search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    இசை அரசி எம்.எஸ்.சுப்புலட்சுமி
    X

    இசை அரசி எம்.எஸ்.சுப்புலட்சுமி

    • கல்கி தன் வாழ்நாள் முழுவதும் எம்.எஸ்.சின் இசையைப் போற்றி வந்தார்.
    • பாடலைப் பாடி பிரத்யேகமாக அதை அவர் டெல்லிக்கு அனுப்பினார்.

    ராக தேவதைகள் அனைவரும் ஒன்று கூடி இணைந்து உலக மக்களை தங்கள் பால் ஈர்த்து அருளாசி நல்க அங்கயற்கண்ணி ஆலவாய் மதுரையில் ஒரு உடலில் புகுந்து விட்டது தெரியுமா என்று சொன்னால் உடனே,' ஓ, எம்.எஸ்.-ஐ சொல்கிறீர்களா' என்று அனைவரும் மகிழ்ச்சியுடன் சொல்வதில் வியப்பில்லை.

    பிறப்பும் இளமையும்: மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி 1916-ம் ஆண்டு செப்டம்பர்

    16-ம் தேதி மதுரையில் பிறந்தார். (குஞ்சம்மா என்பது செல்லப் பெயர்) தந்தை சுப்ரமண்ய ஐயர் ஒரு வழக்கறிஞர். தாயின் மூலம் சங்கீதத்தில் ஈர்ப்பு கொண்ட எம்.எஸ். சுயம்புவாக இளமையிலிருந்தே சங்கீதத்தில் உயரப் பறக்கலானார்.

    முதல் கச்சேரி: 11 வயதாகும் போதே திருச்சி மலைக்கோட்டையில் எம்.எஸ்.சின் முதல் கச்சேரி நிகழ்ந்தது. பிரபல வித்வான்களான சவுடையா வயலின் வாசிக்க தட்சினா மூர்த்தி பிள்ளை மிருதங்கம் வாசிக்க இசை அரசியின் இசை பிரவேசம் நடைபெற்றது. அடுத்து 1929-ல் சென்னை மியூசிக் அகாடமியில் நடைபெற்ற கச்சேரி அவரை ஒரு அபூர்வமான இசை மேதை என்பதை அடையாளப்படுத்தி விட்டது.19 வயதாகும் போது அவர் இசையில் உயர்நிலையில் காலடி எடுத்து வைத்து விட்டார்.

    1936-ல் அவர் சென்னைக்கு வந்து தியாகராஜன் என்ற சதாசிவத்தை சந்திக்கவே அவர் எம்.எஸ்.சுக்கு உதவி செய்ததோடு அவருக்கு திரைப்பட வாய்ப்புகளையும் ஏற்படுத்திக் கொடுத்தார்.

    குருவின் ஆச்சரியம்: செம்மங்குடி சீனிவாசையரை குருவாகக் கொண்டு இசையைக் கற்றார் எம்.எஸ். அவரது அற்புதமான குரல் வளத்தையும் அபூர்வமான இசை ஞானத்தையும் கண்டு வியந்த செம்மங்குடி அவருக்கு நல்லாசி கூறினார். கடினமான கர்நாடக இசை ராகங்களை நுட்பமாக அவர் ரசிகர்கள் முன் படைத்தது இசை ரசிகர்களுக்கு புதிய பரிமாணங்களைக் காண்பித்தது. ஆன்மீகத்திற்கு குருவான காஞ்சி பரமாசார்யாரை அவர் வரித்தார். நிறைவான வாழ்க்கை வாழ்ந்த அவர், குறை ஒன்றுமில்லை என்ற ராஜாஜி அவர்கள் இயற்றிய கீதத்தைப் பாடியுள்ளது குறிப்பிடத்தகுந்தது.

    திருமணம்: அடுத்து 1940-ல் தி. சதா சிவத்துடன் அவரது திருமணம் திருநீர்மலையில் நடைபெற்றது. வாழ்நாள் முழுவதும் கணவருடன் மனமொப்பிய மனைவியாக இருந்து உயரிய எடுத்துக்காட்டாக அவர் வாழ்ந்தது குறிப்பிடத்தகுந்தது.

    திரைப்படத்தில் இசை நட்சத்திரம்!

    1938-ல் இயக்குநர் கே.சுப்ரமண்யம் இயக்கி, வெளியான சேவாசதனம் படத்தில் முதன்முதலாக எம்.எஸ். நடித்தார். புகழ் பெற்றார்.

