search icon
என் மலர்tooltip icon

    உலகம் (World)

    எதிர்த்து பேசியவர்கள் காணாமல் போகும் கண்ணாடிகளின் வீடு.. நரகத்தை மிஞ்சும் ஷேக் ஹசீனாவின் ரகசிய சிறை
    X

    எதிர்த்து பேசியவர்கள் காணாமல் போகும் 'கண்ணாடிகளின் வீடு'.. நரகத்தை மிஞ்சும் ஷேக் ஹசீனாவின் ரகசிய சிறை

    • அவருக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்ட நூற்றுக்கணக்கானோரைப் பாதுகாப்பு படையினர் தூக்கி சென்றனர்.
    • 700 பேர் காணாமல் போனவர்களில் அடங்குவார்கள் என மனித உரிமை அமைப்புகள் மதிப்பீடு செய்துள்ளது

    வங்கதேசம்

    வங்கதேசத்தில் இடஒதுக்கீடு தொடர்பான பிரச்சனையில் ஷேக் ஹசீனா ஆட்சி மாணவர்கள் போராட்டங்களின்மூலம் தூக்கி எறியப்பட்டது. இந்த போராட்டத்தில் ஏற்பட்ட கலவரத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். ஆபத்தான சூழலில் இந்தியாவுக்குத் தப்பி வந்து தஞ்சமடைந்துள்ளார் ஹசீனா.

    வங்கதேச நீதிமன்றத்தால் அவருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஷேக் ஹசீனாவின் ஆட்சியில் அவருக்கு எதிராக பேசியவர்கள், செயல்பட்டவர்கள் என பலர் அவ்வப்போது காணாமல் போயினர். அவர்களுக்கு என்ன ஆனது என்பது குறித்து யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. இந்நிலையில் அவர்கள் ஷேக் ஹசீனாவின் ரகசிய சிறைகளில் வைக்கப்பட்டிருந்ததாக தற்போது தெரியவந்துள்ளது. அந்த சிறைகளிலிருந்து வெளியே வந்தவர்கள் பகிர்ந்துள்ள தகவல்கள் அதிர்ச்சியளிக்கும் வகையில் உள்ளன.

    கண்ணாடிகளின் வீடு

    இந்த சிறைகளுக்கு 'அயினாகோர்' என்று பெயர். இதற்கு கண்ணாடிகளின் வீடு என்று பொருள். 2009இல் ஷேக் ஹசீனா ஆட்சி அதிகாரத்துக்கு வந்த பிறகு அவருக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்ட நூற்றுக்கணக்கானோரைப் பாதுகாப்பு படையினர் தூக்கி சென்றனர்.

    அரசுக்கு எதிராக சிறிய அளவில் போராட்டம் நடத்தியவர்களும் கூட அதிகாரப்பூர்வமாகக் கடத்தப்பட்டனர். அவர்களில் பலர் கொல்லப்பட்டு அவர்களின் உடல்கள் துண்டுகளாக்கப்பட்டு தடயம் இல்லாமல் அழிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. எஞ்சிய சிலர் ரகசிய ராணுவ தடுப்பு காவல் மையத்தில் வைக்கப்பட்டனர். அதுவே அயினாகோர் என அழைக்கப்பட்டது என அமெரிக்காவின் தி நியூயார்க் டைம்ஸ் இதழ் கூறுகிறது.

    காணாமல் போனவர்கள்

    ஹசீனா அரசுக்கு சவாலாக இருக்கும் யார் ஒருவரையும் கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கை முயற்சியின் ஒரு பகுதியாகவே இந்த காணாமல் போகும் நிகழ்வு என்று அந்த இதழ் கூறுகிறது. இதன்படி, 700 பேர் காணாமல் போனவர்களில் அடங்குவார்கள் என மனித உரிமை அமைப்புகள் மதிப்பீடு செய்துள்ளது. இந்த எண்ணிக்கை உண்மையில் அதிகரிக்க கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

    சித்ரவதை

    சிறை பிடித்து வைக்கப்பட்டவர்களில், சிலர், தங்களுடைய இடத்திற்கு மேலே காலையில் ராணுவ அணிவகுப்பு நடப்பதற்கான சத்தம் கேட்டது என கூறுகின்றனர். சிறையில் உள்ளவர்களால், அவர்களை தவிர வேறு நபர்களை ஒருபோதும் பார்க்க முடியாது. எனவே அதற்கு கண்ணாடிகளின் வீடு என பெயர் வந்துள்ளது. விசாரணையின்போது, உடல்ரீதியான சித்ரவதைகளைக் கைதிகள் அனுபவித்தனர்.

    அந்த சித்திரவதைகளால் அவர்கள் உயிரிழக்காமல் இருக்க சுகாதார பரிசோதனைகள் சீராக மேற்கொள்ளப்பட்டு வந்திருக்கிறது. 4 முதல் 6 மாதங்களுக்கு ஒருமுறை கைதிகளுக்கு முடி வெட்டி விடப்படும். அவர்களை மனரீதியாக சித்ரவதை செய்ய வேண்டும் என்பதே இந்த சிறைகள் ஏற்படுத்தப்பட முக்கிய இலக்கு என்று நியூயார்க் டைம்ஸ் கூறுகிறது.

    ஜன்னல்கள்

    வழக்கறிஞர் அகமது பின் காசிம் 2016-ல் பிடிக்கப்பட்டார். அவருடைய கண்களையும், கைகளையும் கட்டி சிறையில் வைத்துள்ளனர். 8 ஆண்டுகளுக்கு பின்பு வெளியே வந்ததும், முதன்முறையாக புதிய காற்றை சுவாசிக்கிறேன் என்றார்.

    சிறைக்குள் ஜன்னல்கள் இல்லை. வெளியுலகில் இருந்து எந்தவித செய்தியும் உள்ளே செல்லாது. எல்லா நேரமும் காசிமுக்கு உலோகத்திலான கைவிலங்கு போடப்பட்டு இருந்தது. சிறைகளின் அறைகள் ஒன்றுக்கு ஒன்று எதிராக இருக்கும். சிறை அறைகளில் பெரிய மின்விசிறிகள் ஓடியபடி இருக்கும்.

    காவலர்களின் உரையாடல்கள் கைதிகளுக்குக் கேட்க கூடாது என்பதற்காகவும், கைதிகளை மனரீதியாக நிலைகுலைய வைப்பதற்கும் இதுபோன்ற விசயங்கள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன என்று நியூயார்க் டைம்ஸ் கூறுகிறது.

    அதிகாரம்

    வரலாறு நெடுகிலும் அதிகார மையங்களால் மேற்கொள்ளப்பட்டுவரும் அடக்குமுறைகளின் ஒரு வடிவமே இந்த கண்ணாடிகளின் வீடு. இதற்கு ஷேக் ஹசீனா உட்பட ஆட்சியாளர்கள் யாரும் விதிவிலக்கல்ல. சில இடங்களில் அது கண்ணாடிகளின் வீடாக இருக்கிறது, சில இடங்களில் அது வேறு வடிவங்களில் இருக்கிறது என்பதே ஒரே வேறுபாடு.

    Next Story
    ×