search icon
என் மலர்tooltip icon

    தேனி

    • முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 120.10 அடியாக உள்ளது. 332 கனஅடி நீர் வருகிறது.
    • மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடியில் நீடிக்கிறது.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை மூலம் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசனவசதி பெறுகிறது. 71 அடி உயரம் கொண்ட அணையில் பருவமழை கை கொடுத்ததால் நீர்மட்டம் உயர்ந்தது. இதனை தொடர்ந்து பெரியாறு பாசன பகுதி மற்றும் திருமங்கலம் கால்வாயின் கீழ் உள்ள ஒருபோக பாசன நிலங்களான 1 லட்சத்தி 5 ஆயிரத்தி 2 ஏக்கருக்கு கடந்த செப்.15ம் தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    மேலும் பெரியாறு பிரதான கால்வாய் பாசன பகுதியின் கீழ் உள்ள 45,041 ஏக்கர் இருபோக பாசன நிலங்களின் முதல்போக பாசனத்திற்காக ஜூலை 3ம் தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டது. அதனை தொடர்ந்து மழை பெய்ததால் தண்ணீர் தேவை குறைந்தது. இதனால் கடந்த 14ம் தேதி வைகை அணையில் இருந்து பாசனத்திற்காக திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது.

    கடந்த 2 நாட்களாக தேனி மாவட்டத்தில் மழை பொழிவு இல்லை. இதனால் தண்ணீர் தேவை அதிகரித்துள்ளது. எனவே அணையிலிருந்து பாசனத்திற்கு மீண்டும் 800 கனஅடி மற்றும் மதுரை மாநகர குடிநீருக்காக 69 கனஅடி என மொத்தம் 869 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 56.79 அடியாக உள்ளது. அணைக்கு 971 கனஅடி நீர் வருகிறது. 3018 மி.கனஅடி நீர் இருப்பு உள்ளது.

    முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 120.10 அடியாக உள்ளது. 332 கனஅடி நீர் வருகிறது. அணையிலிருந்து 900 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. 2648 மி.கனஅடி நீர் இருப்பு உள்ளது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடியில் நீடிக்கிறது. அணைக்கு வரும் 100 கனஅடி நீர் அப்படியே திறக்கப்படுகிறது.

    சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.24 அடியாக உள்ளது. அணைக்கு வரும் 30 கனஅடி நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. கடந்த சில நாட்களாக கொடைக்கானலில் பெய்த கனமழையால் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் கடந்த வாரம் சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் தடை விதித்தனர். இன்றும் 7வது நாளாக நீர்வரத்து சீராகாததால் தடை தொடர்வதாக வனத்துறையினர் அறிவித்துள்ளனர். இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

    • 8 குழந்தைகள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தேனி க.விலக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தனர்.
    • டெங்கு காய்ச்சலால் பள்ளி மாணவன் உயிரிழந்துள்ள நிலையில் மேலும் 5 பேர் தேனி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    தேவதானப்பட்டி:

    தேனி மாவட்டம் பெரியகுளம் ஊராட்சி ஒன்றியம் குள்ளப்புரம் ஊராட்சிக்குட்பட்ட 5-வது வார்டு கோபுர தெருவைச் சேர்ந்தவர் நாகராஜ். இவர் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் மோகித்குமார் (வயது 10). ஆண்டிபட்டியில் உள்ள தனியார் பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வருகிறார்.

    கடந்த வாரம் மோகித்குமாருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு டெங்கு காய்ச்சல் உறுதியானதால் தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். மேலும் அதே பகுதியைச் சேர்ந்த 8 குழந்தைகள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தேனி க.விலக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தனர்.

