என் மலர்
ரஷ்யா
- உள்நாட்டு விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த ரஷியா நடவடிக்கை
- யூரேசியன் பொருளாதார யூனியன் வர்த்தக அமைப்பில் உள்ள நாட்டிற்கு இந்த தடை இல்லை
உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது. சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வரும் இந்த போர் காரணமாக உலகளாவிய அளவில் உணவு தட்டுப்பாடு, பொருளாதார மந்தநிலை உருவாகும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
இதற்கிடையே மேற்கத்திய நாடுகள் ரஷியாவுக்கு பொருளாதார அளவில் பல்வேறு தடைகளை விதித்துள்ளன. இதனால் ரஷியாவில் பணவீக்கம், விலைவாசி ஏற்றம் அதிகரித்து மக்கள் அவலநிலையை எதிர்கொண்டு வருகிறார்கள்.
ரஷியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரித்து காணப்படுகிறது. இந்த நிலையில உள்நாட்டில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தும் விதமாக பெட்ரோல் மற்றும் டீசல் ஏற்றுமதிக்கு ரஷியா தற்காலிக தடை விதித்துள்ளது.
ரஷியா ஒரு நாளைக்கு 9 லட்சம் பேரல்கள் என்ற வகையில் டீசலை ஏற்றுமதி செய்கிறது. 60 ஆயிரம் முதல் ஒரு லட்சம் பேரல்கள் என்ற வகையில் பெட்ரோல் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இந்த உத்தரவு வந்த நிலையில், ரஷியாவில் எரிபொருள் விலை 4 சதவீதம் குறைந்துள்ளது. இந்த தற்காலிக தடையால் உலக மார்க்கெட்டில் விலை உயர வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.
யூரேசியன் பொருளாதார யூனியன் வர்த்தக அமைப்பில் உள்ள அர்மேனியா, பெலாரஸ், கிர்கிஸ்தான், கஜகஸ்தான் நாடுகளுக்கு இந்த தடை கிடையாது.
- தாக்குதல் காரணமாக உக்ரைனியர்கள் ரஷியாவிற்குள் தஞ்சம் புகுந்து வருகின்றனர்
- அவர்கள் தவிப்பதை எங்களால் வேடிக்கை பார்க்க முடியாது என்றார் ஒரு ரஷிய பெண்மணி
2022 பிப்ரவரியில் ரஷியா, தனது அண்டை நாடான உக்ரைனை ஆக்ரமித்தது. ரஷியாவை எதிர்த்து அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் உதவியுடன், உக்ரைன் கடுமையாக போரிட்டு வருகிறது.
ரஷியாவில் இப்போர் குறித்து ரஷியாவையோ, அதிபர் விளாடிமிர் புதினையோ விமர்சிப்பவர்கள் மீது ரஷிய அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
ஆனால் அரசுக்கு தெரியாமல், உக்ரைன் அகதிகளுக்கு ரஷியாவை சேர்ந்த பலர் மனிதாபிமான உதவிகளை செய்து வருகின்றனர்.
ராணுவ தாக்குதல் காரணமாக ரஷியாவிற்கோ அல்லது ரஷியாவின் கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைனின் பிராந்தியங்களுக்கோ, உக்ரைனின் பிற பகுதிகளிலிருந்து மக்கள் அகதிகளாக தினம் வந்திறங்குகின்றனர். தங்களது வீடு, உடைமைகள் மற்றும் செல்வம் அனைத்தையும் இழந்து அகதிகளாக எதிர்காலம் குறித்த அச்சத்துடன் வந்திறங்கும் உக்ரைனியர்களுக்கு ரஷிய மக்கள் தன்னார்வலர்களாக உதவி செய்து வருகின்றனர்.
