search icon
என் மலர்tooltip icon

    பெரம்பலூர்

    • விழா காலங்களில் கூடுதல் பஸ்கள் இயக்கப்படுவது அரசின் தொடர் நடவடிக்கை.
    • முன்பதிவு செய்து பயணிப்பவர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக உள்ளது.

    பெரம்பலூர்:

    தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பெரம்பலூரில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    வரும் 24-ந்தேதி ஆம்னி பஸ் உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை மேற்கொள்வதற்கான கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில், கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது என அறிவுறுத்தப்படும். இதை மீறி கூடுதல் கட்டணம் வசூலித்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    செல்போன் செயலி மூலமாக பதிவு செய்து பயணிப்பவர்களை அரசால் எதுவும் செய்ய முடியாது. அதுகுறித்து புகார் அளித்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்,

    விழா காலங்களில் கூடுதல் பஸ்கள் இயக்கப்படுவது அரசின் தொடர் நடவடிக்கை. அந்த வகையில் கூடுதல் பஸ்களை இயக்கி வருகிறோம். சில நேரங்களில் பஸ்கள் தேவைப்படும் வழித்தடங்களில் புதிதாக சிறப்பு பஸ்கள் இயக்குவதற்கும், நாள் முழுவதும் பஸ்களை இயக்கிய பணியாளர்களைக் கொண்டு மீண்டும் இயக்குவதும் பாதுகாப்பற்றது.

    அதனால், முக்கியமான விழா காலங்களில் தனியார் பஸ்களை இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜையின்போது பரீட்சர்த்தா முறையில் அந்த நடைமுறை செயல்படுத்தப்பட்டது. அதில், எந்தவித சிரமமும் ஏற்படவில்லை.

    எனவே தீபாவளி பண்டிகையின்போது, தனியார் பஸ்களை ஒப்பந்த அடிப்படையில் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    அரசின் முக்கிய நோக்கம், பொதுமக்கள் தங்களது சொந்த ஊருக்கு எவ்வித சிரமமும் இன்றி செல்ல வேண்டும் என்பது தான். விழாக்களை அவர்கள் விருப்பம் போல கொண்டாடுவதற்கு வழி வகை செய்ய வேண்டும் என்பது எங்கள் நோக்கம்.

    வழக்கமாக தமிழகத்தில் 20 ஆயிரம் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. திருவிழா காலங்களில் கூடுதலாக 4 அல்லது 5 ஆயிரம் பஸ்கள் இயக்க வேண்டும் என்றால், அதற்காக அரசுப் போக்குவரத்துக் கழகம் பஸ்களை வாங்கி நிறுத்தி வைத்திருக்க முடியாது. அதுபோன்ற நாள்களில் ஊழியர்களையும் நியமிக்க முடியாது.

    அதனால் இடைக்கால நிவாரணமாகவே தனியார் பஸ்களை அரசு ஒப்பந்த அடிப்படையில், அந்தந்த வழித் தடங்களில் இயக்கப்படுவது தவிர்க்க முடியாதது. பொதுமக்கள் தனியார் பஸ்களை விட, அதிகமாக அரசுப் பஸ்களை பயன்படுத்தி வருகின்றனர்.

    முன்பதிவு செய்து பயணிப்பவர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக உள்ளது. எனவே பயணிகளின் பாதுகாப்பான பயணத்திற்கு, இதுபோன்ற இடைக்கால ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டிய நிலை உள்ளது.

    இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

    பேட்டியின்போது கலெக்டர் கிரேஸ் பச்சாவ், அருண் நேரு எம்.பி., பிரபாகரன் எம்.எல்.ஏ. உடனிருந்தனர்.

    • மழையை மட்டுமே நம்பி பாசனம் செய்யும் மானாவாரி விவசாயிகள், தற்போது பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
    • மழை இல்லாததால் விவசாயிகள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளோம்.

    பெரம்பலூர்:

    மக்காச்சோள பயிரை அனைத்து விதமான மண்ணிலும் சாகுபடி செய்வதோடு, ஆண்டு முழுவதும் பயிரிடலாம். நெல் பயிருடன் ஒப்பிடும்போது குறைந்த சாகுபடி செலவே. மேலும், இந்தப் பயிரில் பூச்சி மற்றும் நோய்த் தாக்குதல் இருக்காது.

