search icon
என் மலர்tooltip icon

    கோவில்கள்

    திருக்குறுங்குடி அருள்மிகு அழகிய நம்பிராயர் திருக்கோவில்
    X

    திருக்குறுங்குடி அருள்மிகு அழகிய நம்பிராயர் திருக்கோவில்

    • இத்தலத்து இறைவனே நம்மாழ்வாராக பிறந்ததாக ஒரு நம்பிக்கை நிலவுகிறது
    • இத்திருக்கோவிலில் சிவனுக்கென்று தனிச் சந்நிதி உள்ளது.

    இறைவன் - அருள்மிகு நின்ற நம்பி (எ) குறுங்குடிநம்பி(எ) வடுக நம்பி (எ) வைஷ்ணவ நம்பி

    இறைவி - அருள்தரும் குறுங்குடிவல்லி

    தீர்த்தம் -திருப்பாற்கடல்

    விமானம் - பஞ்சகேதக விமானம்

    புராணச் சிறப்பு

    வராஹ புராணம் மற்றும் கைசிக புராணத்தில் இத்திருத்தலத்தைப் பற்றியக் குறிப்புகள் காணப்படுகின்றன. வராஹ புராணத்தில் ஸ்ரீ மகாவிஷ்ணு வராஹ வடிவத்தில் ஸ்ரீ லட்சுமி தாயாருடன் தங்கியிருந்து சிறிய குடிகை என்று பொருள்படும் இடமாதலால் குறுங்குடி எனப் பெயர் பெற்றது எனவும், வராஹ அவதாரத்தில் மிகப் பெரிய வடிவத்தில் இருந்த ஸ்ரீ மகாவிஷ்ணு, வடிவில் குறுகிய இடம் என்பதால் குறுங்குடி என்றும் இத்திருத்தலம் பெயர் பெற்றதாகப் புராணச் செய்திகள் தெரிவிக்கின்றன.

    மகாவிஷ்ணு எடுத்த அவதாரங்களில் வாமன அவதாரமும் ஒன்று. வாமனன் என்றால் குறுகிய வடிவினான் என்பது பொருள். அந்த குறுகிய வடிவத்துக்குள்ளே வரம்பில்லாத பூரண தத்துவங்கள் எல்லாமே அடங்கிக் கிடக்கின்றது.; ஆலமரத்தில் உள்ள அற்புத தத்துவங்கள் எல்லாம் தெண்ணீர் கயத்து சிறுமீன் சினையினும் சிறியதான ஒரு வித்துக்குள்ளே அடங்கிக் கிடப்பது போன்று பேரண்டத்திலுள்ள தத்துவங்கள் எல்லாம் தன்னுள் அடங்கிக் கொண்டு இருக்கிறது இந்த வாமன வடிவம்.

    'நம்பாடுவான்' என்கிற பாணர் குலத்தைச் சேர்ந்த தீவிர விஷ்ணு பக்தர் திருக்குறுங்குடி இடத்தை அடுத்த மகேந்திரகிரி மலையிலே வாழ்ந்து வந்தார். அவர் யாழ் வாசிப்பதில் வல்லவர். அவர் கார்த்திகை மாதம் சுக்லபட்ச ஏகாதசி அன்று விரதம் இருந்து இத்தலத்துறையும் இறைவனை தரிசிக்க வருகிறார். வழியிலே பசியோடு இருந்த பிரம்ம இராட்சசன் ஒருவன் நம்பாடுவானை பிடித்துக் கொண்டு அவரை புசிக்கப் போவதாக கூறுகிறான். நம்பாடுவான் நம்பியை தரிசித்து விட்டு வந்து பிரம்ம இராட்சசனுக்கு இறையாவதாக சொல்லி அவரிடமிருந்து விடை பெற்று வந்து, கோவிலின் வாயிலில் நின்று, நம்பியை தரிசிக்க முயலுகிற போது கோவிலின் கொடிமரம் நம்பியை மறைத்தது. ஆயினும் பக்தி சிரத்தையோடு நம்பாடுவான் பாடி வேண்ட. நம்பியும் நம்பாடுவானுக்கு மறைக்காமல் இருக்க கொடிமரத்தை நகரச் சொல்லுகிறார். அதன்படியே அதுவும் நகர்ந்து நம்பியை நம்பாடுவான் தரிசிக்க வகை செய்தது. இதனால் மெய் புளகித்த நம்பாடுவான்,.

    நம்பியைத் தரிசித்த நம்பாடுவான், மகிழ்ச்சியாக பிரம்ம இராட்சசனுக்குத் தான் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றக் காட்டை நோக்கி நடந்தார். அ;ப்போது வயதான பிராமணர் தோற்றத்தில் அங்கே வந்த இறைவன், நம்பாடுவானை தடுத்து நிறுத்தி, அந்தக் காட்டில் ஒரு பிரம்ம இராட்சசன் வாழ்வதாகவும், அவன் அவ்வழியே செல்வோரை தின்று விடுவதாகவும் கூறினார். நம்பாடுவான் அந்த பிராமணரிடம் முன்பு பிரம்ம இராட்சசனுக்குத் தான் கொடுத்த வாக்குறுதியைக் கூறி அதை நிறைவேற்றவே தான் அந்தக் காட்டுக்குள் செல்வதாகக் கூறினார். வயதான பிராமணரின் வாதங்கள் எடுபடாமல் போயிற்று.