"இந்த அகதிகளுக்காக இணையவழியாக நன்கொடை பெற்று உடைகள், மருந்துகள் மற்றும் உணவு வசதி போன்றவற்றை செய்து தருகிறேன். ரஷியாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகருக்கு ரெயிலில் வருபவர்களுக்கு வேலை வாய்ப்பு, தங்குமிடம் போன்றவற்றையும் ஏற்பாடு செய்கிறேன். என்னை போல் ஆயிரக்கணக்கான ரஷியர்கள் உதவி செய்கிறார்கள். பாதுகாப்பு காரணங்களால் இது குறித்து நாங்கள் வெளியில் பேசுவதில்லை," என கலினா அர்ட்யோமென்கோ (58) எனும் ரஷிய பெண்மணி தெரிவித்தார்.
"எங்களை விட மோசமான நிலைமைக்கு தள்ளப்பட்டவர்களை நாங்கள் வெறுமனே வேடிக்கை பார்த்து கொண்டு நிற்க முடியாது. நாங்கள் அவர்களுக்கு உதவியே ஆக வேண்டும்" என ல்யுட்மில்லா (43) எனும் மற்றொரு ரஷிய பெண் கூறினார்.
2022 டிசம்பர் மாதமே ரஷியாவில் உக்ரைன் நாட்டு அகதிகள் 10 லட்சத்திற்கும் மேல் உள்ளனர் என ஐநா சபை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
- ரஷியாவுக்கு வடகொரியா முழு ஆதரவு தெரிவிப்பு
- கடந்த சில நாட்களாக ரஷியாவின் ஆயுதங்களை பார்வையிட்டு ஆய்வு செய்கிறார் கிம் ஜாங் உன்
வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் ரஷியாவில் சுற்றுப் பயணம் செய்து வருகிறார். அங்கு சென்றுள்ள அவர் ரஷிய அதிபர் புதினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது ரஷியாவிற்கு தனது ஆதரவை தெரிவித்தார்.
அதன்பிறகு ரஷியாவின் ஆயுத தொழிற்சாலைகளுக்கு சென்று, ஆயுதங்களை பார்வையிட்டு வருகிறார். ஏற்கனவே கிம் ஜாங் உன் பயணம் குறித்து தென்கொரியா கவலை தெரிவித்திருந்தது. ஆயுதங்கள் தயாரிப்பதற்கான தொழில்நுட்பத்தை ரஷியா வழங்கக்கூடும் எனத் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் ரஷியாவின் கிழக்குப்பகுதியில் தொடர்ந்து சுற்றுப் பயணத்தில் இருக்கும் கிம் ஜாங் உன், இன்று விளாடிவோஸ்டோக்கில் அணுஆயுதங்களை சுமந்து செல்லும் விமானங்களை ஆய்வு செய்துள்ளார்.
உக்ரைனுக்கு எதிரான போரில் பயன்படுத்தப்படும் Tu-160, Tu-95, Tu-22 ஆகிய விமானங்களையும் பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளார். இந்த விமானங்கள் தற்போது உக்ரைன் மீது ஏவுகணைகளை வீச பயன்படுத்தப்படுகிறது.
புதின்- கிம் ஜாங் உன் கடந்த புதன்கிழமை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சந்திப்பின்போது, ரஷியாவிற்கு வடகொரியா ஆயுதங்கள் வழங்குவதற்குப் பதிலாக, ரஷியாவின் தொழில்நுட்பத்தை பயன்படுத்திக் கொள்ள வடகொரியா ரஷியாவிடம் கேட்பது தொடர்பான ஒப்பந்தம் போடப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது.
அடுத்ததாக ரஷியாவின் கப்பற்படைக்கு சென்று கிம் ஜாங் உன் ஆய்வு செய்ய இருப்பதாக தெரிகிறது. இதில் இருந்து ரஷியாவுக்கு வட கொரியா ஆயுதங்கள் வழங்க இருப்பதும், ரஷியாவின் தொழில்நுட்பத்தை வடகொரிய பயன்படுத்த வாய்ப்புள்ளதும் ஏறக்குறைய உறுதி செய்யப்பட்டுள்ளது.
உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் உதவி செய்து வரும் நிலையில், உக்ரைன் பொரில் மிகப்பெரிய அளவில் ஆயுதங்களை செலவழித்துள்ள ரஷியாவுக்கு தற்போது ஆயுதங்கள் தேவைப்படுகிறது. இதனால் வடகொரியாவின் உதவியை நாடியுள்ளது. வெளிநாடுகளுக்கு ஆயுதங்களை விற்பனை செய்வதில், அமெரிக்காவுக்கு இணயைாக ரஷியா திகழ்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- காஸ்மோடிரோமில் உள்ள சிறப்பு அம்சங்கள் குறித்து கிம் தெரிந்து கொண்டார்
- அதிபர்கள் சந்திப்பிற்கு பிறகு தூதர்கள் சந்திப்பு நடந்தது
அமெரிக்கா, ஜப்பான் மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளுக்கு எதிராக செயல்பட்டு வரும் வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன், ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுடன் நடத்திய தனிப்பட்ட சந்திப்பு நிறைவடைந்தது.
ரஷியாவின் அழைப்பை ஏற்று அந்நாட்டிற்கு சென்றுள்ளார் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்.
பரஸ்பர நல்லுறவிற்காக சுமார் 4-லிருந்து 5 மணி நேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தை, நிறைவடைந்ததாக அந்நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, ரஷியாவின் தென் கிழக்கில் உள்ள ரஷியாவின் முக்கிய விண்வெளி மையமான வோஸ்டோச்னி காஸ்மோடிரோம் தளத்தில் வட கொரிய அதிபரை வரவேற்ற புதின், அங்குள்ள பல முக்கிய அம்சங்களை வட கொரிய அதிபருக்கு சுற்றி காண்பித்தார். இதற்கு பிறகு தூதர்கள் அளவிலான சந்திப்புகள் நடைபெற்றது.
இருவரின் இந்த தனிப்பட்ட சந்திப்பிற்கு முன்னதாக ரஷிய-உக்ரைன் போரை மறைமுகமாக குறிப்பிடும் விதமாக, "ரஷியா தனது பாதுகாப்புக்காக மேற்கொண்டு வரும் புனித போரில், அந்நாட்டிற்கு தேவைப்படும் முழுமையான, நிபந்தனையற்ற ஆதரவை வட கொரியா வழங்கும்" என கிம் ஜாங் உன் அறிவித்தார்.
- கப்பல் கட்டும் தளம் தீப்பிடித்து எரிந்து கடும் புகை மூட்டம் ஏற்பட்டது.
- கருங்கடல் கடற்படையில் உள்ள கப்பல்களின் பழுதுகள் சரி செய்யப்படுகின்றன.
ரஷியா கட்டுப்பாட்டில் உள்ள கிரீமியா தீபகற்பத்தில் துறைமுக நகரமான செவஸ்டோபோலில் கப்பல் கட்டும் தளம் மீது உக்ரைன் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் கப்பல் கட்டும் தளம் தீப்பிடித்து எரிந்து கடும் புகை மூட்டம் ஏற்பட்டது.
இந்த தாக்குதலில் 24 பேர் காயம் அடைந்தனர். தீயை அணைக்கும் பணி தீவிரமாக நடந்தது. இந்த கப்பல் கட்டும் தளம் ரஷியாவுக்கு மிகவும் முக்கியமானது. இங்கு கருங்கடல் கடற்படையில் உள்ள கப்பல்களின் பழுதுகள் சரி செய்யப்படுகின்றன.
