search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    MR Vijayabaskar
    X

    எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழக்கில் சென்னையை சேர்ந்த மேலும் ஒருவர் கைது

    • எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு உதவியதாக சென்னை வில்லிவாக்கம் இன்ஸ்பெக்டர் பிருத்விராஜ் கடந்த வாரம் கைது செய்யப்பட்டார்.
    • வழக்கில் தொடர்பு உடைய மேலும் சிலரை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

    கரூர்:

    கரூரில் பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான ரூ. 100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை போலி ஆவணம் மூலம் பத்திரப்பதிவு செய்து மோசடி செய்ததாக கரூர் மாவட்ட அ.தி.மு.க செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவரது ஆதரவாளர் பிரவீன் உட்பட சிலர் மீது சார் பதிவாளர் கொடுத்த புகாரின் அடிப்படையில் கரூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு கடந்த 16ம் தேதி கேரளா மாநிலம் திருச்சூரில் பதுங்கி இருந்த எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரது ஆதரவாளரான பிரவீன் ஆகிய 2 பேரை கைது செய்து மத்திய ஜெயிலில் அடைத்தனர்.

    இந்த வழக்கில் எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் பிரவீன் ஆகியோரை சிபிசிஐடி போலீசார் 2 நாட்கள் நீதிமன்ற காவலில் எடுத்து விசாரித்தனர். இந்த போலீஸ்காவல் நிறைவடைந்ததையடுத்து நேற்று பிற்பகல் 2 பேரையும் கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் ஒன்றில் நீதிபதி பரத் குமார் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். முன்னதாக கரூர் வாங்கல் போலீஸ் நிலையத்தில் பிரகாஷ் அளித்த புகாரின் பேரில் எம்.ஆர் விஜயபாஸ்கர், அவரது சகோதரர் சேகர் உள்ளிட்ட சிலர் மீது மீது கொலை மிரட்டல், ஆள் கடத்தல் உள்ளிட்ட 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.

    இந்த கொலை மிரட்டல் வழக்கில் அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிப்பதற்காக வாங்கல் போலீசார் இன்னொரு மனு தாக்கல் செய்தனர். அந்த வகையில் முன்னாள் அமைச்சர் எம் ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் பிரவீன் ஆகிய 2 பேரையும் ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி பரத் குமார் அனுமதி வழங்கினார்.

    அதைத் தொடர்ந்து வாங்கல் போலீசார் ரெண்டு பேரையும் அழைத்து சென்று ரகசிய இடத்தில் வைத்து நேற்று இரவு முதல் விடிய விடிய விசாரணை நடத்தி வருகின்றனர். இன்று 3-வது நாளாக அவரிடம் காவல்துறை உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதில் பல்வேறு தகவல்கள் கிடைத்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    இந்த போலீஸ் காவல் இன்று நிறைவடைவதால் மாலை 5.30 மணிக்கு மீண்டும் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

    இதனிடையே ரூ.100 கோடி நிலம் மோசடி வழக்கில் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு உதவியதாக சென்னை வில்லிவாக்கம் இன்ஸ்பெக்டர் பிருத்விராஜ் கடந்த வாரம் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் தொடர்பு உடைய மேலும் சிலரை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

    இதற்காக சி.பி.சி.ஐ.டி போலீசார் சென்னையில் முகாமிட்டு கண்காணித்துவருகிறார்கள். இதனிடையே இந்த வழக்கில் சென்னையை சேர்ந்த மேலும் ஒருவரை போலீசார் இன்று காலை கைது செய்தனர். அவரை கரூருக்கு அழைத்து வந்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டு உள்ளனர்.

    Next Story
    ×