search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    திருக்குறள் ஞான அமுதம்
    X

    திருக்குறள் ஞான அமுதம்

    • நமக்கு யாரேனும் இடையூறு செய்தால் அதனைப் பொறுத்துக் கொள்கின்ற பண்பே பொறையுடைமை ஆகும்.
    • நம் உடம்புள்ளே பத்தாம் வாசலாகிய புருவமத்தி இருக்கிறது.

    அதிகாரம்: பொறையுடைமை

    இந்த அதிகாரத்தில் ,

    அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை

    இகழ்வார்ப் பொறுத்தல் தலை.

    என்ற குறளில் தொடங்கி

    உண்ணாது நோற்பர் பெரியர் பிறர்சொல்லும்

    இன்னாச்சொல் நோற்பாரின் பின்.

    என்ற குறள் வரை 10 குறட்பாக்கள் உள்ளன.

    நமக்கு யாரேனும் இடையூறு செய்தால் அதனைப் பொறுத்துக் கொள்கின்ற பண்பே பொறையுடைமை ஆகும். பொறுமைக் கடலாய் விளங்குகின்ற ஞானியர்களை பூஜைசெய்தால், எதையும் பொறுத்துக் கொள்ளும் பண்பு உண்டாகும். கோபம் இருந்தால் யாராலும் ஞானியாக முடியாது.

    எல்லாம் வல்ல இயற்கை அன்னை ஆதிசக்தி, பராசக்தி, அவளே நம் காம தேகத்திற்குள் ஒரு பெரும் சக்தியை வைத்திருக்கின்றள். அவள் நம் உடம்பின் தத்துவத்தை முதன்முதலில் சுப்பிரமணியருக்கே விளக்கினாள்.

    நம் உடம்புள்ளே பத்தாம் வாசலாகிய புருவமத்தி இருக்கிறது. அதன் வழியே சென்றால் சதகோடி சூரிய பிரகாசம் காணலாம். அதனைத் தட்டி எழுப்புவதற்கு பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும். இல்லையென்றால் அந்த சக்தியை தட்டி எழுப்ப முடியாது.

    உலகம் நன்மை அடையும் பொருட்டே சுப்பிரமணியர் தோன்றினார். அவருக்குப்பின் அகத்தீசர், போகமகரிஷி, வள்ளுவர் போன்ற மகான்கள் தோன்றினார்கள். தலைவனின் கருணை இல்லாவிட்டால் கோபம் தீராது, வன்மம் தீராது, பழிவாங்கும் உணர்ச்சி நீங்காது. இதனை நீக்க தலைவனின் ஆசி வேண்டும்.

    குழி வெட்டுபவனைக் கீழே விழாமல் தாங்குகின்ற நிலம் போல் நம்முடைய மனம் புண்படும்படியாக பேசுகின்றவனைப் பொறுத்துக் கொள்ளுதல் வேண்டும். பலர் மத்தியில் இடரி பேசிவிட்டால் தன்மான உணர்ச்சி மேலோங்கி மிகுந்த கோபம் கொள்வார்கள். அவற்றைப் பொறுத்துக் கொள்ளுதல் உயர்ந்த பண்பாகும்.

    தன்மான உணர்ச்சி கோபத்தை அதிகப்படுத்தி மீண்டும் பழிவாங்கும் எண்ணத்தை உண்டாக்கும். அவ்வாறு பழிவாங்கினால் அது மீண்டும் பிறவியை உண்டாக்கும்.

    குடும்பத்தின் நிலையை உயர்த்துகின்ற நல்ல இல்லறத்தான் உணர்ச்சி வசப்படமாட்டான். தவத்தில் ஈடுபடுபவர்களும் பொறுத்துக் கொண்டால்தான் தவம் வெற்றியடையும். இல்லையென்றால் மீண்டும் பிறவி வந்துவிடும். ஞானிகள் சாந்த சொரூபமாக இருந்தே மரணத்தை வென்றார்கள்.

    ஒருவர் இடரிப் பேசினால் நம் சிந்தையை விட்டு அகலாது அதே ஞாபகமாக இருக்கும். அதனை பொறுத்துக் கொள்வதே கடினம். அதனை மறப்பது சாத்தியமாகாது. ஆனால் தலைவனின் திருவடியை பற்றியவர்களுக்கு நமது தீவினை கழிவதாக நினைத்து அமைதியாக இருக்க முடியும்.