    கோழிப் பண்ணை, கால்நடைத் தீவனங்களுக்கு மிக முக்கிய உணவாக மக்காச்சோளம் தேவைப்படுவதால், தமிழகத்தில், தற்போது மக்காச்சோளத்துக்கு அதிக அளவில் வரவேற்பு உள்ளது. இதை கருத்தில்கொண்டு ஆற்றுப்பாசனம் இல்லாதபோதிலும், பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் மக்காச்சோளம் சாகுபடி செய்வதில் தமிழக அளவில் சிறப்பிடம் பெற்று விளங்குகின்றனர்.

    இங்குள்ள 90 சதவீத விவசாயிகள் மானாவாரி சாகுபடியை நம்பியே உள்ளனர். இந்த மாவட்டத்தில் மக்காச்சோளம் சாகுபடி செய்யும் விவசாயிகளின் எண்ணிக்கை ஆண்டு தோறும் அதிகரித்து வருகிறது.

    பெரம்பலூர் மாவட்டத்தில் நடப்பாண்ட ஆடிப்பட்டத்தில் 1.65 லட்சம் ஏக்கர் பரப்பளவில் மக்காச்சோளம் பயிரிடப்பட்டது.

    விதைத்து 2 மாதம் ஆகிய பயிர்கள் 2 அடி உயரம்வரை வளர்ந்து விட்டன. இந்நிலையில், கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக போதிய மழை பெய்யாததாலும், வழக்கத்தை விட வெயில் அதிகமாக இருந்த காரணத்தாலும் கடந்த ஓரிரு வாரங்களாக மக்காச்சோளப் பயிர்கள் கருகத் தொடங்கின.

    இதனால் கவலையடைந்த விவசாயிகள் இனிமேல் மழை பெய்தாலும் மக்காச்சோளப் பயிரைக் காப்பாற்ற முடியாது எனும் சூழலில் வயல்களில் டிராக்டரை உழவு ஓட்டி மக்காச்சோளப் பயிர்களை அழித்து வருகின்றனர்.

    இது குறித்து விவசாயி ஒவர் கூறும்போது,

    கை.களத்தூர், காரியனூர், நெற்குணம், பாதாங்கி, மரவநத்தம், பசும்பலூர் உள்ளிட்ட கிராமங்களில் 2,500 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள மக்காச் சோளப் பயிர்கள் இவ்வாறு உழவு ஓட்டி அழிக்கப்பட்டன.

    மழையை மட்டுமே நம்பி பாசனம் செய்யும் மானாவாரி விவசாயிகள், தற்போது பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    ஏக்கருக்கு ரூ. 10 ஆயிரம் முதல் ரூ. 15 ஆயிரம் வரை செலவு செய்துள்ள நிலையில், மழை இல்லாததால் விவசாயிகள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளோம்.

    எனவே, வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு இழப்பீட்டுத்தொகை பெற்றுத்தர மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றனர்.

    • போலீசார் உடன்டியாக சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
    • ஊர் மக்களிடம் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது.

    குன்னம்:

    பெரம்பலூர் அருகே வேப்பூர் ஏரியில் இருந்த மனித எலும்புக்கூட்டை எடுத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் வேப்பூர் கிராமத்தில் பேருந்து நிலையத்திற்கு பின்புறம் பெரிய ஏரி உள்ளது.

    ஏரியில் தற்போது தண்ணீர் வற்றி வறண்டு காணப்படுகிறது. இந்நிலையில் நேற்று பிளாஸ்டிக் சாக்கில் மண்டை ஓட்டுடன் மனித எலும்புக்கூடுகள் மண்ணில் புதைந்த நிலையில் இருந்த சாக்கினை ஏரி பகுதியில் சுற்றித்திரிந்த நாய்கள் இழுத்துக் கொண்டு வந்தது.

    இதைக்கண்ட ஊர் மக்கள் நாய்கள் இழுத்து கொண்டிருந்த சாக்கில் என்ன இருக்கின்றது என்று பார்த்தனர். அப்போது ஒரு மண்டை ஓடு, கை, கால்கள், எலும்பு துண்டுகள் மற்றும் முழுக்கை சட்டையுடன் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து குன்னம் காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவல் அறிந்த போலீசார் உடன்டியாக சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

    பின்னர் தடய அறிவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ஏரியில் சாக்கில் இருந்த மண்டை ஓடு மற்றும் எலும்புகளை ஆய்வுக்காக எடுத்துச் சென்றனர்.