    அடுத்து சகுந்தலை (1940), சாவித்திரி (1941) எல்லிஸ் ஆர். டங்கனின் இயக்கத்தில் வெளி வந்த மீரா (1945), மீராபாய் (1947) ஆகிய படங்கள் வெளியாகி அவரைப் புகழேணியில் உச்சத்திற்குக் கொண்டு சென்றன. மீரா படத்தில் அவர் பாடிய 'பிருந்தாவனத்தில் கண்ணன் வளர்ந்த' பாடல் கல்கி அவர்களால் எழுதப்பட்ட பாடல். கல்கி தன் வாழ்நாள் முழுவதும் எம்.எஸ்.சின் இசையைப் போற்றி வந்தார்.

    காற்றினிலே வரும் கீதம், கிரிதர கோபாலா உள்ளிட்ட எம்.எஸ்.-இன் திரைப்படப் பாடல்கள் இன்றளவும் ரசிகர்களால் விரும்பிக் கேட்கப்படுகின்றன.

    இந்தியில் வெளிவந்த பக்த மீரா வட இந்தியாவையே முற்றிலுமாக எம்.எஸ். பால் ஈர்த்து விட்டது. பண்டிட் ஜவஹர்லால் நேரு தானே முன்னிருந்து அதனுடைய பிரத்யேக காட்சியை சிறப்பாக நடத்தி வைத்தார். வாயிலில் நின்று நிகழ்ச்சிக்கு வந்த மவுண்ட்பேட்டன் பிரபு, லேடி மவுண்ட்பேட்டன் உள்ளிட்டோரை தானே வரவேற்றார் அவர்.

    ச.நாகராஜன்

    எம்.எஸ். ஐ குறித்து அவரிடம் சொல்கையில், "நீங்கள் இசைக்கு ராணி. நானோ ஒரு சாதாரண பிரதம மந்திரி தானே" என்றார் அவர்.

    சரோஜினி தேவியார் மேடையில் ஏறி உள்ளம் நெகிழ்ந்து அவரைப் புகழ்ந்து பாராட்டிப் பேசினார்.

    பக்த மீரா படத்தை ஆரம்பமாகக் கொண்டு எம்.எஸ்.சின் தெய்வீகப் பஜனைப் பாடல்கள் நாடெங்கும் பரவி குமரி முதல் இமயம் வரை ஒலித்தது.

    காந்திஜியின் பிரமிப்பு: எம்.எஸ்.சின் இசையை வார்தாவில் பிரார்த்தனைக் கூட்டத்தில் பாடக் கேட்ட காந்திஜி பெரிதும் பிரமித்தார். அவரது இசைமீது அபார பற்று கொண்டார். வைஷ்ணவ ஜனதோ என்ற பாடல் அவருக்கு மிகவும் பிடித்தமானது.

    அவர் எம்.எஸ்.சிடம் "நீங்கள் பாடக் கூட வேண்டாம் பாடல் வரிகளைச் சொன்னாலே போதும்" என்று அவர் குரல் இனிமையைப் பற்றி வியந்து கூறினார். கஸ்தூரிபா நிதிக்காக இசை நிகழ்ச்சிகள் எம்.எஸ். பாட ஏற்பாடான போது 'டியர் சுப்புலட்சுமி' என்று தன் கடிதத்தை ஆரம்பித்த மகாத்மா கடைசியில் மோ. க, காந்தி என்று தமிழில் கையெழுத்திட்டு அதை அனுப்பினார்.

    1947-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 2-ம் தேதி காந்திஜி பிறந்த தினத்தில் இசைப்பதற்காக எம்.எஸ்,மீராவின் பஜனைப் பாடல்களின் ஒன்றான ' 'ஹரி தும ஹரோ'' என்ற பாடலை டெல்லிக்கு வந்து இசைக்குமாறு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. பாடலைப் பாடி பிரத்யேகமாக அதை அவர் டெல்லிக்கு அனுப்பினார். அடுத்து வந்த 1948-ல் ஜனவரி 30-ம் தேதி மகாத்மா உயிரிழந்தார். அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதத்தில் அகில இந்திய வானொலி நிலையம் எம்.எஸ்.சின் இந்தப் பாடலை ஒலிபரப்பியது.

