search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    அதிரடி மன்னன் ஜாக்கிசான்!
    X

    அதிரடி மன்னன் ஜாக்கிசான்!

    • தினமும் ஜாக்கி கடும் உடல் பயிற்சிகளைச் செய்கிறார்.
    • சுறுசுறுப்புடனும் தன் பணிகளைக் கவனித்து வரும் ஜாக்கியை உலகமே உன்னிப்பாகக் கவனித்து வருகிறது!

    உலக மக்கள் அனைவரும் அறிந்து போற்றும் 'பரந்த மனம் கொண்ட துருதுருப்பானவன்' என்ற அர்த்தத்தைத் தரும் சான் காங் சாங்கை உங்களுக்குத் தெரியுமல்லவா?

    தெரியாதா?

    இப்படிச் சொன்னால் தெரியும் என்பீர்கள். உலகம் போற்றும் ஸ்டண்ட் - சூப்பர் - மெகா ஸ்டார் ஜாக்கிசானைத் தெரியுமா?

    ஓ! தெரியுமே என்று சொல்லாதவர் யார்? சான் காங் சாங் என்பது அவரது இயற்பெயர்.

    வறுமையில் வாடியதால், தத்துக் கொடுக்கப்பட்ட பிள்ளையான ஜாக்கிசான் உலகையே தன் திறமையால் தத்து எடுத்துக் கொண்ட வரலாறை அறிய வேண்டியது அவசியம் தானே! இதோ பார்ப்போம் ஜாக்கிசானை இங்கு!

    பிறப்பும் இளமையும்: ஜாக்கிசான் 1954 ஏப்ரல் 7-ம் தேதி ஹாங்காங்கின் பழைய கிரன் காலனியில் உள்ள விக்டோரியா பீக்கில் பிறந்தார். வறுமையோ வறுமை! அப்படிப்பட்ட ஒரு ஏழை குடும்பம்.

    சொல்லப் போனால் அவரது தாயார், பிரசவத்திற்கு உதவிய டாக்டருக்கே குழந்தை ஜாக்கியை 20 டாலருக்கு விற்க எண்ணினார்.

    ஏழு வயது வரையில் பெற்றோர் அவரை வளர்த்தனர். பின்னர் அவரது சிபுவுக்கே (ஆசிரியர்) தத்துக் கொடுக்க முடிவு செய்தனர். ஒரு சொற்பத் தொகையைக் கொடுத்தார் சிபு.

    ஒரு கையில் கசங்கிய ஒரு டாலர் நோட்டு. இன்னொரு கையில் பழங்கள் அடங்கிய பை.

    ஆஸ்திரேலியா செல்லும் விமானத்தில் பெற்றோர் ஏறுவதற்குத் தயாராக இருக்க ஒரு டாலர் கொடுத்து விமான நிலையம் உள்ளே செல்ல அனுமதிச் சீட்டை வாங்கி அவர்களுக்கு விடை கொடுத்து அனுப்பினார் சின்னப் பையனான ஜாக்கி.

    சிபு மிகவும் கடுமையான நடைமுறைகளைக் கொண்டவர். அவர் நடத்தி வந்த பள்ளியில் ஜாக்கிசான் பட்டபாடு பெரும்பாடு. அங்கு சிலம்பம், கராத்தே போன்ற சண்டைக் கலைகளும் குதிப்பது, தாவுவது போன்ற சர்க்கஸ் வேலைகளும் தான் கற்றுத் தரப்பட்டன. காலம் மாறத் தொடங்கவே பள்ளி மாணவர்களை திரைப்படத்துறைக்கு அனுப்பினார் சிபு.

    முதல் நடிப்பு: குட்டையாகவும், குண்டாகவும் இருந்ததால் அவருக்கு நடிக்க அடித்தது ஒரு சான்ஸ்! எதாக நடிக்க வேண்டும்?' அங்கு போய் படுத்துக் கிட, செத்த பிணமாக நடி' என்றார் டைரக்டர். அப்படியே செய்தார் ஜாக்கி சான்.

