search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    உள்ளம் கவரும் உடுப்பி
    X

    உள்ளம் கவரும் உடுப்பி

    • அமைதியையும் நாடுபவர்களுக்கு ஏற்ற இடம்.
    • உடுப்பி கிருஷ்ண விக்கிரகம் தங்க வைர நகைகளுடன் ஜொலிப்பதைக் காணலாம்.

    கர்நாடக மாநிலத்தில் இயற்கையின் எழிலை பருகு வதற்கு மாத்திரம் அல்லாமல் இறை பக்தியையும் அமைதியையும் நாடுபவர்களுக்கு ஏற்றதொரு இடமாக உடுப்பி மாவட்டம் அமைந்துள்ளது.

    அரபிக் கடலோரம் உள்ள மங்களூர் நகரின் அமைப்பு.. வாழ்க்கை முறை... அங்கு வசிக்கக்கூடிய மக்களின் நவ நாகரீக போக்கிற்கு முற்றிலும் மாறுபட்டு புண்ணிய தலமாக மட்டும் விளங்குகிறது உடுப்பி. இங்கு எப்போதும் இந்தியாவின் பல்வேறு பகுதி மக்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் பரவசத்துடன் கோயிலைச் சுற்றி வலம் வருவதை பார்க்கலாம்.

    பழமையான சாயல் மாறாது இன்னும் ஆன்மீக அடையாளங்கள் அப்படியே வைத்திருக்கிறது உடுப்பி என்று நினைக்கும் போது பக்தர்களுக்கு பகவான் கிருஷ்ணரும்.. சாப்பாட்டு பிரியர்களுக்கு உடுப்பி ஓட்டலும்... நினைவிற்கு வருவதை தடுக்க இயலாது தானே.

    13ஆம் நூற்றாண்டில் துறவி மத்வாச்சாரியார், உடுப்பி கடற்பகுதிக்கு வந்த கப்பலில் நெற்றியிலிடும் கோபி சந்தன உருண்டையில் கிருஷ்ணரின் விக்ரகம் பத்திரப்படுத்தி வருவதை அறிந்து அதை எடுத்து வந்து உடுப்பி ஸ்ரீ கிருஷ்ண மடத்தை நிறுவினார்.

    அழகிய சிறுவன் போல் காணப்படும் உடுப்பி கிருஷ்ண விக்கிரகம் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு அலங்காரத்தில் தங்க... வைர... நகைகளுடன் ஜொலிப்பதைக் காணக் காண பக்தர்களுக்கு பேரானந்தம் அளிக்கும் காட்சியாகும்.

    காலை 4.30 மணியிலிருந்து இரவு 9:30 வரை கோவில் திறந்திருக்கும். ஆனால் பகவான் கிருஷ்ணன் இருக்கும் கருவறை மட்டும் எப்போதும் மூடி இருக்கும்.அந்த கதவிலுள்ள சன்னல் போன்ற நவ துவாரங்கள் வழியாக தான் நாம் கிருஷ்ணரை தரிசிக்க முடியும்.

    இதற்கான சுவாரசியமான வரலாறு உண்டு. தீவிர கிருஷ்ண பக்தரான கனகதாசர் அந்நாளில் சாதி அடிப்படையில் உள்ளே அனுமதிக்க மறுக்கப்பட்டபோது மனம் உருகி கிருஷ்ணரை வெளியே இருக்கும் துவாரம் வழியே தரிசித்து பாட, அவர் பக்திக்கு மயங்கிய கிருஷ்ணர் அவர் இருந்த திசை நோக்கி திரும்பி தரிசனம் அளித்ததாக கூறப்படுகிறது.

    எனவே கருவறை வாயிலில் உள்ள நவ துவாரங்கள் வழியாக உற்று நோக்கினாலும் கருணைக் கடலாக விளங்கும் கருப்பு நிற கண்ணனின் காந்த அழகு உள்ளத்தை கொள்ளை கொள்ளும். இப்படி நவ துவாரங்கள் வழியாக தரிசிப்பதால் நவகிரக தோஷமும் நிவர்த்தி பெறுகிறது என்றும் கூறுகிறார்கள்.

    கோவிலைச் சுற்றி எட்டு உடுப்பி மடங்கள் உள்ளன. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை "உடுப்பி பரியாயம்" என்ற பெயரில் சிறப்பாக கொண்டாடப்பட்டு கோவில் நிர்வாகப் பொறுப்பு 8 மடங்களுக்கும் வரிசையாக அடுத்தடுத்து மாற்றி மாற்றி வழங்கப்படுகிறது.

