஐந்தருவியில் மூழ்கும் நிலையில் செந்நிறத்தில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்வதை படத்தில் காணலாம்.

    ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 61 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு

    • சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்கவும் பரிசல் பயணம் செய்யவும் விதிக்கப்பட்ட தடையானது தொடர்ந்து இன்று 5-வது நாளாக நீடிக்கிறது.
    • காவிரி ஆற்றிற்கு வரும் நீர் வரத்து மேலும் அதிகரிக்கக் கூடும் என்பதால் தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    தருமபுரி:

    கர்நாடகா அணைகளில் இருந்து திறக்கப்பட்ட நீரால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 61 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.

    கர்நாடகா, கேரளா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளதால் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளான குடகு, வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

    இதன் காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி அணை தனது முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதையடுத்து கபினி, கிருஷ்ணராஜ சாகர் ஆகிய 2 அணைகளில் இருந்து இன்று நீர் திறப்பு சற்று சரிந்து மொத்தம் 47 ஆயிரம் கனஅடி அளவில் உபரி நீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது.

    தொடர்ந்து காவிரி ஆற்றில் 40 ஆயிரம் கனஅடிக்கு மேல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், கர்நாடகா-தமிழக எல்லையான பிலிக்குண்டுலு வழியாக தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்து கொண்டிருக்கிறது.

    இதனைத்தொடர்ந்து தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்து நேற்று வினாடிக்கு 50 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது.

    இந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து இன்று காலை 6 மணி நிலவரப்படி 61 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. இதனால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மெயின் அருவி, ஐந்தருவி, சினி பால்ஸ் என காவிரி ஆற்றில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது. மேலும் மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதை மூழ்கடித்தவாறு தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது. கர்நாடகா அணைகளில் இருந்து அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. எனவே ஒகேனக்கலுக்கு நாளை காலை நேரத்திற்குள் நீர்வரத்து மேலும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருப்பதால் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்கவும் பரிசல் பயணம் செய்யவும் விதிக்கப்பட்ட தடையானது தொடர்ந்து இன்று 5-வது நாளாக நீடிக்கிறது.

    கர்நாடகா அணைகளில் இருந்து தொடர்ந்து தண்ணீர் திறப்பு அதிகரித்து உள்ளதால், காவிரி ஆற்றிற்கு வரும் நீர் வரத்து மேலும் அதிகரிக்கக் கூடும் என்பதால் தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    Next Story
    ×