- 2014-ல் இந்திய பிரதமர் நரேந்திர மோடியால் இத்திட்டம் கொண்டு வரப்பட்டது
- 90-களில் அயல்நாடுகளிலிருந்து கார்களை வாங்கி குவித்தோம்
இந்திய தொழில் துறையில் முதலீடுகளை அதிகரிக்கவும், புதுமைகளை வளர்க்கவும், திறனை மேம்படுத்தவும், அறிவுசார் உடைமைகளை பாதுகாக்கவும் மற்றும் உலகத்தரம் வாய்ந்த கட்டமைப்பு வசதிகளை உருவாக்கவும், அதனை கொண்டு இந்தியாவிலேயே அனைத்து பொருட்களும் தயாரிக்கவும், உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கவும், வெளிநாட்டு இறக்குமதியை குறைக்கவும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியால் 2014-ல் கொண்டு வரப்பட்டது "மேக் இன் இந்தியா" திட்டம்.
இந்நிலையில் கிழக்கு பொருளாதார மன்றத்தின் 8-வது அமர்வில், ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் உரையாற்றினார்.
அப்போது அவர் தெரிவித்ததாவது:-
ஒரு காலத்தில் நாங்கள் வெளிநாடுகளிலிருந்து மட்டுமே கார்களை இறக்குமதி செய்து கொண்டிருந்தோம். ஆனால், பிறகு நாங்கள் உள்நாட்டில் கார்களை உற்பத்தி செய்ய தொடங்கினோம். நாங்கள் 90-களில் இறக்குமதி செய்து குவித்து வந்த அயல்நாட்டு மெர்சிடிஸ் மற்றும் ஆடி கார்களை போல் இவை மிக பிரமாண்டமானவை அல்ல என்றாலும் அது ஒரு குறை அல்ல.
எங்கள் கூட்டாளிகளின் வழிமுறைகளை நாங்களும் கடைபிடிக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, இந்தியாவின் "மேக் இன் இந்தியா" (இந்தியாவிலேயே தயாரியுங்கள்) திட்டம் போன்றவற்றை நாங்களும் கையாள விரும்புகிறேன். உள்நாட்டு உற்பத்தியை அதிகப்படுத்துவதன் மூலமும் அந்தந்த நகரங்களில் வசிக்கும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெருகும்.
இத்தகைய பொருளாதார வளர்ச்சிக்கான வெற்றி பெறும் வழிமுறைகளை ரஷியா இந்தியாவை போல கையாள வேண்டும். இந்தியர்கள் இந்தியாவிலேயே அதிகளவில் வாகனங்களை உற்பத்தி செய்யவும், பயன்படுத்தவும் ஊக்குவிக்கப்படுகின்றனர். இது மிக சரியான வழிமுறை. மோடி மிக சரியானதைத்தான் செய்கிறார்.
இவ்வாறு புதின் தெரிவித்தார்.
கடந்த 9, 10 தேதிகளில் இந்தியா ஜி20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக நடத்தியதற்காக பிரதமர் மோடியை உலக நாடுகள் பாராட்டி வரும் பின்னணியில் ரஷிய அதிபரின் இந்த கருத்து பார்க்கப்படுகிறது.
- ஓம்ஸ்க் நகர் அருகே சென்ற நிலையில் விமானத்தில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.
- விமானத்தில் பயணித்தவர்களுக்கு நிவாரணமாக சுமார் ரூ.87 ஆயிரம் வழங்கப்படும் என யூரல் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தலைமை அதிகாரி அறிவித்தார்.
மாஸ்கோ:
ரஷியாவின் சோச்சி நகரில் இருந்து யூரல் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான ஏர்பஸ் ஏ320 விமானம் புறப்பட்டது. சைபீரியா நாட்டின் ஓம்ஸ்க் நோக்கி சென்ற இந்த விமானத்தில் 6 விமான பணியாளர்கள் உள்பட 167 பேர் பயணம் செய்தனர். ஓம்ஸ்க் நகர் அருகே சென்ற நிலையில் விமானத்தில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் அடுத்து வரவுள்ள நோவோசிபிர்ஸ்க் விமான நிலையத்தில் தரையிறங்க விமானி முயற்சி செய்தார்.
