search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    மகான் மத்வாச்சாரியார்
    X

    மகான் மத்வாச்சாரியார்

    • ஸ்ரீமத்வர் வைணவ மரபைச் சார்ந்தவர்.
    • ஜீவான்மாவும் பரமான்மாவும் வேறு வேறு என்பது மத்வரின் சித்தாந்தம்.

    ஸ்ரீமத்வர் வைணவ மரபைச் சார்ந்தவர். அவரது தத்துவம் துவைதம் எனப்படுகிறது. ஜீவான்மாவும் பரமான்மாவும் வேறு வேறு என்பது மத்வரின் சித்தாந்தம்.

    வாயுவின் அவதாரமே மத்வர் என அவரது அடியவர்கள் நம்புகிறார்கள்.

    தமது இளம் வயதிலிருந்தே மத்வர் பல்வேறு அற்புதங்கள் நிகழ்த்தியதாக அவர் சரிதம் சொல்கிறது.

    மத்வரின் இயற்பெயர் வாசுதேவன் என்பது. வாசுதேவனின் தந்தை ஒருவரிடம் சிறிது கடன் வாங்கியிருந்தார். கடனை உரிய நேரத்தில் திருப்பிக் கொடுக்க இயலவில்லை. ஒருநாள் கடன் கொடுத்தவர் வீட்டு வாசலில் வந்து கத்தத் தொடங்கினார்.

    ஐந்தே வயதான வாசுதேவன் அவரையே உற்றுப் பார்த்தான். பின் அவரைத் தங்கள் இல்லத் தோட்டத்திற்குக் கூப்பிட்டான். புளிய மரத்தடியில் அவரை நிற்கச் சொன்னான். கொஞ்சம் புளியங்கொட்டைகளைச் சேகரித்தான்.

    `நீட்டுங்கள் கையை!` என புளியங் கொட்டைகளை ஒவ்வொன்றாக அவர் உள்ளங்கையில் போடலானான்.

    என்ன ஆச்சரியம்! ஒவ்வொரு புளியங்கொட்டையும் ஒவ்வொரு தங்கக் காசாக அவர் கரத்தில் விழுந்தது. (அவர் எவ்வளவு கடன் கொடுத்தாரோ அத்தனை நாணயங்கள் விழுந்த பிறகு மீதமுள்ளவை வெறும் புளியங்கொட்டைகளாகத் தான் விழுந்தன!)

    அந்த நாணயங்களைக் கண்ணில் ஒற்றிக் கொண்டு பையில் போட்டுக் கொண்ட அவர் வாசுதேவக் குழந்தையின் காலில் விழுந்து வணங்கினார்! வாசுதேவனை ஒரு மகான் என அவர் இனம் கண்டு கொண்டார்.

    சிறுவனாக இருந்தபோதே தன் ஆசிரியர்கள் சொன்ன பாடங்களில் திருத்தம் சொல்லிவந்தான் வாசுதேவன். சலித்துக் கொண்டார் அவன் தந்தை.

    `தந்தையே, இவர்கள் வேதத்திற்குச் செய்யும் வியாக்கியானங்கள் எனக்கு உடன்பாடாக இல்லை. நான் புதிய வியாக்கியானங்கள் செய்து ஒரு புதிய தத்துவத்தை நிறுவுவேன்!` என்றான்.

    `சரிதான். நீ புதிய தத்துவத்தை நிறுவப் போகிறாயா? அப்படி ஒன்று நிகழ்ந்தால் நம் வீட்டு மர உலக்கை கூடத் துளிர்க்கும்!` என்று சிரித்தவாறே சொன்னார் தந்தை.

    வாசுதேவன் விறுவிறுவென்று வீட்டுக்குள் போனான். மர உலக்கையை வெளியே கொண்டுவந்து மண்ணில் நட்டு வைத்தான். உலக்கையின் கீழே தண்ணீர் வார்க்கத் தொடங்கினான்.