    ச.நாகராஜன்

    பின்னர் ஸ்டண்ட் காட்சிகளில் அவர் ஈடுபட ஆரம்பித்தார்.

    1971-ல் 'லிட்டில் டைகர் பிரம் காண்டன்' என்ற படத்தில் பெல் பாட்டம் ஜீன்சுடனும் சிறிய மீசையுடனும் முதல் முதலாக திரையில் தோன்றினார் கடுமையாக உழைத்த ஜாக்கிசானுக்கு மளமளவென்று பட வாய்ப்புகள் வர ஆரம்பித்தன.

    அமெரிக்க வெற்றி: ஜாக்கி சான் ஹாலிவுட்டிற்குள் நுழைய பெரும்பாடுபட்டார். ஆனால் அவரை ஹாலிவுட் உள்ளே நுழையவே விடவில்லை. என்றாலும் கூட விடாது செய்த முயற்சியாலும் உழைப்பாலும் 'ரஷ் ஹவர்' படத்தின் மூலம் அமெரிக்காவை அவர் வென்றார். படம் வெளியான 17 நாட்களிலேயே 840 லட்சம் டாலர் வசூலானது. அமெரிக்கவில் முதல் வாரத்தில் மட்டும் 330 லட்சம் டாலர் வசூலானது. இந்தப் படம் வார்னர் ப்ரதர்ஸ் தயாரிப்பு. தனியான ஸ்டண்ட் பாணி, அளவான காமெடி இரண்டும் படத்திற்கு பிரமாண்டமான வெற்றியைத் தந்தது.

    படம் வெற்றி பெற்றவுடன், "இந்த வெற்றிக்காக 15 வருட காலம் காத்திருந்தேன்" என்றார் ஜாக்கி. கடும் உழைப்பு வெற்றியைத் தந்தே தீரும் அல்லவா? அதிரடி மன்னனானார் ஜாக்கிசான்!

    உடம்பில் எத்தனை காயம்!

    ஸ்டண்ட் காட்சிகளில் டூப் போடாமல் தானே நடிப்பார். அதனால் இவர் பட்ட அடிகள் கொஞ்ச நஞ்சமல்ல. இதோ ஒரு சின்னப் பட்டியல்!

    தலைமுடி: 'டிரங்கன் மாஸ்டர் II-ல் அவர் தலைமுடி தீப்பற்றி எரிந்தது

    தலை: 'ஆர்மர் ஆப் காட்' படத்தில் மண்டை ஓடு உடைபட்டது. போலீஸ் ஸ்டோரி - II' படத்திலும் தலையில் அடிபட்டது.

    கண் புருவம்: 'தண்டர் போல்ட்' படத்தில் கார் வெடிக்கும் காட்சியில் இமைகள் தீப்பற்றி எரிந்தன.

    வலது கண்: 'மிராக்கிள்' படத்தில், மூங்கில் குத்தி காயம் ஏற்பட்டது.

    இடது கண்: 'ட்ரங்கன் மாஸ்டரில்' வெட்டுக் காயம் பட்டது.

    வலது காது: 'ஆர்மர் ஆப் காட்' படத்தில் வலது காது கேட்கும் சக்தியில் பாதியை இழந்து விட்டது.

    மூக்கு: 'டிராகன் பிஸ்டில்' மூன்று முறை உடைந்தது

    கன்னம்: 'ரம்பிள் இன் தி பிராங்க்ஸ்' படத்தில் உடைந்த கண்ணாடி பாட்டில்களால் தழும்புகள், வெட்டுக்காயங்கள் ஏற்பட்டன.

    தாடை: பிசகி இருக்கிறது.

    மேல் உதடு: 'பர்ஸ்ட் ஸ்ட்ரைக்கில்' வெட்டுக் காயம். பற்கள்: 'ஸ்னேக் இன் தி ஈகிள்ஸ் ஷேடோ' வில் உடைந்தன.

    கழுத்து: 'ரம்பிள் இன் தி பிராங்க்ஸ்' படத்தில் சுளுக்கு. கழுத்துப்பட்டை எலும்பு: 'சூப்பர் காப்' படத்தில் முறிந்தது. வலது தோள்: 'தண்டர்போல்ட்டில்" அடி

    கை எலும்பு: இரண்டும் முறிந்துள்ளன.

