search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மேட்டூர் அணை
    X

    100 அடியை எட்டியது மேட்டூர் அணை நீர்மட்டம்

    • மேட்டூர் அணை நீர்மட்டம் வேகமாக நிரம்பி வரும் நிலையில் காவிரி டெல்டா பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
    • ஆற்றில் தண்ணீர் அதிகளவில் வருவதால் ஆற்றில் மீன்பிடிக்கவோ, பரிசல் இயக்கவோ, குளிக்கவோ கூடாது என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

    சேலம்:

    கர்நாடகாவில் பெய்துவரும் தென்மேற்கு பருவமழையின் காரணமாக அங்குள்ள கிருஷ்ண ராஜசாகர், கபினி, ஹேமாவதி, ஹேரங்கி ஆகிய அணைகள் நிரம்பியது. மேலும் மாநிலத்தில் உள்ள அனைத்து ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியான குடகு மாவட்டத்தில் இன்றும் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அந்த மாவட்டத்திற்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    மழையின் தீவிரம் காரணமாக கிருஷ்ண ராஜசாகர், கபினி அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து உள்ளது. கிருஷ்ண ராஜசாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 124.22 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 1 லட்சத்து 11 ஆயிரத்து 599 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 1 லட்சத்து 13 ஆயிரத்து 506 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    கபினி அணையின் நீர்மட்டம் 82.36 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 30 ஆயிரத்து 769 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 30 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    கிருஷ்ண ராஜசாகர் மற்றும் கபினி அணைகளில் இருந்து தமிழகத்துக்கு காவிரி ஆற்றில் வினாடிக்கு 1 லட்சத்து 43 ஆயிரத்து 506 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்து கொண்டு இருக்கிறது. இந்த தண்ணீர் ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணைக்கு வந்து கொண்டு இருக்கிறது.

    நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டமும் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 99.11 அடியாக இருந்தது. தொடர்ந்து அணைக்கு வினாடிக்கு 93 ஆயிரத்து 828 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருப்பதால் மேட்டூர் அணை 100 அடியை எட்டியது. கர்நாடகா அணைகளில் இருந்து சுமார் 1 லட்சத்து 40 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு இருப்பதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் சூழ்நிலை உருவாகி உள்ளது. எனவே அணையின் நீர்மட்டம் விரைவில் முழு கொள்ளளவை எட்டும் என்று எதிர்பார்க்கப்படு கிறது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுவதால் அதிகாரிகள் அணையை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இன்று காலை நிலவரப்படி அணையில் 63.69 டிஎம்சி தண்ணீர் இருப்பு உள்ளது.

    காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுவதால் இருகரை களையும் தொட்டப்படி தண்ணீர் சீறிப்பாய்ந்து செல்கிறது. இதன் காரணமாக காவிரி கரையோரம் உள்ள கோட்டையூர், செட்டிப்பட்டி, பண்ணவாடி பரிசல் துறைஆகிய பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் ஒலி பெருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுஉள்ளது. ஆற்றில் தண்ணீர் அதிகளவில் வருவதால் ஆற்றில் மீன்பிடிக்கவோ, பரிசல் இயக்கவோ, குளிக்கவோ கூடாது என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து கரையோர கிராமங்களில் பொதுப்பணித்துறையினர், வருவாய்த்துறையினர், உள்ளாட்சி துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

    மேட்டூர் அணை நீர்மட்டம் வேகமாக நிரம்பி வரும் நிலையில் காவிரி டெல்டா பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். அணை நிரம்பி வரும் நிலையில் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படுமா என்று எதிர்பார்த்து உள்ளனர்.

    Next Story
    ×