    தந்தை பார்த்துக் கொண்டிருக்கும்போதே அந்த மர உலக்கை பச்சைப் பசேல் எனத் துளிர்கள் விட்டு வளரத் தொடங்கியது. பட்டுப்போன வேதாந்தம் மத்வரின் புத்தம் புதிய விளக்கங்களோடு மீண்டும் துளிர்விடப் போகிறது என்பதைப் புரிந்துகொண்ட தந்தை மகனைக் கட்டி அணைத்துக் கொண்டார்.

    வாலிபனானதும் வாசுதேவனுக்குப் பெற்றோர் திருமணம் செய்துவைக்க விரும்பினார்கள். வாசுதேவன் ஒப்புக்கொள்ளவில்லை.

    துறவியாகும் எண்ணத்தில் உடுப்பிக்கு அருகில் இருந்த பண்டார்கரே மடத்திற்குச் சென்று அதன் பீடாதிபதியான அச்சுதப்ரேஷரிடம் சிஷ்யனாகச் சேர்ந்தான்.

    பெற்றோர் வந்து அவனை வீடு திரும்புமாறு வருந்தி வருந்தி அழைத்தார்கள். வாசுதேவனோ துறவியாவதற்குத் தன் பெற்றோரிடம் அனுமதி கேட்டான்.

    அதெல்லாம் வேண்டாம், வீட்டிற்கு வா என திடீரென்று அவன் காலில் விழுந்து வணங்கிக் கெஞ்சினார் அவன் தந்தை.

    `நான் துறவியாக உங்களிடம் அனுமதிதான் கேட்டேன். அதற்குள் நீங்கள் என்னைத் துறவியாகவே ஆக்கிவிட்டீர்களே? மகன் துறவியானால் தானே தந்தை மகன் காலில் விழுந்து வணங்குவார்?` என்று வாதம் செய்தான் வாசுதேவன் .

    தந்தை திகைத்தார். ஆனாலும் `நான் உன் பிரிவைத் தாங்கினாலும், உன் தாய் ஒரே மகனின் பிரிவை எப்படித் தாங்குவாள்?` எனக் கேட்டார். வாசுதேவன் அதற்கும் ஒரு வழி பிறக்கும் என்றான்.

    சிறிது காலத்தில் அந்த வழி பிறந்தது. வாசுதேவனுக்கு ஒரு தம்பி பிறந்தான். தன்மேல் செலுத்திய பாசத்தைத் தன் தம்பிமேல் செலுத்துமாறு கூறி, தாயைச் சமாதானப் படுத்திவிட்டு வீட்டை விட்டு வெளியேறினான் வாசுதேவன்.

    வாசுதேவன் துறவியான பின்னர் பூர்ணபோதர் எனப் புதிய பெயர் பெற்றார். அவரே பின்னாளில் மத்வாச்சார்யார் என அழைக்கப் பட்டார். அவர் துறவியானபோது அவர் வயது பதினாறுதான்.

    உடுப்பியில் கிருஷ்ணர் கோயிலை நிர்மாணித்தார் மத்வர். துவைத தத்துவத்தைப் பரப்புவதற்காக எட்டு மடங்களை நிறுவினார்.

    மொத்தம் முப்பத்தியேழு நூல்களை எழுதினார் மத்வர். அவை அனைத்தும் தொகுக்கப்பட்டு சர்வமூலம் என்ற பெயரில் வழங்கப்படுகின்றன. கீதை உரை, உபநிடத உரை, ரிக்வேத உரை, பாகவதம், மகாபாரதம் தொடர்பான நூல்கள் ஆகியவையும் அந்தத் தொகுப்பில் உண்டு.

    மத்வர் சமூக அளவிலும் பல சீர்திருத்தங்களைச் செய்தார். வேள்விகளில் உயிர்ப்பலி கூடாது என்றார். புலால் உணவைச் சாப்பிடாதீர்கள் என அறிவுறுத்தினார். மது அருந்துவது பாவம் என்று குறிப்பிட்டார்.