    ஞானிகள் நம்மிடம் உள்ள குணக்கேடுகளை உணர்த்துவார்கள். திருவருள் இல்லாதவர்கள் காமத்தாலும், கோபத்தாலும் தவறு செய்வார்கள். தன்னுடைய தவறுக்கு நியாயம் கற்பிப்பார்கள். அதனால் அவர்கள் அறிவு மழுங்கிவிடும்.

    தேசிக சுவாமிகள்


    தேள், பாம்பு மற்றும் மிருகங்களுக்கு நாம் இடையூறு செய்தால் நம்மை கடிக்கும். எல்லா ஜீவராசிகளிடமும் கோபம் என்பது இயல்பாகவே உள்ளது. மனிதனுக்குக் கோபம் வந்தால் அதனை மாற்றிக் கொள்கின்ற மனப்பக்குவம் உண்டு. அந்த ஆறாவது அறிவாகிய பகுத்தறிவு, திருவருள் துணை இல்லாமல் வேலை செய்யாது.

    புண்ணிய பலமும் பக்தியும் இருந்தால் அறிவு மேன்மேலும் வளரும். எல்லாவிதமான குணக்கேடுகளும் மறையும், அறிவு முதிர்ச்சியடையும். சினம் வந்தாலும் மாற்றிக் கொள்வார்கள். சினத்தை இல்லாது செய்து விடுபவர் ஞானி. பொறுத்துக்கொள்பவன் பண்பாளன். அடக்கிக் கொள்பவன் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக அடக்கிக் கொள்வான்.

    சினம் பிறவிக்கு காரணமாக உள்ளது. இந்த சினம் எல்லாம்வல்ல இயற்கை உயிரினங்களை தோற்றுவித்ததிலிருந்தே வந்தது. பொறாமை மனித வர்க்கம் தோன்றியபோதே வந்தது. இந்த குணக்கேடுகள் அனைத்தும் காம தேகத்தால் வந்த கேடுகள்.

    இருக்கிறவரை இந்த குணக்கேடுகள் இருக்கும். பசி இல்லாமல் போனால் ஆன்ம ஜோதி தோன்றும். சினத்தைப் பற்றி நாம் அறிந்து கொள்ள குணக்கேடுகள், நம்மை அறிந்து கொள்வதற்காகவே உள்ளது.

    புண்ணியம் செய்தவர்களுக்கு கோபம் அதிகமாக வராது. கோபம் மிகுதியாக உள்ளவர்கள் மூர்க்கத்தனமாக இருப்பார்கள். தணியாத கோபம் பாவத்தின் சின்னம். இத்தகைய கோபத்தால் பலர் கைகால்களை இழந்திருப்பார்கள். சுற்றத்தாரையும், மனைவி மக்களையும் இழந்திருப்பார்கள், சிறை சென்றிருப்பார்கள்.

    கோபம் மிகுதியாக உள்ளவர்களுக்கு ரத்தக் கொதிப்பு, மலச்சிக்கல் உண்டாகும். உடல் நிலை வெகுவாக பாதிக்கப்படும். எனவே மனதை சாந்தமாக வைத்திருப்பது உடல் நலத்திற்கு நல்லது.

    புலால் உண்ணுகின்ற மக்களுக்கு வன்மனம் உண்டாகும். ஜீவதயவு அற்றுப் போகும். அவர்களுக்கு மனம் சாந்தமாக இருக்காது.

    பிறர் செய்யும் தீமைகளை பொறுத்துக் கொள்கின்ற பண்பு உயர்ந்த பண்பு. பிறர் நமக்கு செய்யும் தீமையை மறப்பது அதைவிட உயர்ந்த பண்பாகும். குடும்பத்தில் அமைதியாக வாழ விரும்புபவர்களும் ஜென்மத்தை கடைத் தேற்றுபவர்களும் தலைவன் மீது பக்தி கொண்டு உருகி பூஜை செய்தும், பிறருக்கு புண்ணியம் செய்தும், கோபத்தையும் வன்மனத்தையும் அகற்றி பேரின்ப நிலையை எட்ட முடியும். அதற்கு தலைவனின் திருவடியே கதி, வேறு வழியில்லை.