    ஏரியில் புதைந்து மண்டை ஓடு மற்றும் எலும்புக்கூடு சாக்கில் இருந்தது ஊர் மக்களிடம் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது. கொலை செய்து ஏரியில் புதைத்து சென்றார்களா? அல்லது மாந்திரீ கத்திற்கு பயன்படுத்தப்பட்டதா? என சந்தேகிக்கின்றனர்

    • போலீசார் சமீம் கடையை ஆய்வு செய்ததில் போலி வாக்காளர் அடையாள அட்டை தயாரித்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குன்னம்:

    லப்பைக்குடிக்காட்டில் போலியாக வாக்காளர் அட்டையை தயாரித்து கொடுத்த கம்ப்யூட்டர் சென்டர் கடை உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.

    பெரம்பலூர் மாவட்டம், லப்பைக்குடிக்காடு அபுபக்கர் தெரு பேரூரை சேர்ந்தவர் முகமது சமீம் (வயது 33). இவர் அங்கு கம்ப்யூட்டர் சென்டர் மற்றும் ஜெராக்ஸ் கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது கடையில் தெற்கு தெருவை சேர்ந்த அபுதாஹிர் மகன் சாஜித் என்பவர் பாஸ்போர்ட்டுக்கு விண்ணபிக்க வாக்களர் அடையாள அட்டையை பதிவு செய்து உள்ளார்.

    3 மாதமாகியும் அட்டை வராததால், கம்பியூட்டர் சென்டரில் சென்று கேட்டுள்ளார். முகமது சமீம் உடனடியாக வாக்காளர் அட்டையை தயார் செய்து கொடுத்துள்ளார். இதனை கொண்டு சாஜித் பாஸ் போர்ட் பெற விண்ணப் பித்துள்ளார்.

    பாஸ்போர்ட் ஆவணங்கள் சரிபார்ப்பின் போது, சாஜித்தின் வாக்காளர் அட்டை போலி என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். வேறு ஏதேனும் அரசு ஆவணம் உள்ளதா என கேட்டுள்ளனர். பின்னர், தபாலில் வந்த வாக்காளர் அட்டையை கொடுத்துள்ளார்.

    பாஸ்போர்ட் விண்ணப்பிக்க முதலில் கொடுத்த வாக்காளர் அட்டை போலி என்பதால் இது குறித்து, லப்பைக் குடிக்காடு வி.ஏ.ஓ ஐயப்பனிடம் புகார் செய்யப்பட்டது. அவர் இதுபற்றி மங்களமேடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    போலீசார் முகமது சமீம் கடையை ஆய்வு செய்ததில் அங்கு இதுபோல ஏராளமான போலி வாக்காளர் அடையாள அட்டை தயாரித்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை போலீசார் கைப்பற்றினர்.

    தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், பென்னகோணம் கிராமத்தை சேர்ந்த பெருமாள் மகன் வீரன் (47), என்பவர் பக்ரைன் நாட்டில் இருந்து, தனது மனைவி விஜயலட்சுமி மூலம் பாஸ்போர்ட்டை போலி வாக்களர் அட்டை மூலம் விண்ணப்பித்துள்ளதும் தெரியவந்தது.

    தொடர்ந்து இதுபற்றி விசாரணை நடந்து வருகிறது. இதை தொடர்ந்து முகமது சமீம் மீது குற்றப்பிரிவு 330/2024 u/s 318(2), 318(4), 336(3),340(2) பி.என்.எஸ். ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து கைது செய்தனர். பின்பு அவரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் உள்ள உணவகங்களில் சம்பந்தப்பட்ட துறை அமைச்சரிடம் கூறி மலிவு விலையில் உணவு வழங்க ஏற்பாடு.
    • பள்ளி வேலை நேரங்களில் போக்குவரத்து வசதி குறைவாக உள்ள பகுதிகளை கண்டறிந்து கூடுதல் பஸ்கள் இயக்கப்படும்.

