search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    அவசியம், தரிசிக்க வேண்டிய பூரி ஜெகந்நாதர் கோவில்
    X

    அவசியம், தரிசிக்க வேண்டிய பூரி ஜெகந்நாதர் கோவில்

    • சில அரிய கோவில்கள் பொக்கிஷங்கள் போல் உள்ளன.
    • ஒடிசா மாநிலத்தில் பூரி மாவட்டத்தில் கடற்கரை அருகே அமைந்துள்ளது.

    நான்கு நாள் விடுமுறை கிடைத்து விட்டால் போதும். எங்கே சுற்றுலா செல்லலாம். எங்கே சென்று சாப்பிடலாம் என்றே பெரும்பாலானோர் நினைக்கின்றார்கள். சில அரிய கோவில்கள் பொக்கிஷங்கள் போல் உள்ளன. அவைகளையும் குழந்தைகளோடு சென்று தரிசிக்கலாம். அவ்வகையில் பூரி ஜெகந்நாதர் கோவில் பற்றி இக்கட்டுரையில் அறிந்து கொள்வோமே.

    இந்த கோவில் ஒடிசா மாநிலத்தில் பூரி மாவட்டத்தில் கடற்கரை அருகே அமைந்துள்ளது. இது வைணவ கோவில் ஆகும். இக்கோவிலில் விஷ்ணு பகவான் ஜெகந்நாதராக அருள்பாலிக்கிறார். உடன் சகோதரர் பலராமர், சகோதரி சுபத்திரை உள்ளனர்.

    முகம், கைகள் மட்டுமே காணும் வகையில் மூலவர்கள் உள்ளனர். மூலவர்களின் திருமேனி மரத்தால் உருவாக்கப்பட்டவை. பொதுவில் 12 வருடங்களுக்கு ஒருமுறை திருமேனிகள் புதிய மரத்தால் உருவாக்கப்படுகின்றன.

    இக்கோவில் 12-ம் நூற்றாண்டு (1161) கீழை கங்கர் குல அரசன் ஆனந்தவர்மனால் கட்டப்பட்டு உள்ளது.

    ஒவ்வொரு கோவிலுக்கும் தல வரலாறு ஒன்று உண்டு. அவ்வகையில் இந்த கோவிலின் வரலாற்றினையும் அறிந்து கொள்வோம்.

    ஸ்ரீ கிருஷ்ணரின் மாதத்தினை ஜரா என்ற வேடன் பறவை என நினைத்து அம்பு எய்தினான். ஸ்ரீ கிருஷ்ணர் இப்பூவுலகை விட்டு மறைந்தார். அவரது உடல் மரக் கட்டையைப் போல் ஆனது.

    அச்சமயம் பூரியை இந்திரத்துய்மன் என்ற அரசன் ஆண்டு வந்தான். அந்த அரசனின் கனவில் ஸ்ரீ கிருஷ்ணர், கடலில் மிதந்து வரும் ஒரு பொருளைக் கொண்டு கிருஷ்ணரின் சிலையினை செதுக்குமாறு கூறினார். அரசன் கடலில் சென்று தேடுமாறு ஆட்களை பணிக்க அவர்களும் மிதந்து வந்த பெரிய மரக் கட்டையினை மன்னரிடம் சேர்த்தனர்.

    அரசனும் அந்த மரக்கட்டைக்கு பூஜைகள் நடத்தி தச்சர்களை அழைத்து பெருமாள் சிலையினை செய்யுமாறு கூறினார். தச்சர்கள் உளியினை மரக் கட்டையின் மீது வைத்தவுடன் உளி உடைந்தது.

    அச்சமயம் பெருமாளே அங்கு தச்சனை போல் வேடம் பூண்டு வந்தார். முதியவர் போல் தோற்றம் அளித்தார். 21 நாட்களில் அவர் இந்த சிலை வடிக்கும் வேலையினை முடித்துத் தருவதாகக் கூறினார். ஆனால் அவர் அந்த அறையினுள் அமர்ந்துதான் வேலை செய்வதாகவும் அது வரை சாத்தியிருக்கும்.

