search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பட்டாசு ஆலையில் வெடிவிபத்து- 2 பேர் பலி
    X

    பட்டாசு ஆலையில் வெடிவிபத்து- 2 பேர் பலி

    • தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.
    • விபத்து நடந்த இடத்தில் தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    சிவகாசி:

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே காளையார் குறிச்சி கிராமத்தில் முருகவேல் என்பவருக்கு சொந்தமான சுப்ரீம் பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கு காளையார்குறிச்சி, சிதம்பராபுரம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட ஆண், பெண் தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் இன்று காலை தொழிலாளர்கள் வழக்கம்போல் வேலைக்கு வந்தனர். அவர்களில் 10-க்கும் மேற்பட்டவர்கள் குடோன் அமைந்துள்ள அறையில் வெடி மருந்துகளை கலக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட உராய்வால் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது.

    இதில் அந்த குடோன் அறை பலத்த சேதம் அடைந்தது. மேலும் அங்கு வைக்கப்பட்டிருந்த வெடி மருந்துகள் அனைத்தும் வெடித்து சிதறியதோடு தீப்பிடித்து எரிய தொடங்கியது.

    இதற்கிடையே வெடி மருந்து கலக்கும் பணியில் ஈடுபட்டிருந்த சிதம்பரா புரத்தை சேர்ந்த மாரியப்பன் (வயது 45), முத்துமுருகன் (45) ஆகிய 2 பேரும் உடல் சிதறியும், கருகியும் பரிதாபமாக உயிர் இழந்தனர். மேலும் இந்த கோர விபத்தில் சரோஜா (55), சங்கரவேல் (54) ஆகிய 2 பேரும் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடினர்.

    விபத்து ஏற்பட்டதும் அங்கு பணியில் இருந்த மற்ற தொழிலாளர்கள் பட்டாசு ஆலையை விட்டு பதறியடித்து கொண்டு வெளியில் ஓடினர். மேலும் அவர்கள் போலீசார் மற்றும் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.

    அதன்பேரில் எம்.புதுப் பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மேலும் சிவகாசி உள்ளிட்ட அருகில் உள்ள ஊர்களில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் விபத்து ஏற்பட்ட பட்டாசு ஆலைக்கு வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடு பட்டன. அத்துடன் பலியான மாரியப்பன், முத்துமுருகன் ஆகியோரது உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    விபத்து குறித்து எம்.புதுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கடந்த 2 வாரங்களுக்கு முன்பு சாத்தூர் பகுதியில் நடந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் 4 தொழிலாளர்கள் பலியானது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×