search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    ஆம்னி வேன் ஓட்டி பழகிய 2 சிறுவர்கள் பலி- பெற்றோருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்
    X

    ஆம்னி வேன் ஓட்டி பழகிய 2 சிறுவர்கள் பலி- பெற்றோருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்

    • ஆம்னி வேன் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த கார் மீது நேருக்குநேர் மோதியது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கபிலர்மலை அருகே பெரிய மருதூர் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி (வயது45). விவசாயி. இவரது மகன் மகன் லோகேஷ் (17). அதே பகுதியை சேர்ந்த ராமசாமியின் நெருங்கிய உறவினர் ரமேஷ் (42). இவரமு மகன் சுதர்சன் (14).

    நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் சுதர்சன், லோகேஷ் ஆகிய இருவரும் ஆம்னி வேனை ஓட்டி பழகுவதற்காக வீட்டில் இருந்து எடுத்தனர். ஆம்னி வேனை சிறுவன் சுதர்சன் ஓட்டினார். இருவரும் பரமத்தி சென்றுவிட்டு மீண்டும் கபிலர்மலை நோக்கி வந்துகொண்டு இருந்தனர். கபிலர்மலை பாகம்பாளையம் பிரிவு ரோடு தனியார் பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது ஆம்னி வேன் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த கார் மீது நேருக்குநேர் மோதியது. இதில் லோகேஷ், சுதர்சன் ஆகியோர் உடல் நசுங்கி பலியாகினர். காரை ஓட்டி வந்த கபிலர்மலை அருகே கருக்கம்பாளையம் பகுதியை சேர்ந்த விக்னேஷ் (26) என்பவரும் பலத்த காயம் அடைந்தார்.

    இந்த சம்பவம் குறித்து ஜேடர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இது குறித்த தகவல் அறிந்த நாமக்கல் வட்டார போக்குவரத்து அலுவலர் முருகன் மற்றும் பரமத்தி போக்குவரத்து ஆய்வாளர் சரவணன் ஆகியோர் விபத்து நடந்த பகுதிக்கு விரைந்து வந்து ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் போது சுதர்சன் ஓட்டுநர் உரிமம் இன்றி காரை ஓட்டி விபத்து நிகழ்ந்தது தெரியவந்தது.

    இது குறித்து மோட்டார் போக்குவரத்து அலுவலர் கூறுகையில், 18 வயதுக்கு குறைவான சிறுவர்கள் இருசக்கர வாகனங்கள், கார்கள் ஓட்டுவதற்கு அனுமதி இல்லை. இதனால் காரை ஓட்டி சென்று விபத்து நிகழ்ந்ததற்காக சுதர்சனின் தந்தை ரமேஷ் என்பவருக்கு ரூ.25,000 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட உள்ளது. அபராத தொகையை கட்ட தவறினால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் என தெரிவித்தார்.

    Next Story
    ×