    குன்னம்:

    பெரம்பலூர் மாவட்டம், குன்னத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஆடிப்பெருக்கையொட்டி வரும் தொடர் விடுமுறையால் தமிழகம் முழுவதும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் உள்ள உணவகங்களில் சம்பந்தப்பட்ட துறை அமைச்சரிடம் கூறி மலிவு விலையில் உணவு வழங்க ஏற்பாடு செய்யப்படும்.

    பள்ளி வேலை நேரங்களில் போக்குவரத்து வசதி குறைவாக உள்ள பகுதிகளை கண்டறிந்து கவனம் செலுத்தி கூடுதல் பஸ்கள் இயக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கடந்த 2-ந்தேதி அதிகாலை துணை தாசில்தார் பழனியப்பன் மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடினார்.
    • அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் புது பஸ்ஸ்டாண்ட் அருகே கட்டப்பட்டுள்ள திருமண மண்டபத்துக்கு தடையின்மைச் சான்று வழங்க ரூ.20 ஆயிரம் லஞ்சம் பெற்ற துணை தாசில்தார் பழனியப்பன், கீழக்கரை விஏஓ நல்லுசாமி ஆகியோர் கடந்த 1-ந்தேதி இரவு லஞ்ச ஒழிப்பு போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டபோது, பழனியப்பன் தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறியதால், அவரை பெரம்பலூர் தாசில்தார் சரவணன் பொறுப்பில் ஒப்படைத்து, அவருக்கு உரிய சிகிச்சை அளித்து 2-ந்தேதி விசாரணைக்கு அழைத்து வருமாறு அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர்.

    பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த போது கடந்த 2-ந்தேதி அதிகாலை துணை தாசில்தார் பழனியப்பன் மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடினார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    இந்நிலையில் லஞ்சம் பெற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு தப்பி ஓடிய துணை தாசில்தார் பழனியப்பனை சஸ்பெண்ட் செய்து கலெக்டர் கற்பகம் உத்தரவிட்டுள்ளார்.

    • இனிமேல் கட்சியில் வேலை செய்தால்தான் பதவி.
    • நமக்கு செல்வாக்கு இல்லாத காரணத்தினால் நம்மை மிரட்டுகிறார்கள்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூரில் நடைபெற்ற மாவட்ட காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்ட தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான செல்வபெருந்தகை கலந்து கொண்டார். கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

    பெருந்தலைவர் காமராஜர் காலத்தில் 40 சதவீதம் வாக்கு வங்கி நாம் வைத்திருந்தோம். தற்போது எந்த அளவிற்கு உள்ளது என்று நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள். குறை நம்மிடம் தான் உள்ளது. நாம் மற்றவர்களை குறை சொல்லக்கூடாது. நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் வீட்டில் உள்ளவர்களை காங்கிரஸ் கட்சியில் சேருங்கள்.

    நம்மிடம் கட்டமைப்பு உள்ளது. இனிமேல் கட்சியில் வேலை செய்தால்தான் பதவி, பதவி வாங்கி வைத்துக்கொண்டு சும்மா உட்கார்ந்து இருப்பவர்களின் பதவி பறிக்கப்படும். நாம் கட்சி பணி செய்யவில்லை என்றால் பெருந்தலைவர்கள், தியாகிகளின் ஆன்மாக்கள் நம்மை மன்னிக்காது.

    ராகுல்காந்தி என் ரத்தம் இந்த மண்ணில் உள்ளது என்று கூறியுள்ளார். அது என்னவென்று உங்கள் அனைவருக்கும் தெரியும். அவரைப்போல் அனைவரும் பாடுபட வேண்டும். நம்மிடம் செல்வாக்கு இல்லாத காரணத்தினால் தான் அண்ணாமலை இறுமாப்புடன் நம் கட்சியை பற்றி பேசி வருகிறார்.

    ஒற்றுமை இருந்தால், செல்வாக்கு இருந்தால் நம் மீது கை வைக்கும் பொழுது கிராமம், நகரம் என அனைத்து இடங்களிலும் பஸ், வேன், லாரி ஏன் விமானத்தை கூட மறித்தால் நம் பலம் அவர்களுக்கு புரியும்.

    நமக்கு செல்வாக்கு இல்லாத காரணத்தினால் நம்மை மிரட்டுகிறார்கள். சமயங்களில் கூட்டணி கட்சிகளுடன் சிறு மனக்கசப்புகள் ஏற்படுகிறது.

