search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பேராசிரியர்கள் பணியில் முறைகேடு: கவர்னரிடம் விளக்கம் சமர்ப்பித்த அண்ணா பல்கலைக்கழகம்
    X

    பேராசிரியர்கள் பணியில் முறைகேடு: கவர்னரிடம் விளக்கம் சமர்ப்பித்த அண்ணா பல்கலைக்கழகம்

    • முதற்கட்ட விசாரணையில் 189 பேராசிரியர்கள் பல கல்லூரிகளில் பணிபுரிந்தது கண்டறியப்பட்டது.
    • அடுத்த வாரத்தில் இந்த முறைகேட்டில் ஈடுபட்ட பேராசிரியர்களை இந்த குழு நேரில் அழைத்து விசாரிக்கவும் திட்டமிட்டுள்ளது.

    சென்னை:

    அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் வரும் இணைப்பு என்ஜினீயரிங் கல்லூரிகளில் பேராசிரியர்கள் ஆதார் எண்ணை முறைகேடாக பயன்படுத்தி சேர்ந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த சம்பவம் தொடர்பாக அண்ணா பல்கலைக்கழகம் நடத்திய முதற்கட்ட விசாரணையில் 189 பேராசிரியர்கள் பல கல்லூரிகளில் பணிபுரிந்தது கண்டறியப்பட்டது.

    இதையடுத்து அண்ணா பல்கலைக்கழகம் தமிழ்நாடு அரசுக்கு தகவல் தெரிவித்த நிலையில், இதை விசாரிக்க அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் பேராசிரியர் குமாரவேல், தொழில்நுட்ப கல்வி இயக்கக கமிஷனர் ஆபிரகாம், அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் சார்பில் தேசிய தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (என்.ஐ.டிடி.டி.ஆர்.சி.) இயக்குனர் உஷா நடேசன் ஆகிய 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது.

    இதற்கிடையில் இந்த சம்பவம் குறித்து தமிழ்நாடு கவர்னரும், பல்கலைக்கழகங்களின் வேந்தருமான ஆர்.என்.ரவி, அண்ணா பல்கலைக்கழகத்திடம் விளக்கம் கேட்டு இருந்தார். அதன் அடிப்படையில் பேராசிரியர்கள் முறைகேடாக பணிபுரிந்தது தொடர்பான விளக்கங்களை, கவர்னர் ஆர்.என்.ரவியிடம், அண்ணா பல்கலைக்கழகம் சமர்ப்பித்துள்ளது.

    மேலும் 3 பேர் கொண்ட குழு இந்த முறைகேடு தொடர்பான விசாரணையில் தீவிரமாக இறங்கி இருக்கிறது. இதற்கான ஆவணங்கள் அனைத்தையும் அண்ணா பல்கலைக்கழகம், குழுவிடம் வழங்கியிருக்கிறது.

    அடுத்த வாரத்தில் இந்த முறைகேட்டில் ஈடுபட்ட பேராசிரியர்களை இந்த குழு நேரில் அழைத்து விசாரிக்கவும் திட்டமிட்டுள்ளது. அதன் பின்னர், முறைகேடு தொடர்பான அறிக்கையை இந்த குழு தயாரிக்கும் எனவும், அனேகமாக இன்னும் ஒரு வார காலத்துக்குள் இந்த பணிகள் நிறைவு பெற வாய்ப்பு உள்ளது எனவும் அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர். குழு அளிக்கும் பரிந்துரையின் அடிப்படையில் முறைகேட்டில் ஈடுபட்ட பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    Next Story
    ×