ஆனால் போதுமான அளவுக்கு எரிபொருள் இல்லாததால் நோவோசிபிர்ஸ்க் நகரில் உள்ள ஒரு வயலில் விமானத்தை தரையிறக்க முடிவு செய்யப்பட்டது. இதனால் பயணிகள் பெரும் அச்சத்துக்குள்ளாகினர். எனினும் விமானியின் சாமர்த்தியத்தால் அந்த விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் காயம் அடைந்த 5 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இதனையடுத்து விமானத்தில் பயணித்தவர்களுக்கு நிவாரணமாக சுமார் ரூ.87 ஆயிரம் வழங்கப்படும் என யூரல் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தலைமை அதிகாரி செர்ஜி ஸ்குராடோவ் அறிவித்தார்.
- இதுவரை இல்லாத வகையில் முதல்முறையாக நடந்துள்ள மற்றும் வரலாற்றுச் சிறப்புவாய்ந்த திட்டம் இது.
- இந்திய-மத்திய கிழக்கு-ஐரோப்பிய பொருளாதார வழித்தடம் திட்டம் ரஷியாவுக்கே பலன் தரும் என்றார்.
மாஸ்கோ:
சமீபத்தில் டெல்லியில் நடந்த ஜி20 உச்சி மாநாட்டின் முதல் நாளில் இந்தியா, மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கான கப்பல் மற்றும் ரெயில் இணைப்புக்கான ஒரு பெரிய வழித்தடம் விரைவில் தொடங்கப்படும் என்ற வரலாற்று ஒப்பந்தம் ஒன்று அறிவிக்கப்பட்டது. இதனை இந்தியா, அமெரிக்கா, சவுதி அரேபியா மற்றும் ஐரோப்பிய யூனியன் அறிவித்தன.
இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, ஐரோப்பிய யூனியன், பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுடன் தொடர்புடைய இணைப்பு மற்றும் உள்கட்டமைப்பு ஆகியவற்றின் ஒத்துழைப்புக்கான இந்த திட்ட தொடக்கம் என்பது, இதுவரை இல்லாத வகையில் முதன்முறையாக நடந்துள்ள மற்றும் வரலாற்று சிறப்பு வாய்ந்த திட்டம் ஆகும்.
இந்நிலையில், ரஷியாவின் துறைமுக நகரான விளாடிவோஸ்டக்கில் 8-வது கிழக்கு பொருளாதார கூட்டமைப்பு நிகழ்ச்சி ஒன்று நடந்தது. இதில் அதிபர் விளாடிமிர் புதின் கலந்து கொண்டு பேசியதாவது:
புதிய பொருளாதார வழித்தடம் உருவாக்கத்திற்கான ஒப்பந்தத்தில் ஐரோப்பிய யூனியன், சவுதி அரேபியா மற்றும் இந்தியாவுடன் கடைசியாக அமெரிக்காவும் இணைந்துள்ளது. இதனால் அமெரிக்காவுக்கு பெரிய அளவில் பயன் ஏற்படும் என நான் பார்க்கவில்லை.
எங்களுடைய வடக்கு-தெற்கு திட்டத்துடன் கூடுதலாக, இந்த வழித்தடம் வழியே கூடுதல் சரக்கு போக்குவரத்து இயக்கம் நடைபெறும். இதில் எங்களுக்கு தடை ஏற்படுத்தக்கூடிய விஷயம் என எதனையும் நான் பார்க்கவில்லை.
இந்தத் திட்டம் ரஷியாவுக்கே பலன் தரும். இந்திய-மத்திய கிழக்கு-ஐரோப்பிய பொருளாதார வழித்தடம் (ஐ.எம்.இ.சி.) திட்டம் ரஷியாவின் தளவாட போக்குவரத்துக்கான வளர்ச்சிக்கு உதவும். இந்த திட்டம் பல்வேறு ஆண்டுகளாக ஆலோசனையில் இருந்து வந்தது என தெரிவித்துள்ளார்.