    2026 சட்டமன்ற தேர்தலுக்கு சரியாக 23 மாதங்கள் இருந்தாலும் 18 மாதங்களுக்குப் பிறகு தேர்தல் காய்ச்சல் வந்துவிடும். ஆகவே நமக்கு இன்னும் 18 மாதங்கள் தான் உள்ளது. அதற்குள் நாம் கட்சியை வளர்த்தாக வேண்டும்.

    பெரம்பலூர் சிறிய மாவட்டம் என்பதால் முதலில் இங்கு கட்சியை பலப்படுத்த வேண்டும். அண்ணாமலை, இந்திரா காந்தியை பற்றியும், நேருவை பற்றியும் அவதூறாக பேசி வருகிறார். ராகுல் காந்தியும், சோனியா காந்தியும் நாட்டை விட்டு ஓட பார்த்தார்களாம். இவரா பிடித்து அழைத்து வந்தார்.

    என்ன அப்பட்டமான பொய் சொல்கிறார், 2026 தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு என்று ஓர் இடத்தை நாம் உருவாக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • லஞ்சம் கொடுக்க விரும்பாத துரைராஜ் இதுகுறித்து பெரம்பலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.
    • நல்லுச்சாமியை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் அருகே அம்மாபாளையத்தை சேர்ந்தவர் துரைராஜ். இவர் பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தின் பின்புறம் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இந்த திருமண மண்டபத்திற்கு தடையின்மை சான்றிதழ் பெற பெரம்பலூர் தாசில்தார் அலுவலகத்தில் துரைராஜ் விண்ணப்பித்தார். அப்போது தடையின்மை சான்று வழங்குவதற்கு துரைராஜிடம் துணை தாசில்தார் பழனியப்பன் (வயது 42) ரூ.20 ஆயிரம் லஞ்சமாக கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத துரைராஜ் இதுகுறித்து பெரம்பலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.

    இதையடுத்து ரசாயன பவுடர் தடவிய ரூ.20 ஆயிரத்தை பழனியப்பனிடம் கொடுக்க லஞ்ச ஒழிப்பு போலீசார் அறிவுறுத்தினர். அதன்படி துரைராஜ் நேற்று மாலை பெரம்பலூர் தாசில்தார் அலுவலகத்திற்கு சென்றார். அங்கு பெரம்பலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ஹேமசித்ரா தலைமையில் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி மற்றும் போலீசார் அலுவலகத்தின் அருகே மறைந்திருந்தனர்.

    அங்கு துரைராஜ் லஞ்ச பணத்தை பழனியப்பனிடம் கொடுக்க முயன்றார். அப்போது பழனியப்பன், அலுவலகத்தில் இருந்த கீழக்கரை கிராம நிர்வாக அலுவலர் நல்லுச்சாமியை (42) லஞ்ச பணத்தை வாங்கி வைக்குமாறு கூறியுள்ளார். இதையடுத்து நல்லுச்சாமி துரைராஜிடம் இருந்து பணத்தை வாங்கி, பழனியப்பன் வைக்க கூறிய இடத்துக்கு கொண்டு சென்றார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் விரைந்து சென்று நல்லுச்சாமியையும், பழனியப்பனையும் கையும், களவுமாக பிடித்தனர். அப்போது நல்லுசாமி துணை தாசில்தார் கூறியதன் அடிப்படையில் தான் பணம் பெற்றதாக கூறினார். இந்த நிலையில் துணை தாசில்தார் பழனியப்பன் தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறினார்.

    இதையடுத்து நல்லுச்சாமியை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர். நெஞ்சு வலிப்பதாக கூறிய துணை தாசில்தார் பழனியப்பனை சிகிச்சைக்காக அவரது மேலதிகாரி தாசில்தார் சரவணன் மூலமாக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இரவு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மருத்துவமனை டாக்டர்களிடம் கேட்ட போது, அவருக்கு எந்த பிரச்சனையும் இல்லை. வேண்டும் என்று நெஞ்சு வலிப்பதாக கூறி வருகிறார் என தெரிவித்துள்ளனர்.

