search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சூளகிரி எருதாட்ட நிகழ்ச்சியில் வன்முறை: கலவரத்தில் ஈடுபட்ட 300 பேர் கைது
    X

    சூளகிரி எருதாட்ட நிகழ்ச்சியில் வன்முறை: கலவரத்தில் ஈடுபட்ட 300 பேர் கைது

    • கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த கிராம மக்கள் தங்களின் மாடுகளை அழைத்து வந்தனர்.
    • கோபசந்திரம் கிராமத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள், 300-க்கும் மேற்பட்ட காளைகளுடன் இருந்தனர்.

    சூளகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே கோபசந்திரம் கிராமத்தில் எருதுவிடும் விழா நடத்த அனுமதி கேட்டு விண்ணப்பித்து இருந்தனர். தொடர்ந்து ஓசூர் உதவி கலெக்டர் சரண்யா தலைமையில் கால்நடை பராமரிப்பு துறை, காவல் துறை, பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, மின்சார துறை, தீயணைப்பு துறையினர் ஆய்வு செய்து அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

    இதற்கிடையே விழா நடத்த அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருந்தது. கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த கிராம மக்கள் தங்களின் மாடுகளை அழைத்து வந்தனர். கோபசந்திரம் கிராமத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள், 300-க்கும் மேற்பட்ட காளைகளுடன் இருந்தனர்.

    அப்போது அங்கு வந்த அதிகாரிகள் ஆய்வு செய்த பின்னரே விழா நடத்த அனுமதிக்கப்படும் என தெரிவித்தனர். இதனால் எருதுவிடும் விழா தொடங்கவில்லை.

    ஏற்கனவே 2 முறை விழா நடத்த மாடுகளை அழைத்து வந்து ஏமாற்றமடைந்த நிலையில் தற்போது 3-வது முறையாக விழா தொடங்க தாமதம் ஆனதால் ஆத்திரம் அடைந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் நேற்று காலை 7.30 மணி அளவில் திடீரென ஓசூர் அருகே கோபசந்திரம் தட்சிணதிருப்பதி கோவில் பிரிவு சாலை கிருஷ்ணகிரி-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் திரண்டனர்.

    பின்னர் அவர்கள் டிப்பர் லாரியை தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே நிறுத்தியும், சாலையில் ஜல்லிக்கற்களை கொட்டியும் மறியல் போராட்டத்தை தொடங்கினர். பேச்சுவார்த்தை இதையடுத்து நேரம் செல்ல செல்ல 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலையில் திரண்டனர்.

    இதனால் கிருஷ்ணகிரி-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

    இந்த நிலையில் சேலம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. ராஜேஸ்வரி, கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் தலைமையில் அதி விரைவுப்படை போலீசார், வஜ்ரா வாகனம் மற்றும் துப்பாக்கி ஏந்திய 100-க்கும் மேற்பட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்.

    இதில் சமாதானம் அடையாத மறியலில் ஈடுபட்டவர்களில் சிலர் போலீசார் மீதும், அங்கிருந்த வாகனங்கள் மீதும் கற்களை வீச தொடங்கினர்.

    இதனால் சாலையில் நின்ற அரசு, தனியார் பஸ்கள், லாரிகள், கார், ஜீப் உள்ளிட்ட 35-க்கும் மேற்பட்ட வாகனங்களின் கண்ணாடிகள் உடைந்து சேதமடைந்தன. மேலும் பொதுமக்கள், பயணிகள் சிலரும் காயம் அடைந்தனர்.

    மேலும் போராட்டக்காரர்கள் போலீசார் மீது சரமாரியாக கற்களை தூக்கி வீசினர். அங்கு பெரும் பதற்றம் ஏற்படவே நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர போலீசார் தண்ணீரை பீய்ச்சி அடித்தும், கண்ணீர்புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் கலைத்தனர்.

    இதனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் நாலாபுறமும் சிதறியடித்து ஓடினர். இந்த சம்பவத்தில் பெண் போலீஸ் உள்பட 25-க்கும் மேற்பட்ட போலீசார் காயம் அடைந்தனர். மேலும் பொதுமக்கள் மற்றும் பயணிகள் என 20-க்கும் மேற்பட்டோருக்கு காயம் ஏற்பட்டது. அவர்களை சக போலீசார் மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கலவரத்தை கட்டுப்படுத்த முயன்ற சரோஜ்குமார் தாக்கூர்க்கு பலத்த காயம் ஏற்பட்டது.

    மேலும் இந்த போராட்டம் சுமார் 1.30 மணி வரை நடந்தது. இதனால் சுமார் 5 மணி நேரம் பயங்கர கலவரம் நடந்துள்ளது. போலீசார் கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த கலவரத்தில் ஈடுபட்ட 300-க்கும் மேற்பட்ட இளைஞர்களை சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர். பின்னர் அவர்களை எழுதி வாங்கி விட்டு மாலையில் விடுவித்தனர்.

    இந்நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் கூறுகையில், சாலை மறியல், வன்முறையின்போது எடுக்கப்பட்ட வீடியோ, புகைப்படங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்து போராட்டக்காரர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    எருது விடும் விழா நடத்துபவர்கள் உரிய அனுமதி பெற்று பாதுகாப்புடன் நடத்த வேண்டும். உயிர் சேதமும், கால்நடைகளுக்கு பாதிப்பும் ஏற்படாதவாறு கலெக்டரிடம் முறையாக விண்ணப்பித்து அனுமதி பெற்று எருது விடும் விழாவை நடத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிலையில் கலவரம் நடத்த நெடுஞ்சாலை பகுதி மற்றும் கோபசந்திரம் பகுதியில் தொடர்ந்து பதட்டம் நீடித்து வருகிறது. அங்கு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் பொதுமக்கள் அதிகம் கூடாத வகையில் நெடுஞ்சாலையில் போலீசார் தீவிரமாக ரோந்து பணியில் ஈடுபட்டு கண்காணித்து வருகின்றனர்.

    Next Story
    ×