அரபிக்கடலில் ஈரான் வழியாக இந்தியாவின் மேற்கு துறைமுகங்களுடன் ரஷியாவை இணைக்கும் வகையிலான சர்வதேச வடக்கு-தெற்கு போக்குவரத்து வழித்தடம் பற்றி அதிபர் புதின் குறிப்பிட்டுள்ளார்.
- பரஸ்பரம் கொடுக்கவும் பெறவும் இரு நாடுகளிடமும் பல விஷயங்கள் உள்ளன
- உலக அரங்கில் தனிமைப்படுத்தப்பட்ட பிம்பத்தை உடைக்க வட கொரியா முயன்று வருகிறது
ரஷிய அதிபர் விளாடிமிர் புதினின் அழைப்பை ஏற்று வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன், ரஷிய அதிபரை வரும் நாட்களில் அங்கு சென்று சந்திக்க போவதாக ரஷியாவின் அதிகாரபூர்வ செய்தி தளமான கிரெம்ளின் இணையதளமும், வட கொரியாவின் அதிகாரபூர்வ கே.சி.என்.ஏ. செய்தி நிறுவனமும் உறுதி செய்துள்ளது. தற்போது வரை இச்சந்திப்பு எங்கு நடைபெறும் என்பது உறுதியாகவில்லை.
ஆனாலும், இரு நாட்டு எல்லைகளுக்கு இடையில் கிம் ஜாங் உன் பயணம் செய்யும் அவரது பிரத்யேக பச்சை நிற ரெயில் காணப்பட்டதாகவும், அவர் ரஷியா நோக்கி பயணிக்கிறார் என்றும் தென் கொரிய மற்றும் ஜப்பான் செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
இத்தகைய ஒரு சந்திப்பு ரஷியாவின் விலாடிவோஸ்டாக் நகரில் நிகழக்கூடும் என கடந்த வாரமே அமெரிக்காவின் உளவுப்பிரிவு, தகவல் ஒன்றை வெளியிட்டது. கடந்த 2019-ல் புதின் முதன்முறையாக இங்குதான் வட கொரிய அதிபரை சந்தித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
உக்ரைன் உடனான போரில் ரஷியாவின் ராணுவ தளவாட மற்றும் ஆயுத கையிருப்பு குறைந்து கொண்டே வருகிறது. வட கொரியாவிடம் ரஷிய வடிவமைப்பை கொண்டு உருவாக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான பீரங்கி குண்டுகள் மற்றும் ராக்கெட்டுகள் உள்ளது. எனவே, அந்நாட்டிடம் இருந்து இவற்றை பெற புதின் ஆர்வமாக உள்ளார். இதன் மூலம் போர் ஒரு முடிவுக்கு வராமல் நீண்டு கொண்டே செல்லும் என்பதால் பேச்சுவார்த்தையில் ஈடுபட அமெரிக்காவிற்கு அழுத்தம் தர முடியும் என அவர் நம்புவதாக விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
இதற்கு பதிலாக எரிசக்தி, உணவு தானியம் மற்றும் அதி நவீன ஆயுத தொழில்நுட்பம் ஆகியவற்றை ரஷியாவிடம் இருந்து பெற்றுக் கொள்ள வட கொரிய அதிபர் கோரிக்கை விடுப்பார் என்று தெரிகிறது. ரஷியாவிற்கு உதவி செய்து, உலக அரங்கில் தனிமைப்படுத்தப்பட்ட தனது பிம்பத்தை மாற்றி, அமெரிக்காவிற்கு எதிரான வலிமையுள்ள ஒரு நாடாக காட்டி கொள்ளவும் வட கொரியா முயன்று வருகிறது.
இத்தகைய ராணுவ தொழில்நுட்பத்தை பெறுவதால், அமெரிக்கா, தென் கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளை தாக்கும் வல்லமை வட கொரியாவிற்கு அதிகரிக்கும் என்று அந்நாடுகள் அஞ்சுகின்றன.