    அதைத் தொடர்ந்து இன்று காலை அவரிடம் விசாரணை செய்ய திட்டமிட்டனர். அதன்படி இன்று காலை லஞ்ச ஒழிப்புத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு ஹேம சித்ரா, தாசில்தார் சரவணனை தொடர்பு கொண்டு காலையில் மருத்துவமனைக்கு வாருங்கள்.பழனியப்பனிடம் விசாரணை நடத்த வேண்டும் என கூறியுள்ளார்.

    அப்போது காலை 7 மணி அளவில் பழனியப்பன் மருத்துவமனையில் இருந்து மாயமாகி விட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. ஸ்கேன் எடுக்க செல்வதாக வார்டில் இருந்து சென்ற அவர் மருத்துவமனையில் இருந்து ஓட்டம் பிடித்ததாக கூறப்படுகிறது.

    இந்த தகவலை அறிந்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

    இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை சூப்பிரண்டு ஹேம சித்ரா கூறும்போது, பழனியப்பனை விசாரணை செய்வதற்கு முன்பாக அவர் நெஞ்சு வலிப்பதாக கூறியதால் அவரது உயர் அதிகாரியான தாசில்தார் மூலமாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தோம். இப்போது அவர் அங்கிருந்து மாயமானதாக தகவல் சொல்கிறார்கள். நான் தாசில்தாரிடம் அறிக்கை கேட்டிருக்கிறேன் என்றார்.

    தப்பி ஓடிய பழனியப்பனுக்கு பெரம்பலூர் நாரணமங்கலம் சொந்த ஊராகும். அவர் அங்கு பதுங்கி இருக்கிறாரா என பெரம்பலூர் போலீசார் தேடி வருகின்றனர்.

    லஞ்சம் வாங்கிய வழக்கில் பிடிபட்ட துணை தாசில்தார் மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடிய சம்பவம் பெரம்ப லூரில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

    • அரசு பஸ் கவிழ்ந்து வாலிபர் பலி.
    • கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓர பள்ளத்தில் கவிந்து விபத்துக்குள்ளானது.

    குன்னம்:

    குமரி மாவட்டம் களியக்காவிளையில் இருந்து சென்னைக்கு நேற்று இரவு ஒரு தனியார் ஆம்னி பஸ் புறப்பட்டு வந்தது. பஸ்சை கன்னியாகுமரி எஸ்.டி.மந்தாரு வாவரை பகுதியை சேர்ந்த அமர்நாத்(வயது36) என்பவர் ஓட்டினார்.

    பஸ்சில் ஏராளமான பயணிகள் இருந்தனர். திருச்சியை அடுத்து பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் தனியார் பள்ளி அருகே பாலம் கட்டுமான பணி நடக்கிறது.

    இந்த பகுதியில் போக்குவரத்து சர்வீஸ் ரோட்டில் திருப்பி விடப்பட்டது. இன்று அதிகாலை இந்த பகுதியில் பஸ் வந்தபோது எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓர பள்ளத்தில் கவிந்து விபத்துக்குள்ளானது.

    இதில் பஸ்சில் வந்த குமரி மாவட்டம் விளவங்கோடு அருகே உள்ள மருதங்கோடு பால்குளத்து விளை வீட்டை சேர்ந்த ரெத்தினன் மகன் அஜின்மோன்(25) என்பவர் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.

    மேலும் பயணிகள் சுமார் 8 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இதுபற்றி தகவல் கிடைத்ததும் பாடாலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்டு பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.

    பலியான அஜின்மோன் உடல் பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அஜின்மோன் பலியான தகவல் அவர்களது குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் பெரம்பலூருக்கு விரைந்துள்ளனர்.

    இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் விபத்துக்குள்ளான பஸ்சை மீட்டு போக்குவரத்தை சரிசெய்தனர். தொடர்ந்து பாடாலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கள்ளச்சாராய மரணங்கள் நடந்து கொண்டுதான் உள்ளது.
    • இந்தியா முழுதும் நீட் தேர்வு வேண்டாம் என்ற கோரிக்கை எழத் தொடங்கியுள்ளது.