    சிகிச்சையில் இருந்த மோகித்குமார் நேற்று இரவு பரிதாபமாக உயிரிழந்தார். இது அவரது பெற்றோர் மற்றும் உறவினர்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    குள்ளப்புரம் ஊராட்சிக்குட்பட்ட சங்கமூர்த்திபட்டியில் சுகாதார சீர்கேடு இருப்பதாகவும் இது குறித்து உள்ளாட்சி பிரதிநிதிகள் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர். இதனை கண்டித்து சாலை மறியல் போராட்டம் நடத்தப்போவதாகவும் தெரிவித்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் ஜெயமங்கலம் போலீசார் அங்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்துவதாக தெரிவித்தனர்.

    இதனைத் தொடர்ந்து போராட்டத்தை மக்கள் கைவிட்டனர். தற்போது தங்கள் பகுதியில் மருத்துவ முகாம் நடத்தி சுகாதார சீர்கேட்டை களைய நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளனர். டெங்கு காய்ச்சலால் பள்ளி மாணவன் உயிரிழந்துள்ள நிலையில் மேலும் 5 பேர் தேனி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • பல ஆம்னி பஸ்கள் சென்னைக்கு செல்லவில்லை.
    • கனமழை காரணமாக சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் ஆம்னி பஸ்கள் நிறுத்தப்பட்டது.

    மேலசொக்கநாதபுரம்:

    போடியில் இருந்து தேனி, மதுரை, கரூர் வழியாக சென்னைக்கு ஞாயிறு, செவ்வாய், வியாழன் ஆகிய 3 நாட்கள் அதி விரைவு ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. சென்னையில் கனமழை பெய்து வருவதால் பெரும்பாலான ரெயில்கள் ரத்து செய்யப்பட்டும், அட்டவணைகள் மாற்றியமைக்கப்பட்டும் உள்ளது.

    குறிப்பாக தென் மாவட்ட ரெயில்களின் இயக்கம் மாற்றியமைக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று இரவு 8.30 மணிக்கு போடியில் இருந்து சென்னைக்கு புறப்பட வேண்டிய அதி விரைவு ரெயில் முன் அறிவிப்பின்றி ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

    இதனால் ரெயில் நிலையத்துக்கு வந்த பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். பின்னர் டிக்கெட்டை ரத்து செய்து கட்டணத்தை திரும்ப பெற்றுச் சென்றனர்.

    இதே போல் பல ஆம்னி பஸ்கள் சென்னைக்கு செல்லவில்லை. கனமழை காரணமாக சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் ஆம்னி பஸ்கள் நிறுத்தப்பட்டது. இதனால் அவசர தேவைக்காக சென்னை செல்ல கைக்குழந்தை, முதியவர்களுடன் வந்த பயணிகள் சிரமம் அடைந்தனர்.

    அரசு பஸ்கள் மற்றும் மாற்று வாகனங்களில் சென்னை சென்றனர். அடுத்ததாக வியாழக்கிழமை ரெயில் இயக்கப்படுமா? என பயணிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர். 

    • அணைகளின் நீர்மட்டமும் வேகமாக குறைந்து வந்தது.
    • விவசாய பணிகள் மும்முரம் அடைந்துள்ளன.

    கூடலூர்:

    மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் தேனி மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டதால் நீர்நிலைகளில் தண்ணீரின்றி வறண்டது.

    மேலும் அணைகளின் நீர்மட்டமும் வேகமாக குறைந்து வந்தது. இந்த நிலையில் தற்போது மீண்டும் மழை பெய்ய தொடங்கி உள்ளது. இதனால் விவசாய பணிகள் மும்முரம் அடைந்துள்ளன. முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கம்பம் பள்ளத்தாக்கு பகுதி பாசனத்திற்காக கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது மழை பெய்வதாலும், அறுவடை தொடங்கி உள்ளதாலும் தண்ணீரின் தேவை குறைந்துள்ளது.

    இதனால் நேற்று 1333 கன அடியாக இருந்த நீர் திறப்பு 1300 கன அடியாக குறைக்கப்பட்டது. இன்று நீர் திறப்பு மேலும் குறைக்கப்பட்டு தமிழக பகுதிக்கு 1267 கன அடி நீர் திறக்கப்படுகிறது. 260 கன அடிநீர் வருகிறது. அணையின் நீர்மட்டம் 123.35 அடியாக உள்ளது. 3291 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது.