கடந்த ஜூலை மாதம், வட கொரியா ஏற்பாடு செய்திருந்த அமெரிக்காவை தாக்கும் சக்தி படைத்த ஆயுதங்கள் மற்றும் கண்டம் விட்டு கண்டம் தாவும் ஏவுகணைகள் அடங்கிய கண்காட்சி ஒன்றினை காண ரஷிய ராணுவ அமைச்சர் செர்ஜி ஷோய்கு வட கொரியா சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஜிம்ஜாங் உன், ரஷியாவுக்கு ஆயுதம் தாங்கிய வீரர்கள் பாதுகாப்புடன் ரெயிலில் பயணம் மேற்கொள்ள இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பசிபிக் துறைமுக நகரமான விளாடிவோ ஸ்டாக்கில் இந்த சந்திப்பு நடைபெறலாம் என்று தெரிகிறது.
மாஸ்கோ:
ரஷியா-வடகொரியா நாடுகள் இடையே ஆயுத ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் இம்மாதம் ரஷியாவுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும், ரஷிய அதிபர் புதினை சந்தித்து உக்ரைன் போருக்கு ஆயுதங்களை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து விவாதிக்க உள்ளதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இது தொடர்பான செய்தியை அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் ஊடகம் வெளியிட்டுள்ளது.
ஜிம்ஜாங் உன், ரஷியாவுக்கு ஆயுதம் தாங்கிய வீரர்கள் பாதுகாப்புடன் ரெயிலில் பயணம் மேற் கொள்ள இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு நாட்டு தலைவர்கள் எந்த இடத்தில் சந்தித்து பேசுவார்கள் என்று தெளிவான விவரம் கிடைக்கவில்லை.
ஆனால் பசிபிக் துறைமுக நகரமான விளாடிவோ ஸ்டாக்கில் இந்த சந்திப்பு நடைபெறலாம் என்று தெரிகிறது.
இதுகுறித்து அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தி தொடர்பாளர் அட்ரியன் வாட்சன் கூறும்போது, கடந்த மாதம் ரஷிய பாதுகாப்புத்துறை மந்திரி செர்ஜி ஷோய்கு வடகொரியாவுக்கு பயணம் செய்தார். அப்போது ரஷியாவுக்கு பீரங்கி வெடி மருந்துகளை விற்க வட கொரியாவை வலியுறுத்தினார்.
இந்த ஆயுத ஒப்பந்த பேச்சுவார்த்தையை தலைவர்கள் அளவில் தொடர கிம்ஜாங் உன் எதிர்பார்க்கிறார் என்று எங்களுக்கு தகவல் கிடைத்தது.
ரஷியாவுடன் ஆயுத பேச்சுவார்த்தைகளை நடத்தமாட்டோம். ரஷியாவுக்கு ஆயுதங்களை வழங்கவோ அல்லது விற்கவோ கூடாது என்று வடகொரியா அளித்த பொது உறுதிமொழிகளும், கட்டுபட வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்துகிறது என்றார்.
ரஷியா பாதுகாப்பு மந்திரி, வடகொரியாவுக்கு சென்றபோது புதினும், கிம்ஜாங் உன்னும் அவர்களது கடிதங்களை மாற்றி கொண்டதாக வெள்ளை மாளிகை கடந்த வாரம் தெரிவித்து இருந்தது.
அதேபோல் ரஷியா-வடகொரியா இடையே ஆயுத பேச்சுவார்த்தைகள் தீவிரமாக முன்னேறி வருவதாக வெள்ளை மாளிகை தேசிய பாதுகாப்பு அதிகாரி ஜான் செர்பி கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
உக்ரைன் மீது ரஷியா போர் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் அந்நாட்டுடன் வடகொரியா ஆயுத ஒப்பந்தம் மேற்கொள்ள இருப்பதாக வெளியுறவு தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.