    பெரம்பலூர்:

    ம.தி.மு.க. முதன்மை செயலாளர் துரை வைகோ எம்.பி., பெரம்பலூரில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கள்ளக்குறிச்சி கள்ளச்சாரய உயிரிழப்பு சம்பவத்தில் மருத்துவர்கள், மருத்துவமனைகள், அரசாங்கமும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நல்லது செய்ய முயற்சி செய்து வருகிறார்கள். இந்த நேரத்தில் இதில் அரசியல் ஆதாயம் தேட வேண்டி சர்ச்சை கருத்துக்களை சொல்லுவதோ, பரபரப்பு உருவாக்குவதற்காக மட்டமான அரசியல் செய்வதில் யாரும் ஈடுபட வேண்டாம்.

    இந்த விவகாரத்தில் சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் ஒரு விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு உள்ளது.

    மாவட்ட கலெக்டரை டிரான்ஸ்பர் செய்து உள்ளனர். மாவட்ட எஸ்.பி. மற்றும் மாவட்டத்தில் உள்ள முக்கியமான காவல்துறை அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்துள்ளார்கள். இது மாத்திரம் இல்லாமல் சம்பந்தப்பட்ட குற்றவாளியையும், அவருக்கு உடந்தையாக இருந்த சில பேரையும் கைது செய்து உள்ளனர்.

    கடந்த 30, 40 வருடங்களாக தொடர்ச்சியாக கள்ளச்சாராய மரணங்கள் நடந்து கொண்டுதான் உள்ளது. இது ஒரு நாடு தழுவிய ஒரு பிரச்சனை. பூரண மதுவிலக்கு அமலில் உள்ள பா.ஜ.க. ஆளுகின்ற குஜராத் மாநிலம், பா.ஜ.க. கூட்டணி ஆட்சி இருக்கும் பீகாரிலும் கள்ளச்சாராய உயிரிழப்பு தொடர் சம்பவங்கள் நடந்து வருகிறது.

    இது போன்ற கள்ளச்சாராயம், போதை பொருள் விற்பனை போன்ற மோசமான குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீதும் அதற்கு உடந்தையாக இருக்கும் அரசியல்வாதிகள், அதிகாரிகளுக்கும் குறைந்த பட்சம் ஆயுள் தண்டனை கொடுக்க வேண்டும். அதற்கேற்ப இந்த அரசாங்கம் புதிய சட்டத்தை கொண்டு வர வேண்டும்.

    இன்று இந்தியா முழுதும் நீட் தேர்வு வேண்டாம் என்ற கோரிக்கை எழத் தொடங்கியுள்ளது.

    மக்களவையில் எனக்கு பேசுவதற்கு வாய்ப்பு கிடைக்கும்போது தமிழக மக்கள் மற்றும் திருச்சி தொகுதி மக்களுக்கான முக்கிய பிரச்சனைக்கு கண்டிப்பாக குரல் கொடுப்பேன்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • அனைத்து கட்சிகளின் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவருக்கும் நன்றி
    • வாக்களித்த வாக்காள பெருமக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த நன்றிகள்.

    அனைவருக்கும் வணக்கம்

    எனக்காக இரவு பகல் பாராமல் உழைத்த தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக, அமமுக, தமாகா, சகோதரர் OPS அணி, பாமக, தமிழர் தேசம் கட்சி, தமமுக, புதிய நீதி கட்சி, தமகமுக, காமராஜர் மக்கள் கட்சி மற்றும் மக்கள் ராஜ்ஜியம் கட்சி என அனைத்து கட்சிகளின் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவருக்கும் நன்றி.

    குறிப்பாக இந்த மக்களவை தேர்தலை ஒருங்கிணைத்து நடத்திய இந்திய ஜனநாயக கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மற்றும் ஆதரவளித்த பார்க்கவகுல முன்னேற்ற சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். வாக்களித்த வாக்காள பெருமக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த நன்றிகள்.

    அன்புடன்

    டாக்டர் பாரிவேந்தர்

    நிறுவனர் , IJK

    • புதூர் உத்தமனூர் மற்றும் தச்சன் குறிச்சி கிராமத்திலும், பெருவளநல்லூர் கிராமத்திலும் டாக்டர் பாரிவேந்தர் தாமரை சின்னத்திற்கு பொதுமக்களிடம் ஆதரவு திரட்டினார்.
    • தேர்தலில் வெற்றிபெற்று மீண்டும் இப்பகுதிக்கு வந்து, பொதுமக்களின் தேவைகளை நிறைவேற்றித் தருவேன் என உறுதி அளித்தார்.