    தமிழக பகுதிக்கு முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டதால் லோயர்கேம்ப் மின் உற்பத்தி நிலையத்தில் மின் உற்பத்தி 117 மெகாவட்டாக குறைந்தது.

    வைகை அணையின் நீர்மட்டம் 55.68 அடியாக உள்ளது. 1181 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 1199 கன அடி நீர் திறக்கப்படுகிறது. 2828 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடியாக உள்ளது. வரத்தும், திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 112.56 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    பெரியாறு 7, மஞ்சளாறு 3, சோத்துப்பாறை 5 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது. வடகிழக்கு பருவமழை வருகிற 15ந் தேதிக்கு பிறகு தொடங்கும் என வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது. மேலும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதால் மழைப்பொழிவு அதிகரித்து அணையின் நீர்மட்டம் உயரும் என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.

    • இடி மின்னலுடன் கூடிய கன மழை இரவு முழுவதும் பெய்தது.
    • அணைக்கு திடீரென நீர்வரத்து 184 கனஅடியாக உயர்ந்தது.

    தேவதானப்பட்டி:

    தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மஞ்சளாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ததால் அணைக்கு திடீரென நீர்வரத்து 184 கனஅடியாக உயர்ந்தது.

    ஏற்கனவே மஞ்சளாறு அணை முழு கொள்ளளவான 57 அடியில் 55 அடியை எட்டி 30 நாட்களுக்கும் மேலாக அதே நிலையில் நீடிக்கிறது.

    அணைக்கு நீர் வரத்து இல்லாமல் இருந்த நிலையில் நேற்று பெய்த கன மழையால் அணைக்கு நீர்வரத்து 184 கனஅடியாக அதிகரித்தது. 184 கன அடி நீரை அப்படியே மஞ்சளாறு ஆற்றில் திறந்து விடப்பட்டது.

    மேலும் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் இன்றும் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் அணைக்கு மேலும் நீர்வரத்து அதிகரிக்கும் என பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் மஞ்சளாற்று கரையோரம் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுத்துள்ளனர்.

    இதேபோல் பெரியகுளம் அதன் சுற்றுவட்டார பகுதியில் கடந்த 20 நாட்களுக்கு மேலாக காலை முதல் மாலை வரை வெயில் சுட்டெரித்து வந்தது.

    இதனிடையே பெரியகுளத்தை சுற்றியுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளான சோத்துப்பாறை வனப்பகுதி, கும்பக்கரை வனப்பகுதி, கல்லாறு வனப்பகுதி உள்ளிட்ட பகுதியில் நேற்று மாலை முதல் கன மழை பெய்தது.

    எ.புதுப்பட்டி, வடுகபட்டி, சில்வார்பட்டி, மேல்மங்கலம், லட்சுமிபுரம், கைலாசபட்டி உள்ளிட்ட பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கன மழை இரவு முழுவதும் பெய்தது.

    மேலும் சின்னமனூர், பாளையம், கோம்பை, கூடலூர், கம்பம் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்ததால் வெப்பம் தணிந்தது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

    முல்லைப்பெரியாறு அணை 126.25 அடியாக உள்ளது. அணைக்கு 570 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து 1511 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    3888 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது. வைகை அணையின் நீர்மட்டம் 57.25 அடியாக உள்ளது. 1441 கன அடி நீர் வருகிறது.

    மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்துக்காக 1199 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. 3097 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது.

    சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 114.30 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    பெரியாறு 17.4, தேக்கடி 12.6, கூடலூர் 8.4, சண்முகாநதி அணை 8.6, உத்தமபாளையம் 5.6, வீரபாண்டி 2, வைகை அணை 38, மஞ்சளாறு 61, சோத்துப்பாறை 12, கொடைக்கானல் 17 மி.மீ மழை அளவு பதிவானது.

