search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    ஊட்டி ஆதரவற்றோர் காப்பகம் நகராட்சியிடம் ஒப்படைப்பு
    X

    ஊட்டி ஆதரவற்றோர் காப்பகம் நகராட்சியிடம் ஒப்படைப்பு

    • பல்வேறு தொண்டு நிறுவனங்கள், வசதி படைத்தவர்கள் சார்பில் பொருள் மற்றும் பண உதவிகள் செய்யப்பட்டு வருகிறது.
    • காப்பகத்தை நடத்தி வந்த நிர்வாகி தஸ்தகீரிடமும் பல்வேறு கேள்விகளை கேட்டு விசாரித்தனர்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே முள்ளிக்கொரை பகுதியில் தனியார் அறக்கட்டளை சார்பில் ஆதரவற்றோர் காப்பகம் செயல்பட்டு வருகிறது.

    இங்கு ஆதரவற்றவர்கள், குடும்பத்தால் கைவிடப்பட்டவர்கள் என 54 ஆண்கள், 33 பெண்கள் என மொத்தம் 87 பேர் இருக்கிறார்கள்.

    இந்த காப்பகத்திற்கு பல்வேறு தொண்டு நிறுவனங்கள், வசதி படைத்தவர்கள் சார்பில் பொருள் மற்றும் பண உதவிகள் செய்யப்பட்டு வருகிறது.

    கடந்த சில மாதங்களாகவே இந்த காப்பகத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாக புகார் எழுந்தது. இது தொடர்பான வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வெளியாகின.

    இது தொடர்பாக நாம்தமிழர் கட்சி நிர்வாகி செல்வம் என்பவர், தனியார் ஆதரவற்றோர் இல்லத்தில் முறைகேடாக பணம் வசூலிக்கப்படுகிறது. அங்குள்ள முதியவர்களை தாக்கி அவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படுகிறது என்பன உளளிட்ட பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக கூறி கலெக்டரிம் அவர் கோரிக்கை மனு கொடுத்தார்.

    இதையடுத்து கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு, இதுகுறித்து விசாரிக்க ஆர்.டி.ஓ. மகராஜ் தலைமையில் நகராட்சி கமிஷனர் ஜஹாங்கீர் பாஷா, தனி தாசில்தார் சங்கீதா ராணி ஆகியோர் அடங்கிய 3 பேர் குழுவை அமைத்தார்.

    இந்த குழுவினர் கடந்த 10 நாட்களாக அந்த காப்பகத்தில் விசாரணை மேற்கொண்டு, அங்குள்ள பல்வேறு ஆவணங்களையும் சோதனை செய்தனர். காப்பகத்தை நடத்தி வந்த நிர்வாகி தஸ்தகீரிடமும் பல்வேறு கேள்விகளை கேட்டு விசாரித்தனர்.

    விசாரணை அனைத்தும் முடிந்ததை தொடர்ந்து இது தொடர்பான அறிக்கையை கடந்த சில நாட்களுக்கு முன்பு கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீருவிடம் தாக்கல் செய்தனர்.

    அந்த அறிக்கையில், காப்பகத்தில் நிதி முறைகேடு நடந்துள்ளது. காப்பகத்தில் உள்ள முதியவர்களின் மருத்துவ தேவை மற்றும் பராமரிப்பில் போதிய கவனம் செலுத்தப்படவில்லை. காப்பகத்தில் விதிமீறல்கள் நடந்துள்ளன என தெரிவிக்கப்பட்டிருந்தது.

    அறிக்கையை ஆய்வு செய்த கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு, காப்பகத்தை நடத்தி வந்த நிர்வாகி தஸ்தகீர் உடனடியாக காப்பகத்தை விட்டு வெளியேறவும், நிதி சம்பந்தமான அனைத்து ஆவணங்கள், பதிவேடுகளை ஊட்டி நகராட்சி கமிஷனர் வசம் ஒப்படைக்கவும் உத்தரவிட்டுள்ளனர்.

    இதையடுத்து ஆர்.டி.ஒ. மகராஜ், நகராட்சி கமிஷனர் ஜஹாங்கீர் பாஷா, சமூகநலத்துறை அலுவலர் பிரவீனா, தாசில்தார் சரவணன் ஆகியோர் ஆதரவற்றோர் இல்லத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து காப்பகத்தை கையகப்படுத்தினர். காப்பகத்தின் முழு பொறுப்பையும் ஊட்டி நகராட்சி கமிஷனர் ஜஹாங்கீர் பாஷா ஏற்றுக்கொண்டார்.

    முன்னதாக இதனையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. காப்பக நிர்வாகியிடம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தங்கவேலு தலைமையிலான போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×