search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    குற்றங்களுக்கு உடந்தையாகும் அரசியல்வாதிகளுக்கு ஆயுள் தண்டனை வேண்டும்- துரை வைகோ
    X

    குற்றங்களுக்கு உடந்தையாகும் அரசியல்வாதிகளுக்கு ஆயுள் தண்டனை வேண்டும்- துரை வைகோ

    • கள்ளச்சாராய மரணங்கள் நடந்து கொண்டுதான் உள்ளது.
    • இந்தியா முழுதும் நீட் தேர்வு வேண்டாம் என்ற கோரிக்கை எழத் தொடங்கியுள்ளது.

    பெரம்பலூர்:

    ம.தி.மு.க. முதன்மை செயலாளர் துரை வைகோ எம்.பி., பெரம்பலூரில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கள்ளக்குறிச்சி கள்ளச்சாரய உயிரிழப்பு சம்பவத்தில் மருத்துவர்கள், மருத்துவமனைகள், அரசாங்கமும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நல்லது செய்ய முயற்சி செய்து வருகிறார்கள். இந்த நேரத்தில் இதில் அரசியல் ஆதாயம் தேட வேண்டி சர்ச்சை கருத்துக்களை சொல்லுவதோ, பரபரப்பு உருவாக்குவதற்காக மட்டமான அரசியல் செய்வதில் யாரும் ஈடுபட வேண்டாம்.

    இந்த விவகாரத்தில் சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் ஒரு விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு உள்ளது.

    மாவட்ட கலெக்டரை டிரான்ஸ்பர் செய்து உள்ளனர். மாவட்ட எஸ்.பி. மற்றும் மாவட்டத்தில் உள்ள முக்கியமான காவல்துறை அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்துள்ளார்கள். இது மாத்திரம் இல்லாமல் சம்பந்தப்பட்ட குற்றவாளியையும், அவருக்கு உடந்தையாக இருந்த சில பேரையும் கைது செய்து உள்ளனர்.

    கடந்த 30, 40 வருடங்களாக தொடர்ச்சியாக கள்ளச்சாராய மரணங்கள் நடந்து கொண்டுதான் உள்ளது. இது ஒரு நாடு தழுவிய ஒரு பிரச்சனை. பூரண மதுவிலக்கு அமலில் உள்ள பா.ஜ.க. ஆளுகின்ற குஜராத் மாநிலம், பா.ஜ.க. கூட்டணி ஆட்சி இருக்கும் பீகாரிலும் கள்ளச்சாராய உயிரிழப்பு தொடர் சம்பவங்கள் நடந்து வருகிறது.

    இது போன்ற கள்ளச்சாராயம், போதை பொருள் விற்பனை போன்ற மோசமான குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீதும் அதற்கு உடந்தையாக இருக்கும் அரசியல்வாதிகள், அதிகாரிகளுக்கும் குறைந்த பட்சம் ஆயுள் தண்டனை கொடுக்க வேண்டும். அதற்கேற்ப இந்த அரசாங்கம் புதிய சட்டத்தை கொண்டு வர வேண்டும்.

    இன்று இந்தியா முழுதும் நீட் தேர்வு வேண்டாம் என்ற கோரிக்கை எழத் தொடங்கியுள்ளது.

    மக்களவையில் எனக்கு பேசுவதற்கு வாய்ப்பு கிடைக்கும்போது தமிழக மக்கள் மற்றும் திருச்சி தொகுதி மக்களுக்கான முக்கிய பிரச்சனைக்கு கண்டிப்பாக குரல் கொடுப்பேன்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×