    அந்த கதவை யாரும் திறக்க கூடாது என்றும் கட்டளை போட்டார். மன்னரும் அதற்கு சம்மதித்தார். 15 நாட்கள் வரை உள்ளிருந்து சத்தம் வரவே அரசனும் சரி வேலை நடக்கின்றது என்று அந்த அறை பக்கம் கூட போகவில்லை. அதன் அடுத்த மூன்று நாட்கள் எந்த சத்தமுமே கேட்கவில்லை. கவலையில் மன்னரும் கதவை திறந்து விட்டார். தச்சருக்கு கோபம் வந்து விட்டது.

    இந்த கோவிலில் மன்னா நீ ஸ்தாபிக்கும் சிலைகள் அரை குறையாகவே இருக்கும். இருப்பினும் அப்படியே பிரதிஷ்டை செய்து விடு. அப்படியானால்தான் இந்த கோவிலுக்கு வருபவர்கள் வாழ்வில் பொறுமையை கடைபிடிக்க வேண்டும் என்பதை உணருவார்கள் என்று அருள் புரிந்தார்.

    அதன்படி பகவான் ஜெகந்நாதர் பெருமாளின் சகோதரர் பலராமன், சகோதரி சுமத்ரை ஆகியோரின் முழுமையாக நிறைவு பெறாத சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. அதனால் முகம், கைகளை மட்டுமே நம்மால் தரிசிக்க முடியும்.

    இந்த அரசனின் காலத்திற்குப் பிறகு 1135-ல் அரசர் அனந்த வர்மனால் சீரமைப்பு பணி ஆரம்பிக்கப்பட்டு 1200-ல் அவரது பேரன் அனங்காபி மாதேவ் என்பவரால் முடிக்கப்பட்டது. இந்த கோவில் பஞ்சரத விதிப்படி அமைந்துள்ளது. ஆலயத்தின் மேற்கில் எட்டு உலோக கலவையால் செய்யப்பட்ட நீல சக்கரம் உள்ளது.

    இங்குள்ள கொடி மரத்தினை 'பதித பாவனா' என்பர். இதன் பொருள் ஏழைகளுக்கு அருள் புரிபவர் என்பதாகும். இந்த கொடி மரமும், நீல சக்கரமுமே மிகுந்த சக்தி வாய்ந்ததாகக் கூறுவர்.

    நம்மால் விஞ்ஞான ஆய்வால் புரிந்து கொள்ள முடியாத பல ஆபூர்வ விஷயங்கள் இக்கோவிலில் உள்ளன.

    இந்த கோவில் தமிழ் மன்னரால் கட்டப்பட்டு உள்ளது. தமிழ் மன்னர்கள் உலகின் பல இடங்களில் கோவில்கள் கட்டியுள்ளனர். ஆனால் ஒடிசாவில் சென்று கட்டிய காரணம் இன்னமும் கேள்விக்குறியாக உள்ளது.

    இந்த கோவில் போன்ற அமைப்பு வேறு எங்கும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஆயினும் மற்ற இந்துக் கோவில்களுக்கு சற்று மாறாகவே இந்த கோவில் அமைந்துள்ளது எனலாம்.

    12 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த கோவிலில் மூலவர் சிலைகள் புதுப்பிக்கப் படுவது ஏன் என்று தெரியவில்லை.

    பூரி ஜெகந்நாதர் கோவிலின் கோபுர நிழல் சூரியன் எப்படி இருந்த ேபாதிலும் தரையில் படுவதில்லை. தஞ்சை பெரிய கோவிலிலும் இவ்வாறே உள்ளது. இந்த கோவில் கடற்கரை அருகே உள்ளது. ஆனால் கோவில் உள்ளே முதல் படியில் கால் வைத்த பிறகு அலை ஓசை சிறிது கூட கேட்காது.

    கோபுரத்தில் எந்த ஒரு பறவையையும் பார்க்க முடியாது. கோபுரத்தின் மேலும் எந்த ஒரு பறவையும் பறக்காது.