    தேசிய ஜனநாயகக் கூட்டணியில், பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில், இந்திய ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிடும் டாக்டர் பாரிவேந்தர், தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் சூறவாளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு, தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரித்து வருகிறார். அந்த வகையில், இன்று லால்குடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மகிழம்பாடி வடக்கு ஊராட்சியில் டாக்டர் பாரிவேந்தர் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அங்கு குழுமியிருந்த மக்களிடையே உரையாற்றிய அவர். தமிழகத்தில் குடும்ப ஆட்சி ஒழிக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

    இதனைத்தொடர்ந்து, புதூர் உத்தமனூர் மற்றும் தச்சன் குறிச்சி கிராமத்திலும், பெருவளநல்லூர் கிராமத்திலும் டாக்டர் பாரிவேந்தர் தாமரை சின்னத்திற்கு பொதுமக்களிடம் ஆதரவு திரட்டினார்.

    பின்னர் குமுளூர் கிராமத்திற்கு வருகை தந்த டாக்டர் பாரிவேந்தருக்கு, செண்டை மேளம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும், கும்ப மரியாதை வழங்கியும், ஆரத்தி எடுத்தும் டாக்டர் பாரிவேந்தரை பொதுமக்களும், கூட்டணிக் கட்சியினரும் ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். அப்போது பேசிய அவர், நன்றியுள்ள இந்த ஊருக்கும், பொதுமக்களுக்கும் நன்றி தெரிவிப்பதாக கூறினார். குமுளூர் கிராமத்தில், 5 மாணவர்கள் இலவச உயர் கல்வி திட்டத்தின்கீழ் கல்வி பயின்று வருவதாக டாக்டர் பாரிவேந்தர் தெரிவித்தார்.

    இதனைத்தொடர்ந்து, புஞ்சை சங்கேந்தி பகுதியில் டாக்டர் பாரிவேந்தர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தொடர்ந்து, வெங்கடாஜலபுரம் பகுதிக்கு வருகை தந்த டாக்டர் பாரிவேந்தருக்கு, விவசாய சங்கம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. நெற்கதிர்கள், செங்கரும்பு வழங்கியும், பூரண கும்ப மரியாதையுடன் ஆரத்தி எடுத்தும் பொதுமக்கள் எழுச்சிமிகு வரவேற்பு அளித்தனர். உழவு மாடுகளை ஏர் பூட்டி, டாக்டர் பாரிவேந்தர் தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், தேர்தலில் வெற்றிபெற்று மீண்டும் இப்பகுதிக்கு வந்து, பொதுமக்களின் தேவைகளை நிறைவேற்றித் தருவேன் என உறுதி அளித்தார்.

    இ.வெள்ளனூர் மற்றும் நஞ்சை சங்கேந்தி உள்ளிட்ட பகுதிகளில் டாக்டர் பாரிவேந்தர் தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். இதனைத்தொடர்ந்து, பூவாளூர் பகுதியில் ஆதரவு திரட்டிய அவர், நல்லவர்கள் யார்? ஊழல்வாதிகள் யார்? என்பதை

    அறிந்து வாக்களியுங்கள் என்றும், மறந்தும் சூரியனுக்கு வாக்களிக்காதீர்கள் எனவும் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.

    இதனையடுத்து லால்குடிக்கு வருகை தந்த டாக்டர் பாரிவேந்தருக்கு, தேசிய ஜனநாயக கூட்டணியினர் சார்பில் பூரண கும்ப மரியாதை அளித்தும், ஆரத்தி எடுத்து

    மாலை அணிவித்தும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது பொதுமக்களிடையே பேசிய அவர், மத்திய அரசு வழங்கிய தொகுதி மேம்பாட்டு நிதியான 17 கோடி ரூபாயை, முழுமையாக செலவு செய்து, மக்களின் தேவைகளை நிவர்த்தி செய்ததாக தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் தாம் செய்த பணிகள், அமைச்சர்களை சந்தித்தது உள்ளிட்டவைகள் குறித்து, புத்தகமாக வழங்கியிருப்பதாக டாக்டர் பாரிவேந்தர் தெரிவித்துள்ளார்.

    ×