search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் இடம் பெற வேண்டும் என கூறுவதில் எந்த தவறும் கிடையாது- திருநாவுக்கரசர்
    X

    தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் இடம் பெற வேண்டும் என கூறுவதில் எந்த தவறும் கிடையாது- திருநாவுக்கரசர்

    • தங்கபாலு உள்ளிட்ட பலர் தலைவராக இருந்தபோது காமராஜர் ஆட்சி அமைப்போம் என்று கூறுவது வழக்கம் தான்.
    • தமிழகத்தில் தி.மு.க. தலைமையில் காங்கிரஸ் அங்கம் வகிக்கிறது. இதில் எந்த மாற்றமும் கிடையாது.

    மதுரை:

    நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 23-வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மாவட்ட நீதிமன்றம் அருகே அவரது சிலைக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட தலைவர் கார்த்திகேயன், முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதன்பின், பேசிய திருநாவுக்கரசர் கூறியதாவது:-

    நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பல்வேறு பாத்திரங்களை ஏற்றி நடித்தவர். அந்த பாத்திரமாகவே மாறி மக்களுக்கு பல நல்ல கருத்துகளை கூறி உள்ளார். தற்போது சசிகலா சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

    அ.தி.மு.க.வில் சும்மாவே பல பிரச்சனைகள் உள்ளன. இந்த நிலையில் நான் வாய் திறந்து கூறி மேலும் பல புதிய பிரச்சனைகளை உருவாக்க விரும்பவில்லை. நான் ஒரு கட்சியில் இருக்கும்போது மற்றொரு கட்சி குறித்து அதன் நிலைபாடுகளில் தலையிட விரும்பவில்லை.

    தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சி 2026 தேர்தலுக்கு பிறகு அமைச்சரவையில் இடம் பெற வேண்டும் என மாநில தலைவர் செல்வப்பெருந்தகை பேசியதில் எந்த தவறும் இல்லை. அதே நேரத்தில் அமைச்சரவையில் இடமளிக்க வேண்டும் என்ற கட்டாயமும் இல்லை.

    இதற்கு முன்பு தி.மு.க. தனிப்பெரும்பான்மை இல்லாமல் ஆட்சி அமைத்தபோது கூட காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகிக்காமல் வெளியில் இருந்தே ஆதரவளித்தது. கட்சியை வளர்ப்பதற்கு இளைஞர்களை கவரும் வகையில் இவ்வாறு பேசுவது நான் தலைவராக இருந்த கால கட்டத்தில் இருந்தே மேற்கொண்டு வரும் நடவடிக்கை ஆகும்.

    தங்கபாலு உள்ளிட்ட பலர் தலைவராக இருந்தபோது காமராஜர் ஆட்சி அமைப்போம் என்று கூறுவது வழக்கம் தான். தேசிய அளவில் காங்கிரசுடன் தி.மு.க. கூட்டணியில் உள்ளது. தமிழகத்தில் தி.மு.க. தலைமையில் காங்கிரஸ் அங்கம் வகிக்கிறது. இதில் எந்த மாற்றமும் கிடையாது.

    இந்தியா கூட்டணி உருவானபோது ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவித்தவர் மு.க.ஸ்டாலின். எனவே இரு கட்சிக்கும் இடையேயான கூட்டணி சிறப்பாக உள்ளது. எனவே அ.தி.மு.க.வுடன் கூட்டணி ஏற்படுமா? என்ற கேள்விக்கே இடமில்லை.

    ஒழுங்காக குடும்பம் நடத்தும்போது பக்கத்து வீட்டுக்காரனை காட்டி அவனுடன் குடும்பம் நடத்த தயாரா? என்று கேட்பது போல் உள்ளது. விவாகரத்து ஏதும் ஏற்பட்டால் இதுபோன்ற கேள்வி சரியாக இருக்கும்.

    மின்கட்டண உயர்வு குறித்து தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும். எங்களை பொறுத்தளவில் வரி வசூலிக்காமல் ஆட்சி நடத்த முடியாது என்றாலும், வரி மக்களுக்கு சுமையாக இருக்க கூடாது என்பதில் நான் உறுதியாக இருக்கிறோம்.

    கர்நாடகத்தில் கன்னடர்களுக்கே வேலை என்ற நிலைபாடு சரியான கருத்து அல்ல. அந்தந்த மாநிலத்தில் உள்ளவர்களுக்கு 100 சதவீதம் வேலை என்று கூற தொடங்கினால் இந்தியா என்ற ஒன்று இருக்காது. தனித்தனி நாடாக ஆகிவிடும்.

    மொழி வாரி மாநிலம் உருவாக்கப்பட்ட பின்னர் வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்கலாம். சலுகைகள் கொடுக்கலாம். 50 முதல் 90 சதவீதம் வரை கொடுக்கலாம். மீதமுள்ள இடத்தை இந்தியா முழுவதும் உள்ள அனைவருக்கும் பகிர்ந்து கொடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது கவுன்சிலர் தல்லாகுளம் முருகன், மலர்பாண்டியன், துரையரசன், பறக்கும் படை பாலு, சாவனாஸ் பேகம் உள்பட பலர் இருந்தனர்.

    Next Story
    ×