    • அதிகாலை நேரம் என்பதால் அப்போது பஸ்சில் இருந்த மாணவர்கள் நன்றாக தூங்கிக் கொண்டிருந்தனர்.
    • க.விலக்கு போலீசார் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வருசநாடு:

    கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உள்ள காப்புக்காடு பகுதியில் தனியார் மெட்ரிக் பள்ளி உள்ளது. இந்த பள்ளியைச் சேர்ந்த 90க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளை காலாண்டு தேர்வு விடுமுறையை முன்னிட்டு தேனி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தளங்களுக்கு 2 பஸ்களில் ஆசிரியர்கள் சுற்றுலா அழைத்து வந்தனர்.

    இன்று அதிகாலை சுமார் 5 மணி அளவில் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியை அடுத்துள்ள குன்னூர் டோல்கேட் பகுதியில் வந்து கொண்டிருந்த போது 46 மாணவர்களை ஏற்றி கொண்டு வந்த ஒரு பஸ் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையை விட்டு இறங்கி வயலுக்குள் தலை குப்புற கவிழ்ந்தது.

    அதிகாலை நேரம் என்பதால் அப்போது பஸ்சில் இருந்த மாணவர்கள் நன்றாக தூங்கிக் கொண்டிருந்தனர். திடீரென பஸ் கவிழ்ந்த நிலையில் இடிபாடுகளுக்குள் சிக்கி அவர்கள் கூச்சலிட்டனர்.

    இந்த சம்பவத்தை கண்ட அப்பகுதி மக்கள் மற்றும் மற்றொரு பஸ்சில் வந்தவர்களும் விபத்தில் சிக்கி காயம் அடைந்த மாணவ-மாணவிகள் மற்றும் ஆசிரியர்களை மீட்டனர்.

    இந்த விபத்தில் காயம் அடைந்த சுமார் 15-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் மற்றும் முத்துமாரி, சரண்யா உள்பட 4 ஆசிரியர்கள் படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவரும் ஆம்புலன்ஸ் மூலம் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    விபத்தில் மாணவர்களான சஞ்சனா (வயது 8), ஸ்டெபி (11), கிருஷ்ணரிஷி (13), சுர்ஜித் (9), ஆதிரா (13), அபிஷேக் (13), ஜெர்வின் ஜீனு (11), ரித்திக் (13), லிபிசா (10), ரோசிக் (11), டிரைவர் புரோசன் (30), ஆசிரியைகள் சுகன்யா (30), சரண்யா (38), தங்கம் (53), ஷோபா (36) உள்பட 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் விரைந்து வந்த க.விலக்கு போலீசார் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நேற்று இரவு கிளம்பிய பஸ் டிரைவர் சரிவர தூங்காததால் இந்த விபத்து நடந்திருக்கலாம் என்று ஆசிரியர்கள் தெரிவித்தனர். 

    • உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வராகும் அனைத்து தகுதிகளும் உள்ளது.
    • தமிழிசை சவுந்திரராஜன் தேவையற்ற கருத்துகளை கூறிவருகிறார்.

    போடி:

    தேனி மாவட்டம் போடியில் அமைச்சர் பொன்முடி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வராகும் அனைத்து தகுதிகளும் உள்ளது. ஆனால் இவரைப்பற்றி தமிழிசை சவுந்திரராஜன் தேவையற்ற கருத்துகளை கூறிவருகிறார்.


    குமரிஆனந்தன் மகள் என்பதை தவிர தமிழிசைக்கு என்ன தகுதி உள்ளது. அவர் இல்லையென்றால் தமிழிசையை யார் என்று கூட தெரிய வாய்ப்பில்லை.

