search icon
என் மலர்tooltip icon

    பொது மருத்துவம்

    விக்கல் ஏன் ஏற்படுகிறது தெரியுமா?
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    விக்கல் ஏன் ஏற்படுகிறது தெரியுமா?

    • பெரும்பாலான விக்கல்கள் காரணம் இல்லாமலேயே தோன்றுகின்றன.
    • நிமிடத்திற்கு நான்கு முதல் 60 தடவைகள் விக்கல் ஏற்படக்கூடும்.

    நமது வயிற்றையும், மார்புப் பகுதியையும், `டயபரம்' என்ற ஒரு பகுதி பிரிக்கிறது. சிலநேரங்களில், அதன் தசைநார்கள் திடீரென்றும், தன்னிச்சையாகவும் சுருங்கி விரிந்து செயல்படுகின்றன. அப்போது ஏற்படுவதுதான் விக்கல்.

    உங்கள் விரும்பமோ, தேவையோ இல்லாமல் உங்கள் கட்டுப்பாட்டையும் மீறி தானாகவே நடக்கும் செயல்பாடுதான் விக்கல். அதாவது, அனிச்சைசெயல்.

    நாம் சாதாரணமாக நாம் சுவாசிக்கும்போது காற்றை உள் இழுக்கிறோம். அப்போது மார்புத் தசைகள் விரிகின்றன. மார்புக்கும் வயிற்றுக்கும் இடையில் நுரையீரலை ஒட்டியுள்ள உதரவிதானமும் அப்போது விரிகிறது.

    சில நேரங்களில், மார்புப் பகுதியில் உள்ள நரம்புகள் உதரவிதானத்தை எரிச்சல்படுத்தினால், அது மூளைக் கட்டுப்பாட்டை மீறி, தன்னிச்சையாகத் திடீர் திடீரென்று சுருங்க ஆரம்பித்துவிடும். அப்போது குரல்நாண்கள் சரியாகத் திறப்பதில்லை.

    சுவாசிக்கும் காற்று குரல்நாண்களின் குறுகிய இடைவெளி வழியாகத்தான் நுரையீரல்களுக்குள் சென்று திரும்ப வேண்டும். அப்போது அந்தக் காற்று, புல்லாங்குழலில் காற்று தடைபடும்போது இசையொலி உண்டாவதைப் போல, தொண்டையில் 'விக்... விக்...' என்று ஒரு விநோத ஒலியை எழுப்புகிறது. இதுதான் 'விக்கல்'.

    விக்கல் நமது உடலுக்கு தேவையான பயனுள்ள ஒன்றுதானா என்றால், `இல்லை' என்பதுதான் பதில். பெரும்பாலான விக்கல்கள் காரணம் இல்லாமலேயே தோன்றுகின்றன. அவ்வாறே தாமாகவே விரைவில் நின்றுவிடுகின்றன. ஓரிரு நிமிடங்களுக்கு மேல் அது நீடிப்பது மிகக் குறைவே.

    அவ்வாறு விக்கல் ஏற்படும்போது, பொதுவாக ஒருவர் நிமிடத்திற்கு நான்கு முதல் 60 தடவைகள் விக்கல் ஏற்படக்கூடும். குறைந்தளவு நேரம் மட்டும் நீடிக்கும் அத்தகைய விக்கல்களுக்கு எவ்வித மருத்துவ சிகிச்சையும் தேவையில்லை.

    ஆனால், சிலருக்கு சில நாட்கள் வரை விக்கல் விட்டுவிட்டு தொடரலாம். இரைப்பையில் அல்சர் இருக்கும்போது, சிறுநீரகம் பழுதாகி ரத்தத்தில் யூரியா அளவு அதிகரிக்கும்போது விக்கல் வரும். உதரவிதானத்தில் நோய்த்தொற்று, கல்லீரல் கோளாறு, நுரையீரல் நோய்த்தொற்று, குடல் அடைப்பு, மூளைக் காய்ச்சல், கணைய அழற்சி, பெரினிக் நரம்புவாதம் போன்றவற்றாலும் விக்கல் வரும். அப்படிப்பட்ட நேரங்களில் உடனடியாக மருத்துவரை அணுகுவதுதான் நல்லது.

    Next Story
    ×