    ராஜாராம் மோகன்ராய் தோன்றுவதற்கு வெகுகாலம் முன்பாகவே, உடன்கட்டை ஏறும் வழக்கத்திற்கு வேதத்தில் எந்த ஆதாரமும் இல்லை என்று சொல்லி அந்தக் கொடூரமான வழக்கத்தைக் கண்டித்தார்.

    சங்கீதம் செடிகொடிகளை வளரச் செய்யும் என்று இப்போது சொல்லப்படுகிறது. மத்வர் தன் காலத்திலேயே உள்ளங்கையில் ஒரு விதையை வைத்துக் கொண்டு தன் மதுரமான குரலால் பாட்டுப் பாடி அதை முளைவிட்டு வளரச் செய்தார்.

    பல இடங்களுக்குப் பயணம் செய்து மக்களுக்கு நல்லொழுக்கத்தையும் உயரிய ஆன்மிகத்தையும் போதித்தார். அவரது முகத்தில் தென்பட்ட தெய்வீகப் பொலிவால் ஆட்கொள்ளப் பட்டு, அவர் உரையைக் கேட்டு அதன்வழி நடக்கத் தயாரார்கள் பொதுமக்கள்.

    கீதை சொல்லும் நான்கு வர்ணங்கள் குறித்து மத்வர் தரும் விளக்கம் போற்றத் தக்கது. ஆன்மாவின் உள்ளுணர்வு தொடர்பான விஷயமே ஜாதி என்கிறார் மத்வர்.

    ஜாதி பிறப்பால் வருவதல்ல என்றும் அது அவரவரின் இயல்பால் அமைவதே என்றும் தெளிவாக அறிவிக்கிறார். ஆன்ம நாட்டம் கொண்ட யாரும் இறைவனை அடையலாம் என்பது மத்வ சித்தாந்தம்.

    ஸ்ரீமத்வாச்சாரியார் சீடர்களுக்குக் கல்விபோதித்துக் கொண்டிருந்தார். ஏராளமான கிரந்தங்களை எழுதியவர். அவற்றைப் புரிந்துகொள்வதே கடினம். அப்படியிருக்க யார் அவற்றுக்கு உரையெழுதப் போகிறார்கள்?

    `சுவாமி! உங்களின் கிரந்தங்களுக்கு உரையெழுதப் போகிறவர் யார்?`- ஒரு சீடர் கேட்டார்.

    மத்வாச்சாரியார், `இதோ நாள்தோறும் நான் பாடம் சொல்லும்போது அசைபோட்டுக் கொண்டு உட்கார்ந்திருக்கிறதே இந்தக் காளை மாடு, அதுதான் உரையெழுதும்!` என்றார்!

    சாஸ்திர ஓலைச் சுவடிகளின் சாக்கைச் சுமந்து செல்லும் காளை மாடா உரையெழுதும்? முதுகில் சாஸ்திரங்களைச் சுமந்த மாடு, ஆச்சார்யாரின் போதனைகளை மூளையிலும் சுமக்கிறதா?

    மாடு உரை எழுதுமானால் அது தங்களுக்கு அவமானமில்லையா? மாட்டிற்கு உள்ள அறிவு கூட சீடர்களுக்கு இல்லையே என்றுதானே மக்கள் நினைப்பார்கள்?

    சீடர்களில் ஒருவர் கடும் சீற்றமடைந்தார்.

    `அப்படியானால் இந்தக் காளை மாட்டை நாகப்பாம்பு கடித்து சாகக் கடவது!` என்று சபித்தார். சீடரின் தவச் சக்தி காரணமாக அடுத்த கணம் எங்கிருந்தோ விரைந்து வந்தது ஒரு பாம்பு. காளை மாட்டை ஒரு கொத்துக் கொத்தியது.