    இக்கோவிலில் மதியம் மற்றும் இரவு அன்னபிரசாதம் வழங்கப்படுகிறது. பொதுவாக கர்நாடகத்தில் உள்ள குறிப்பாக மங்களூர், உடுப்பி, கொல்லூர், சிருங்கேரி, தர்மஸ்தலா சுப்பிரமணியா போன்ற பல இடங்களிலும் அன்னப்பிரசாதம் நாள்தோறும் வழங்கப்படுவது மிகவும் சிறப்பு.

    இக்கோவில் அருகிலேயே "அனந்தேஸ்வரர் மற்றும் சந்திர மவுளீஸ்வரர்" சிவன் கோவில்கள் உள்ளன. வட்டவடிவமான கட்டட அமைப்பில் அமைந்துள்ள இக்கோவில் ஆயிரம் ஆண்டுகள் பழமையானவை.

    உடுப்பி மாநகரத்திற்கு அடுத்துள்ள மணிப்பால் நகரம் கல்விக்கான மிகப் பெரிய சிறப்பு வாய்ந்த நகரமாக திகழ்கிறது. இங்கு மருத்துவ படிப்பு படிப்பதற்கான கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் மற்றும் மருத்துவத்திற்கான பல துறைகள் சார்ந்த நிறுவனங்கள் பல உள்ளன.

    இங்கு இரவு பகல் எந்த நேரமும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு... படிக்கக்கூடிய பெண்களும் ஆண்களும் சாலைகளில் வலம் வருவதை பார்ப்பதற்கு ஆச்சரியமாக இருக்கும். சில கிலோமீட்டர் தொலைவே இருந்தாலும் உடுப்பியிலிருந்து மணிப்பால் நகர சாலைகள்... கட்டடங்கள்...நகர கட்டமைப்பு அனைத்தும் வித்தியாசமாகவே காணப்படும்.

    அரபிக் கடற்கரை தழுவும் உடுப்பி மாவட்டத்தில் "காப்பு பீச்" கலங்கரை விளக்கம் இருக்கும் பகுதி அனைவரையும் ஈர்க்கக்கூடிய வகையில் சிறந்த பொழுதுபோக்கு கடற்கரையாக உள்ளது.

    அதைப் போன்று உடுப்பி அருகில் உள்ள மல்பே பீச்சும் மீனவர்களின் வாழ்க்கை முறையை சொல்லக்கூடிய இயற்கை துறைமுகமாக மிகவும் புகழ் பெற்று விளங்குகிறது. மாலை நேரங்களில் அந்தி மறைவதை எவ்வித தடங்களும் இல்லாமல் பார்க்க ஏற்ற இடமாக இந்த கடற்கரை இருக்கிறது.

    இங்கிருந்து கடலுக்குள் அரை மணி நேரம் மின்சாரப்படகில் பயணம் செய்தால் "செயின்ட் மேரிஸ் தீவை" அடையலாம். இந்தியாவிற்கு முதன்முதலில் வருகைப் புரிந்த வாஸ்கோடகாமா இங்கே தரை இறங்கினார் என்று சொல்லப்படுகிறது.

    இங்கு இருக்கக்கூடிய பாறைகள் சற்றே வித்தியாசமாக இருப்பதை காணலாம். மிகச் சிறிய தீவாக இருந்தாலும் அங்கு மின்சார படகில் சென்று எட்டுத் திசைச் சுற்றியும் கடல் சூழ மணல்மேட்டில் அமர்ந்து பல விளையாட்டுகளும் போட்டிகளும் வைத்து மக்கள் கொண்டாடி மகிழும் இடமாக இந்த இடம் அமைந்திருக்கிறது.

    இங்கு செல்லும் போது தேவையான உணவு வகைகள் மற்றும் தண்ணீர் உள்ளிட்ட அனைத்தையும் கொண்டு செல்ல வேண்டும்.

    மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் கடற்கரை மணலில் ஆடி ஓடி விளையாடினாலும்... சுற்று முற்றும் பார்க்கும் போது அமைதியான கடல்... சில நேரங்களில் ஆர்பரிக்கும் போது மனதிற்குள் ஒரு அச்சமும் எட்டிப் பார்க்கும் என்பதை மறுக்க இயலாது. இருந்தாலும் அன்றைய நாள் நம் மனதிற்குள் மகிழ்வை கூட்டுவதாகவே அமையும்.

    Next Story
    ×