    அதிகாரம்: அழுக்காறாமை

    இந்த அதிகாரத்தில் ,

    ஒழுக்கறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து

    அழுக்காறு இல்லாத இயல்பு.

    என்ற குறளில் தொடங்கி

    அழுக்கற்று அகன்றாரும் இல்லை, அஃதுஇல்லார்

    பெருக்கத்தில் நீர்த்தாரும் இல்.

    என்ற குறள் வரை 10 குறட்பாக்கள் உள்ளன.

    அழுக்காறாமை என்பது பொறாமை. பொறாமை மனதை மாசுபடுத்தக்ககூடியது. வன்மனம் மிக்கவர்களுக்கு இத்தகைய குண இயல்பு மிகுதியாக காணப்படும். பொறாமை என்பது இன்றளவும் நாட்டுக்கு நாடு, வீட்டுக்கு வீடு, உறவினர்களுக்குள்ளும், பிச்சைக்காரர்களிடமும், சாமியார்களிடத்திலும் பொதுவாக சமுதாயத்தில் எல்லா இடங்களிலும் பரவி உள்ளது.

    இத்தகைய கீழான பொறாமைக் குணம் மற்ற ஜீவராசிகளிடம் கிடையாது. ஆறறிவு படைத்த மனிதர்களிடமே அதிகமாக காணப்படுகிறது. பொறாமை ஏற்பட்டால் தீமை ஏற்படும்; பாவம் சூழும்; மீண்டும் பிறவியை உண்டாக்கி விடும். குணக்கேடுகள் இருந்தால் செல்வம் குறையும்.

    தங்களிடம் உள்ள பொறாமைக் குணத்தால் பிறருக்கு கிடைக்கக் கூடிய நன்மைகளையும், உதவிகளையும் நல்ல காரியங்களையும் கெடுத்துவிடுவார்கள். அவ்வாறு தீமைசெய்பவர்களுக்கு உணவு, உடை இல்லாது போவதுடன் மட்டுமல்லாமல் அதேநிலை அவரைச் சார்ந்த சுற்றத்தாருக்கும் ஏற்படும்.

    பொறாமையால் வஞ்சகம் செய்து ஒருவருக்கு கெடுதல் செய்வது தீராத பழியை உண்டாக்கும். நேற்றுவரை இகழ்ந்து பேசியவர்கள், திடீரென்று வணக்கமாகவும் பணிவாகவும் இருப்பார்கள். அத்தகையவர்களிடம் எச்சரிக்கையாக பழகுதல் வேண்டும்.

    அவர்களின் செயல், வில் எந்த அளவு வளைகின்றதோ அந்த அளவு அதன் அம்பு வேகமாகச் சென்று தாக்கும். அதுபோன்ற கொடுமையைச் செய்வார்கள். அறிவுள்ள மக்கள், எதிரிகள் பேசுவதில் உள்ள உள்அர்த்தங்களைப் புரிந்து கொள்வார்கள். ஒரு செயலை செய்தால் அதனை திட்டமிட்டு சிந்தித்து செய்யவேண்டும்.

    அரைகுறையாக செய்தால் வெற்றி காணமுடியாது. மற்றவர்களின் முன்னேற்றத்தைக் கண்டு பொறாமைப்படுதல் கூடாது. தலைவனை பூஜை செய்து ஆசி பெற்றிருந்தால் இத்தகைய குணக்கேடுகள் ஏற்படாது.

    பொறாமை எனும் தீய பாவத்தால் நண்பன் பகைவனாவான். நம்மை அழிக்க கூடிய துரோகியின் மீது நம்பிக்கை ஏற்பட்டு நாம் அழியும் நிலை ஏற்படும். ஞானமார்க்கத்தில் தீய குணம் இருந்தால் வறுமை தொடர்ந்து நீடிக்கும்.

    சாப்பிடுகின்ற சாப்பாட்டிற்கு அல்லல்படுகின்ற நிலை ஏற்படும். தம்மிடம் பக்தி செலுத்துகின்ற தொண்டர்களையும், அன்பர்களையும் சந்தேகப்பட்டு அவர்களை அப்புறப்படுத்தும் நிலை உருவாகும்.