    அமைச்சர் உதயநிதி இளம் பருவத்திலிருந்தே தி.மு.க.வில் உழைத்தவர். இளைஞர் வழிகாட்டியாக உள்ளார். படிக்கும் மாணவ-மாணவிகள் எண்ணிக்கை அதிகரிக்க நான் முதல்வன், புதுமைப்பெண், தமிழ் புதல்வன் உள்ளிட்ட திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்துள்ளார்.

    படிக்கும் போதே தொழில் பயிற்சி அளிக்க வேண்டும் என்பதற்காக மாணவர்களுக்கு உரிய பயிற்சி வழங்கப்படுகிறது. பொறியியல் கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு தொழிற்சாலைகள் மூலம் பாடம் நடத்தும் முறையை உருவாக்கியுள்ளார்.

    உயர்கல்வி பெறவேண்டும் என்பதற்காக 10-ம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்கள் ஐ.டி.ஐ.யிலும், பிளஸ்-2 தேர்ச்சி பெறாதவர்கள் பாலிடெக்னிக் கல்லூரியிலும் சேர்ந்து உயர்கல்வி பெறலாம்.

    உயர்கல்வி சுகாதாரம் ஆகியவற்றை 2 கண்களாக கருதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார். இவ்வாறு அவர் கூறினார்.

    • பெரியகுளம் வடகரை போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.
    • பூசாரி திலகர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    பெரியகுளம்:

    தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை பகுதியில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான பகவதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் திலகர் (வயது 70) என்பவர் பூசாரியாக பணிபுரிந்து வருகிறார். நேற்று மாலை கோவில் முன்பாக விளையாடிக் கொண்டிருந்த 2 சிறுவர், சிறுமிகளுக்கு இனிப்பு வழங்கி கோவிலுக்குள் அழைத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனால் சிறுமி பதறி அடித்து கோவிலில் இருந்து வெளியே வந்து நடந்ததை பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

    இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கோவில் முன்பாக திரண்டனர். இதனை சற்றும் எதிர்பாராத பூசாரி அவர்கள் தன்னை தாக்கி விடுவார்கள் என எண்ணி கோவிலை பூட்டிக் கொண்டு உள்ளே ஒளிந்து கொண்டார்.

    இதனை அடுத்து பெரியகுளம் வடகரை போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து அங்கு வந்த போலீசார் கோவிலுக்குள் ஒளிந்திருந்த பூசாரியை வெளியே அழைத்து வந்தனர். அப்போது அங்கிருந்த பொதுமக்கள் பூசாரியை தாக்க முயன்றனர். இதனையடுத்து போலீசார் கோவில் பூசாரி திலகரை பெரியகுளம் வடகரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். மேலும் பாதிக்கப்பட்ட சிறுவர், சிறுமியரின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் பூசாரி திலகர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    பக்தர்கள் வழிபடும் கோவிலிலேயே குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • நள்ளிரவில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிவிட்டு ஓட்டம்.
    • போடி உட்கோட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் தலைமையில் போலீசார் விசாரணை.

    தேனி மாவட்டம் சின்னமனூர் அ.தி.மு.க., நகர செயலாளராக இருப்பவர் பிச்சைக்கனி (வயது 42). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு மகன் உள்ளனர். இவரது வீடு மற்றும் கட்சி அலுவலகம் இரண்டுமே சின்னமனூர்-குமுளி நெடுஞ்சாலையில் உள்ளது.

    இன்று அதிகாலை 2 மணியளவில் அவரது வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 2 பெட்ரோல் குண்டுகளில் நெருப்பை பற்ற வைத்து வீசினர். அப்போது பயங்கர சத்தம் கேட்டு முன் பகுதி தீ பிடித்தது. இதைப் பார்த்ததும் அங்கிருந்த பிச்சைக்கனி அலுவலகத்தின் காவலாளி மாரியப்பன் அவர்களை துரத்தி பிடிக்க முயன்றார்.