    வலது கை: 'பர்ஸ்ட் ஸ்ட்ரைக்கில்' முறிவு

    வலது, இடது கை: 'போலீஸ் ஸ்டோரியில்' தீக்காயம்

    விரல்கள்: 'விராஜெக்ட் ஏ'யில் ஐந்து விரல்களும் முறிந்தன.

    மார்பு: 'ஆபரேஷன் காண்டர்' படத்தில் எலும்புகள் முறிந்து ரத்தம் கொட்டியது.

    இடுப்பு: 'மாக்னிபிஷண்ட் பாடி கார்டில்' பிசகியது.

    இடது பாதம்: 'சிடி ஹண்டர்' படத்தில் முறிந்தது.

    முன் பாதம்: பலமுறை முறிந்துள்ளது.


    தினமும் ஜாக்கி கடும் உடல் பயிற்சிகளைச் செய்கிறார். பாத்ரூமில் கூட சில விசேஷ பயிற்சிகளைச் செய்வது வழக்கம்.

    குடும்பம்: ஜாக்கிசானின் குடும்பம் பற்றி அவரே ஒரு முறை சொன்னார் இப்படி:

    எனக்கு திருமணம் ஆகி விட்டதா என்று நிருபர்கள் கேட்கும்போது இல்லை என்று சொல்லி விடுவேன். ஏனெனில் இந்தக் கேள்வி முதல் தடவையாக என்னிடம் கேட்கப்பட்டபோது, எனக்கு ஒரு கேர்ள் பிரண்ட் இருப்பதாகச் சொன்னேன். அதைக் கேட்டு என் விசிறிகளில் ஒரு பெண் பாலத்தில் இருந்து குதித்துத் தற்கொலை செய்து கொண்டாள். இன்னொருத்தி என் அலுவலகம் முன்னே விஷத்தைக் குடித்து விட்டாள். ஆகையால் ஜாக்கிரதையாக பதில் சொல்வது என்று முடிவெடுத்து விட்டேன்."

    உண்மையைச் சொல்லுமாறு வேண்டியபோது, "எனக்கு அருமையான ஒரு மனைவி உண்டு. ஒரு மகனும் இருக்கிறான்" என்றார் அவர். ஜாக்கி சான் 1982-ல் ஜோன் லின் என்பவரை லாஸ் ஏஞ்சல்ஸில் மணந்தார்.

    அதே ஆண்டில் பிறந்த அவரது மகனான ஜேஸீ சானும் ஒரு நடிகர். ஒரு இசைக் கலைஞர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர் போதைமருந்து வைத்திருந்தது சம்பந்தமாக கைது செய்யப்பட்டார். 2015 பிப்ரவரியில் அவர் விடுவிக்கப்பட்டார்.

    ஜாக்கிசான் சீனாவில் 2009-ல் இருந்து போதை மருந்தைத் தடுக்கும் தூதுவராக இயங்கி வருவது குறிப்பிடத்தகுந்தது.

    அவருக்கு ஒரு மகள். பெயர் எட்டா.

    ஹாங்காங் நடிகையான எலெய்ன் யீலீ அவருடன் இணைக்கப்பட்டு கிசுகிசுக்கப்பட்டார். ஜனவரி 1999-ல் மகள் எட்டா பிறந்தாள். ஆனால் ஜாக்கியை விட்டுப் பிரிந்து தன் தாயாருடனேயே வாழ ஆரம்பித்தாள் எட்டா.

    அறக்கட்டளை: ஜாக்கிசான் யூனிசெப்-ஆல் நல்லெண்ண தூதுவராக நியமிக்கப்பட்டார்.