    ஸ்ரீமத்வர் உரக்கச் சொன்னார்:

    `என் சீடனின் சாபம் இந்த எருதைப் பாம்பு கடித்து சாகக் கடவது என்பதுதான். அந்த வாக்கியத்தில் சாக வேண்டியது எருதா பாம்பா என்று தெளிவாக இல்லை! என் கிரந்தங்களுக்கு எருது உரை எழுதுவதற்கு முன், என் சீடனின் சாபத்திற்கு இப்போதே நான் உரை எழுதுகிறேன்! இந்த எருதைப் பாம்பு கடித்ததும் பாம்பு சாகக் கடவது!

    மத்வர் இப்படிச் சொன்ன மறுகணம் பாம்பு இறந்துபோயிற்று.

    ஸ்ரீமத்வர் கமண்டலத்தில் இருந்த நீரை எருதின்மேல் தெளித்தார்.

    `எருதின் இதயத்திற்கு அருகில் காதை வைத்துக் கேளுங்கள்!` என்றார். சீடர்கள் எருதின் உடலுக்குள்ளிருந்து ஒலித்த மந்திர சப்தங்களைக் கேட்டு வியந்தார்கள்.

    மத்வர் சொன்னபடியே மறுஜன்மத்தில் எருது ஜயதீர்த்தராகப் பிறப்பெடுத்து மத்வரின் கிரந்தங்களுக்கு உரை எழுதியது என்பது சீடர்களின் நம்பிக்கை.

    பத்மநாப தீர்த்தர், நரஹரி தீர்த்தர், திருவிக்கிரம பண்டிதாச்சார்யார் போன்றவர்கள் மத்வாச்சாரியாரின் நேரடிச் சீடர்கள். பின்வந்த மத்வ சம்பிரதாயத்தைச் சேர்ந்த மகான் ஜெயதீர்த்தர், மத்வரின் எல்லா நூல்களுக்கும் உரை எழுதியிருக்கிறார். ஸ்ரீராகவேந்திரரும் மத்வ மரபில் வந்தவர்தான்.

    மத்வாச்சாரியாரின் மறைவு வித்தியாசமானது. உண்மையிலேயே அவர் காலமாகவில்லை. மறைந்துவிட்டார்.

    தம் எழுபத்தொன்பதாம் வயதில் சீடர்களுக்கு உபநிடதப் பாடம் நடத்தி முடித்தார். அவரைச் சீடர்கள் பார்த்துக் கொண்டே இருந்தார்கள். எங்கிருந்தோ அவர் மேல் ஏராளமான மலர்கள் தூவப்பட்டன.

    மலர்க்குவியல் அவரை முற்றிலுமாக மறைத்துவிட்டது. பின்னர் மலர்களை நீக்கிப் பார்த்தபோது அவரைக் காணவில்லை.

    தம் பணி முடிந்துவிட்டதெனச் சொல்லிக் கொண்டிருந்த அவர், மண்ணுலகம் விட்டு விண்ணுலகம் சென்று விட்டார் என அன்பர்கள் புரிந்துகொண்டார்கள்.

    தம் வாழ்வில் சிறு வயதிலிருந்தே ஏராளமான அற்புதங்களை நிகழ்த்திய மத்வரின் மறைவும் கூட ஓர் அற்புத நிகழ்வாக அமைந்துவிட்டது.

    மத்வாச்சாரியாரின் அருள்சக்தி இன்றும் உலகில் இயங்கிக் கொண்டிருக்கிறது. அவரது அன்பர்கள் அவர் அருளால் இம்மை மறுமைப் பயன்களை அடைந்து வருகிறார்கள். அவர் போதித்த துவைத நெறி இன்னும் ஆன்மிக உலகில் செல்வாக்கோடு திகழ்கிறது.

    தொடர்புக்கு-thiruppurkrishnan@gmail.com

    Next Story
    ×