search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சற்று அதிகரிப்பு: டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடிக்கு கைகொடுக்குமா?
    X

    பூதலூர் பகுதியில் தரிசாக கிடக்கும் நெல் வயல்கள்.

    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சற்று அதிகரிப்பு: டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடிக்கு கைகொடுக்குமா?

    • மிக அதிக அளவில் மழை பெய்து மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீர் வரத்து அதிகஅளவில் உயர்ந்தால் மட்டுமே டெல்டா மாவட்டங்களில் கால்வாய் பாசன சம்பா சாகுபடிக்கு தண்ணீர் திறக்க சாத்தியப்படும்.
    • விவசாயிகளின் வாழ்வாதாரமாக விளங்கும் குறுவை சாகுபடி இல்லாததால் விவசாயிகள் மட்டுமல்லாமல், விவசாய தொழிலாளர்களும் வேலை இழந்து காணப்படுகின்றனர்.

    மேட்டூர் அணையில் இருந்து காவிரி பாசன பகுதிகளுக்கு மரபுப்படி ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறக்க இயலவில்லை. மேட்டூர் அணையின் வரலாற்றில் 61-வது ஆண்டாக குறித்த காலத்தில் தண்ணீர் திறந்து விட இயலாத ஆண்டாக 2024 அமைந்துள்ளது.

    காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நதிநீர் ஒழுங்காற்று குழு ஆகிய கூட்டங்கள் நடைபெறுகின்றன, தமிழகத்தின் பாதிப்புகள் குறித்து எடுத்துச் சொல்லியும் விதிகளை எடுத்துக் கூறியும் கர்நாடக அரசு செவிசாய்க்க மறுத்து தமிழகத்தின் உரிய உரிமை தண்ணீரை விடுவிப்பதில் ஆர்வம் காண்பிக்கவில்லை.

    இதனால் காவிரி டெல்டா மாவட்டங்களில் கால்வாய் பாசனத்தை நம்பியுள்ள விவசாயிகள் குறுவை பயிரிட இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.

    கடந்த ஆண்டு தஞ்சை மாவட்டத்தில் 1 லட்சத்து 8,951 ஏக்கர், திருவாரூர் மாவட்டத்தில் 92 ஆயிரத்து 214 ஏக்கர், நாகப்பட்டினம் மாவட்டத்தில் 22,805 ஏக்கர், மயிலாடுதுறை மாவட்டத்தில் 93,750 ஏக்கர் பரப்பில் குறுவை சாகுபடி செய்ய திட்டமிடப்பட்டு இலக்குகளை மீறி 5 லட்சம் ஏக்கர் பரப்பில் குறுவை சாகுபடி செய்யப்பட்டது. நடப்பாண்டு மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படாத சூழ்நிலையில் ஆழ்துளை கிணற்று தண்ணீரை கொண்டு இந்த மாவட்டங்களில் 2 லட்சம் ஏக்கர் பரப்பில் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. மற்ற நிலங்கள் மேட்டூர் அணை தண்ணீர் திறக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பில் தரிசாக போடப்பட்டுள்ளது.

    கடந்த சில நாட்களாக கர்நாடக மாநிலத்தில் பலத்த மழை பெய்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதனால் கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. அதைப்போலவே மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவும் கணிசமான அளவிற்கு உயர்ந்து வருகிறது.

    மேட்டூர் அணையின் நீர்மட்டம் 90 அடியை எட்டினால் மட்டுமே மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க சாத்தியமாகும். டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி இம்மாத இறுதிக்குள் நடவு செய்யப்பட வேண்டும் . இனி நாற்று விட்டு குறுவை சாகுபடி செய்ய முடியாத நிலையில் விவசாயிகள் உள்ளனர். தற்போதுள்ள நிலையில் மிக அதிக அளவில் மழை பெய்து மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீர் வரத்து அதிகஅளவில் உயர்ந்தால் மட்டுமே டெல்டா மாவட்டங்களில் கால்வாய் பாசன சம்பா சாகுபடிக்கு தண்ணீர் திறக்க சாத்தியப்படும்.

    இந்த சூழ்நிலையில் நேற்று மாலை மேட்டூர் அணையின் நீர்வரத்து 2,366கன அடியாக இருந்தது. அணையின் நீர்மட்டம் 40.29 அடியாக உள்ளது. நீர் இருப்பு 12.340டி எம்.சியாக உள்ளது. இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சற்றே அதிகரித்து 3,341 கன அடியாக உள்ளது. வழக்கம்போல குடிநீர் தேவைக்காக 1000 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

    காவேரி டெல்டா மாவட்டங்களில் விவசாயிகளின் வாழ்வாதாரமாக விளங்கும் குறுவை சாகுபடி இல்லாததால் விவசாயிகள் மட்டுமல்லாமல், விவசாய தொழிலாளர்களும் வேலை இழந்து காணப்படுகின்றனர்.

    விவசாயிகள்,விவசாய தொழிலாளர்களின் நலன்களை கருத்தில் கொண்டு கர்நாடக அணைகள் நிரம்பியுள்ள சூழலில் வற்புறுத்தி தண்ணீர் பெற்று தர நடவடிக்கைகள் எடுத்து சம்பா சாகுபடியை உறுதிப்படுத்தி வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் என்று விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்து எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

    Next Story
    ×