    நன்கொடைகள்: 200 கச்சேரிகளுக்கும் மேலாக நிகழ்த்தி பல்வேறு நல்ல காரியங்களுக்கும் பல கோடி ரூபாய்களை நிதியாகத் திரட்டி அவர் அளித்தார். 1963-ல் எடின்பரோ உற்சவத்திற்காக முதல் தடவையாக ஐரோப்பாவிற்குச் சென்ற எம்.எஸ். அதன் பின்னர் போகாத நாடே இல்லை எனலாம். உலகெங்கும் அவருக்கு உற்சாக வரவேற்பு தான்!

    ஐ.நா. இசை நிகழ்ச்சி: 1966 அக்டோபர் மாதம் 23-ம் நாளன்று எம்.எஸ்.சின் இசை நிகழ்ச்சி அமெரிக்காவில் ஐக்கியநாடுகள் பொதுச்சபையில் நிகழ்ந்தது. உற்சாக பரவசத்துடன் அதைக் கேட்ட அனைவரும் இந்தியாவின் புகழை உயர ஏற்றி விட்டார் அவர் என்றனர். பிரபல நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை "என்றும் நினவில் இருக்கும் நிகழ்ச்சி" என்று வானளாவப் புகழ்ந்து எழுதியது.

    காஞ்சிப் பெரியவர் இயற்றி அருளிய 'மைத்ரீம் பஜத' என்ற கீதம் உலகமெங்கும் அன்பையும் சமாதானத்தையும் நிலை நிறுத்துவோம் என்ற செய்தியை உலகிற்கு நல்கியது. அதை எம்.எஸ். பொருத்தமான இந்த இடத்தில் தன் அற்புத இசை மூலம் நல்கியது அனைவரையும் நெகிழ வைத்தது.

    திருப்பதி ஏழுமலையானின் அருள் விளையாடல்: காலத்தின் கோலமாக விதி வசத்தில் எம்.எஸ்.சுக்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. கோடம்பாக்கத்தில் ஒரு வீட்டில் குடியேறி எப்போதும் வாழும் எளிமை வாழ்க்கையை மேற்கொண்டார். அவருக்கு நிதி உதவி அளிக்க ரசிகர்களுக்கும், செல்வந்தர்களுக்கும் பயமாக இருந்தது. கோடிக்கணக்கான ரூபாய்களை நன்கொடையாக கச்சேரி மூலம் திரட்டி அளித்த அவர் ஒரு போதும் உதவிகளை ஏற்றுக் கொள்ளமாட்டார் என்பது அனைவரும் அறிந்ததே. என்ன செய்வது என்று யாருக்கும் புரியவில்லை.

    திருப்பதி பாலாஜியின் அருள் விளையாடல் ஆரம்பித்தது. காஞ்சி மகாபெரியவரும் சத்யசா யிபாபாவும் திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரியான பி.வி.ஆர்.கே.பிரசாத் அவர்களை தக்க காரியத்தை உடனே மேற்கொள்ள வேண்டுமாறும் இதை மிகுந்த நளினமாகக் கையாள வேண்டும் என்றும் அறிவுறுத்தினர். அவருக்கு ஒன்றும் புரியவில்லை. நேரடியாக திருப்பதி ஏழுமலையானின் முன்னால் நின்று அருள் புரியுமாறு வேண்டினார். பின்னர் கோவிலிலிருந்து வெளியே வந்த அவருக்கு ஆச்சரியமான ஒரு அனுபவம் ஏற்பட்டது.

    கோவிலுக்கு வெளியே பல பக்தர்கள் பாடல்களைப் பாடிக் கொண்டிருந்தார்கள். அந்தப் பாடல்களைக் கேட்ட அவருக்கு உடனே ஒரு யோசனை தோன்றியது. திரும்பிப் பார்த்தால் அந்த பக்த கூட்டத்தைக் காணவே காணோம். இது என்ன அதிசயம் என்று நினைத்த அவர் நேரடியாக சென்னை வந்து எம்.எஸ்,ஸை சந்தித்து திருப்பதி எழுமலையானின் படத்தைக் கொடுத்தார். என்ன விஷயம் என்று கேட்டார் எம்.எஸ். ஏராளமான கீதங்களை அவர் இசைத்து விட்டாலும் அன்னமாசார்யா பாடல்கள் இதுவரை இசைத்தட்டு வடிவில் அவர் மூலம் வராதது ஒரு பெரும் குறையே என்று பிரசாத் மெதுவாகத் தெரிவித்தார். ஆனால் அதில் எனக்கு பயிற்சி இல்லையே என்றார் எம்.எஸ்.