    ஆனால் அவர்கள் மின்னல் வேகத்தில் மறைந்து விட்டனர். சத்தம் கேட்டு வீட்டில் இருந்த பிச்சைக்கனி மற்றும் அருகில் இருந்தவர்கள் திடுக்கிட்டு எழுந்து ஓடிவந்தனர்.

    மேலும் இதுகுறித்து சின்னமனூர் போலீஸ் நிலையத்தில் பிச்சைக்கனி புகார் அளித்தார். சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் ஏ.எஸ்.பி. சுப்பிரமணிய பால சுந்தரா, போடி டி.எஸ்.பி. பெரியசாமி மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர்.

    இதனிடையே பிச்சைக்கனி வீட்டில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் ஏராளமான அ.தி.மு.க.வினர் ஓடினர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.

    பிச்சைக்கனி ஓ.பி.எஸ். அணியில் இருந்து கடந்த 1 வருடத்துக்கு முன்பு எடப்பாடி பழனிசாமி அணியில் இணைந்தார். இதனையடுத்து அவருக்கு நகரச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. அப்போது முதல் கட்சியில் உள்ள ஒரு சிலருக்கும், இவருக்கும் மோதல் போக்கு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக பெட்ரோல் குண்டு வீசப்பட்டதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் சம்பவம் நடந்த பகுதியில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், வணிக நிறுவனங்கள் அதிக அளவு செயல்படுகின்றன. இதனால் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராக்கள் உதவியுடன் பெட்ரோல் குண்டுகளை வீசிய நபர்கள் யார்? என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் எவ்வித பொருட்சேதமோ, உயிர் சேதமோ ஏற்படவில்லை. இச்சம்பவம் சின்னமனூரில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • மோட்டார் சைக்கிளில் கணவாய் பகுதியில் நேற்று இரவு வந்து கொண்டிருந்தபோது சாலையோரம் இருந்த லாரி மீது அவர் பயங்கரமாக மோதினார்.
    • விபத்து குறித்து ஆண்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆண்டிபட்டி, செப்.23-

    மதுரை ஜெய்ஹிந்த்புரத்தை சேர்ந்தவர் அல்லாபக்ஸ் (வயது 41). இவர் அதே பகுதியில் பீரோ, கட்டில் தயாரித்து விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவருக்கு ரூபியாபானு (33) என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். ரூபியாபானு கடந்த சில தினங்களுக்கு முன்பு குழந்தைகளுடன் கம்பத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு வந்தார். மீண்டும் அவரை அழைத்துச் செல்வதற்காக அல்லாபக்ஸ் மோட்டார் சைக்கிளில் மாமியார் வீட்டிற்கு வந்தார்.

    மோட்டார் சைக்கிளில் கணவாய் பகுதியில் நேற்று இரவு வந்து கொண்டிருந்தபோது சாலையோரம் இருந்த லாரி மீது அவர் பயங்கரமாக மோதினார். இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு க.விலக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஆண்டிபட்டி போலீசார் வழக்குப்பதவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.***அல்லாபக்ஸ்.

    • கேரளாவின் பல இடங்களில் உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது.
    • எல்லைப்பகுதியில் வரும் அனைத்து வாகனங்களையும் கடும் சோதனைக்கு பின்னரே அனுமதித்தனர்.

    கூடலூர்:

    கேரள எல்லைப்பகுதியில் முல்லைப்பெரியாறு அணை அமைந்துள்ள போதிலும் தமிழக பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இதில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள தமிழக அதிகாரிகள் செல்லும்போதெல்லாம் கேரள அரசு அதிகாரிகள் பல்வேறு இடையூறுகள் ஏற்படுத்தி வருகின்றனர்.

