search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய திருவிழா கொடியேற்றம்
    X

    தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய திருவிழா கொடியேற்றம்

    • 442-வது ஆண்டு திருவிழா கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.
    • வருகிற 5-ந்தேதி தேரோட்டம்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் பிரசித்தி பெற்ற தூய பனிமயமாதா பேராலயத்தின் 442-வது ஆண்டு திருவிழா இன்று காலை கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.

    விழாவை முன்னிட்டு காலை 5 மணிக்கு முதல் திருப்பலியும் 5.45 மணிக்கு 2-ம் திருப்பலியும், நடை பெற்றது. அதனைத்தொடர்ந்து தூத்துக்குடி மறை மாவட்ட பிஷப் ஸ்டீபன் தலைமையில் 7 மணிக்கு சிறப்பு திருப்பலியும், 8.30 மணிக்கு பேராலயம் முன்பு உள்ள அலங்கரிக்கப்பட்ட பிரமாண்ட கொடி மரத்தில் அன்னையின் திருக்கொடி ஏற்றப்பட்டது.

    அப்போது தூத்துக்குடி பழைய துறைமுகத்தில் நிறுத்தப்பாட்டிருந்த படகில் இருந்து சைரன் ஒலி இசைக்கப்பட்டது. சமாதானபுறாக்கள் பறக்கவிடப்பட்டது.

    விழாவில் அமைச்சர் கீதாஜீவன், கலெக்டர் லட்சுமிபதி, மாவட்ட போலீஸ் போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், தூத்துக்குடி மாநகர் மேயர் ஜெகன் பெரியசாமி உட்பட ஆயிரகாக்கானோர் கலந்து கொண்டனர்.

    பகல் 12 மணிக்கு முன்னாள் பங்கு தந்தை குமார் ராஜா தலைமையில் பனிமய மாதா அன்னைக்கு பொன்மகுடம் அணிவித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. திருவிழா நாட்களில் தினமும் ஜெபமாலை, திருப்பலி, மறையுரை, நற்கருணை, ஆசீர் ஆகியவை நடைபெறுகிறது,

    திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடிக்கு பல ஊர்களில் இருந்தும் ஏராளமானோர் வருகை தந்துள்ளனர். வருகிற 5-ந் தேதி தேரோட்டம் நடைபெற உள்ளது. திருவிழாவில், இலங்கை, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

    தூத்துக்குடி பனிமயமாதா பேராலயம் மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயமாகும். இந்த தேவாலயம் போர்ச்சுகீசியர்களால் கட்டப்பட்டது.

    இந்த தேவாலயமானது சுமார் 1,500 ஆண்டுகள் பழமையானது என்று கூறப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இங்கு 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    இந்த தேவாலயத்தில் சாதி, மத பாகுபாடு இன்றி தூத்துக்குடி மக்கள் அனைவரும் கொண்டாடும் திருவிழா ஆகும். இந்த ஆண்டு 442-வது ஆண்டு திருவிழா கொண்டாடப்படுகிறது.

    இந்த திருவிழா நாட்களில் உலக நன்மை, உலக சமாதானம், மாணவ-மாணவிகள் கல்விமேன்மை, வியாபாரிகள், மீனவர்கள், பனைத்தொழிலாளர்கள், உப்பளத் தொழிலாளர்கள் என அனைத்து தரப்பினருக்குமான விசேஷ திருப்பலிகள் மற்றும் நற்கருணை பவனி நடைபெறும்.

    இந்த கொடியேற்ற திருவிழாவை முன்னிட்டு 2 கூடுதல் கண்காணிப்பாளர்கள்,5 காவல் துணை கண்காணிப்பாளர்கள், 15 இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார் என 900 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    ஆங்காங்கே சி.சி.டி.வி. காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. விழாவை முன்னிட்டு மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை.

    Next Story
    ×