என் மலர்
உள்ளூர் செய்திகள்

பழனி சண்முகா நதியில் வைக்கப்பட்ட வேல் அகற்றப்பட்ட காட்சி.
பழனி சண்முக நதியில் வைக்கப்பட்ட 24 அடி உயர வேல் அகற்றப்பட்டதால் பரபரப்பு
- சண்முக நதி கரையோரம் இருக்கும் வேலை பார்த்தால் பக்தர்களுக்கு ஒரு புத்துணர்ச்சி ஏற்படும்.
- அதிகாரிகள் வேலை இடையூறாக இருப்பதாக கூறி அகற்றியுள்ளனர்.
பழனி:
பழனி கோவில் தைப்பூசத்திருவிழாவுக்காக தற்போது பாதயாத்திரை பக்தர்கள் வருகை அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனைத் தொடர்ந்து வேல் வழிபாட்டுக்குழுவினர் சார்பில் சண்முக நதிக்கரையோரம் பக்தர்கள் வழிபாட்டுக்காக 24 அடி உயர பிரம்மாண்ட வேல் பிரதிஷ்டை செய்யப்பட்டது. கடந்த 3 ஆண்டுகளாக தைப்பூசத்திருவிழாவின் போது இந்த வேலை அவர்கள் வைத்து விட்டு திருவிழா நிறைவடைந்ததும் எடுத்துச் சென்று விடுவார்கள்.
கோவிலுக்கு வரும் பக்தர்கள் அந்த வேல் முன்பு நின்று செல்பி எடுத்தும், குழு புகைப்படம் எடுத்தும் செல்வார்கள். ஆனால் இந்த வேல் பக்தர்களுக்கு இடையூறாக இருப்பதாக கூறி பழனி வருவாய்த்துறையினர், பொதுப்பணித்துறையினர் ஆகியோர் இந்த வேலை அகற்றினர்.
இதனால் பக்தர்கள் மற்றும் வேலை பிரதிஷ்டை செய்த வேல் வழிபாட்டுக்குழுவினர் அதிர்ச்சியடைந்தனர். பழனி நகரில் அரசியல் கட்சியினர் விளம்பர பேனர்கள் கட்டுப்பாடு இல்லாமல் வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து யாரும் புகார் அளித்தாலும் அதனை அகற்ற நடவடிக்கை எடுப்பதில்லை. ஆனால் பழனி பக்தர்களின் வேண்டுகோளை ஏற்று அமைத்த வேல் வைப்பதால் எந்தவித இடையூறும் ஏற்படுவதில்லை.
சண்முக நதி கரையோரம் இருக்கும் வேலை பார்த்தால் பக்தர்களுக்கு ஒரு புத்துணர்ச்சி ஏற்படும். ஆனால் அதிகாரிகள் இதனை இடையூறாக இருப்பதாக கூறி அகற்றியுள்ளனர். எனவே மீண்டும் அதே இடத்தில் வேல் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.