    மேலும் அணை பலம் இழந்து விட்டதாக அடிக்கடி வதந்தி கிளப்பி வருகின்றனர். கடந்த சில நாட்களாக முல்லைப்பெரியாறு அணை மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. கேரளாவின் பல இடங்களில் உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதனை கண்டித்து தமிழக பகுதியிலும் விவசாயிகள் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

    தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட நீர் ஆதாரமாக உள்ள முல்லைப்பெரியாறு அணை மூலம் 2.57 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மேலும் ஒரு கோடிக்கும் மேற்பட்ட மக்களின் குடிநீர் தேவைகளையும் பூர்த்தி செய்கிறது. வருகிற 1ந் தேதி தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையம் தனது கட்டுப்பாட்டுகள் அணையை கொண்டு வர உள்ளது.

    கேரளாவை சேர்ந்த ஒருவர் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் அடுத்த 12 மாதத்திற்குள் நிபுணர் குழுவை வைத்து மீண்டும் அணையை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும் என மத்திய நீர்வள கமிஷன் பரிந்துரை செய்துள்ளது. இதுபோன்ற ஆய்வு அணை பலவீனமாக உள்ளதாக தொடர்ந்து கூறி வரும் கேரளாவுக்கு சாதகமாகும் என்பதால் தமிழக விவசாயிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த கமிஷன் பரிந்துரையை கண்டித்து இன்று பெரியாறு, வைகை பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் லோயர்கேம்பில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு கேரள அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

    இருமாநில எல்லையில் பதட்டம் ஏற்படும் சூழல் உருவானதால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும் எல்லைப்பகுதியில் வரும் அனைத்து வாகனங்களையும் கடும் சோதனைக்கு பின்னரே அனுமதித்தனர்.

    உச்சநீதிமன்ற உத்தரவு படி பேபி அணையை பலப்படுத்தி விட்டு பெரியாறு அணையை ஆய்வு செய்ய வேண்டும். தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையம், தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பெரியாறு அணையை தன் கைவசம் எடுத்துச் செல்லக்கூடாது. ஆனைவச்சால் கார் பார்க்கிங் பகுதி பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதிக்குள் வருகிறது. ஆனால் போலி அறிக்கை வெளியிட்ட சர்வே ஆப் இந்தியாவை கண்டித்தும் போராட்டம் நடைபெறுவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

    • தமிழக-கேரள எல்லைகளில் கண்காணிப்பு பணியை மேற்கொள்ள தமிழக பொது சுகாதாரத்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
    • நோய் அறிகுறிகளுடன் வருபவர்களை மருத்துவ குழுவினர் கண்காணித்து வருகின்றனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    கேரளாவில் நிபா வைரசால் பாதிக்கப்பட்டு வாலிபர் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து நிபா வைரஸ் பரவலை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    தமிழக-கேரள எல்லைகளில் கண்காணிப்பு பணியை மேற்கொள்ள தமிழக பொது சுகாதாரத்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

    அதன்படி எல்லைப்பகுதிகளில் நோய் பரவல், தடுப்பு நடவடிக்கை மற்றும் கண்காணிப்பு பணியில் சுகாதாரத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தேனி மாவட்டத்தில் உள்ள தமிழக-கேரள எல்லையான குமுளி, போடி மெட்டு, கம்பம் மெட்டு ஆகிய இடங்களில் முகாம் அமைக்கப்பட்டு முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகிறது.

    எல்லைப்பகுதிகளில் தூய்மை பணிகள் மற்றும் நோய் அறிகுறிகளுடன் வருபவர்களை மருத்துவ குழுவினர் கண்காணித்து வருகின்றனர். இந்த சோதனைக்கு பின்னரே அவர்கள் கேரளாவில் இருந்து தமிழக பகுதிக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

    கூடலூர் நகராட்சி நிர்வாகம் சார்பில் குமுளியில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு கொசு மருந்து அடிக்கும் பணி நடைபெற்று வருகிறது. கம்பம், போடி பகுதியில் உள்ள ஆஸ்பத்திரிகளில் நிபா வைரஸ் பாதிப்புக்கான அறிகுறிகளுடன் யாராவது வந்தால் உடனடியாக மாவட்ட சுகாதாரத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மேலும் அவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். 

    ×