    "எவ்வளவு நாட்கள் வேண்டு மானாலும் எடுத்துக் கொள்ளுங்கள்" என்றார் பிரசாத். எம்.எஸ். சம்மதித்த மறுகணமே எல்லையிலா மகிழ்ச்சி பொங்க வெளியிலே கிளம்பிய பிரசாத், ஒரு கணம் நின்று எம்.எஸ்.சைப் பார்த்தார். "ஒன்றுமில்லை, இந்த இசைத்தட்டுகளை குறிப்பிட்ட விலை வைத்துத் தான் தேவஸ்தானம் பக்தர்களுக்கு விநியோகிக்கப் போகிறது. அதில் வரும் தொகையில் ராயல்டி தொகை உங்களுக்கு வரும்" என்று சொல்லியவாறே விடைபெற்று விட்டார். அன்னமாசார்யார் கீர்த்தனை அமோகமாக வெளிவந்தது. குடியரசுத் தலைவர் சஞ்சீவ ரெட்டி அதை வெளியீட்டார். ஆயிரக் கணக்கில் விற்ற இசைத்தட்டுகள் நல்ல வருமானத்தை திருப்பதி தேவஸ்தானத்திற்கு ஈட்டிக் கொடுத்தது. எம்.எஸ். மூலமாக இன்னொரு அரிய படைப்பு என்று அனைவரும் மகிழ்ச்சியுற்றனர்.

    திருப்பதி பாலாஜியின் அருளாசியுடன் ராயல்டி தொகை அவரை அடைந்தது என்று சொல்லவும் வேண்டுமா?

    உஸ்தாத் படே குலாம் அலிகான் அவரது இசையைக்கேட்டு மெய்மறந்தார். அவர் கூறினார் "நீங்கள் சுப்புலட்சுமி மட்டுமல்ல; சுஸ்வர லட்சுமியும் கூட!"

    லதா மங்கேஷ்கர் அவரை தபஸ்வினி என்று அழைத்தார்.

    விருதுகள்: வாழ்நாளில் ஏராளமான விருதுகளை அவர் பெற்றுக் கொண்டே இருந்தார். 1954-ல் பத்ம பூஷண் விருதையும், 1975-ல் பத்ம விபூஷண் விருதையும் பெற்ற அவர் இந்திய அரசின் மிக உயரிய விருதான பாரத் ரத்னாவை 1998-ல் பெற்றார். நாடே மகிழ்ந்தது. குறிப்பிடத்தகுந்த ஒரு விருதான மக்சேசே விருதை அவர் 1974-ல் பெற்றார்.

    மறைவு: எம்.எஸ். 2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 11-ம் தேதி மறைந்தார். அவருக்கு அஞ்சலி செலுத்த ஏராளமானோர் குழுமினர். குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல்கலாமிலிருந்து ஆயிரக்கணக்கானோர் தங்கள் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்தனர். அரசு மரியாதையுடன் அவர் உடல் தகனம் நடைபெற்றது.

    எம்.எஸ். வாழ்கிறார். அன்றாடம் கோவில்களிலும் ஆயிரக்கணக்கான இல்லங்களிலும் அவர் குரல் சுப்ரபாதமாகவும், ஆதி சங்கரரின் பஜகோவிந்தமாகவும், அனுமன் துதியாகவும் இன்னும் ஏராளமான பக்தி கீர்த்தனைகளாகவும் ஒலித்துக் கொண்டே இருப்பதால் அவர் வாழ்ந்து கொண்டே இருக்கிறார் என்பதில் ஐயமில்லை.

    எம்.எஸ். அர்ப்பணிப்பு மொழிகள்: தன் வாழ்நாள் முழுவதும் இசையையே சுவாசித்து வந்த அவர் கூறினார் இப்படி:

    "எனக்குள்ள பெரும் பயம் கச்சேரிகளை நிகழ்த்துவது தான். எனது ரசிகர்கள் அனைவருக்கும் நானே பொறுப்பு. அவர்களைப் பார்த்து நான் பயப்படவும் செய்கிறேன்.

    "இந்திய இசை என்பது தெய்வீகத்துடன் தொடர்பு கொள்வதையே முடிவாகக் கொண்டது. இதில் நான் ஏதேனும் சிறிதளவு செய்திருக்கிறேன் என்றால் அது இறைவன் இந்த சிறியவளை தனது கருவியாகக் கொள்ளத் தேர்ந்தெடுத்த கருணை தான் காரணம்."

    Next Story
    ×