    1988-ல் தனது அறக்கட்டளையைத் தொடங்கிய அவர் ஏராளமான நன்கொடைகளை அளித்துக் கொண்டே வருகிறார். விலங்குகள் பாதுகாப்பிலும் அவருக்கு அக்கறை உண்டு. சீனாவில் வெள்ளம் ஏற்பட்டபோதும் 2004-ல் ஏற்பட்ட சுனாமியின் போதும் உடனடியாக அவர் நிவாரண நிதியை அளித்தார், தனது இறப்பிற்குப் பின்னர் தனது சொத்தில் பாதி நன்கொடையாக தேவைப்பட்டோருக்கு வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்திருக்கிறார்.

    படங்கள்: ஜாக்கிசான் சுமார் 200 திரைப்படங்களில் பங்கு பெற்றுள்ளார். நடிகராக, ஸ்டண்ட் மாஸ்டராக, இயக்குநராக இவர் பங்கு பெற்றுள்ள படங்கள் உலகெங்கும் வரவேற்பைப் பெற்றுள்ளன; பெற்று வருகின்றன. ஜாக்கியின் சுமார் 48 படங்கள் 500 கோடி யு.எஸ். டாலரை வசூல் செய்து தந்திருக்கிறது என்பதே மிகப் பெரிய சாதனையாகும்.

    டிரங்கன் மாஸ்டர் (1978) ஹாங்காங்கில் படம் வெளியானதும் வசூலான மொத்த தொகை 80 லட்சம் ஹாங்காங் டாலர்கள். இதில் சிறப்பு அம்சம் குங்பூ காமெடி.

    ப்ராஜக்ட் ஏ (1984) : ஜாக்கிசான் இயக்கி நடித்த படம். சாமோஹங், யூயென் பியாவ், மார்ஸ், டிக்வாய் ஆகியோரும் நடித்துள்ள இந்தப் படம் முதல் வாரத்திலேயே 140 லட்சம் ஹாங்காங் டாலர்களை சம்பாதித்துத் தந்தது.

    போலீஸ் ஸ்டோரி (1985) ஜாக்கிசான் இயக்கி நடித்த படம். இதில் இவர் ஒரு டிடெக்டிவ். முப்பது அடி கம்பத்தில் இருந்து இறங்கும் காட்சியில் மயிரிழையில் தப்பினார் இவர். நவீன யுகத்தின் பிரமாதமான சண்டைப்படம் என்று உலகமே பாராட்டியது இந்தப் படத்தைப் பார்த்து!

    ஆர்மர் ஆப் காட் (1986): ஜாக்கிசான் இயக்கி நடித்த படம். இதில் நடந்த விபத்தில் பாறை ஒன்றில் மோதி மண்டையில் பலமான அடி பட்டது; ஒரு காது கேட்கும் சக்தியில் பாதியை நிரந்தரமாக இழந்து விட்டது. இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். சூப்பர் காப், கிரைம் ஸ்டோரி, தண்டர்போல்ட், நைஸ் கை, 1911, CZ12 உள்ளிட்ட படங்கள் ரசிகர்களைக் கவர்ந்த ஏராளமான படங்களில் சில.

    இவரது அரசியல் அனுபவம் தனி!

    இப்போதும் சுறுசுறுப்புடனும் தன் பணிகளைக் கவனித்து வரும் ஜாக்கியை உலகமே உன்னிப்பாகக் கவனித்து வருகிறது!

    அனுபவ மொழிகள்: கடும் உழைப்பு, தைரியமான ஸ்டண்ட் காட்சிகள், தனக்கென தனி ஒரு பாணி. இதுவே ஜாக்கிசான்!

    ஜாக்கிசான் தன் அனுபவத்தை வைத்து அனைவருக்கும் சொல்லும் பொன்மொழி இது தான்: ஜாக்கிசானைப் போல ஆக வேண்டும் என்று முயற்சி செய்யாதீர்கள். ஒரே ஒரு ஜாக்கிசான் தான் இருக்க முடியும். அதற்கு பதிலாக கம்ப்யூட்டரைப் படியுங்கள்.

    சூழ்நிலைகளை உங்களைக் கட்டுப்படுத்த விடாதீர்கள். உங்கள் சூழ்நிலைகளை நீங்கள் மாற்றுங்கள்.

    Next Story
    ×