    காமஉணர்வு மேலோங்கும், மனம் சாந்தப்படாது, தலைவனை உருகி தியானம் செய்ய முடியாமல் போகும், உடல்நிலை பாதிக்கப்படும், நல்ல வழிகாட்டுதல் இருக்காது, உண்மைப் பொருள் எதுவென்று தெரியாது, முழுமை அடைய முடியாமல் போய்விடும், செல்லுகின்ற பாதையில் முன்னேற்றம் இருக்காது. தலைவனை நெருங்க நெருங்க நம்முடைய குணக்கேடு நீங்கி தலைவன் நமக்கு அருள் செய்வான்.

    பூஜையும் புண்ணியமும் செய்யச் செய்ய குணக்கேடுகள் நீங்கி நல்ல அறிவு உண்டாகும். எடுத்துக் கொண்ட காரியங்கள் வெற்றியடையும்.

    அதிகாரம்: தீவினை அச்சம்

    இந்த அதிகாரத்தில் ,

    தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்

    தீவினை என்னும் செருக்கு.

    என்ற குறளில் தொடங்கி

    அருங்கேடன் என்பது அறிக மருங்கோடித்

    தீவினை செய்யான் எனின்.

    என்ற குறள் வரை 10 குறட்பாக்கள் உள்ளன.

    தீவினை அச்சம் என்பது பாவம் செய்ய பயப்படவேண்டுமென்பது. பெரு மிருகங்கள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொள்ளும், தங்களுக்குள். ஒன்று மற்றொன்றை கொன்றுவிடும். அவைகளுக்கு நல்வினை தீவினை தெரிவதில்லை. அவைகளுக்கு யாரும் உணர்த்துவதும் இல்லை.

    ஆனால் மனிதர்களுக்கு மட்டும் தீவினை செய்தல் கூடாது என்று உணர்த்தப்படுகிறது. நாம் செய்கின்ற தீவினைக்கு தண்டனை உண்டு. அஞ்சாமல் துணிந்து தீயவை செய்தால் நம்மை வருத்துகின்ற எல்லாத் துன்பங்களுக்கும் அதுவே காரணமாக இருக்கிறது. கை கால் ஊனமாகப் பிறப்பது, பிச்சை எடுக்கின்ற நிலைமை உருவாவது போன்ற துயரங்களுக்கு அவர்கள் செய்த தீவினையே காரணம்.

    ஞானிகளை பூஜை செய்தால் நாம் செல்லுகின்ற பாதை நல்லவையா? கெட்டவையா? எனத்தெரிந்து நல்லதை மட்டுமே செய்யலாம். தொன்றுதொட்டு பல பிறவிகளில் பாவம் செய்து வன்மனம் உள்ளவர்கள், துளியும் கருணையில்லாது பிறருக்கு கொடுமை செய்வார்கள்.

    மேலான மக்கள் தீவினை செய்ய அஞ்சுவார்கள். சான்றோர்கள் தொடர்பு இருந்தால் தீமை செய்ய மாட்டார்கள். சிறுவயதிலேயே கொடுமையான நோய்க்கு ஆளாவது முன் செய்த பாவமே. உயிர்க்கொலை செய்தால் மூர்க்கத்தனம் உண்டாகும்.

    அதனால் பாவம் சூழ்ந்து குடும்ப வாழ்வு கெடும், நோய் சூழும். சான்றோர்கள் தொடர்பு இருந்தால் புண்ணியம் செய்ய சொல்வார்கள். அப்போது நம்முடைய தீவினை அகலும், தன்னைப் பற்றி சிந்திக்கும் சிறப்பறிவு உண்டாகும். நாம் பிறருக்கு நன்மை செய்யும் குணப்பண்பு உண்டாகும். திருமகள் கடாட்சம் பெற வேண்டுமாயின் பூஜையும் புண்ணியமும் அவசியம்.

    சாதி மதத்தால் மக்கள் அல்லலுறும் சூழ்நிலை அதிகமாகிக் கொண்டுள்ளது. மக்களிடம் ஒருவருக்கொருவர் உதவி செய்யும் மனப்பான்மை வளர வேண்டும். இல்லையேல் கொலை, கொள்ளை போன்ற சம்பவங்களால் அன்றாட வாழ்க்கையில் நிம்மதி கெடும். பகைமை உணர்ச்சி மேலோங்கும். அத்தகைய குணக்கேடு நீங்க வேண்டுமாயின் புண்ணியமும் பூஜையும் சிறந்தது.

    Next Story
    ×