search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    திப்ருகர் எக்ஸ்பிரஸ் ரெயில் விபத்துக்கான காரணம் இதுதான்
    X

    திப்ருகர் எக்ஸ்பிரஸ் ரெயில் விபத்துக்கான காரணம் இதுதான்

    • விபத்தில் ரெயிலின் 4 பெட்டிகள் கவிழ்ந்தன.
    • உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் இழப்பீடு.

    உத்தர பிரதேச மாநிலத்தில் பயணிகள் ரெயில் இன்று மதியம் 2.35 மணிக்கு திடீரென தடம் புரண்டது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு அடைந்துள்ளது. சண்டிகரில் இருந்து திப்ரூகர் செல்லும் விரைவு ரெயில் கோண்டா பகுதியில் சென்றபோது தடம் புரண்டது. இந்த விபத்தில் ரெயிலின் 4 பெட்டிகள் கவிழ்ந்தன.

    இந்த விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர். மேலும் 30 பேர் காயமுற்றனர். காயமுற்றவர்களுக்கு அருகாமை மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டது. விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ. 10 லட்சமும், படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ. 2.5 லட்சமும், சிறு காயம் அடைந்தவர்களுக்கு ரூ. 50 ஆயிரம் இழப்பீடு வழங்க ரெயில்வே அமைச்சகம் தெரிவித்தது.

    இந்த நிலையில், திப்ருகர் எக்ஸ்பிரஸ் ரெயில் விபத்துக்கான காரணங்களை ரெயில்வே அதிகாரிகள் அறிக்கையாக சமர்பித்துள்ளனர். அந்த அறிக்கையில், ரெயில் தண்டவாளங்கள் முறையாக பராமரிக்கப்படாதது தான் விபத்து ஏற்பட முக்கிய காரணம் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    தண்டவாளத்தில் ரெயில் பாதைகள் சரியாக கட்டப்படவில்லை. இதன் காரணமாக ரெயில் வரும் போது அவை சீராக இயங்கவில்லை. இதனாலேயே ரெயில் தடம்புரண்டது என அதிகாரிகள் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

    ரெயில் விபத்து ஏற்படுவதற்கு முன்பே தண்டவாளம் சரி செய்யப்பட வேண்டிய நிலையில் இருப்பதாக அலுவலர் ஒருத்தர் ஜூனியர் பொறியாளருக்கு தகவல் தெரிவித்துள்ளார். எனினும், தண்டவாளத்தில் முறையான பாதுகாப்பு முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்படவில்லை. இதன் காரணமாக திப்ருகர் எக்ஸ்பிரஸ் ரெயில் அதிவேகமாக அந்த பகுதியை கடந்த செல்ல அனுமதிக்கப்பட்டு இருக்கிறது.

    பாதிப்பு கண்டறியப்பட்ட பகுதியில் ரெயில் மணிக்கு 30 கிலோமீட்டர் வேகத்தில் கடந்து சென்றிருந்தால், எந்த பாதிப்பும் ஏற்பட்டு இருக்காது. எனினும், ரெயில் அங்கு கடக்கும் போது எச்சரிக்கை தகவல் விடுக்கப்படவில்லை. இதனால், ரெயில் மணிக்கு 80 கிலோமீட்டர் வேகத்தில் அந்த பாதையை கடந்தது. இதன் விளைவாக ரெயில் தடம் புரண்டது.

    விபத்து ஏற்பட என்ன காரணம் என்பதை கண்டறிய வடகிழக்கு ரெயில்வே சேர்ந்த ஆறு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு இருந்தனர். இவர்கள் விபத்துக் களத்தில் ஆய்வு மேற்கொண்டதோடு, ரெயிலை ஓட்டியவர், மேலாளர், ஸ்டேஷன் மாஸ்டர் என பலத்தரப்பினரிடம் விசாரணை செய்தனர். இதன் முடிவிலேயே இந்த தகவல்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

    Next Story
    ×