    பொதுவாக கொடி காற்று வீசும் திசையி–லேயே பறக்கும். ஆனால் இக்கோ விலில் கொடி காற்று வீச்சின் எதிர் திசையில் தான் பறக்கும்.

    தேர் திருவிழா

    பூரி ஜெகந்நாதர் கோவிலின் தேர் திருவிழா உலக பிரசித்தி பெற்றது. ஆஷாட மாதம் (ஜூன், ஜூலை) பொதுவில் ஜூலை மாதத்தில் வருடம் தோறும் தேர் திருவிழா நடைபெறும். இந்த திருவிழா பொதுவில் 9 நாட்கள் நடைபெறும்.

    ஒவ்வொரு வருடமும் 45 அடி உயரமும் 35 அடி அகலமும் கொண்ட புதிய மரத்தால் ஆன தேர் உருவாக்கப்படுகின்றது. தேர் திருவிழாவினை முன்னிட்டு 16 சக்கரங்கள் கொண்ட சிகப்பு, மஞ்சள் நிறத் தேரில் ஸ்ரீ கிருஷ்ண பகவானும் (உற்சவ மூர்த்தி பூரி ஜெகந்நாதர் பகவான்)

    14 சக்கரங்கள் கொண்ட சிகப்பு, பச்சை நிறத் தேரில் பலராமரும் 12 சக்கரங்கள் கொண்ட சிகப்பு, கறுப்புத் தேரில் சுமத்ரா தேவியும் வலம் வருவர்.

    இந்த தேரோடும் வீதிக்கு பாரம்பரிய வழிமுறை என்று ஒன்று உண்டு. பூரி மன்னர் தங்கத் துடப்பத்தால் ரத்ன வீதியினை பெருக்கி சுத்தம் செய்வார். பன்னீர், சந்தனங்கள் தெளிக்கப்படும்.

    முதலில் பலராமர், அதன்பின் சுபத்திரை அதன் பின் பூரி ஜெகந்நாதர் என்ற முறைப்படி வலம் வருவர்.

    குண்டிச்சா கோவில் நோக்கி செல்லும் ரத யாத்திரையின் வழியில் மவுசிமா கோவிலில் ஜெகந்நாதர் ஓய்வு எடுப்பார். பின்னர் மீண்டும் ரத யாத்திரை தொடர்ந்து இறுதியாக பூரி ஜெகந்நாதர்கோவிலை வந்தடையும்.

    45 அடுக்கு உயரத்தில் பறக்கும் கோவில் கொடியினை அன்றாடம் மாற்றுவார்கள். இது தவறக் கூடாது. தவறினால் 18 வருடங்கள் நடை சாத்தப்படும் என்கிறார்கள்.

    அதே போல் கோவில் உச்சியில் உள்ள சுதர்சன சக்கரம் ஒருவர் எந்த பக்கம் இருந்து பார்த்தாலும் அவரை பார்ப்பது போலவே இருக்கும்.

    கோவில் பிரசாதம் சமைக்கும் இடத்தில் 7 பெரிய மண் சட்டிகளை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி சமைக்கின்றனர். இதில் மேலே இருக்கும் முதல் மண் சட்டியில் அன்னம் முதலில் தயராகி விடுகின்றது என்பது ஆச்சர்யமே. பூரி ஜகந்நாதரை கலியுகத் தெய்வம் என்கின்றனர்.

    கிருஷ்ண பகவானின் இருதயம் மூலவரின் மர சிலைக்குள்ளே இன்னமும் துடிப்போடு இருக்கின்றது என்பது ஐதீகம். 12 வருடங் களுக்கு ஒரு முறை சிலை மாற்றப்படும் போது விளக்குகள் அணைக்கப்பட்டு இந்த பிரம்ம ரகசியம் புது சிலைக்கு மாற்றப்படு கின்றது என்கின்றனர். வாழ்வில் ஒருமுறை யாவது இந்த கோவிலை சென்று தரிசிக்கலாமே.

    Next Story
    ×