    இராட்சசனைத் தேடி காட்டுக்குள் அலைந்த நம்பாடுவான் ஓரிடத்தில் இராட்சசனைக் கண்டு " தான் நம்பியை தரிசித்து தனது விரதத்தை முடித்து விட்டதாகவும், இப்போது தன்னை இரையாக்கிக் கொள்ளலாம்" என்றும் கூறினார். ஆனால் பிரம்ம இராட்சசன் தன்னுடைய பசி அடங்கி விட்டதாகக் கூறி நம்பாடுவானை உண்ண மறுத்து விட்டான். அப்போது நம்பாடுவான் நம்பியைப் பாடி பரிசில் பெற்ற பாதி பழத்தை பிரம்ம இராட்சசனுக்குக் கொடுக்க, அதை உண்ட பிரம்ம இராட்சசன், சாபத்தால் தான் பெற்ற பிரம்ம இராட்சச வடிவிலிருந்து விமோசனம் பெற்றுத், தன் முற்பிறவு வடிவமான பிராமண வடிவத்தைப் பெற்றதாகக் கூறப்படுகிறது.

    தனிச்சிறப்பு

    இத்தலத்து இறைவனே நம்மாழ்வாராக பிறந்ததாக ஒரு நம்பிக்கை நிலவுகிறது..

    திருவாலித்திருநகரில் பிறந்து தலங்கள் பல சென்றுபரந்தாமனைப் பாடிப் பரவிய திருமங்கை மன்னன் இங்கு வந்து தான் திருநாட்டிற்கு எழுந்தருளியிருக்கிறார் (முக்தியடைந்தார்).

    ஸ்ரீ பாஷ்யகாரராம் ராமானுஜர், இத்தலத்திற்கு வந்தபோது இத்தலத்துறை நம்பி ஒரு சிஷ்யன் போல் வந்து அவரிடம் பஞ்ச சம்ஸ்காரம் செய்து கொண்டுஉபதேசம் பெற்றார் என்பது வரலாறு. அவருக்கு ராமானுஜர் இட்டபெயரே வைஷ்ணவநம்பி என்பதாகும்

    ராமானுஜர் திருவனந்தபுரம் சென்று அங்கே வைஷ்ணவ சம்பிரதாயங்களை நிலை நிறுத்த முயற்சித்த போது அச்செயலை அங்குள்ள நம்பூதிரிகள் தடுத்து நிறுத்த, இறைவனை வேண்டியதால் நம்பூதிரிகளிடமிருந்து ராமானுஜரை மீட்டு இத்தலத்திற்கு கருடாழ்வார் தூக்கி வந்ததாகவும் நம்பப்படுகிறது..

    இத்தலத்திற்கு மன்னன் ஒருவன் தரிசனம் செய்ய வந்த போது "கருடன் பறக்கும் இடத்திற்கு கீழே பூமியை தோண்டினால், ஸ்ரீ தெய்வநாயகன் மற்றும் ஸ்ரீவரமங்கை ஆகியோரின் புதைந்துள்ள சிலைகள் கிடைக்கும்" என்ற அசரீரி கேட்டான், அசரீரியின்படி அ;நத இடத்தை தோண்ட மேற்படி தெய்வ ரூபங்களை கிடைக்கப் பெற்றான். அவற்றை நாங்குனேரி வானமாமலை திருக்கோவிலில் அம்மன்னன் பிரதிஷ்டை செய்ததாக செய்தி உலவுகிறது.

    பெரிய பெரிய சிவாலயங்களில் விஷ்ணு இடம் பிடித்திருப்பதைப் போல, இத்திருக்கோவிலில் சிவனுக்கென்று தனிச் சந்நிதி உள்ளது. இங்கே எழுந்தருளியிருக்கும் சிவபிரானுக்கு 'மகேந்திரகிரி நாதர்' என்றும் ' பக்கம் நின்ற பிரான்' என்றும் பெயர்..

    "வெள்ளிறா" என்னும் சாதிமீனை தாய்கொக்கு ஊட்ட, கொக்கின் குஞ்சு உண்ணும் திருக்குறுங்குடி என்னும் இத்தலமானது. எலும்பு மாலையும், புலியின் தோலையும் உடையவரான சிவபெருமானை அருகே இருக்க இடம் கொடுத்து எழுந்தருளியிருக்கின்ற சீலகுணமுடையவரான பெருமாளுடைய திவ்விய தேசமமாம்).

    மேலும், இக்கோவிலுள் நடராஜர், சிவகாமி, சோமாஸ்கந்தர், சுப்ரமணியர், பிள்ளையார் ஆகிய எல்லோரும் செப்புச்சிலை வடிவில் எழுந்தருளியிருக்கின்றனர். மகேந்திரகிரிநாதருக்குப் பக்கத்திலேயே காலபைரவருக்குத் தனிச் சந்நிதி இருக்கிறது.

    அமைவிடம் :

    திருநெல்வேலியிலிருந்து சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் நாங்குனேரிக்கு அருகில் அமைந்துள்ளது. திருநெல்வேலி, நாகர்கோவில், வள்ளியூர், நாங்குனேரியிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன.

    Next Story
    ×